Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 063 (Separation of Barnabas and Saul)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
அ - முதலாவது மிஷனரிப் பயணம் (அப்போஸ்தலர் 13:1 - 14:28)

1. அருட்பணிக்காக பவுலையும் பரனபாவையும் பிரித்து விடுதல் (அப்போஸ்தலர் 13:1-3)


அப்போஸ்தலர் 13:1-3
1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். 2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். 3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.

அந்தக் காலத்தில் அந்தியோகியா கிழக்கத்திய பட்டணங்களில் மிகவும் முக்கியமானதாகத் திகழ்ந்தது. அது “கிழக்கின் ரோமாபுரி” என்று அழைக்கப்பட்டது. உலகத் தொடர்புகளுக்கும் வியாபாரத்திற்கும் மையமாக விளங்கிய அந்த நகரத்தில் திருச்சபை ஆரம்பிக்கப்பட்டது. அது ஆற்றலிலும் முதிர்ச்சியிலும் சிறந்து விளங்கியது. இத்திருச்சபையின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கல்வியறிவற்றவர்கள். அவர்கள் அப்போஸ்தலர்களுடைய பிரசங்கங்களினால் அல்ல, சாதாரண விசுவாசிகளுடைய நற்சாட்சியினால் இரட்சிக்கப்பட்டவர்கள்.

எருசலேமிருந்த தாய் திருச்சபை பர்னபாவை அனுப்பி அங்குள்ள புதிய விசுவாசிகளை உறுதிப்படுத்த முயற்சி செய்தது. பர்னபா தன்னுடைய நண்பனும் இறையியலாளனுமாகிய பவுலைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து அந்தியோகியா திருச்சபையில் தங்களுடைய ஊழியத்தை நிறைவேற்றினார்கள். திருச்சபை எண்ணிக்கையிலும் வல்லமையிலும் வளர்ச்சியடைந்து எருசலேமிற்கு அடுத்தபடியான முக்கிய கிறிஸ்தவ மையமாகத் திகழ்ந்தது. புறவினத்து மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தல் இங்கிருந்துதான் ஆரம்பமானது.

அதிகமான போதனையினாலும் தீர்க்கதரிசனத்தினாலும் ஆவிக்குரிய வரங்கள் திருச்சபையில் அதிகமாகக் காணப்பட்டது. புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் மற்றவர்களைவிட்டுத் தனித்திராமல் விசுவாசிகளின் நடுவிலேயே வாழ்ந்தார்கள். ஆயினும் அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாகவே இறைவனுடைய சித்தம் என்னவென்று அறிந்துவிடுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளத்தில் சில இரகசியங்களைப் புரிந்துகொண்டு, எதிர்கால வளர்ச்சியை முன்பே அறிந்து, பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலுக்கு உடனடியாகக் கீழ்ப்படிவார்கள். அதனால்தான் பவுல் பின்னாட்களில் தன்னுடைய கடிதங்களில் எழுதும்போது தீர்க்கதரிசனத்தை அற்பமாக எண்ணவேண்டாம் என்று திருச்சபைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். மாவைப் புளிக்க வைப்பதற்குப் புளித்தமா எவ்வளவு அவசியமோ அவ்வாறு திருச்சபைகள் உருவாகுவதற்கு தீர்க்கதரிசன ஊழியங்கள் அவசியமாயிருந்தது.

இந்தப் போதகர்கள் இறைவனுடைய வார்த்தையை ஆழமாகப் போதித்தார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தின் பொருளையும், இயேசுவின் வார்த்தைகளையும், அப்போஸ்தலர்களுடைய உபதேசங்களையும் திருச்சபையின் அங்கத்தவர்களுக்கு போதித்தார்கள். போதகர்கள் மக்களுடைய அறிவையும் சித்தத்தையும் படிப்பித்தார்கள், தீர்க்கதரிசிகள் அவர்களுடைய இருதயத்தையும் உணர்வுகளையும் தூண்டிவிட்டார்கள். நீங்கள் அவரைத் துதிக்கவும், அவரைப் பற்றிப் பிரசங்கிக்கவும், தெளிந்த புத்தியுள்ள விசுவாசத்தைப் பெற்றிருக்கவும் உங்களுக்கு ஆவி, ஆத்துமா, உடல் ஆகிய முழுமையான மனிதனுக்கும் உணவளிக்கப்பட வேண்டும்.

பூரணத்துவத்தின் கட்டாகிய அன்பின் கீழ் அனைத்து வித்தியாசமான வரங்களும் திருச்சபையில் ஏற்படுத்தப்படுகிறது. அங்கத்துவர்கள் நடுவில் பிஷப்போ வேறு தலைவர்களோ இருக்கவில்லை. சகோதரர்களும் மூப்பர்களும் ஒருமனப்பட்டவர்களாக காரியங்களை விவாதித்தார்கள். அமைதியானவரும் முதிர்ச்சியுள்ள சைப்பீரியருமான பர்னபா எருசலேமிலிருந்து அச்சபையைக் கண்காணிக்கும்படி அனுப்பப்பட்டிருந்தாலும் அவர்களை அவர் மேற்பார்வை செய்யவில்லை. அவர் தன்னைத் தாழ்த்தியவராக அந்த சகோதர்களோடு ஐக்கியப்பட்டு, அவர்களை கூட்டுறவோடு வழிநடத்தினார். சிரேனிய மற்றும் சைப்பீரிய சகோதரர்களுமே அந்தியோகியா சபையைத் தோற்றுவித்திருக்கக்கூடும் (11:20). அவர்கள் நடுவில் திருமுழுக்கு யோவானைச் சிரச்சேதம் பண்ணிய ஏரோதுவுடன் வளர்க்கப்பட்ட சகோதரனாகிய மனாயீன் என்பவரும் இருந்தார். அந்த இரண்டு சகோதரர்களும் ஒரே தாய்ப்பாலை உண்டபோதிலும் அவர்களுடைய குணாதிசயங்கள் ஒன்றாக இருக்கவில்லை. அரசன் ஒரு விபச்சாரக்காரனாக மாறி மரணத்தின் ஆவிகளைக் கண்டு பயந்தான். மனாயீமோ தன்னைத் தாழ்த்தி பரிசுத்த ஆவியில் நிரப்பப்பட்டு மற்ற விசுவாசிகளுக்கு மாதிரியாக வாழ்ந்தார்.

அந்தியோகியா திருச்சபையின் தலைவர்களுடைய பெயர்களையும் ஆரம்ப அங்கத்துவர்களுடைய பெயர்களையும் பார்க்கும்போது பவுலுடைய பெயர் இறுதியாக வருகிறது. ஏனெனில் அவர்தான் இறுதியாக அத்திருச்சபையில் அங்கமானவர். பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தைக் குறித்து அவருக்குச் சிறப்பான அறிவிருந்தபோதிலும் அந்தியோகியாவில் அவர் மீண்டும் மாணவரானார். அவரும் கிறிஸ்தவர்கள் நடுவில் பரிமாறப்பட்ட அன்பின் ஐக்கியத்தை அனுபவித்தார்.

பழைய ஏற்பாட்டின் கீழாக ஆசாரியர்கள் எவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து பலிகளைச் செலுத்தினார்களோ அவ்விதமாகவே இந்த சகோதரர்கள் விசுவாசத்தில் ஒன்றாகச் சேர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்தார்கள். அவர்கள் அனைவருமே தங்கள் இனத்தின் மீது ஆசீர்வதத்தைக் கொண்டுவர விரும்பினார்கள். ஆகவே அந்தியோகிய திருச்சபையின் ஐந்து முக்கிய அங்கத்தவர்களும் கர்த்தராகிய இயேசு சிலுவையில் நிறைவேற்றி முடித்த தம்முடைய பலியின் பலனை திருச்சபையிலும் தம்மைச் சுற்றியிருக்கிற மக்கள் நடுவிலும் விளங்கச் செய்யும்படி கர்த்தரிடத்தில் கேட்டுக்கொண்டார்கள். அங்கிருந்த பரிசுத்தவான்கள் உபவாசித்தார்கள், தாங்கள் நீதிமான்களாக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்கள் ஏற்கனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் முற்றும் பரிசுத்தமாக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் தங்கள் விண்ணப்பத்திற்கு உதவியாயிருக்கும்படிதான் உபவாசித்தார்கள். அவர்களுக்கு புறவினத்து மக்களுடைய இரட்சிப்பு மற்ற காரியங்களைவிட முக்கியமானதாக இருந்த காரணத்தினால் அவர்கள் உணவையும் தண்ணீரையும் மறந்துபோய் விண்ணப்பித்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவின் இரட்சிப்பு தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து அவர்கள் எவ்வளவு ஆர்வமுள்ளவர்களாகக் காணப்பட்டார்கள் என்பதையே அவர்களுடைய விண்ணப்பம் எடுத்துக்காட்டுகிறது.

திருச்சபையிலிருந்த தீர்க்கதரிசிகளுடைய வாய்களினால் பேசி அவர்களுடைய விண்ணப்பத்திற்குப் பரிசுத்த ஆவியானவர் நேரடியாகப் பதில்கொடுத்தார். இந்த வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டபோது அவர்களில் யாரும் மயங்கி விழவோ, தரையில் கிடந்து உருளவோ இல்லை. அவர்கள் இறைவனுடைய திட்டத்தையும் விருப்பத்தையும் பொறுப்புடன் கேட்டார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு பேசும்போது தம்மைக் குறித்து “நான்” என்ற பிரதிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்தி தனது தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார். அவர் உடனடியாக அவர்களுக்குக் கட்டளை கொடுத்து, வழிநடத்தி, அவர்களை நேசித்தார். அவர் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி அவர் எங்கு, எப்படி செயல்பட விரும்புகிறாரோ அவ்வாறு அவர் செயல்படுகிறார். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவர் பரிசுத்த திரித்துவத்தில் ஒருவராயிருக்கிறார்: அவர் இறைவனிடத்திலிருந்து வந்த இறைவனும், ஒளியினிடத்திலிருந்து வந்த ஒளியும், பிதாவின் தன்மையுள்ளவரும், அன்பும் பரிசுத்தமும், மகியையும் நிறைந்தவருமாயிருக்கிறார். தூய ஆவியானவர் இறைவனாயிருக்கிறார். கிறிஸ்து சொன்னதைப் போல இறைவன் ஆவியாயிருக்கிறார். ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொண்டு, இடைவிடாமல் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி அவரை நேசிப்பவர்கள் இந்த இரகசியத்தை அறிந்திருக்கிறார்கள்.

இதுவரை அறியப்படாத பணியைச் செய்யும்படி சவுலையும் பர்னபாவையும் பிரித்துவிடும்படி பரிசுத்த ஆவியானவர் திருச்சபைத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டார். பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தனிப்பட்ட முறையில் அழைத்து, அவர்களைப் பெலப்படுத்தி, பிரசங்கிப்பதற்காக அவர்களை அனுப்பி, அவர்களோடு பணிசெய்து, அவர்களைக் காத்துக்கொண்டார்.

தெரிந்துகொள்ளப்பட்ட சிலரை இவ்வாறு அழைத்து அனுப்பும் செயல்பாடு என்பது முழுமையான தனிச்சிறப்பான தெரிந்துகொள்ளுதலும் ஒப்புக்கொடுத்தலுமாயிருக்கிறது. பர்னபாவின் மூலமாகவும் சவுலின் மூலமாகவும் தான் செய்யப்போகும் பணியைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் ஏற்கனவே சொல்லவில்லை. திரித்துவ இறைவன் திருச்சபைத் தலைவர்களைப் பார்த்து அவர்கள் யாருமே நினைத்திருக்காத ஒரு பணிக்கென்று அவர்களைப் பிரித்துவிடும்படி கட்டளைகொடுத்தார். நீர் பரிசுத்தமுள்ள இறைவன் என்றும் உம்முடைய பரிசுத்தவான்கள் உபத்திரத்தின் மேல் உபத்திரவம் அடைந்தாலும், அவர்களை நீர் மகிமையின் மேல் மகிமையில் நடத்துவீர் என்றும் அவர்களை மிகுதியாகக் கனிகொடுக்கச் செய்வீர் என்றும் நாங்கள் ஒப்புக்கொடுத்தலோடு அறிக்கை செய்கிறோம். நீரே அவர்களுடைய வாழ்வின் தொடக்கமும் முடிவுமாயிருக்கிறீர். உமக்குப் பணிசெய்கிறவர்களுக்கு எந்தக் கனமும் வீண் மகிமையும் கிடையாது, நீர் ஒருவரே அனைத்துக்கும் காரணமானவர்.

பரிசுத்த ஆவியானவர் பொதுவான பணிக்காக திடீரென்று இரண்டுபேரை அழைத்துவிடவில்லை. அவர்கள் இருவரும் அப்பணிக்கென்று தெரிவு செய்யப்படுவதற்கு சிறிது காலத்திற்கு முன்பாகவே ஒருவர் ஒருவரைச் சந்திக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை நடத்துகிறார். இருவருமாகச் சேர்ந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ளும்படி அவர்களை பெலப்படுத்தியது. பரிசுத்த ஆவியானவர் பவுலையும் பர்னபாவையும் தனித்தனியாக அனுப்பாமல் ஒன்றாக இணைத்து அனுப்பினார். முன்பு கிறிஸ்துவும் தம்முடைய சீடர்களை இரண்டு இரண்டு பேராகத்தான் அனுப்பினார். அப்போதுதான் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர் விண்ணப்பித்துக்கொண்டிருப்பார். ஒருவர் மற்றவரை ஆறுதல்படுத்த முடியும். சுயத்தைப் பெருமைப்படுத்தி ஒருவரை ஒருவர் மேற்கொள்ளும்படி அல்ல ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருவருமாகச் சேர்ந்து அப்பணியை ஏற்றுக்கொண்டார்கள். ஒருவர் மற்றவரைத் தன்னிலும் மேன்மையானவராகக் கருதினார்கள்.

சில வருடங்களுக்கு முன்பாக அனனியா சவுலைப் பார்த்து அவர் அரசர்களுக்கு முன்பாகவும் ஆளுனர்களுக்கு முன்பாகவும் நின்று இயேசுவின் நாமத்தை அறிவிக்கும்படி மகிமையின் கர்த்தர் அவரை அனுப்புவார் என்று முன்னறிவித்திருந்தார். தான் வெற்றியையும் சிறப்பான ஆவிக்குரிய வரங்களையும் பெற்றாலும் பெரும் பாடுகளையும் உபத்திரவங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பதையும் சவுல் நன்கு அறிந்திருந்தார். தான் மட்டுமே இந்தச் சிறப்பான பணியை நிறைவேற்ற முடியாது என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே அவர் சில வருடங்கள் அமைதியாக தர்சுப் பட்டணத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் பர்னபா அந்தியோகியாவில் போதிக்கும்படி அவரை அழைத்துக்கொண்டு வந்தார். பரிசுத்த ஆவியானவர் அவரைப் பக்குவப்படுத்தி, சரிப்படுத்தி, கூர்மைப்படுத்தி தெய்வீக போர்வாளாக உருவாக்கினார். பிரசங்கத்தின் நோக்கம் தனிப்பட்டவர்களுடைய இரட்சிப்பு மட்டுமல்ல, அவர்கள் ஒன்றாகக் கூடி, கற்றுக்கொண்டு விசுவாசத்தில் பெலப்படுத்தப்படும் திருச்சபைகளை நாட்டுவதும் ஆகும் என்பதை சவுல் அறிந்திருந்தார்.

தங்கள் தலைவர்களில் இரண்டுபேரை கிறிஸ்துவின் ஆவியானவர் திடீரென அழைத்து, அனுப்பியபோது அந்தியோகிய திருச்சபை மக்கள் துக்கமடையவில்லை. மாறாக அவர்கள் ஒன்றாகக் கூடி விண்ணப்பித்து உபவாசித்தார்கள். இப்பொழுது கர்த்தர் மாபெரும், இரகசியமான, தனிச்சிறப்பான பணியைத் தொடங்குகிறார் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தார்கள்.

தெரிந்துகொள்ளப்பட்டு கட்டளை பெற்றவர்களாகிய சவுலும் பர்னபாவும் தங்களைத் தாழ்த்தி திருச்சபை மக்களுடைய கரங்களைத் தங்கள் மீது வைத்து விண்ணப்பிப்பதற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். பரிசுத்த ஆவியானவருடைய நிறைவையும், வரங்களையும் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாததுபோல மற்றவர்கள் தங்கள் தலைகளின் மீது கரங்களை வைத்து விண்ணப்பிக்க ஒப்புக்கொடுத்திருந்தார்கள். வாழ்நாள் முழுவதும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி தாம் அழைத்திருந்தவர்களுடைய ஊழியத்தை ஆசீர்வதித்து வழிநடத்தியதன் மூலமாக அவர்களுடைய இந்தத் தாழ்மையை கர்த்தர் உறுதிப்படுத்தினார். அந்தத் தருணத்திலிருந்து மிஷனரிகள் தங்கள் சொந்த நாட்டையும் மக்களையும் விட்டு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் ஆவியைப் பின்பற்றிச் செல்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கிறவர்களாயிருந்தாலும் பரத்திலிருந்து வரும் ஆவிக்குரிய வல்லமையினால் அவர்கள் தாங்கப்பட்டார்கள்.

விண்ணப்பம்: உயிருள்ள கர்த்தாவே, உம்முடைய இரக்கத்திற்கு நாங்கள் பாத்திரவான்கள் அல்ல. ஆனால் நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் நித்திய பணிக்கென்று பரிசுத்தப்படுத்தும்படி, உம்முடைய இரத்தத்தை சிலுவையில் எங்களுக்காகச் சிந்தினீர். எங்கள் சொந்த அறிவினாலும் வல்லமையினாலும் நாங்கள் உமக்குப் பணிசெய்ய முடியாது. உம்முடைய அன்பின் ஆவியினால் நீர் எங்களை நிறைத்து, உலகத்தின் இரட்சிப்புக்காக உம்முடைய கட்டளைகளை தாழ்மையோடு நடைமுறைப்படுத்த நீரே எங்களுக்கு உதவ வேண்டும். தவறான அடிகளை நாங்கள் எடுத்து வைக்காதபடி எங்களைக் காத்து, உம்முடைய இரட்சிப்புக்காக ஏங்கும் மக்களைக் காணும் கண்களை எங்களுக்குத் தாரும்.

கேள்வி:

  1. பரிசுத்த ஆவியானவர் யார்? அந்தியோகியாவில் ஏறெடுக்கப்பட்ட விண்ணப்பங்களை அவர் எவ்வாறு வழிநடத்தினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:53 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)