Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 083 (Founding of the Church in Thessalonica)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
இ - இரண்டாவது மிஷெனரி பயணம் (அப்போஸ்தலர் 15:36 - 18:22)

5. தெசலோனிக்கேயாவில் திருச்சபையை நாட்டுதல் (அப்போஸ்தலர் 17:1-9)


அப்போஸ்தலர் 17:1-9
1 அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது. 2 பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வு நாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, 3 கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான். 4 அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும்,, கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள். 5 விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள். 6 அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். 7 இவர்களை யாசோன் ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு, 8 இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள். 9 பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.

தெசலோனிக்கேயா பட்டணம் அன்று போல் இன்றும் ஒரு முக்கியமான நகரமாகவும் வியாபார நகரமாகவும் காணப்படுகிறது. ஐந்து லட்சம் மக்கள் தொகைகொண்ட பிலிப்புப் பட்டணத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கிறது இந்தப் பட்டணம். பவுல் தெசலோனிக்கேயாவிற்கு வந்தபோது ஜெப ஆலயத்திற்குச் சென்றார், ஏனெனில் அங்குதான் ஒரே கடவுளை நேசிக்கிறவர்களும் தேடுகிறவர்களும் கூடிவருவார்கள். அவர்கள்தான் அவருடைய செய்தியைக் கேட்டவர்களாகவும் இருந்தார்கள். வேறு எந்த ஒரு புதிய சமயமும் அப்பட்டணத்தில் அனுமதிக்கப்பட்டிராதபோதிலும் யூத மார்க்கத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எருசலேமின் சட்ட அறிஞராயிருந்த பவுல் மூன்று ஓய்வு நாட்கள் அவர்கள் நடுவில் இருந்து, தெய்வீக கிறிஸ்து ஒளிமயமான அரசனாக வந்து உலகத்தில் தம்முடைய அரசை நிறுவ வேண்டிய அவசியத்தைப் பற்றி அவர்களிடத்தில் உரையாடினார். மக்கள் இறைவனோடு ஒப்புரவாக வேண்டும் என்பதற்காகவும் மனந்திரும்பிய அவர்களுடைய இருதயம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அவர் இவ்வுலகத்திற்கு வந்து, புறக்கணிக்கப்பட்டு, பாடுகளை ஒரு குறிப்பிட்ட காலம் சகித்து, அவமானமான மரணத்தைச் சந்தித்து, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்.

அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த ஒரு மேசியாவை எதிர்பார்த்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு இந்த சிந்தனைகள் புதியனவாகவும் வித்தியாசமானதாகவும் காணப்பட்டது. இவ்வாறு அவர்கள் சாந்தமுள்ள ஆட்டுக்குட்டியை அறியாமல் போனார்கள். நசரேயனாகிய இயேசு இறையன்பின் மனித வடிவமாக இவ்வுலகத்திற்கு வந்திருந்தார் என்பதை பவுல் அவர்களுக்கு விளக்கினார். அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும், அவருடைய அதிசயச் செயல்களைக் கண்டு, அவரால் சுகம்பெறவும் எண்ணற்றோர் அவரிடம் சென்றார்கள். அதனால் யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் அவர் மீது பொறாமைகொண்டு, அவருடைய தெய்வீகத்தைப் புறக்கணித்து, அவரை உபத்திரவப்படுத்தி, தவறாக நியாயந்தீர்த்தது. இறுதியில் அவர் ரோமர்களினால் கொல்லப்பட்டார். ஆயினும் அவருடைய மரணம் மட்டுமே இறைவனுடைய பரிசுத்த நீதியை நிறைவேற்றி, நம்முடைய பாவங்களுக்கான பரிகாரத்தைச் செலுத்தி, நம்முடைய அக்கிரமங்களைக் கழுவக்கூடியது. பழைய ஏற்பாட்டு நூல்களை மேற்கோள் காட்டியதன் மூலமாக பவுல் முதலில் கிறிஸ்துவினுடைய மரணத்தின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்தார். இரண்டாவதாக, தான் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் கண்கண்ட சாட்சி என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். தான் அறிவிக்கும் நற்செய்தியின் மூலமாக இவ்வுலகமே தலைகீழாக மாறும்படி தரிசனங்களையும் நேரடியான வெளிப்பாடுகளையும் உயிருள்ள கிறிஸ்துவிடமிருந்து தான் பெற்றுக்கொண்டதாக அவர்களுக்கு அறிவித்தார்.

சில யூதர்கள் இந்த விடுதலையின் நற்செய்தியை நம்பினார்கள். அவர்கள் கிறிஸ்துவின் தெய்வீகத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலனாகிய பவுலுடைய செய்திக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். பக்தியுள்ள யூதர்கள் நம்பிக்கையின் மூலமாக உறுதியடைந்தார்கள். பவுல் திருச்சட்டத்திற்குக் கொடுத்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, வெளிப்படையாக பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டார்கள். அங்கிருந்த மதிப்பிற்குரிய பெண்களும் அமைதியும், சத்தியமும், பரிசுத்தமும் நிறைந்த இந்த நற்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் தங்களைப் பரிசுத்த கிறிஸ்துவின் ஆவிக்குத் தங்களைத் திறந்துகொடுத்து, அவருடைய இரட்சிப்பின் செயலில் நிலைத்திருந்தார்கள். இவ்வாறு ஒரு உயிரோட்டமுள்ள திருச்சபை தெசலோனிக்கேயா பட்டணத்தில் உருவானது. அங்கு பவுலும் சீலாவும் தீமோத்தேயும் உறுதியாக அவர்களுக்குப் போதித்து வந்தார்கள்.

அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேருக்கு எழுதிய முதலாம் கடிதத்தை வாசித்துப் பார்ப்பீர்களானால் (வசனம் 1 மற்றும் 2), கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் எவ்வளவு வல்லமையோடும், இரக்கத்தோடும், ஆர்வத்தோடும் அவர்கள் நடுவில் பணிசெய்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். கிரேக்க மொழியில் தெசலோனிக்கேயருக்கு பவுல் எழுதிய அந்த முதலாம் கடிதம்தான் புதிய ஏற்பாட்டிலுள்ள எழுத்தாக்கங்களில் முதன்மையானது, நற்செய்தி நூல்களைக் காட்டிலும் பழைமையானது. பவுலுடைய போரட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் அவர் நற்செய்தியை அறிவித்த முறை எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை நீங்கள் அதில் காணலாம். பின்னாட்களில் பல்வேறு நகரங்களில் வாழ்ந்த எண்ணற்ற மக்களுடைய மனங்களைத் திறந்த பவுலுடைய நற்செய்தியின் உட்பொருள் என்ன என்பதை நீங்கள் அதில் வாசிக்கலாம். நீங்கள் அந்தக் கடிதத்தை நிதானமாக வாசித்தால் அப்போஸ்தலருடைய நடபடிகளை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள்.

யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தார் எவ்வாறு கிறிஸ்துவின் மீது பொறாமை கொண்டார்களோ அவ்வாறே தெசலோனிக்கேயாவில் இருந்த யூதர்களும் பவுலின் மீது பொறாமை கொண்டார்கள். ஜெபஆலயத்திற்கு வந்துகொண்டிருந்த உயர்குடியைச் சேர்ந்த பல கிரேக்கர்கள் இப்போது பவுலைப் பின்பற்றிப் போனார்கள். அப்போஸ்தலனுடைய வாழ்க்கை குற்றமற்றதாகவும் அவர் திருச்சட்டத்திற்குக் கொடுத்த விளக்கம் பொருத்தமானதாகவும் அவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் அவருக்கு எதிராக முறையிட வாய்ப்பிருக்கவில்லை. ஆகவே அவர்கள் பொதுமக்களை அவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார்கள். அற்ப குணமுள்ள மனிதர்களைத் தூண்டிவிட்டு கலகத்தை உண்டுபண்ணினார்கள். மக்கள் கூட்டம் முழு நகரத்தையும் தூண்டிவிட்டது. இவ்வாறு அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான எண்ணத்தை மக்கள் மனதில் தூண்ட நினைத்தார்கள்.

யாசோன் என்ற அரசியல் செல்வாக்கு மிக்கவரும், மதிப்பிற்குரியவருமாகிய யாசோன் என்ற பணக்காரர் பவுலையும் சீலாவையும் ஏற்றுக்கொண்டிருந்தார். அந்த மக்கள்கூட்டம் யாசோனுடைய வீட்டிற்குச் சென்றார்கள். மக்கள் அந்த வீட்டைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தியபோது அப்போஸ்தலர்கள் அங்கிருக்கவில்லை. ஆகவே அந்த மக்கள் கூட்டம் வீட்டினுற் சென்று மூலைமுடுக்குகள் எல்லாவற்றிலும் அவர்களைத் தேடியது. அவர்களைக் கண்டுபிடிக்க முடியாதபோது யாசோனையும் அவருடைய சில சகோதரர்களையும் பிடித்து, நகரத்தின் அதிகாரிகளுக்கு முன்பாகக் கொண்டு சென்றார்கள். அவர்கள் இயேசுவின் தூர் உபதேசங்களைப் பற்றி முறையிடத் தொடங்கினார்கள். இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு சுமார் இருபது வருடங்களுக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவை விசாரிக்கும் போது யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் எந்த வார்த்தைகளை பிலாத்திவிற்கு முன்பாகப் பயன்படுத்தியதோ அதே கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளையே இவர்களும் பயன்படுத்தினார்கள் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. கிறிஸ்து அனைத்து மக்களும் கீழ்ப்படிந்து அடங்க வேண்டிய அரசனாயிருக்கிறார் என்று அவர்கள் அறிவித்ததாக அவர்களைக் குற்றஞ்சாட்டினார்கள். அவர்கள் அவ்விதமாகப் போதிப்பது ரோம அரசாங்கத்திற்கு முடிவுகட்டுவதாக அமையும். ரோம சாம்ராஜ்யத்தின் அடிப்படையிலேயே கைவைக்கிறதா அவர்கள் முன்வைத்த இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. ஆவிக்குரிய அரசனாகிய இயேசுவைப் பற்றிய உண்மையை யூதர்கள் திரித்துக் கூறினார்கள். சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கும் கிறிஸ்துவை அனைவரும் எதிராகக் கலகம் செய்யும் நபராக அவர்கள் காண்பிக்க முயற்சி செய்தார்கள்.

உண்மையில் கிறிஸ்து கர்த்தாதி கர்த்தரும் அரசர்களுக்கெல்லாம் அரசருமாயிருக்கிறார். அவர் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து இவ்வுலகத்தை ஆட்சி செய்து அண்ட சராசரத்தையும் காக்கிறார். அவருடைய வல்லமை இவ்வுலகத்திற்குரியதல்ல. அவர் தம்முடைய அரசாங்கத்தை ஆயுதங்களினாலோ, வரிகளினாலோ, வன்முறையினாலோ கட்டியமைப்பதில்லை. ஆனால் கர்த்தருக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறவர்களுடைய இருதயங்களில் ஆவிக்குரிய இறையரசை ஏற்படுத்தி, அவர்களுடைய வாழ்வில் வெளிப்படும் ஆவியின் கனிகள் மூலமாகவே இறைவன் தம்முடைய ஆட்சியை நடப்பிக்கிறார். ஆனால் அவிசுவாசிகள்தான் இவ்வுலகத்தை அழிவிற்குட்படுத்தி, அழகான இந்த உலகத்தை குப்பை மேடாக்கி, கொலைக்களமாகவும், மாபெரும் சிறைச்சாலையாகவும், பயங்கரங்கள் நிறைந்த இடமாகவும் மாற்றுகிறார்கள்.

நகரத்தலைவர்களில் ஞானமுள்ளவர்கள் இந்தக் குழப்ப நிலைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டார்கள். இந்தக் குழப்பதின் காரணமாக ரோமர்கள் வந்து பிரச்சனையை உண்டுபண்ணுவார்கள் என்ற பயத்தில் அவர்கள் இந்த மக்களை அமைதிப்படுத்தி, அதிகளவு பணத்தை வாங்கிக்கொண்டு யாசோனை விடுவித்தார்கள். அவர் கிறிஸ்தவர்கள் எந்தவித அரசியல் பிரச்சனையையும் உண்டுபண்ணவில்லை என்பதை யாசோன் அவர்களுக்கு விளக்கினார். தீவிரவாதத்தையும் அநியாயத்தையும் கையில் எடுப்பதைக் காட்டிலும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் போல மரணத்தை ஏற்றுக்கொள்ளவும் ஆயத்தமாயிருப்பார்கள். கிறிஸ்துவின் ஆவிக்குரியது, கிறிஸ்து இரண்டாவது வருகையில் மகிமையோடு வரும்போதுதான் அது வெளிப்படும். அதன் பிறகு வானமும் பூமியும் ஒளிந்துபோகும். பவுலுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என்பதை அறிந்த யாசோன், அவர்கள் நகரத்தைவிட்டுப் போய்விடுவார்கள் என்று தலைவர்களுக்கு உறுதியளித்தார்.

திருச்சபை வரலாற்றில் இயேசுவின் அரசாட்சியைக் குறித்த பிரச்சனை பல்வேறு மக்களையும், அரசர்களையும், இராயர்களையும், போப்புக்களையும் அசைத்திருக்கிறது. பவுல் எப்போதும் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே பிரசங்கித்தார். ஆனால் அவருக்குப் பின் வந்தவர்கள் அந்நாட்களில் முழு உலகத்தையும் ஆட்சிசெய்துகொண்டிருந்த இராயர்களையே தேடினார்கள். கிறிஸ்துவின் அரசு இவ்வுலகத்திற்குரியதல்ல என்றும் மனந்திரும்பிய, நொறுங்கிய இதயங்களிலேயே அது கட்டப்படுகிறது என்றும் பலர் மறந்துவிடுகிறார்கள். உண்மையில் இவ்வுலகத்தின் அரசர்களும், தளபதிகளும், தலைவர்கள் அனைவரும் தங்கள் பெருமையையும் அகம்பாவத்தையும் விடுத்து, தாழ்மையையும், திருப்தியையும், இரக்கத்தையும் தழுவிக்கொள்ள வேண்டும் என்று இயேசு அழைப்பு விடுத்தார். கிறிஸ்துவின் மார்க்கம் போர்வாளினாலோ புரட்சியினாலோ கட்டப்பட்டதல்ல, மாறாக இரட்சிப்பின் வார்த்தையினாலும் அன்பின் வல்லமையினாலும் கட்டப்பட்டது. ஆயினும் கிறிஸ்து திரும்ப வரும்போது இறைவனுக்கு எதிராயிருக்கும் அனைத்து சக்திகளையும் தோல்வியுறச் செய்வார். அதன் பிறகு, மரணமோ, துயரமோ, பாவச் சோதனையோ ஒருபோதும் இருக்காது. பிதாவினுடைய மகிமையில் உருவாக்கப்படப்போகும் புதிய படைப்பாகிய உண்மையான இறையரசு இதுதான்.

விண்ணப்பம்: ஓ கர்த்தராகிய இயேசுவே, நீரே மாபெரும் அரசன். நீரே எனது இதயத்திற்கும் எனது செல்வமனைத்திற்கும் சொந்தக்காரர். நாங்கள் எங்களை உம்மிடத்தில் ஒப்படைக்கிறோம். உண்மையுடன் உமக்குப் பணிசெய்யும்படி ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும். பலர் நிலைவாழ்வை அடையும்படி அவர்களை உம்முடைய அரசிற்குள் அழைத்துக்கொள்ளும்.

கேள்வி:

  1. இயேசு கிறிஸ்து எவ்வாறு கர்த்தாதி கர்த்தரும் இராஜாதி இராஜனுமாயிருக்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 11:36 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)