Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 123 (Continuing the Journey to Rome; Beginning of Paul’s Ministries at Rome)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஊ - செசரியாவிலிருந்து ரோமாபுரிக்கு கடல் பயணம் (அப்போஸ்தலர் 27:1 - 28:31)

4. வசந்த காலத்தில் ரோமாபுரியை நோக்கிப் பயணித்தல் (அப்போஸ்தலர் 28:11-14)


அப்போஸ்தலர் 28:11-14
11 மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு, 12 சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம். 13 அவ்விடம்விட்டுச் சுற்றியோடி, ரேகியுதுறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து, 14 அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.

எத்தனை பெரிய அற்புதம்! ஆண்டவர் அந்தக் கப்பலை புயல்காற்றிலும் கொந்தளிக்கும் கடலிலும் உடைந்துபோகவும் அனுமதிக்கவில்லை, அது ஒரு ஆபத்தான கரையில் ஒதுங்குவதற்கும் விடவில்லை. அந்தக் கப்பலை அவர் கப்பல்கள் குளிர்காலத்தில் சென்றடையும் புகழ்பெற்ற மெலித்தா தீவுக்கு நேராக நடத்தினார். பிப்பரவரி மாதத்தின் நடுபகுதியிலிருந்து கப்பல்கள் மீண்டும் தங்கள் கடல் பயணத்தைத் தொடங்கும். அந்நிய தெய்வங்களுடைய அடையாளத்தைப் பெற்றிருந்த கப்பலில் ஏறிச் செல்வதற்கு பவுல் தயங்கவில்லை. சீயஸ் தெய்வத்தின் இரட்டைப் பிள்ளைகளாகிய அந்த தெய்வங்கள் கடலோடிகளின் பாதுகாப்பிற்குரிய தெய்வங்களாக வணங்கப்பட்டுவந்தன. அனைத்து தெய்வங்களும் சிலைகளும் ஒன்றுமில்லை என்றும் வெறும் மண்ணானவை என்றும் அவர் அறிந்திருந்தார். ஆண்டவர் மட்டுமே மெய்யான ஒரே தெய்வம். இவ்வாறு அவர்கள் அந்தக் கப்பலில் பயணித்து, சிசிலித் தீவின் தலைநகரமாகிய சீரகூசா பட்டணத்திற்கு வந்து, அங்கிருந்து இத்தாலியை வந்தடைந்தார்கள். அங்கிருந்து அவர்கள் ஸ்ரெம்பயோலியைக் கடந்து வெசுவியஸிற்கு வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு நேப்பிலு பட்டணத்திற்கு அருகிலுள்ள புத்தேயோலி துறைமுகத்திற்கு வந்தார்கள்.

அந்நகரத்தில் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டு ஒரு சமூகமாக வாழ்ந்தார்கள். அப்போஸ்தலர் அவர்களிடத்தில் சென்றபோது அவரையும் அவருடன் சென்றவர்களையும் அவர்கள் வரவேற்று ஒருவாரம் அவர்களை உபசரித்தார்கள். இவ்வாறு பவுல் வரவேற்கப்படுவதிலிருந்து பவுல் இத்தாலியாவில் அறியப்படாதவரல்ல என்பது விளங்குகிறது. அவர் செல்கிற இடமெங்கும் கிறிஸ்துவின் தூதுவனாக அறியப்பட்டிருந்தார். நேப்பிலுவிலிருந்த இந்த ஐக்கியத்தில்தான் தளபதியாகிய யுலியு அப்போஸ்தலருடைய நம்பிக்கையையும், மன அமைதியையும், மக்கள் மீது அவர் கொண்டிருக்கிற அன்பையும், ஆன்மீக வல்லமையையும் பார்த்து கிறிஸ்தவராக மாறியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தன்னுடைய கைதியின் வழியைத் தான் பின்பற்றத் தொடங்கினார். இது கிறிஸ்துவின் மகத்தான வெற்றி!

அதன் பிறகு ரோமாபுரிக்குச் சென்ற நெடுஞ்சாலையில் அவர்கள் அனைவரும் நடந்து ரோமாபுரிக்கு பயணித்தார்கள். லூக்காவும் அரிஸ்தர்க்கும் அப்போஸ்தலரைவிட்டு விலகாமல் எல்லாத் துயரத்திலும் அவரோடு கூட இருந்தார்கள். இந்த மூன்று வெற்றியாளர்களுடன் கிறிஸ்துவின் வெற்றி பவனி உலக கலாச்சாரங்களின் தலைநகராகிய ரோமாபுரியை வந்தடைந்தது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே பாதாளத்தின் வாசல்கள் உம்மை மேற்கொள்ளாது என்பதால் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். பவுலையும் அவருடைய சக பணியாளர்களையும் அவர்கள் நிமித்தமாக அந்தக் கப்பலிலிருந்த பயணிகள் அனைவரையும் காத்துக்கொண்டு ஆசீர்வதித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களையும் உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும் அப்போது நாங்கள் பலருக்கு ஆசீர்வாதமாக விளங்குவோம்.


5. ரோமாபுரியில் பவுலுடைய பணியில் தொடக்கம் (அப்போஸ்தலர் 28:15-31)


அப்போஸ்தலர் 28:15-16
15 அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள். 16 நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.

ரோமாபுரியில் இருந்த திருச்சபை பவுலை அறிந்திருந்தது. அங்கிருந்த நம்பிக்கையாளர்கள் பவுலுடைய சிந்தனைகளையும் அவர் அவர்களுக்கு எழுதிய புகழ்வாய்ந்த கடிதத்தின் மூலமாக அறிந்திருந்தார்கள். இன்றும் அக்கடிதம் அனைத்துக் கிறிஸ்தவத்திற்கும் பாடப்புத்தகம் போல் இருக்கிறது. ரோமாபுரித் திருச்சபையில் இருந்தவர்கள் வியாபாரிகளாகவும், கிரேக்க மொழிபேசும் கிறிஸ்தவர்களாகவும், நம்பிக்கையுள்ள போர்வீரர்களாகவும், மறுபிறப்படைந்த அடிமைகளாகவும் இருந்தார்கள். பவுல் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்ட அவர்கள் அவரையும் அவரது நண்பர்களையும் வரவேற்பதற்காக துறைமுகத்திற்குச் சென்றிருந்தார்கள். அந்தத் திருச்சபையின் உதவியோடு, பவுல் இத்தாலி முழுவதிலும், ஸ்பெயின் நாட்டிலும், இன்னும் உலகம் முழுவதிலும் நற்செய்தியைப் பிரசங்கிக்கலாம் என்ற அவருடைய திட்டத்தை நிறைவேற்ற தைரியங்கொண்டார். அந்த சகோதரர்கள் பவுலை இவ்வாறு வரவேற்றது இறைவனால் அவருடைய பணிக்கு வாசல் திறக்கப்பட்டிருப்பதைப் போல அவருக்குத் தோன்றியது. நற்செய்தி தொடர்ந்து அறிவிக்கப்படுவதற்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்புகளுக்காக அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.

ரோமாபுரியில் பவுல் வசதி வாய்ப்புகளுடன் சிறை வைக்கப்பட்டார். ஆனால் அவர் இரவும் பகலும் அவர் ஒரு போர்வீரனுடன் கைகளில் விலங்கிடப்பட்டிருப்பார். அவர் அவருடைய அனைத்து வார்த்தைகளையும் கேட்டு, அவருடைய நடத்தைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பார். பவுல் ஒரு சுதந்தரமான மனிதனாக நற்செய்தியைப் பிரசங்கிக்கவில்லை. அவர் கிறிஸ்துவின் பணியாளனாகவும் கைதியாகவும் கிறிஸ்துவின் மகிமையை தம்முடைய பெலவீனத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்.

அப்போஸ்தலர் 28:17-27
17 மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். 18 அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். 19 யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. 20 இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன. இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். 21 அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. 22 எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள். 23 அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள் அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான். 24 அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள். 25 இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கயமாவது: 26 நீங்கல் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். 27 இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார்.

பவுல் ரோமாபுரியில் எவ்விதமாக விசாரிக்கப்பட்டார் என்றோ அவர் எவ்விதமாக வாழ்ந்தார் என்றோ எவ்விதமாக மரணமடைந்தார் என்றோ லூக்கா தன்னுடைய நூலில் எழுதவில்லை. இது நற்செய்தி ரோமாபுரிக்கு கொண்டுவரப்படுவதற்கும் அறிவிக்கப்படுவதற்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பவுலுக்குக் கொடுக்கபடத் தேவையில்லை என்று கூறுவதைப் போல் உள்ளது. அப்போஸ்தலர் நடபடிகள் பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையைப் பற்றியதல்ல, நற்செய்தியின் பவனியையும் கிறிஸ்துவின் பணி எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பதைப் பற்றியது.

பவுல் வழக்கம்போல தன்னுடைய பணியை ஜெப ஆலயத்தில் ஆரம்பித்தார். யூதர்களில் முக்கியமானவர்களை அவர் தான் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு வரவழைத்தார். எருசலேமிலுள்ள யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் தனக்கு எதிராகக் குற்றஞ்சாட்டி, அநியாயமாகத் தன்னை ரோமர்களிடத்தில் ஒப்புக்கொடுத்து, மரண தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆனால் தான் உண்மையில் யூதர்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். தான் குற்றமற்றவர் என்பதை அறிந்த ரோமர்கள் தன்னை விடுவிப்பதற்கு ஆயத்தமாயிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அவர் அறிவித்தார். தான் பல்வேறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதிலும், ரோமக் குடிமகனாகிய தான் ரோமில் தன்னுடைய மக்களுக்கு எதிராக ரோமர்களிடம் குற்றஞ்சாட்டப் போவதில்லை என்பதையும் அவர்களுக்கு அறிவித்தார். அவர் தன்னை தனது மக்களினத்தோடு சேர்ந்தவராகவே கருதினார். இறைவனிடத்திலிருந்து மேசியா வந்து விடுதலையையும் சமாதானத்தையும் தருவார் என்ற தன்னின மக்களுடைய நம்பிக்கை தமக்கும் இருப்பதாகக் கூறினார். இயேசுவின் நாமத்தின் மேல் இருக்கிற நம்பிக்கையின் நிமித்தமாகவே தான் துன்பப்படுவதாகக் கூறினார். தான் கட்டப்பட்டிருக்கும் சங்கிலி கிறிஸ்துவின் மீது தனக்குள்ள அன்பின் அடையாளம் என்று எடுத்துரைத்தார்.

ரோமாபுரியில் பவுலுடைய பெயரைக் குறித்து நிலவிய ஆழ்ந்த சமயப் பிரச்சனை மற்றும் சூழ்ந்துள்ள அரசியல் சிக்கல்கள் இவற்றைக் கணித்த அந்த யூதர்கள், எருசலேமிலிருந்து பவுலைப் பற்றித் தங்களுக்கு எந்த முறைப்பாடும் வரவில்லை என்றும் ரோமாபுரியிலும் அவரைக் குறித்து தவறானவற்றை அவர்கள் கேள்விப்படவில்லை என்றும் கூறினார்கள். ஆயினும் அங்கிருந்த முக்கியமான யூதர்கள் கிறிஸ்தவம் யூத மார்க்கத்திலிருந்து பிரிந்து சென்றது என்றும் எங்கும் அது யூத மார்க்கத்திற்கு எதிரானது என்றும் அறிந்திருந்தார்கள். ஆகவே நற்செய்தி எழும்பிய எதிர்ப்பு அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்தக் காரணங்களினால் பரிசேயனும் நியாயப்பிரமாணத்தில் தேறியவனுமாகிய பவுல் எருசலேமிலிருந்து தங்களிடத்தில் வந்து இயேசுவை அறிக்கை செய்தபோது அவர்கள் மகிழ்வடைந்தார்கள். கிறிஸ்துவைக் குறித்து மேலும் விவரங்களை அறிந்துகொள்ள அவர்கள் இன்னொரு கூட்டத்தைக் கூட்ட ஆவலாயிருந்தார்கள்.

குறிக்கப்பட்ட அந்த நாளில் பவுல் தங்கியிருந்த வீட்டிற்கு பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள் கூடி வந்தார்கள். அவர் அவர்களுக்கு இறைவனுடைய அரசையும் விண்ணுலக அரசானாகிய இயேசுவின் அரசையும் குறித்து விளக்கமளித்தார். அவர் பேசிவற்றின் கருத்தைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு கடினமாயிருந்தது. அவர்களில் சிலர் இறைமகன் சாதாரண மனிதனாக வந்து, அவமானச் சின்னமாகிய சிலுவையில் மரணத்தை அடைந்துதான் தன்னுடைய மக்களை இறைவனுடைய அரசில் சேர்ப்பார் என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். ஆனால் கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படாமல் யாரும் இறைவனுடைய அரசிற்குள் நுழைய முடியாது. ஆண்டவரே அதன் வாசலாயிருக்கிறார். அவரே மகிமை நிறைந்தவராக பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருப்பவர். ஆனால் அவர் இவ்வுலகத்தில் வந்திருந்தபோது அவருடைய மகிமை மறைந்திருந்தது. ஆனால் அவருடைய ஆள்த்துவத்தில் இறையரசிற்கான அனைத்து வல்லமையும் திறமைகளும் குணாதிசயங்களும் மறைந்திருந்தன. இன்று உலகெங்கிலும் பரவிவரும் அவருடைய திருச்சபையில் அவை வெளிப்படுகின்றன. கிறிஸ்து வரும்போது இறைவனுடைய அரசு இஸ்ரவேல் அல்ல என்பது வெளிப்படும். ஆனால் யூதர்களோ, புறவினத்து மக்களோ யாரெல்லாம் கிறிஸ்துவை நம்பி இந்த இறையரசை தங்கள் உள்ளங்களில் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் அனைவருமே இறையரசின் மக்களாயிருப்பார்கள்.

பவுல் அவர்களுக்கு தத்துவஞானக் கருத்துக்களையோ அல்லது தன்னுடைய சுய பெருமைகளையோ பற்றிப் பேசவில்லை. நியாயப்பிரமாணங்களையும் தீர்க்கதரிசனங்களையும் மேற்கோள் காட்டுவதன் மூலமாக அவர் தன்னுடைய நற்செய்தியை நிரூபித்தார். கிறிஸ்துவைக் குறித்த மகிமையான வாக்குத்தத்தங்கள் அனைத்தும் உண்மையில் நியாயப்பிரமாணத்திற்கு அப்பாற்பட்ட முறையில் இறைவன் தரும் ஆறுதலான விடுதலையைப் பற்றியது என்பதை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். கிறிஸ்துவில் வைக்கும் நம்பிக்கைதான் பாவிகளையும் தொலைந்து போனவர்களையும் இரட்சிக்குமே தவிர குறைவுள்ள நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வது அவர்களை இரட்சிக்காது. பவுலுடைய பேச்சைக் கவனமாகக் கேட்ட சில யூதர்கள் பரிசுத்த ஆவியானவரால் இழுத்துக்கொள்ளப்பட்டார்கள். மற்றவர்களுடைய இருதயம் மெல்ல கடினப்பட்டு நற்செய்தியை நம்ப விருப்பமற்றவர்களாக மாறினார்கள். எங்கு விடுதலையின் நற்செய்திக்கு மக்கள் அன்பினால் கீழ்ப்படியவில்லையோ இறைவனைக் குறித்த அறிவும் செயல்பாடும் அவர்களிடத்தில் இருக்காது. அவர்கள் இறைவனுடைய சித்தத்திற்கு எதிரானவர்களாகி விடுவார்கள். அவர்கள் நற்செய்திக்கு செவிடராகி இரட்சகரை உணர்ந்துகொள்ள முடியாத நிலைக்குச் சென்று விடுவார்கள். அதனால் கிறிஸ்துவுக்கு எதிரானவர்களாக மாறிவிடுவார்கள். பரிசுத்த ஆவியானவருடைய மெல்லிக சத்தம் அவர்களுக்குக் கேட்காது. ஏனெனில் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து, இறைவனுக்குத் தங்களை ஒப்புவிக்க மறுத்து வந்தார்கள். அன்புள்ள நண்பரே உங்களுடைய நிலை என்ன? நீங்கள் இறைவனுக்கு எதிரியா? அல்லது தாழ்மையும் அன்புமுள்ள ஒரு கிறிஸ்தவனா?

அப்போஸ்தலர் 28:28-31
28 ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். 29 இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். 30 பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, 31 மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

பவுலுடைய பேச்சு தங்களுக்குள் பிரிந்திருந்த யூதர்களுக்கு தற்கால தேசிய கீதத்தைப் போல அவர்கள் காதுகளில் எக்காளமாக ஒலித்திருக்கும். இறைவன் தன்னுடைய விடுதலையை புறவினத்து மக்களுக்கு அனுப்புகிறார். யூதர்கள் கிறிஸ்துவினுடைய கிருபையைப் புறக்கணித்துவிட்டார்கள். இப்போதிலிருந்து பரிசுத்த ஆவியானவர் புறவினத்து மக்களுடைய இருதயங்களை நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி ஆயத்தம் செய்வார். அதன் மூலம் அவர்கள் புதிய இருதயத்தையும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் அதைக் கைக்கொள்வார்கள். அதன் வேலைக்காரர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பாவம் என்னும் அடிமைச் சந்தையில் கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட இறைவனுடைய பிள்ளைகள். அவர் நித்திய பரிசுத்த ஆவியின் மகிமையினால் அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்.

பவுல் ரோமாபுரியில் இரண்டு வருடங்கள் முழுவதும் ஒரு போதகராக, பிரசங்கியாக, தீர்க்கதரிசியாக, அப்போஸ்தலனாக பணியாற்றினார். அவருக்கு பெரிய கூட்டங்களிலோ, தெருக்களிலோ பிரசங்கிப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை. ஏனெனில் அவர் இரவு பகலாக ஒரு சேகவனுடன் சங்கிலியினால் கட்டப்பட்டிருந்தார். ஆயினும் அவரைச் சந்திக்க வந்த தனி நபர்களிடத்தில் இறைவனுடைய வல்லமையைப் பற்றிச் சாட்சி பகர்ந்தார். தன்னுடைய சங்கிலியை ஒரு வார்த்தையினால் நொடிப்பொழுதில் அவிழ்த்துவிட பரிசுத்தருக்கு இயலும் என்பதைக் குறித்த நிச்சயம் பவுலுக்கு இருந்தது. ஆனாலும் அவர் அந்த சங்கிலியை முறுமுறுப்பின்றி சுமந்ததோடு அவற்றை பிதாவின் அன்பிற்கான அடையாளமாகப் பார்த்தார்.

பவுல் ரோமாபுரியில் 700-க்கும் மேற்பட்ட நாட்கள் இருந்தார். அந்த நாட்களில் தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் தனக்குத் தரிசனமாகிய மகிமையின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மகிமையை பலருக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். பவுல் தன்னுடைய மகிமையைத் தேடவில்லை. அவர் தன்னுடைய பெயரைப் பெருமைப்படுத்தவும் நாடவில்லை. அப்போஸ்தலர் நடபடிகளின் இறுதிப்பகுதியில் அவருக்கு முக்கியத்துவம் தரப்படவும் இல்லை. புறவினத்தின் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு ஒரே குறிக்கோள்தான். அது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனை மகிமைப்படுத்துவது. அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் தைரியமாகத் தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். கிறிஸ்து அவருக்குத் திறந்த வாசலைக் காண்பித்தார். கேட்கவும் நம்பவும் ஆயத்தமாயிருக்கிறவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்காதபடி அவரை யாராலும் தடை செய்ய முடியவில்லை.

இது எவ்வளவு ஆச்சரியமானது! ரோமாபுரியில் நற்செய்தி எவ்வாறு பரம்பியது என்பதைப் பற்றியோ, பேதுரு அல்லது வேறு போப்புமார் எவரையும் பற்றியோ நாம் இங்கு எதையும் வாசிப்பதில்லை. ஏனெனில் அவையனைத்தும் இரண்டாந்தரமான காரியங்கள். நற்செய்தியின் அழைப்பு மட்டுமே முக்கியமான காரியம். உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் அது எவ்விதமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்பதுதான் அவசியமான காரியம். அப்போஸ்தலர் இறந்து போனாலும் நற்செய்தி தொடர்ந்து பரவ வேண்டும்.

பவுல் ரோமாபுரியில் இருந்த காலத்தில் முக்கிய ரோம அதிகாரியாகிய தியோப்பிலு பவுலை அறிந்திருக்கலாம். அவருடைய விசாரணையின்போது அவருக்கு உதவியிருக்கலாம். கிறிஸ்தவத்தின் தோற்றத்தையும் அது உலகம் முழுவதும் பரவியதையும் குறித்து இன்னும் விவரமாகத் தான் அறிந்துகொள்வதற்காக அவர் லூக்காவிடம் அவரது நற்செய்தி நூலையும் அப்போஸ்தலர் நடபடிகளையும் எழுதும்படி கேட்டுக்கொண்டார். தியோப்பிலு பவுலுடைய நிலவரங்களைத் தானே நேரடியாக அறிந்திருந்த காரணத்தினால்தான் லூக்கா அதைப் பற்றி எதுவும் எழுதவில்லை.

அன்பான சகோதரனே நாம் இப்போது அப்போஸ்தலர் நடபடிகளுடைய நூலின் விளக்கவுரையை முடிக்கப் போகிறோம். உயிருள்ள கிறிஸ்துவின் மகிமையையும் அவருடைய விடுதலையின் திட்டத்தையும் குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவித்திருக்கிறோம். இப்போது நாங்கள் உங்களுடைய கரங்களில் இந்தத் தீபத்தைத் தருகிறோம். “அப்போஸ்தலர் நடபடிகளுடைய வரலாற்றைத் தொடருங்கள். பலர் விடுதலை அடையும்படி விடுதலையின் நற்செய்தியை உங்களைச் சுற்றிலும் இருக்கும் அனைவருக்கும் அறிவியுங்கள். உயிருள்ள கிறிஸ்து உங்களை அழைக்கிறார். அவர் உங்களோடு வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் புறப்படுவதற்கு தடை என்ன? இனங்கள் நடுவில் கிறிஸ்துவின் வெற்றி பவனி முன்னேறிச் செல்வதை நீங்கள் காண்கிறீர்களா? நம்புங்கள், விண்ணப்பியுங்கள், சந்தோஷமாயிருங்கள், ஏனெனில் உயிருள்ள ஆண்டவர் உங்களுக்கு முன்பாகப் போகிறார். உங்களுக்காகக் காத்திருக்கிறார்.

விண்ணப்பம்: பரலோக பிதாவே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உம்மில் மகிழ்வடைகிறோம். ஏனெனில் உம்முடைய மகன் எங்களை உம்மோடு ஒப்புரவாக்கியிருக்கிறார். உம்முடைய ஆவியானவர் எங்கள் அனைவரையும் எக்காலத்திற்கும் உம்முடைய திருச்சபையில் இணைத்திருக்கிறார். நாங்கள் பாவிகளாக இருக்கும்போதே நீர் எங்களை அழைத்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அதனால் நாங்கள் இப்போது அப்போஸ்தலருடைய வரிசையில் உமக்குப் பணி செய்து, எங்களுடைய பெலவீனங்களில் உம்முடைய பெலத்தை உணருகிறோம். எங்களைச் சுற்றிலும் உம்முடைய அரசு வெளிப்பட்டிருக்கிறது என்றும் இவ்வுலகத்திலுள்ள குழப்பங்களின் நடுவிலும் உம்முடைய சித்தம் செய்யப்படுகிறது என்றும் நாங்கள் நம்புகிறோம். நீர் பலரை இரட்சியும், உண்மையாக உமக்குப் பணிசெய்ய எங்களை ஊக்குவியும், பொல்லாங்கானிடத்திலிருந்து எங்களைக் காத்துக்கொள்ளும். ஆமென்.

கேள்வி:

  1. பவுலுடைய விசாரணையைக் குறித்தோ ரோமாபுரியில் அவருடைய மரணத்தைக் குறித்தோ லூக்கா ஏன் எதுவும் சொல்லவில்லை? அப்போஸ்தலர் நடபடிகளுடைய மைய கீதம் என்ன?

கேள்விகள் - 8

அன்புள்ள வாசகரே,
இப்போது நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளுக்கான எங்களுடைய விளக்கத்தை வாசித்துவிட்டீர்கள். நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. கீழ்க்காணும் கேள்விகளில் 90 சதவீதமானவைகளுக்கு பதிலளிப்பீர்களானால், நாங்கள் உங்களுக்கு அப்போஸ்தலர் நடபடிகளைக் குறித்த முதிர்ந்த அறிவுக்கான சான்றிதழை அனுப்பி வைப்போம். அது உங்களுடைய ஊழியத்திற்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். உங்களுடைய விடைத்தாளில் உங்களுடைய பெயரையும் முகவரியையும் தெளிவாகக் குறிப்பிட மறக்க வேண்டாம்.

  1. எப்போது பவுல் செசரியாவிற்கு மாற்றம் செய்யப்பட்டார்? ஏன்?
  2. பவுலுக்கு எதிராக வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் யாவை? அந்தக் குற்றச்சாட்டுகளின் சுருக்கம் என்ன?
  3. கிறிஸ்தவ மார்க்கம் பழைய ஏற்பாட்டிலிருந்து மாறுபட்டதல்ல என்று பவுல் ஏன் சொல்கிறார்? எவ்வாறு சொல்கிறார்?
  4. இரண்டு ரோம ஆளுனர்களுக்குக் கீழாக சிறைப்பட்டிருந்த காலத்தில் பவுலுடைய நடத்தையில் உங்களைக் கவர்ந்த பவுலுடைய நடத்தைகள் எவை?
  5. ஆளுனராகிய பெஸ்து கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் புரிந்துகொண்டாரா?
  6. பவுல் தமஸ்குவிற்குச் செல்லும் பாதையில் கிறிஸ்துவைச் சந்தித்தது எவ்வாறு அப்போஸ்தலர் நடபடிகளுடைய மையமாக நிகழ்வாக இருக்கிறது?
  7. நாம் கிறிஸ்துவைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற கட்டளையில் இருக்கும் ஏழு முக்கிய அம்சங்கள் யாவை?
  8. ரோமாபுரிக்கு கடல்வழியாகப் பயணம் செய்த அந்த மூன்று பரிசுத்தவான்கள் யார்?
  9. அந்தக் கப்பலில் இருந்த பலர் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதிலும் இறைவன் ஏன் அவர்கள் அனைவரையும் காப்பாற்றினார்?
  10. அப்போஸ்தலனையும் அவருடைய நண்பர்களையும் எந்த மூன்று ஆபத்துகளிலிருந்து கிறிஸ்து காப்பாற்றினார்?
  11. பவுலைக் கடித்த பாம்பு நமக்கு என்ன செய்தியைச் சொல்கிறது? மெலித்தா தீவில் மக்களுக்கு சுகமளிக்கப்பட்டதிலிருந்து நீங்கள் எதைப் புரிந்துகொள்கிறீர்கள்?
  12. பவுலுடைய விசாரணையைக் குறித்தோ ரோமாபுரியில் அவருடைய மரணத்தைக் குறித்தோ லூக்கா ஏன் எதுவும் சொல்லவில்லை? அப்போஸ்தலர் நடபடிகளுடைய மைய கீதம் என்ன?

நீங்கள் அப்போஸ்தலர் நடபடிகளுடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் எழுதுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் அதன்மூலம் நீங்கள் நித்திய பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். நாங்கள் உங்கள் பதில்களை விண்ணப்பத்துடன் எதிர்பார்க்கிறோம். எங்களுடைய விலாசம்.

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:57 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)