Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 088 (Founding of the Church in Corinth)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

8. கொரிந்துவில் திருச்சபையை நிறுவுதல் (அப்போஸ்தலர் 18:1-17)


அப்போஸ்தலர் 18:1-4
1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து; 2 யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான். 3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான். 4 ஓய்வு நாள்தோறும் இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.

இறைபக்தியுள்ள மக்களுடைய பக்தியைக் கவனத்தில்கொண்டு, அதை வைத்து அத்தேனே மக்களுடன் பேசிய ஞானமான பவுலின் அணுகுமுறை அவருக்கு அங்கு பெரிய அளவில் உதவியாக இருக்கவில்லை. யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் எவ்வாறு கிறிஸ்துவையும் அவர் தரும் விடுதலையையும் பரிகசித்ததைப் போலவே கிரேக்கர்களும் கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலைப் பரிகசித்தார்கள். ஆண்டவருடைய கட்டளையின்படி (மத்தேயு 10:14) பவுல் இந்தப் பெருமையுள்ள நகரத்தைவிட்டு வெளியேறினார். யூத வேத அறிஞர்களும் கிரேக்க தத்துவ ஞானிகளும் ஒரேவிதமான நோயினால்தான் பீடிக்கப்பட்டிருந்தார்கள். யூதர்கள் தங்களுடைய சொந்த பலத்தினால் கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முடியும் என்று கருதினார்கள். கிரேக்கர்கள் தங்களுடைய சொந்த அறிவினால் இறைவனை அறிந்துகொள்ள முடியும் என்று எண்ணினார்கள். இரண்டுமே சாத்தியமற்ற காரியங்கள். இலவசமாகக் கொடுக்கப்படும் விடுதலையைப் பெற்றுக்கொள்ள யூதர்கள் விருப்பமற்றிருந்தார்கள். இறைவனுடைய வெளிப்பாட்டினால் தங்கள் மனக்கண்கள் தெளிவடைவதை கிரேக்கர்கள் விரும்பவில்லை. அவர்கள் சுயத்தினாலும் பெருமையினாலும் நிறைந்தவர்களாயிருந்த காரணத்தினால் இறைவனுடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

பரிசுத்த ஆவியானவரினால் ஒரு மனிதனுடைய இருதயம் ஒளியூட்டப்படாத போது மாம்சத்திற்குரிய மனிதனால் மெய்யான இறைவனை உணர்ந்துகொள்ள முடியாது. இறைவனுடைய ஆவியானவருக்கு கீழ்ப்படியாமலும் அவரை அன்பு செய்யாமலும் ஒரு மனிதனால் இறைவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முடியாது. யூத சட்ட அறிஞர்கள் தங்கள் இருதயத்தில் கடினப்பட்டவர்களாயிருந்தார்கள். தத்துவஞானிகள் அபரிமிதமான கற்பனா சக்தியுள்ளவர்களாயிருந்தாலும் அவர்கள் மூடர்களாக அறியாமையில் இருந்தார்கள். பரிகசிக்கப்பட்ட பவுல் அதிகம் பாதிக்கப்பட்டவராக சிலைவழிபாடும் சிந்தனையாளர்களும் நிறைந்த அந்த நகரத்தைவிட்டு வெளியேறினார். இந்த இறைநம்பிக்கையற்ற சிந்தனை அலைகள் திருச்சபை வரலாற்றில் மாபெரும் பாதிப்பையும் சீரழிவையும் உண்டுபண்ணும் என்று அவர் அப்போதே உணர்ந்துகொண்டார். இந்த சிந்தனைப் போக்குகள் இறைவனுக்கு தங்களை ஒப்புக்கொடாதவைகள்.

ஆண்டவர் பவுலை ஒரு யூத தம்பதியினரிடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்கள் அதிகம் பேசாதவர்களாகவும், இறைவனிடம் எப்போதும் விண்ணப்பிக்கிறவர்களாகவும், இறைவனை நம்புகிறவர்களாகவும், தங்கள் சொந்தக் கைகளினால் வேலை செய்கிறவர்களாகவும் இருந்தார்கள். அதனால் பவுலுக்கு நன்மை ஏற்பட்டது. அவர்கள் ரோமாபுரியில் இருந்தபோது விசுவாசிகளாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிலவுதி இராயனுடைய காலத்தில் (கி. பி. 41-54) தலைநகரமாகிய ரோமாபுரியில் அரசாங்கம் யூதர்களுக்கு எதிரான உபத்திரவத்தை ஆரம்பித்தபோது, கூடாரம் செய்யும் தொழிலைச் செய்துவந்த இந்தத் தம்பதியினர் செழிப்பான கடற்கரை நகரமாகிய கொரிந்துவிற்கு வந்து சேர்ந்தார்கள். அது ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்கு பெயர்போன பட்டணமாயிருந்தது. அந்நகரத்துக் குடிமக்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குடியேறியிருந்தார்கள். அந்த தம்பதியினரோடு சேர்ந்து பவுலும் கூடாரம் செய்யும் தொழிலைச் செய்தார். பவுல் மற்றவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தனக்கும் தன்னோடு இருந்தவர்களுக்கும் வேண்டிய பொருளாதாரத் தேவைகளைச் சந்திப்பதற்காக தன்னுடைய சொந்த தொழிலைச் செய்தார்.

கொரிந்து பட்டணத்தில் பவுல் பகல்பொழுதில் கூடாரம் செய்தார். மாலை நேரங்களில் நற்செய்தியைப் பிரசங்கம் செய்தார். அவர் மாலை வேளையிலும், விடுமுறை மற்றும் ஓய்வு நாட்களிலும் ஓய்வெடுக்காமல் ஆண்டவருக்காக தன்னுடைய நேரத்தையும் பெலத்தையும் தியாகம் செய்தார். ஆரம்ப நாட்களில் பவுல் தன்னுடைய பிரசங்கப்பணியை ஜெப ஆலயத்திலிருந்த யூதர்கள் நடுவில் மட்டும் மேற்கொண்டார். அத்தேனே பட்டணத்தில் பவுலுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவருடைய விண்ணப்பத்தையும் தியானத்தையும் அதிகப்படுத்தியிருக்கும். ஒருவேளை அவர் தன்னுடைய நற்செய்தி அறிவிக்கும் முறையைப் பற்றி அதிகம் சிந்தித்திருப்பார். அதைக் குறித்து அவர் கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது கடிதத்தில் வாசிக்கிறோம் (1:18 - 2:16). இந்த வசனங்களை நீங்கள் கவனமாக வாசித்தால் பவுல் அத்தருணத்தில் எந்த நிலையிலிருந்தார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

அப்போஸ்தலர் 18:5-8
5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். 6 அவர்கள் எதிர்த்துநின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி, 7 அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது. 8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

தீமோத்தேயும் சீலாவும் பவுலிடத்தில் வந்தபோது அவர் ஆவியில் மிகவும் நெருக்கப்பட்டவராக இருந்தார். சகோதரர்களுடைய ஐக்கியம் கிடைத்தபோது தன்னுடைய பிரசங்கப்பணியை இன்னும் தீவிரப்படுத்தினார். மக்கதோனியா திருச்சபையிலிருந்து தாராளமான நன்கொடையுடன் அவர்கள் வந்திருந்த காரணத்தினால் (2 கொரிந்தியர் 11:9), பிரசங்கம் செய்வதற்கு பவுலுக்கு அதிக நேரமிருந்தது. யூதர்களால் புறக்கணிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவே கிறிஸ்து என்பதை ஜெபஆலயத்தில் வந்திருந்தவர்களுக்கு நீதிச்சட்டத்திலிருந்து விளக்கப்படுத்திக் காண்பித்தார். அதனால் அனைத்து இடங்களிலும் நடைபெறுவதுபோல, பெரும்பான்மையான யூதர்களினால் அவர் பகைக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டார். அவருடைய நற்செய்தி பளித்துரைக்கப்பட்டது. ஆகவே அவர் அவர்களை விட்டு விலக வேண்டியது அவசியமாயிற்று. “உங்கள் இரத்தப்பலி உங்கள் தலைமேலேயே இருக்கும். விடுதலைதரும் அனைத்து வார்த்தைகளையும் நான் உங்களுக்கு அறிவித்துவிட்ட காரணத்தினால் இப்போது நான் இரத்தப்பலிக்கு நீங்கி சுத்தமாயிருக்கிறேன்” என்று சொல்லி பவுல் அவர்களை விட்டு விலகினார். இந்த வார்த்தையின்படி சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் புறக்கணிப்பவர்கள் தற்கொலை செய்துகொண்டவர்களைப் போல இறைவனுடைய நீதியான தீர்ப்புக்கு முன்பாக நிற்க வேண்டியவர்களாயிருப்பார்கள். அவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணிப்பவர்கள் விடுதலையின் ஆசீர்வாதத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள். அவர்களுக்கென்று செலுத்தத்தக்க வேறொரு பலியில்லாத காரணத்தினால் தங்களுக்குத் தாங்களை அழிவைத் தீர்ப்பாக எழுதிக்கொள்கிறார்கள்.

இத்தருணத்திலிருந்து பவுல் புறவினத்து மக்கள் மீது தன்னுடைய கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். ஆயினும் அவர் ஜெப ஆலயத்தைவிட்டு வெகுதூரம் சென்றுவிடாமல். அதற்கு அருகாமையிலேயே உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, இறைபக்தியுள்ளவனாகிய யுஸ்து என்பவரோடு தங்கியிருந்தார். கிறிஸ்துவுக்காக மனிதர்களைப் பிடிப்பவராயிருப்பதற்கு அவர் அஞ்சவில்லை. அவர் ஜெப ஆலயத்திற்குச் செல்பவர்களைச் சந்தித்து தன்னுடைய வீட்டில் நடைபெறும் கூட்டங்களில் பங்குபெறும்படி செய்தார். அவர் வார நாட்கள் முழுவதும் கூட்டங்களை நடத்தினார். அவர் ஜெப ஆலயத் தலைவனை கனப்படுத்தி, அவரை அடிக்கடி சந்தித்து, அவரோடு பேசி, சத்தியத்தை அவருக்கு உணர்த்தியதால் அவர் விசுவாசியானார். இது கொரிந்தியர்களுக்கு ஒரு அற்புதமாகத் தோன்றியது. பழைய உடன்படிக்கையின் அங்கத்தவர்களில் மிகவும் முதிர்ச்சியடைந்த ஒருவர் கிறிஸ்த விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அவர் பவுலுடைய கைகளினாலேயே தன்னுடைய குடும்பத்தோடு திருமுழுக்குப் பெற்றுக்கொண்டார். அவர் கிறிஸ்துவின் அரசாங்கத்திற்குள் நுழைந்தார் (1 கொரிந்தியர் 1:14). அவருடைய மனமாற்றத்திற்குப் பிறகு பலர் கிறிஸ்துவினிடத்தில் வந்தார்கள். கொரிந்து திருச்சபை வேகமாக வளர்ச்சியடைந்து செழித்தது.

அப்போஸ்தலர் 18:9-17
9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; 10 நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார். 11 அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான். 12 கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்: 13 இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள். 14 பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும். 15 இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து, விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, 16 அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான். 17 அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.

ஜெப ஆலயத்தலைவனுடைய மனமாற்றத்தின் காரணமாக யூதர்கள் கொதித்தெழுவார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார். ஆகவே அவர் கொரிந்துப் பட்டணத்தில் இருப்பதா அல்லது அங்கிருந்து தப்பிச் செல்வதா என்ற கேள்வி எழுந்தது. அவர் அங்கிருப்பதா அல்லது வெளியேறுவதா எது கொரிந்துவில் தோன்றி வளரும் இளைய திருச்சபைக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். அவர் இதைப் பற்றி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்தார். ஆண்டவர் அவருக்கு பதிலுரைத்தார். ஆண்டவர் பவுலுக்குக் கொடுத்த கட்டளையைப் புதுப்பித்து, நற்செய்தியை தெளிவாக, முழுமையாக, தைரியமாக அறிவிக்கும்படி கட்டளையிட்டார். இந்த தெய்வீக வார்த்தைகளை நீங்கள் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றினால் இறைவனுடைய சித்தம் தெளிவாக வெளிப்படுகிறது.

தெய்வீக அன்பில் பயமேதும் இல்லாத காரணத்தினால், கிறிஸ்து உங்களை அனைத்துவித பயத்திலிருந்தும் விலக்கிக் காக்கிறார். கிறிஸ்து உங்களுக்கு அருகில் இருப்பதால் நீங்கள் பெலனடைந்து, தைரியத்துடன் பேசுங்கள், அமைதிகாக்க வேண்டாம். இறைவானால் உயிரோடு எழுப்பப்பட்டவரைக் குறித்த சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்து தைரியமாகப் பேசுங்கள். நம்முடைய நம்பிக்கை ஒரு மதமோ, தத்துவமோ அல்ல. அது நாம் இணைக்கப்பட்டிருக்கும் நபரைப் பற்றிய செய்தியாக இருக்கிறது. கிறிஸ்து உண்மையிலேயே உயிரோடு எழுந்தார். அவர் தம்முடைய பணியாளர்கள் அனைவருக்கும் தான் உயிரோடிருப்பதை என்றென்றும் உறுதிசெய்துகொண்டிருக்கிறார். இது அவருடைய அப்போஸ்தலர்களுக்கும், பணியாளர்களுக்கும், சீடர்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய ஆறுதலைக் கொடுக்கிறது. நீங்கள் கைவிடப்பட்டவரோ, தனிமைப்படுத்தப்பட்டவரோ அல்ல. காரணம் உங்களுடைய ஆண்டவர் எப்போதும் உங்களை நீதிமான்களாக்குகிறார், உங்களுடன் வருகிறார், உங்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர் ஒருபோதும் உங்களைக் கைவிடுவதில்லை. கிறிஸ்துவினுடைய அன்பின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட எதுவும் உங்களுக்கு நேரிட்டுவிடாது. அவரே உங்கள் வழிகாட்டியாக இருக்கிறார். உங்களுடைய ஆண்டவர் உங்களைப் பாதுகாப்பதால், பிசாசின் சதித்திட்டங்கள் எதுவும் உங்களைத் தொடாது.

உங்களைச் சுற்றியுள்ள மக்கள் பலரை வென்றெடுக்க வேண்டும் என்பதுதான் இறைவனுடைய சித்தமாயிருக்கிறது. அவர் அவர்களை விடுதலைக்காக தெரிந்துகொண்டு உங்கள் மூலமாக அவர்களை அழைக்கிறார். அவர்கள் உங்கள் குரலில் இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, நம்பிக்கையினால் புதுப்பிக்கப்படும்படி அவரிடத்தில் வருகிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் அன்பினால் ஒரே திருச்சபையில் கூட்டப்பட்டு, இறைவனுடனான உறவிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தங்களை இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அவருடைய பரிசுத்த மக்கள் எப்போதும் அறிவித்துக்கொண்டே இருப்பார்கள். உங்களுடைய நகரத்தில் இறைவனை துதித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கின்ற ஒவ்வொரு இருதயத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நீங்கள் கலங்காமல் கிறிஸ்துவின் வெற்றி இப்போது நிறைவடைந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அவரை நம்புகிறவர்கள் அவருடைய வெற்றிபவனியில் அவருடன்கூட வருவார்கள்.

அந்தியோகியா, லிக்கோனியா, லீஸ்திரா, பிலிப்பு, தெசலோனிக்கேயா மற்றும் பெரோயா ஆகிய பட்டணங்களில் நடைபெற்றதைப் போல கொரிந்து பட்டணத்தில் யாரும் பவுலுக்குத் தீங்கு செய்ய முடியாது என்பதை இறைவன் அவருக்கு உறுதிசெய்தார். அவருக்கு தீங்கு செய்ய நினைப்பவர்கள் இறைவனுடைய கண்டிப்பைச் சந்திக் நேரிடும். ஆகவே இந்த தீமைநிறைந்த பட்டணத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒன்றரை வருடகாலம் தங்கியிருந்து, தடையின்றி நற்செய்தியைப் பிரசங்கித்து, யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்கு அருகில் வாழ்ந்து, மீட்கப்பட்டவர்களுடைய ஐக்கியத்தை அனுபவித்தார்.

கொரிந்து ஆகாயா மாகாணத்தின் தலைநகராயிருந்தது. கி. பி. 53-ல் கல்லியோன் என்பவர் ஆகாயா மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். அப்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக உபத்திரவத்தைத் தூண்டிவிடும்படி யூதர்கள் அங்கு பெரிய கலகத்தை உண்டுபண்ணினார்கள். ஒரு தெய்வீக அரசனைப் பற்றி பரப்புரை செய்துவரும் பவுல் இராயனுக்கு எதிரி என்று அவர்கள் குற்றஞ்சாட்டவில்லை. அவர் யூத மார்க்கத்திற்கும் அதனால் ரோம சட்டத்திற்கும் எதிரான ஒரு சமயத்தைப் பரப்பி வருவதாகவுமே குற்றஞ்சாட்டினார்கள். ரோமச் சட்டம் யூத மதத்தை சட்டபூர்வமான மதமாக அங்கீகரித்திருந்தது. ஆனால் ஆளுனராகிய கல்லியோன் அடிப்படையில் யூதர்களுக்கு எதிரானவர். பழைய ஏற்பாட்டு மக்களாகிய யூதர்களை ரோமைவிட்டு விரட்டியடித்த கிலவுதி இராயனுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர் கல்லியோன். ஆகவே அவர் அந்தக் குற்றச்சாட்டை புறக்கணித்துவிட்டு, பவுல் தன்னையே காத்துக்கொள்ளும் நிலை ஏற்படாதவாறு செய்தார். கிறிஸ்து தம்முடைய பணியாளனைக் காத்துக்கொண்ட காரணத்தினால் பவுல் தனக்காக ஒரு வார்த்தைகூட பேச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

பவுலுக்கு எதிராக ஆளுனரிடத்தில் முறையிட்ட ஜெப ஆலயத்தலைவர் தனது முயற்சியில் தோல்வியடைந்தார். ஆகவே ஜெப ஆலயத்திலிருந்தவர்கள் அந்த புதிய ஜெப ஆலயத் தலைவனைப் பிடித்து கல்லியோனுக்கு முன்பாக அடித்தார்கள். ஏனெனில் அவர் புதிய ஆளுனருக்கு முன்பாக இந்த புதிய ஜெப ஆலயத் தலைவர் தங்களை அவமதித்துவிட்டதாக அவர்கள் கருதினார்கள். கிறிஸ்துவின் கரம் பவுலைப் பாதுகாப்பதை இந்த தலைவர் தடுக்க நினைத்தார். ஆனால் கிறிஸ்துவின் கரம் அந்தத் தலைவர் மீது கடுமையாக விழுந்தது. இறைவன் தன்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைப் பாதுகாக்கும்வரை அவருடைய திருச்சபை நிறுவப்படுவதை யாரும் தடைசெய்ய முடியாது. ஆகவே இறைவனை நம்பி எப்போதும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். உங்கள் சகோதரர்களுடைய ஐக்கியத்தில் இரவும் பகலும் ஆண்டவரைப் பற்றிப் பேசி அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய கிறிஸ்துவே நீர் பவுலோடு இருந்து, கொரிந்து பட்டணத்தில் அவரைப் பாதுகாத்து, அவரைப் பெலப்படுத்தி, உறுதிப்படுத்தியதால் உமக்கு நன்றி. எங்களுடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தி, எங்கள் அன்பைப் பெருகப்பண்ணி, உயிருள்ள நம்பிக்கையில் எங்களைக் காத்துக்கொள்ளும். விலகிப் போகிறவர்களை நீர் நிச்சயமாகவே விடுவிக்கிறீர் என்பதை நாங்கள் காண்பிக்கும்படி அவர்களுக்கு முன்பாக தைரியமாக சாட்சிபகர எங்களுக்கு உதவிசெய்யும்..

கேள்வி:

  1. கொரிந்து பட்டணத்தில் பவுலுக்கு இறைவன் கொடுத்த குறிப்பான வாக்குறுதி என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)