Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 105 (Paul arrives in Jerusalem; Paul’s Acceptance of Circumcision According to the Law)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
உ - எருசலேமிலும் செசரியாவிலும் பவுல் சிறையிலிடப்படுதல் (அப்போஸ்தலர் 21:15 - 26:32)

1. பவுல் எருசலேமிற்கு வந்து, சகோதரர்களிடம் அவனுடைய ஊழியம் குறித்து பேசுதல் (அப்போஸ்தலர் 21:15-20)


அப்போஸ்தலர் 21:15-20
15 அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.16 செசரியா பட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டுவந்தார்கள்.17 நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.18 மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.19 அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.20 அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

மத்திய தரைக்கடல் கடற்கரைப்பகுதியில் இருந்து எருசலேம் மலைகளின் உயரங்களுக்கு அவர்கள் விரைவாக பயணம் செய்தார்கள். அங்கே சீப்புருதீவைச் சேர்ந்த மினாசோன் என்பவனுடன் இராத் தங்கினார்கள். இவன் ஒருவேளை பர்னபாவின் நண்பனாகவும், பரிசுத்தவான்களின் ஆரம்பகால சபையைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம். ஆண்டவருடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான். சபை ஆரம்பித்தது முதல் பரிசுத்த ஆவியானவர் நிறைவேற்றிய அநேக அற்புதங்களின் விபரங்களை நிச்சயமாக லூக்கா, இந்த மனிதனிடம் கேட்டிருப்பான்.

இறுதியாக கிறிஸ்துவின் வெற்றிப் பவனி மகிமை நிறைந்த எருசலேம் பட்டணத்திற்கு வந்தது. முழு உலகிலும் உயிருள்ள ஆண்டவர் நிறைவேற்றிய செயல்களை கேட்பதற்கு ஆர்வத்துடன் வந்திருந்த அநேக சகோதரர்கள் மற்றும் நண்பர்களிடம் அந்த இரவை செலவிட்டார்கள். அநேக நாடுகளை ஆண்டவருடைய சபைக்கு கொண்டு வந்ததினால், அவர்கள் அவனை கனப்படுத்தினார்கள். புறஜாதிகளுக்கு பிரசங்கிப்பதை ஆதரித்த சகோதரர்கள் எருசலேம் சபையில் இருந்தார்கள். நியாயப்பிரமாணத்தின் மீதான தவறான வைராக்கியத்தினால் நிரப்பப்பட்ட நியாயப்பிரமாணவாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர்கள் எண்ணிக்கையில் சொற்பமாய் இருந்தார்கள்.

அடுத்த நாள் இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு மற்றும் எருசலேம் சபை மூப்பர்களை பார்க்கும்படி பவுலும், அவனது உடன் ஊழியர்களும் சென்றார்கள். அந்த நேரத்தில் எருசலேமில் பேதுருவும், யோவானும் இருந்தார்களா? என்பது நமக்குத் தெரியவில்லை. ஐரோப்பிய மற்றும் ஆசியாவின் அனைத்து சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும்படி பவுல் மற்றும் அந்தக் குழுவினருடன் லூக்காவும் இணைந்திருந்தான். எருசலேமில் உபத்திரவப்படும் சபைக்கு அவர்கள் சேகரித்த உதாரத்துவமான காணிக்கைகளை வழங்கினார்கள். ஆச்சரியப்படத்தக்க விதத்தில் லூக்கா இந்த தொகை கொடுக்கப்பட்டதைக் குறித்து ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. அவன் பணத்தை இரண்டாம் தரமாகவே கருதினான். அதைக் குறிப்பிட அவசியமில்லை என்று எண்ணினான். பணத்தை விட மக்கள் முக்கியமானவர்கள். புறஜாதி விசுவாசிகளில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருந்தது மிகப்பெரும் அற்புதம் ஆகும். அவர்களில் கிறிஸ்துவின் வெற்றிக்கான அச்சாரமாக அவர்களது அன்பிலிருந்து வெளிப்பட்ட தியாகச் செயல் காணப்பட்டது.

புறஜாதி சாட்சிகளின் மத்தியில் பிலிப்பி தெசலோனிக்கே, பெரேயா, கொரிந்து, துரோவா மற்றும் எபேசு பட்டணங்களில் கிறிஸ்து செய்த செயல்களைக் குறித்து பவுல் பேசினான். மரித்தோரில் இருந்து எழுந்தவரின் வல்லமையை, பாவிகளை பரிசுத்தமாக்குகிறவரை, தனது மக்கள் அல்லாதோரை தனது மக்களாக்கியவரை அவன் மகிமைப்படுத்தி பேசினான். இந்த உலகில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வெறுமனே நியாயப்பிரமாண சடங்காச்சாரங்களின் படி நியாயப்பிரமாணவாதிகள் வாழ்ந்தார்கள். கிறிஸ்துவின் வல்லமையினால் புறஜாதி தேசங்களுக்கும் நித்திய இரட்சிப்பு கிடைத்தது. புறஜாதி விசுவாசிகள் கிறிஸ்துவின் வல்லமைமிக்க செயலுக்கு அழியாத ஆதாரமாக உள்ளார்கள்.


2. நியாயப்பிரமாணத்தின்படி விருத்தசேதனத்தை பவுல் ஏற்றுக்கொள்ளுதல் (அப்போஸ்தலர் 21:20-26)


அப்போஸ்தலர் 21:20-26
20.பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கிய முள்ளவர்களாயிருக்கிறார்கள். 21 புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.22 இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள்.23 ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள். 24 அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக்கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.25 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். 26 அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்புச் செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.

பரிசுத்தமான சபையில் மகிழ்ச்சியுள்ள இருதயங்கள் சந்தோஷத்தால் நிறைந்திருப்பது ஒன்றும் புதிதல்ல. நியாயப்பிரமாணத்தைக் குறித்த கவலை அநேகரை அடிமைத்தனத்திற்குள் கொண்டு சென்றது. அவர்கள் பவுலை கிறிஸ்துவிற்குள் சகோதரனாக அழைத்தார்கள். அவனை பிதாவாகிய இறைவனின் பிள்ளையாக கருதினார்கள். யூதராகவும், அதே சமயத்தில் கிறிஸ்தவராகவும் அவர்கள் எண்ணிப்பார்த்தார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தில் இருந்து விடுதலையை நோக்கி வரவில்லை. புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரின் மாபெரும் வெளிப்பாட்டை உணராமல் அவர்கள் பழைய ஏற்பாட்டில் சட்ட நிபந்தனைகளுக்கு கட்டப்பட்டிருப்பதில் நிலைத்திருந்தார்கள். அச்சமயத்தில் தேசிய தீவிர புரட்சிக்காரர்களால் கி.மு.70-ல் கலகம் எற்பட்டது. அதன் விளைவாக பரிசுத்த நகரம் மற்றும் தேவாலயம் இடிக்கப்பட்டது. பவுல் யாக்கோபை சந்தித்த குறுகிய காலத்தில் வைராக்கியமிக்க கலகக்காரர்கள் ஆண்டவரின் சகோதரனை கல்லெறிந்து கொன்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் மற்றும் பின் விளைவுகளை பவுல் நன்கு உணர்ந்திருந்தான். ஏன் பவுல் நியாயப்பிரமாணத்தை அனுசரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டான் என்பதற்கான காரணத்தை இது விளக்குகின்றது. சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்பு தீவிரமாதல் இவைகளில் இருந்து அவனைப் பாதுகாக்கும்படி இப்படிச் செய்ய சொன்னார்கள்.

அநேக ஆண்டுகளுக்கு முன்பு பவுல் சிறிய ஆசியாவிலும், கிரேக்கு தேசத்திலும் இருந்த போது தவறான செய்திகள் பரவியது. இறைவனின் உடன்படிக்கையை விட்டுவிலகி யூதர்களிடம், அவர்களின் குமாரர்களை விருத்தசேதனம் பண்ண அவசியமில்லை என்பதை பவுல் வலியுறுத்துகிறான் என்ற செய்தி பரவியது. அப்படிப்பட்ட அறிக்கைகள் பொய்யானது, அறிவீனமானது. ஏனெனில் யூதர்களை பிரியப்படுத்துவதற்காக தனது சொந்தக் கைகளில் பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் பண்ணியிருந்தான். எருசலேமில் யாக்கோபும், மற்ற மூப்பர்களும் இந்த அறிக்கைகளைக் கேட்ட போது, பவுலைக் குறித்து மிகைப்படுத்திச் சொல்லப்பட்டவை என்று நினைத்து, அவைகளை நம்பவில்லை. யூதர்களில் இருந்து கிறிஸ்தவர்களாக ஆனவர்களில் அநேகர் பவுல் தனது பிரபலமான கடிதங்களில் எழுதிய காரியங்களின் அர்த்தத்தை புரிந்துகொள்ளவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே எருசலேமில் இருந்த சபை துன்புறுத்தப்பட்டது. (ரோமர் 5:20; 7:6; கலாத்தியர் 5:4) நியாயப் பிரமாணத்திலிருந்து ஆவிக்குரிய விடுதலையை அடைவது பற்றி விசுவாசிகள் உணர்ந்து கொள்ளவில்லை. விசுவாசத்தினால் வரும் நீதியை விட நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை பெரியதாகக் கருதினார்கள். கிறிஸ்துவின் நீதி அன்பின் கிரியைகளை கொண்டுவரும் என உணராதிருந்தார்கள்.

இந்த சட்டரீதியான காரியங்களை யாக்கோபு கூட்டத்தில் பேசவில்லை. ஏனெனில் அப்போஸ்தல ஆலோசனைச் சங்கம் மூலம் இவை அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டது குறித்து அதிகாரம் 15-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சபையின் தைரியமிக்க தலைவர் யாக்கோபு, புறஜாதி சபைகளின் பிரதிநிதிகளோடு இணைந்து நின்றான். அவர்கள் நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருந்தார்கள். சில குறிப்பிட்ட காரியங்கள் தவிர அனைத்தையும் எருசலேம் விசுவாச அறிக்கை கூறியது. யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் இடையே இணக்கத்தை பாதுகாப்பதற்கு இந்தக் கட்டளையை அவர்கள் பிறப்பித்தார்கள். சபையின் அசைக்க முடியாத அஸ்திபாரமாக கிருபையினால் நீதி என்பது காணப்படுகிறது. அதுவே நற்செய்தியின் இதயம் மற்றும் ஆழமான ரகசியமாக உள்ளது. அநேக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த பவுலிடம் யூதவிசுவாசிகளுக்கு முன்பாக, தான் உண்மையான மற்றும் பூரணமான யூதன் என்பதை சாட்சியிடும் படி பவுலை யாக்கோபு கேட்டுக்கொண்டான். அவனது நாட்டு மக்கள் மீது கொண்டிருந்த அன்பு மற்றும் இறைவனுடனான உடன்படிக்கையினால் அவன் சீராகவும், நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்தும் நடந்தான். பாரம்பரியமாய் நியாயப்பிரமாணத்தை புரிந்து வைத்திருப்பதில் இருந்து அப்போஸ்தலன் விடுபட்டிருந்தான். அவனது நீதிமானாக்கப்படுதல் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதலுக்காக நியாயப்பிரமாணம் தேவையில்லை. இரட்சிப்பு என்பது இறைவனுடைய ஈவு ஆகும். இருப்பினும் யூதர்களை கிறிஸ்துவிற்காக ஆதாயம் செய்யும்படி, அவன் நியாயப்பிரமாணத்திற்கு தன்னை ஒப்புவித்தான். அவனது ஆண்டவருக்காக யூதர்களை ஆதாயப்படுத்தும்படி யூதனுக்கு யூதனாகவும், புறஜாதிகளை ஆதாயப்படுத்தும்படி புறஜாதியானுக்கு புறஜாதியானாகவும் இருக்கிறான் என்று குறிப்பிட்டான் ( 1 கொரி 9:20) நியாயப்பிரமாணம் தன்னில் தானே நன்மையானது மற்றும் பரிசுத்தமானது என்று ரோமாருக்கு எழுதின நிரூபத்தில் பவுல் குறிப்பிடுகிறான். ஆனால் மனிதர்கள் பாவத்தால் நிறைந்துள்ளனர். தங்களது சுய பெலத்தால் அதை கடைப்பிடிக்க முடியாமல் உள்ளனர். (ரோமர் 3:31; 7:12)

மனந்திரும்புதலின் அடையாளமான தலைச்சவரம் பண்ணும்படி யாக்கோபு கொடுத்த ஆலோசனைக்கு பவுல் சம்மதித்திருந்தான். சுத்திகரிப்பின்படி அவனுடைய ஆண்டவரை ஏழு பகல்கள் மற்றும் ஏழு இரவுகள் ஆராதிப்பதற்கு சம்மதித்திருந்தான். இந்த சுத்திகரிப்பின் போது மூன்றாம் நாள் மற்றும் ஏழாம் நாளில் பரிசுத்தமாக்குதலின் தண்ணீர் தெளிக்கப்படும்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் இருந்தவர். நீர் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடித்தீர், நிறைவேற்றினீர், எங்களுக்கு புதிய ஏற்பாடடைக் கொடுத்தீர். அது விடுதலை, வல்லமை மற்றும் அன்பு உடையது. உமது கிருபைக்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நியாயப்பிரமாண ஆவியில் இருந்து அனைவரையும் விடுவிக்கும்படி, அவர்கள் சார்பாக நாங்கள் உம்மிடம் கேட்கிறோம். உமது உறுதியான நீதியின் வல்லமையில் அவர்களை நிலைநிறுத்தும்.

கேள்வி:

  1. தேவாலயத்தில் ஆராதனை செய்யும்படி சுத்திகரிப்பை நிறைவேற்ற வேண்டும் என்று யாக்கோபு ஏன் பவுலிடம் கேட்டான்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:20 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)