Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 117 (Paul Before Agrippa II)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)

12. இரண்டாம் அகிரிப்பாவிற்கும் அவனுடைய அரச பரிவாரங்களுக்கும் முன்பாக பவுல் (அப்போஸ்தலர் 25:13 - 26:32)


அப்போஸ்தலர் 25:23-27
23 மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாதிபதிகளோடும் பட்டணத்துப் பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான். 24 அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள். 25 இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன். 26 இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, 27 இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.

கிறிஸ்தவத்தின் முக்கியமான நபராகிய பவுலைப் பார்க்க வேண்டும் என்று இரண்டாம் அகிரிப்பா அரசன் விரும்பினான். பெஸ்து பவுலைச் சந்திப்பதற்கான வழியை அவருக்கு ஏற்படுத்திக்கொடுத்தார். ஆகவே யூதர்களின் இறுதி அரசனாகிய இரண்டாம் அகிரிப்பா தன்னுடைய பரிவாரங்கள் சூழ தன்னுடைய சகோதரியுடன் எக்களமும் இன்னிசையும் முழங்க, ஆரவாரத்தோடு அரசவையில் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து ஆளுனராகிய பெஸ்து தன்னுடைய மகிமையுடன் அவருடைய அலுவலர்கள் பின்தொடர அரசவைக்குள் நுழைந்தார். செசரியாவிலுள்ள முக்கியஸ்தர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தப் பிரமாண்டமான காட்சிகளைத் தொடர்ந்து அந்த பெலவீனமான கைதியாகிய பவுல் தன்னுடைய வாதத்தை எடுத்து அந்த அரசவையில் முன்வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். அப்போது அவர் அநியாயமாக இரண்டு வருடங்கள் சிறைச்சாலையில் கழித்திருந்தார். ஆனால் இதுவரை எந்தவொரு அப்போஸ்தலருக்கோ அல்லது நற்செய்தியாளருக்கோ கிடைக்காத வாய்ப்பாகிய அரசவையில் இத்தனை அதிகாரிகளுக்கு முன்பாகப் பிரசங்கிக்கும் வாய்ப்பு கிடைப்பதற்காகவே கிறிஸ்து அவரை சிறைச்சாலையில் இருக்கும்படி அனுமதித்திருந்தார்.

யூதர்கள் பவுலை உடனடியாகக் கொலைசெய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள் என்பதைச் சொல்லித்தான் இந்தக் கூட்டத்தை பெஸ்து ஆரம்பித்து வைத்தார். எருசலேமிலிருக்கும் உயர்மட்ட ஆலோசனைக் குழு பெரிய கலகத்தின் மூலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள் என்பதையும் பெஸ்து சபையில் அறிவித்தார். ஆனால் அந்த ரோம ஆளுனர் முதலாவது விசாரணையில் பவுல் மரண தண்டனைக்குரிய குற்றம் எதையும் செய்ததாகக் காணவில்லை. ஆனால் பவுலை யூதர்களுடைய கோரிக்கைகளின்படி எருசலேமில் விசாரிக்கப்படுவதற்கு அனுப்பு எத்தனித்தபோது, பவுல் சீசரினால் விசாரிக்கப்படும்படி ரோமாபுரிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இரண்டு வருடங்கள் பவுலை சிறையில் வைத்திருப்பது நியாயமான செயலல்ல என்று பெஸ்து கருதிய காரணத்தினால்தான் இந்தப் பிரச்சனையே உருவானது. யூதர்களுடைய சட்டத்தைப் பவுல் எவ்வாறு மீறினார் என்பதை பெஸ்துவால் அறிந்துகொள்ள முடியவில்லை. இயேசு என்று பெயர் கொண்ட மனிதன் இறந்து உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதை மட்டும் அவர் அறிந்துகொண்டார். இந்தக் காரியத்தை சீசருக்கு எழுதி அனுப்பினால் பெஸ்து ஆவிகளையும் மறுபிறப்பையும் நம்புவதாக சீசர் கருதக்கூடும் என்பதால் அவ்வாறு எழுத அவர் விரும்பவில்லை.

26-ம் வசனத்தில் பெஸ்து சீசரை எஜமான் என்றும் ஆண்டவர் என்றும் அழைப்பதைப் பார்க்கும்போது அந்தக் காலத்தில்தான் அவர்கள் ரோமப் பேரரசர்களை தெய்வங்களாக மாற்ற ஆரம்பித்தார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். இதுதான் பிற்காலத்தில் ரோமப் பேரரசர்களை வணங்க மறுத்த கிறிஸ்தவர்கள் மிகுந்த கொடுமைக்கும் வேதனைக்கும் இரத்த சாட்சிகளாக மரணத்தை அனுபவிப்பதற்கும் காரணமாயிற்று. அவர்கள் தங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக மனப்பூர்வமாக தங்கள் உயிரையும் விடுவதற்குத் தயாராக இருந்தார்கள். சீசரை நம்பியவர்கள் அவரை இறைவனாகப் பாவித்து ஆண்டவர் என்று அழைத்தார்கள். கிறிஸ்து சீசருக்கும் மேலானவர் என்று கிறிஸ்தவர்கள் கருதினார்கள். சீசருக்கு பெஸ்து இங்கு வழங்குகிற பெயர் எல்லாக் காலத்திற்குமுரிய ஒரு பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறது: இயேசுவைத் தவிர வேறு யாரும் ஆண்டவர் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் அல்ல. அவர் உங்கள் ஆண்டவராயிருக்கிறாரா? நீங்கள் யாருக்கு உரியவராயிருக்கிறீர்கள்? காலமெல்லாம் நீங்கள் யாருக்குச் சேவை செய்கிறீர்கள்?

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் இறந்துபோகாமல் உயிருடன் இருப்பதால் நாங்கள் உம்மைத் துதித்து, போற்றி கனப்படுத்துகிறோம். நீரே பாவத்தையும் தீயவனாகிய சாத்தானையும் மரணத்தையும் மேற்கொண்ட மகிமையின் ஆண்டவராயிருக்கிறீர். எங்களை நீர் உம்முடைய அரசில் நிலைநிறுத்தும், உம்மைத் தேடுகிறவர்கள் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வார்களாக!

அப்போஸ்தலர் 26:1-15
1 அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான். 2 அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். 3 விசேஷமாய் நீர் யூதருடைய சகலமுறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். 4 நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள். 5 நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம். 6 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன். 7 இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள். 8 தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன? 9 முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். 10 அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். 11 சகல ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ்சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியப்பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். 12 இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, 13 மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். 14 நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.

தன்னுடைய மக்களில் முக்கியமானவர்களுக்கும் காலனிய சக்திகளின் அதிகாரிகளுக்கும் முன்பாக பவுல் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் நின்று பேசினார். அவர் தான் பேசப்போகிற காரியத்தைக் குறித்து நன்கு அறிந்தவராக அவர் அவர்களுடைய கவனத்தைத் தன் பக்கம் திருப்பும்படி கைகளை நீட்டிப் பேசத் தொடங்கினார். இரண்டாம் அகிரிப்பா யூதர்களுடைய மார்க்க விஷயங்களைக் குறித்து அறிவுள்ளவராக தனது கருத்துக்களை அறிந்துகொள்வார் என்று மகிழ்வோடு தன்னுடைய வாதங்களை எடுத்து முன்வைத்தார்.

பவுல் தன்னுடைய வாதத்தை முன்வைக்கும்போது கொள்கைகளையும் கேள்விகளையும் கருத்துக்களையும் முன்வைக்காமல் தன்னுடைய வாழ்வின் சரிதையை அவர்களுக்கு முன்பாக எடுத்துரைத்தார். அவர் ஒரு ஆன்மீக மெய்மைவாதியாக இருந்த காரணத்தினால் கருத்துக்களையும் கற்பனைகளையும் எடுத்துச் சொல்லி அவர்களுடைய சிரிப்புக்கு ஆளாவதைத் தவிர்த்தார். மனிதர்களுடைய வரலாற்றில் இறைவன் இடைப்படுகிறார் என்ற கோணத்தில் தம்முடைய வாதத்தை முன்வைத்தார்.

யூதர்கள் பவுலுடைய வரலாற்றை அறிய விரும்பினார்கள். ஏனெனில் அவர் தான் ஒரு உறுதியான பரிசேயன் என்று சொல்லியிருந்தார். ஆனால் அவர் நியாயப்பிரமாணத்தை பரிசேயர்களைப் போல கைகொள்கிறவராக இல்லாமல், தன்னுடைய முழு பலத்தோடும், முழு சித்தத்தோடும், ஆத்துமாவோடும், சரீரத்தோடும் இறைவனிடத்தில் அன்பு கூர்ந்தவராக இருந்தார். மகிமையான பரிசுத்தரே அவருடைய வாழ்வின் எண்ணங்களின் ஏக்கமாக இருந்தது. நியாயப்பிரமாணத்தை எழுத்தின்படி கடைப்பிடிப்பதே இறைவனிடத்தில் செல்வதற்கான ஒரே வழியாக அவருக்குத் தோன்றியது. அவருடைய தீவிரமான இறைபக்தியோடு, அனைத்து யூதர்களைப் போலவே பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காக காத்துக்கொண்டிருந்தார். அந்த மாபெரும் நம்பிக்கை விரைவில் நிறைவேறும். இவ்வுலகத்திற்கு ஞானமும் வல்லமையும் சமாதானத்தையும் கொடுக்கும்படி கிறிஸ்து வருவார். கிறிஸ்துவைக் குறித்த இந்த எதிர்பார்ப்பின் காரணமாகத்தான் இப்போது பவுல் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கிறார்.

பவுல் இவ்விதமாகப் பேசியபோது அகிரிப்பா அரசன் தன்னுடைய புருவத்தை உயர்த்தியவனாக: “கிறிஸ்து வருவார் என்ற நம்பிக்கைக்காக நீர் இப்போது நியாயந்தீர்க்கப்படவில்லை, மாறாக கிறிஸ்து வந்துவிட்டார் என்றும் அவர் கொலைசெய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு, மீண்டும் உயிரோடு எழும்பிவிட்டார் என்றும் சொல்வதால்தான் நீர் நியாயம் தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறீர். இதுதான் பிரச்சனையின் முக்கிய அம்சம்” என்று சொல்லாம் என்று எத்தனித்தார்.

பவுல் அரசனுடைய சிந்தனையை அறிந்தவராக, அவர் வாயைத் திறப்பதற்கு முன்பாகவே, முந்திக்கொண்டு, “அப்படியிருக்க, இறைவன் மரித்தவர்களை உயிரோடு எழுப்ப முடியும் என்று நீங்கள் ஏன் நம்பவில்லை?” என்ற கேள்வியை எழுப்பினார். கிறிஸ்துவைக் குறித்த கேள்வி எப்போதுமே வெறுமையாக இருந்த கல்லறையையும் அவர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததையுமே மையப்படுத்தியிருந்தது. யோனாவினுடைய அடையாளம் ஒன்று இடறலை உண்டாக்கும் கல்லாயிருந்தது, அல்லது திருச்சபையின் அடித்தளமாயிருந்தது. ஆகவே இதைக் குறித்த உங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கை என்ன? இயேசுவின் உடல் கல்லறையில் அழுகிப்போய்விட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது இயேசு இன்று மகிமையில் வாழ்கிறார் என்றும் பிதாவுடன் சேர்ந்து ஆளுகை செய்கிறார் என்றும் நம்மிடம் சீக்கிரமாக வருகிறார் என்றும் நீங்கள் நம்புகிறீர்களா? இந்த நம்பிக்கை எளிதான நம்பிக்கையல்ல. இது பரிசுத்த ஆவியானவருடைய ஒளியேற்றத்தினால் நம்முடைய இருதயங்களில் உதிப்பதாகவும் தொடர்ந்து வேத வசனங்களை வாசிப்பதன் மூலமாகக் காத்துக்கொள்ளப்படுகிறதாகவும் இருக்கிறது.

பவுல் முற்காலத்தில் இந்த செய்தியை வெறுத்தவராக இருந்தார். சிலுவையில் அறையப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட நசரேயனாகிய இயேசுவே கிறிஸ்துவும் இறைமகனாகவும் இருக்கிறார் என்ற சிந்தனையை அவர் கோபத்தோடு புறக்கணித்ததோடு, அதை இறைநிந்தனை என்றும் கருதினார். அக்காலத்தில் யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் சேர்ந்து செயல்பட்ட அவர், கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தவும், நம்பிக்கையாளர்களைத் தேடிக்கண்டுபிடித்து சிறையிலடைக்கவும், அவர்களை நீதிமன்றங்களில் நிறுத்தி அவர்களுக்கு மரண தண்டனை வாங்கிக்கொடுக்கவும் கடுமையாக முயற்சிசெய்துகொண்டிருந்தார். எருசலேமிலும் யூதேயாவிலும் நடைபெற்ற அப்படிபட்ட நீதி விசாரணைகளில் பரிசுத்த ஆவியால் நிறைந்த பரிசுத்தவான்களைக் கொண்டுவந்து நிறுத்தி, அவர்களை இயேசு கிறிஸ்துவல்ல என்று பொய்யாக ஆணையிட வைத்து, இயேசுவையும் அவருடைய தெய்வீகத்தையும் மறுதலிக்க வைத்தார். ஆகவே, பெலவீனமானவர்களும் குற்றமற்றவர்களும் இறைநிந்தனை செய்வதற்கு பவுல் காரணமாகி இருந்தார். அந்த மக்களுடைய அனுபவத்திற்கும் மனசாட்சிக்கும் எதிராக இந்த சட்ட வல்லுனர் அவர்களை வற்புறுத்தி, கிறிஸ்துவில் அவர்களுக்குக் கிடைத்திருந்த இரட்சிப்பை மறுதலிக்கச் செய்தார். இந்தப் பயங்கரமான போலிப் போதனையை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதற்காக மற்ற நாடுகளில் இருக்கும் இந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் சிறைப்பிடிப்பதற்கு ஆலோசனைச் சங்கத்தின் அனுமதியைப் பெற்று பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்ய சென்றவர்தான் இந்தப் பவுல். இந்த தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு வேண்டிய வைராக்கியத்தையும், வெறுப்பையும் மூடத்தனத்தையும் தன்னில் கொண்டிருந்தார்.

அப்போதுதான் இயேசு அவரைச் சந்தித்தார். இந்தப் பெருமையுள்ள வாலிபனுடைய பயணத்தில் பாதையின் குறுக்கே தம்முடைய பிரகாசமான ஒளியுடன் வந்து வழிமறித்தார். அதனால் அவர் தன்னுடைய குதிரையிலிருந்து கீழே விழுந்தார். கிறிஸ்துவினுடைய மகிமையின் தோற்றம் சூரியனுடைய பிரகாசத்தைக் காட்டிலும் அதிகமானதாக இருந்தது. பவுலுடைய உள்ளான இருதயம் பொசுங்கிப் போனது, அவர் ஆடிப்போனார். இந்த உலகத்திலேயே தன்மீது இறைவனுடைய பயங்கரமான நியாயத்தீர்ப்பு திடீரென வந்துவிட்டதை அவர் உணர்ந்தார்.

அப்போஸ்தலர் நடபடிகளின் ஆசிரியரான லூக்கா மூன்று முறை தமஸ்குவிற்குப் போகும் வழியில் பவுலுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பை எழுதுகிறார் (அதிகாரங்கள் 9, 22, 26). இந்த அனுபவமே மிகவும் முக்கியமானது என்றும் அப்போஸ்தலர் நடபடிகளின் இரகசியமே இந்த நிகழ்வில்தான் காணப்படுகிறது என்றும் காண்பிக்கும்படி லூக்கா அப்படிச் செய்கிறார். அவருடைய நற்செய்திப் பணியின் உண்மையான தூண்டுகோள் யார் என்பதை இந்த நிகழ்வுதான் விளக்குவதாயிருக்கிறது.

தம்முடைய பரிசுத்தவான்களைக் கொலைசெய்த சவுலை இறைவன் சத்தியத்தின்படியும் நியாயப்படியும் கொலை செய்திருக்க வேண்டும். அவர் இறைவனுக்காக அந்தக் காரியங்களை வைராக்கியத்துடன் செய்துகொண்டு வந்தாலும் உண்மையில் அவர் இறைவனுடைய எதிரியாகவே இருந்தார். ஆனால் இறைவன் சவுல் மீது இரக்கம் வைத்து அவருக்குத் தம்மை வெளிப்படுத்தினார். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, என்றைக்கும் அவரோடு ஒன்றாயிருக்கிற காரணத்தினால் பவுல் அவர்களைத் துன்பப்படுத்திய செயல் உண்மையில் ஒரு பயனற்ற செயல். கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தினால் தான் இறைவனுக்குப் பிரியமானவனாக இருப்பார் என்று அவர் நினைத்துக்கொண்டார். ஆனால் பவுல் தான் அல்ல தான் துன்பப்படுத்திய மக்களே இறைவனுக்குரியவர்களாக இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்டார். சவுல் தீயவனாகிய சாத்தானுடைய சேவகனாகவே இருந்தார், ஏனெனில் அவர் வெறுப்பு, தீய எண்ணங்கள், இறைநிந்தனை, கொலை போன்ற பாவங்களினால் நிறைந்திருந்தார்.

அந்தத் தருணத்திலிருந்து பவுலுடைய அனைத்துப் பெருமைகளும் பெருமையின் பல்வேறு வடிவங்களும் அவருடைய வாழ்விலிருந்து மெழுகுபோல உருகிப் போயிற்று. அவர் தன்னுடைய வாழ்வில் தான் இதுவரை செய்த காரியங்களை நினைத்து வெட்கப்பட்டார். அதே வேளையில் தன்னை ஏன் இந்த மாபெரும் இறைவன் அழித்துவிடவில்லை என்றும் தன்னுடைய மனதில் சிந்தனை செய்யத் தொடங்கினார். ஆகவே அவர் இந்த இறைவனுடைய அடையாளத்தையும் பெயரையும் கேட்டு அவரிடத்தில் கிருபையைப் பெற்றுக்கொள்ள விளைந்தார். தான் ஒரு கொலைகாரனாகவும் இருதயத்தில் இறைவனுக்குப் பகைஞனாகவும் இருந்த காரணத்தினால் பரத்திலிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இந்தப் பாவியான மனிதனை இயேசு புறக்கணிக்காமல் அவரோடு தெளிவான மொழியில் பேசினார்: “நான்தான் இயேசு. நான் சிலுவையில் அறையப்பட்டு, அழிந்து, மக்கிப் போய்விட்டேன் என்று நீ நினைத்தாய். இல்லை. நான் உயிருள்ளவரும் மகிமையானவரும் இறைவனோடு ஒன்றாக இருப்பவருமாகிய இறைவன். சிலுவை எனக்குக் கொடுக்கபட்ட தண்டனை என்று நீ எண்ணினாய். இல்லை, இல்லை, சிலுவையில் நான் உனக்காகத்தான் மரணத்தை அனுபவித்தேன். முழு உலகத்தின் பாவங்களுக்காக நான் சிலுவையில் கொலைசெய்யப்பட்டேன். நீதியில்லா உங்களுக்காக நீதியுள்ள நான் மரணத்தை ஏற்றுக்கொண்டேன். நான் குற்றமற்றவன். ஆனால் நீ குற்றவாளியாக இருக்கிறாய். ஆகவே உடனடியாக என்னிடத்தில் மனந்திரும்பு. என்னிடத்தில் மனந்திரும்பு, ஏனெனில் உனக்கு வாழ்வளிக்கும் மூலைக்கல்லாக உயிரோடிருப்பவர் நான் மட்டுமே. நீ என் மீது கட்டப்படவில்லை என்றால் பாறையாகிய நான் உன்மீது மோதி நீ நசுக்கப்பட்டுப் போவாய்.”

அன்புள்ள சகோதரனே, இயேசுவை நீங்கள் மெய்யாகவே அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் உயிரடைவதற்கு முன்பாக அவரைக் கண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்வை நீங்கள் அவரிடம் முழுவதுமாகக் கொடுத்திருக்கிறீர்களா? நீங்கள் இறைவனுடைய ஆவியோடு ஒருமித்து வாழ்கிறீர்களா? வெற்றி பெற்ற கிறிஸ்து எப்போதும், எங்கும் வாழ்ந்துகொண்டு உங்களுக்கு வாழ்வளிக்க ஆயத்தமாயிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள். அவர் அனைத்து நம்பிக்கையாளர்களையும் இந்த வெற்றி பவனியில் கொண்டுவந்து சேர்க்கிறார்.

விண்ணப்பம்: ஓ அண்டவராகிய இயேசுவே நீர் உயிருள்ள இறைவனாக உம்முடைய நற்செய்தியின் மூலமாக எங்களிடம் வருகிறீர். நீர் எங்களுடைய பாவத்தின் காரணமாக எங்களை அழித்துப் போடாமல், உம்முடைய நித்திய அன்பினால் எங்களை நேசித்து, மீட்டுக்கொள்கிறீர். நீர் எங்களுடைய இருதயத்தில் வாழும்படி, எங்களுடைய பாவங்களை வெளிப்படுத்திக் காண்பித்து, எங்களுடைய பிடிவாதத்தை சிலுவையில் அறைந்து, உம்முடைய பரிசுத்த ஆவியினால் எங்களை இழுத்துக்கொண்டு, உம்முடைய கிருபையை எங்களுக்குப் பொழிந்தருளும். என்னுடைய இருதயத்திற்குள்ளும் உமக்காகக் காத்திருக்கிற ஒவ்வொருவருடைய இருதயத்திற்குள்ளும் நீர் வந்து வாசம் செய்யும் உயிருள்ள இறைவா. ஆமென்.

கேள்வி:

  1. பவுல் தமஸ்குவிற்குச் செல்லும் பாதையில் கிறிஸ்துவைச் சந்தித்தது எவ்வாறு அப்போஸ்தலர் நடபடிகளுடைய மையமாக நிகழ்வாக இருக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:46 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)