Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 086 (Paul at Athens)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

7. அத்தேனே பட்டணத்தில் பவுல் (அப்போஸ்தலர் 17:16-34)


அப்போஸ்தலர் 17:21-29
22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். 23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. 25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. 26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; 27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. 28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். 29 நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

அத்தேனே பட்டணம் பிரமாண்டமான, அழகான நகரமாகும். எருசலேம் அதைவிட மேலான நகரமாயிருந்தது. அத்தேனே பட்டணத்தைச் சுற்றியுள்ள குன்றுகளும், சமவெளிகளும், சமுத்திரங்களும் செவிக்கினிய இசை போல காணப்பட்டது. ஆனால் எருசலேம் நியாயத்தீர்ப்பும் கிருபையுமாகிய குன்றுகளாலும் மலைகளாலும் சூழப்பட்ட ஒரு பலிபீடம்போல காணப்பட்டது. அத்தேனே கலாச்சாரத்தின் மையமாகிய கிரேக்கக் கலையின் முக்கியமான இடத்திலே பவுல் நின்றுகொண்டிருந்தார். பார்த்தினானுடைய நிழலிலும் மினர்வா தேவாலயத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தார். உண்மையான இறைவனும், அனைத்தையும் படைத்தவரும், எல்லாம் வல்லவரும், அனைத்தையும் ஆளுகிறவருமாகிய இறைவனுக்காக வாழ்வதற்காக பவுல் போராடிக்கொண்டிருந்தார். பவுல் சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை அங்கு பிரசங்கிக்கவில்லை. ஏனெனில் அவரைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பாவமன்னிப்பை அறியாதவர்களாகவும் அதைத் தேடாதவர்களாகவுமிருந்தார்கள். அவர் தம்முடைய விசுவாசத்தின் கொள்கைகள் அனைத்தையும் அவர்களுக்கு வெளிப்படுத்தவும் இல்லை; அவர்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் பதிலுரைக்கவும் இல்லை. அத்துடன் தம்முடைய ஆவிக்குரிய அறிவையும் அவர்களுக்கு வெளிப்படுத்தாமல், அதை அவர்களுக்கு முன்பாக மறைத்து வைத்தார். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அவர் பிரசங்கம் செய்தார். அவர் ஞானத்தின் ஆரம்பமாகிய இறைவனுக்குப் பயப்படும் பயம் என்னும் முதல்படியிலிருந்து ஆரம்பிக்கிறார். இந்த ஞானமுள்ள பிரசங்கி முதலில் அத்தேனர்களுடைய பலதெய்வ வழிபாட்டிலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சிசெய்கிறார். இறைவன் ஒருவர் என்பதை அவர்களுக்குக் காண்பித்து, அவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதால் அவர்கள் அவருடைய சித்தத்தை நாட வேண்டும் என்றும் அவர்களுக்குப் பிரசங்கித்தார். அப்பொழுதுதான் அவர்கள் பரிசுத்தமான இறைவனுக்கு முன்பாக நடுங்கி மனந்திரும்புவார்கள்.

தத்துவஞானிகளும் அறிஞர்களும் இறைவனை அறியாதிருந்தமைக்காக பவுல் அவர்களைக் கடிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய பலதெய்வ வழிபாட்டைப் பார்த்து மிகவும் கவலைகொண்டாலும், அவர்களுடைய மேலோட்டமான இறைபக்திக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி, அவர்களுடைய நல்ல நோக்கத்தைக் கனப்படுத்தினார். அப்போஸ்தலனாகிய பவுல் தொலைந்துபோன மனிதர்களுக்கும் அவர்களுடைய தொலைந்துபோன நிலைமைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைக் கண்டார். தொலைந்துபோன மனிதன் இறைவனைத் தேடுகிறான். அவ்வாறு தேடுகிற மனிதனை அவர் புறக்கணிப்பதில்லை. அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறவரை பவுல் அவர்களுக்கு முன்பாக வைத்தார். அனைத்து மனிதர்களும் இறைவனுக்காக தங்கள் இருதயங்களில் ஏங்குகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பாவங்களில் இருப்பதால் அவர்களால் இறைவனை அறியவும் முடியவில்லை அவரிடம் வரவும் முடியவில்லை என்பது பரிதாபத்திற்குரிய உண்மையாகும்.

பவுல் அந்த அகம்பாவமுள்ள ஞானிகளின் நடுவில் எழுந்து நின்று அவர்கள் அறியாத இறைவனைத் தனக்குத் தெரியும் என்று தைரியமாக அறிவித்தார். பவுல் பிரசங்கித்த இந்த அறிப்படாத இறைவன் அவர்களுக்கு மறைவானவராகவே இருந்தார். ஆயினும் அத்தேனர்கள் தங்களுக்குத் தெரியாத ஒரு தெய்வத்தைக்கூட ஆராதனை செய்யாமல் விட்டுவிட விரும்பாதவர்களாயிருந்தார்கள். அறியப்படாத தெய்வத்தினுடைய கோபத்திற்கு அவர்கள் ஆளாகிவிடக்கூடாது என்று அதற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி பலிகளைச் செலுத்தி வந்தார்கள். இந்த பொய்தெய்வ வழிபாட்டிற்கான பலிபீடத்தை அவர்களுடைய சிலைவழிபாட்டிற்கும் தன்னுடை விசுவாசத்திற்குமான தொடர்புப்புள்ளியாக பவுல் பயன்படுத்தினார். அதைப் பயன்படுத்தி இன்றும் வானத்தையும் பூமியையும் மேகங்களையும் காற்றுகளையும் ஆளுகைசெய்யும் எல்லாவல்ல இறைவனை அவர்களுக்குக் காண்பித்தார். அவர் தம்முடைய கரத்தில் வானத்தையும் சமுத்திரத்தையும் நட்சத்திரங்களையும் வைத்திருக்கிறார். அவர் நம்முடைய தலைகளில் உள்ள முடிகளைக்கூட எண்ணியிருக்கிறார். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலத்தில்கூட எல்லாவற்றையும் படைத்த இந்த மாபெரும் இறைவனுடைய மகிமையையும் மேன்மையையும் ஆழமாக அறிந்துகொள்ளும் தேவையில் மனிதர்களாகிய நாம் இருக்கின்றோம். இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் வானவியல் ஆகிய அனைத்தும் அவருடைய அளவற்ற ஆற்றலை விளக்குவதற்கான முறைகளேதவிர வேறல்ல என்பதை நாம் உண்மையாக உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த உயிருள்ள இறைவன் நமது சிந்தையைவிட மேலானவர், நம்முடைய புரிந்துகொள்ளுதலைவிட உயர்வானவர். நம்முடைய மூளையைப் பாதுகாக்கும் சிறிய மண்டையோட்டை அவர்தான் படைத்தார். நாம் அனைவரும் அவருடைய படைப்புகளாயிருக்கிறோம். அவரோ படைக்கும் ஆவியாயிருக்கிறார். நம்முடைய பாவத்தின் காரணத்தினால் நாம் அவரைவிட்டுப் பிரிந்திருக்கிறோம். இதுதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள உறவாகும். நாம் இந்த படைப்பின் இறைவனை புதிதாக அறிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சிந்தைகளை அவரை நோக்கிச் செலுத்தும்போதுதான், விஞ்ஞானத்தையோ, தொழில்நுட்பத்தையோ, மனிதர்களையோ, பணத்தையோ இறைவனாக மாற்றாமல் ஒன்றான மெய் இறைவனாகிய அவரையே நினைக்கிறவர்களாயிருப்போம்.

இந்த மாபெரும் இறைவன் தன்னில் பரிசுத்தமும் மேன்மையும் உள்ளவராயிருப்பதால், நாம் அவரை ஆராதித்து அவருக்குப் பலிசெலுத்த வேண்டும் என்று அவசியமில்லை. அவர் மனிதர்களுடைய ஆதரவை நாடி நிற்பவரல்ல, தனக்கு உணவும் பலிகளும் தேவை என்று அவர் நம்மிடத்தில் கேட்கிறவர் அல்ல. மேலும் அவர் கோவில்களுக்குள்ளோ அல்லது தேவாலயங்களுக்குள்ளோ கட்டுப்பட்டு இருப்பவருமல்ல. அவருடைய ஆவி சிலைகளுக்குள்ளும் வித்தியாசமான கற்களுக்குள்ளும் பொதிந்திருப்பதும் இல்லை. நம்முடைய இறைவன் எதற்கும் கட்டுப்படாதவரும் மகிமை நிறைந்தவருமாயிருக்கிறார். மனிதர்களிலும், மிருகங்களிலும், தாவரங்களிலும் தொடர்ந்து உயிர்களை உருவாக்கும் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வெளிச்சத்திலும் வாயுக்களிலுமிருந்து கெட்டியான நட்சத்திரங்களாக உருவாக்கப்படும் புதிய நட்சத்திரங்கள் கூட அவருடைய சித்தமின்றி உருவாவதில்லை. படைப்பவராகிய இறைவனுக்கு மரியாதை செய்கிறவர்கள் முதலில் அவருக்கு தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். நாம் அவருடைய மகிமையை உணர்வோமாகில் அவருக்கு நன்றியையும் ஆராதனையையும் செலுத்தும் நம்முடைய செயல் மிகவும் இன்றியமையாதவைகளாகும். இவ்விதமாக பவுல் பொற்சிலைகளிலும் பளிங்கு ஆலயங்களிலும் நம்பிக்கைகொண்டிருந்த அந்த மக்களுடைய அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுதலைசெய்ய முயற்சி செய்தார். அவர்கள் அனைத்தையும் படைத்தவராகிய இறைவனிடத்தில் அவர்களை வழிநடத்த அவர் நாடினார்.

அதன் பிறகு அனைத்தையும் ஆளுகை செய்யும் இந்த இறைவன் மனிதர்களுடைய வரலாற்றில் தலையிடுகிறார் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். மனிதர்களை ஆதாமில் இறைவன் படைத்திருந்தார். அவர்களுடைய உடல்களில் பாவத்தின் ஆற்றல் இருந்தபோதிலும் அவர்களுடைய இனங்களுக்கு அவர் கட்டளைகொடுத்து, அவர்கள் செழிப்படையும்படி செய்தார். அவருடைய பரிசுத்த சட்டத்தைக் கைக்கொள்கிறவர்கள் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் யார் இறைவனை விட்டுவிடுகிறார்களோ அவர்கள் சுயநலம் என்னும் சுகபோகத்தில் மூழ்கிப்போகிறார்கள். இரக்கமுள்ள இறைவன் ஒவ்வொரு மக்களினங்களும் அவர்களுடைய திறமைகளையும் வெற்றிகளையும் அடையும்படி தங்களை உணர்ந்துகொள்ளும் தருணங்களை அவர்களுக்குக் கொடுக்கிறார். அவர்கள் வாழ வேண்டிய எல்லைகளையும் இறைவனே அவர்களுக்குக் குறித்திருக்கிறார். இறைவனை மதிக்கத் தவறும் மனிதர்கள் மனித உரிமைகளையும் மதிக்கத் தவறுகிறவர்களாக மாறுகிறார்கள். அனைத்து மக்களுக்கும் முன்பாக இருக்கின்ற முக்கிய கடமை யாதெனில் அவர்கள் இறைவனைத் தேடி அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். நம்முடைய வாழ்வின் நோக்கம் பணமாகவோ, கனமாகவோ, வல்லமையாகவோ, விஞ்ஞானமாகவோ இருக்க முடியாது. உயிருள்ள இறைவனே நம்முடைய வாழ்வின் நோக்கமாயிருக்க முடியும். இந்த இறைவனை நோக்கிப் பயணிக்காத எந்தவொரு மனிதனும் தொலைந்துபோனவனாக இருக்கின்றான். நீங்கள் உங்கள் ஆண்டவரைத் தேடுகிறீர்களா அல்லது உங்கள் வாழ்வு உங்களைச் சுற்றித்தான் ஓடிக்கொண்டிருக்கிறதா? அழிந்து போகிற காரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது அனைத்தையும் உங்களுக்குக் கொடுக்கக்கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அவர் மட்டுமே அனுதினமும் நமக்கு வாழ்வைப் படைத்துக் கொடுப்பவர். மக்களை அவர்களுடைய செயல்களுக்கு ஏற்றாற்போல ஆளுகை செய்பவரும் அவரே.

இந்த மாபெரும் இறைவன் வானத்து மேகங்களின் மேல் அமர்ந்திருப்பவரோ, கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களில் குடியிருப்பவரோ அல்ல. ஏனெனில் அவர் ஆவியானவராக எங்கும் எப்போதும் இருக்கிறார். அவர் நம்மைவிட்டு தூரமாக இருப்பவரும் அல்ல, நாம் அவரை அடைய முடியாதபடி விலகியிருப்பவரும் அல்ல. அவர் நமக்கு அருகில் இருந்து நம்முடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்கிறவராகவும் நம்முடைய சிந்தனைகள் அனைத்தையும் அறிந்தவராகவும் இருக்கிறார். உங்களுடைய மனசாட்சி அவருக்கு முன்பாக திறந்திருக்கிறது. எப்படி ஒரு மருத்துவ ஆய்வுக் கருவியில் ஒளியில் மனிதனுடைய உடல் வெட்ட வெளிச்சமாயிருக்கிறதோ அப்படி உங்களுடைய மனசாட்சி இறைவனுக்கு முன்பாக இருக்கிறது. அவரிடத்திலிருந்து நீங்கள் எதையும் மறைக்க முடியாது. உங்களுடைய மனசாட்சி உங்கள் பாவங்களை வெளிப்படுத்துகிறது.

இறைவனுடைய அழைப்பை உணர்ந்துகொள்ளும் ஒருவன் தான் பாவமுள்ளவனாயிருந்தாலும் அவருடைய அன்பிற்கு முன்பாக நடுக்கமுற்று, மனிதர்களை தம்முடைய சாயலில் படைத்த அவரை வணங்குவான். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள இந்த முதன்மையான உறவை விளக்குவதற்காக பவுல் ஒரு கிரேக்க தத்துவ ஞானியின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார்: “நாம் இறைவனுடைய சந்ததியாயிருக்கிறோம்”. இந்தக் கூற்று அற்புதமானது. நம்முடைய இருப்பின் ஆதாரம் வெறுமையோ, இறந்த பொருளோ, தீமையோ அல்ல. நாம் இறைவனிலிருந்து வந்தவர்களாகவும் அவரில் வாழ்கிறவர்களாகவும் இருக்கிறோம். அவரிலேதான் நாம் வாழ்கிறோம், அவரில்தான் நாம் முடிவடையப்போகிறோம். நம்முடைய சிந்தனைகள் இறைவனை நோக்கியிருக்க வேண்டும், அல்லது நாம் பாவம் செய்கிறவர்களாயிருப்போம். கலைநுணுக்கமான உருவங்களோ, சூரியனுடைய வெளிச்சத்தில் தங்கத்தைப் போல ஒளிரும் மிகப் பிரமாண்டமான கட்டடங்களோ, முறைப்படுத்தப்பட்ட தத்துவஞானங்களோ இறைவனுடைய மகிமையை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்துவதில்லை. ஒவ்வொரு மனிதனும் இறைவனுடைய சாயலைச் சுமந்தவர்களாக அவருடைய சந்ததியாக வாழும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.

விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவா நீர் இவ்வுலகத்தைப் படைத்து உம்முடைய பொறுமையினால் அதை ஆண்டு வருகிறீர். உம்மில் நாங்கள் வாழ்ந்து உம்முடைய கிருபையில் நாங்கள் தொடர்ந்துசெல்கிறோம். உம்முடைய மாபெரும் அன்பிற்காக நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். எங்கள் சிந்தைகள் எப்போதும் உம்மை நோக்கியிருக்கச் செய்யும்.

கேள்வி:

  1. அத்தேனே தத்துவ ஞானிகளுக்கு முன்பாக பவுல் செய்த பிரசங்கத்தின் முதல் பகுதியின் மூன்று முக்கிய கருத்துக்கள் யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:40 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)