Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 061 (Peter’s Deliverance)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

12. தேவதூதன் மூலமாக பேதுரு விடுவிக்கப்படுதல் (அப்போஸ்தலர் 12:7-17)


அப்போஸ்தலர் 12:7-17
7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. 8 தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். 9 அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான். 10 அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான். 11 பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான். 12 அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். 13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள். 14 அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள். 15 அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள். 16 பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள். 17 அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.

எருசலேம் திருச்சபை உபத்திரவங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, அந்தியோகியா திருச்சபை வளர்ந்து செழித்தது. இயேசுவுக்கு நெருக்கமாயிருந்த மூன்று சீடர்களில் ஒருவரான யாக்கோபு கொலைசெய்யப்பட்டார். ஆனால் பேதுருவோ அற்புதமாக விடுதலை செய்யப்பட்டார். இறைவனுடைய வழிகள் நமக்கு மறைக்கப்பட்டதாயிருக்கலாம், ஆனால் நம்முடைய பரலோக பிதா அன்பே உருவானவர் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். ஆகவே, நம்முடைய வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவருடைய இரக்கம், கிருபைகளின் மீது முழுமையான நம்பிக்கையை அவர் நமக்குத் தந்தருள வேண்டும் என்று நாம் எப்போதும் விண்ணப்பிக்க வேண்டும்.

பேதுரு உண்மையிலே மரணத்தைச் சமீபித்திருந்த போதிலும் அவர் பயந்து நடுங்கவில்லை. அவர் தம்முடைய மனசாட்சியில் அமைதியைப் பெற்றிருந்ததோடு தம்முடைய பரலோக தகப்பனுடைய பராமரிப்பின் செயல்மீது நம்பிக்கை வைத்திருந்த காரணத்தினால் அவரால் நிம்மதியாகப் படுத்து உறங்க முடிந்தது. அவருடைய கைகள் அருகிலிருந்த போர்ச்சேவகர்களுடன் கட்டப்பட்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. தேவதூதன் வந்து தரிசனமான போது அங்கு தோன்றிய பரலோகப் பிரகாசத்தைக் கண்டும் அவர் பயப்படவில்லை. அவர் நன்கு உறங்கிக் கொண்டிருந்த காரணத்தினால் தேவதூதன் அவரை வலுவாக அசைத்து எழுப்ப வேண்டியிருந்தது. அப்போது அவர் தன்னுடைய கரத்திலிருந்த சங்கிலிகள் சத்தமில்லாமல் விழுந்திருந்தது என்பதை அவர் கண்டார். களைப்பும் அதிர்ச்சியும் அடைந்திருந்த அத்தருணத்திலும் அவர் தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டார். ஒரு குழந்தை காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்லும்போது எவ்வாறு தாய் அதற்கு ஆடை முதலானவற்றை அணிவித்து ஆயத்தம் செய்வாளோ அவ்வாறு அந்த தேவதூதன் பேதுருவை ஆயத்தம் செய்தார். அவர்கள் நடந்து போனபோது இரும்புக் கதவு எந்தச் சத்தமும் இல்லாமல் தானாகத் திறந்து அவர்கள் வெளியே சென்றபோது மூடிக்கொண்டது. இவ்வாறு அவர்கள் அமைதியாக வெளியேறியதை உறங்கிக்கொண்டிருந்த போர்ச்சேவகர்கள் யாரும் கவனிக்கவில்லை. இறைவன் தம்முடைய சர்வ வல்லமையினால் அனைத்துத் தடைகளையும் மேற்கொண்டார். விடுதலைக்கான வழியை யாரும் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாதபோது அவரால் நம்மை விடுவிக்க முடியும். பிதாவின் வல்லமை நாம் அறிந்திருப்பதைக் காட்டிலும் மிகவும் மேலானது.

அவர்கள் நகரத்தின் வீதிகளுக்கு வந்தபோது தேவதூதன் அவரைவிட்டு மறைந்து சென்றார். அந்த இரவு நேரத்தின் குளிர்ந்த காற்று பேதுருவின் தூக்கத்தை முற்றிலும் கலைத்திருந்தது. தான் தப்பிவந்ததிலிருந்த ஆபத்தைக் குறித்தோ அல்லது மீண்டும் தான் பிடிபட்டு சிறையிலடைக்கக்கூடும் என்பதையோ அவர் உடனடியாகச் சிந்திக்கவில்லை. தம்முடைய பரலோக பிதா எவ்வாறு தன்மீது அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்பதை அறிந்து அவர் மகிழ்வுற்றார். இத்தனை காவலாளிகளின் கண்காணிப்பிலிருந்து இறைவனைத் தவிர யாரும் அவரை விடுவித்திருக்க முடியாது. இறைவனே ஏரோது அரசனுடைய திட்டத்தை குலைத்துப் போட்டு, திருச்சபையை விடுவித்தார்.

நற்செய்தியாளனாகிய மாற்குவின் தாய் வீட்டை நோக்கிப் பேதுரு மகிழ்வோடு விரைந்து சென்றார். அப்போஸ்தலர்களில் தைரியசாலியாகிய பேதுருவை இறைவன் விடுவிக்க வேண்டும் என்று அங்கிருந்த திருச்சபை இரவும் பகலும் இடைவிடாமல் விண்ணப்பித்துக்கொண்டிருந்தது. பேதுரு கதவைத் தட்டியபோது ஒரு வேலைக்காரி தகவைத் திறக்கும்படி வந்தாள். பேதுருவின் குரலைக் கேட்டபோது அப்பெண் மகிழ்வடைந்தவளாக அந்த நற்செய்தியை அங்கிருந்த மற்றவர்களிடத்தில் சொன்னாள். அங்கிருந்த யாரும் அவளை நம்பவில்லை. அவள் ஒரு ஆவியின் சத்தத்தைக் கேட்டிருக்கலாம் அல்லது கனவு கண்டிருக்கலாம் என்று அவர்கள் சொன்னார்கள். சிலர் அவளுக்கு புத்தியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் வேறு சிலர் பேதுருவின் பாதுகாப்பாளனாகிய தூதன் அவளைச் சந்திருக்கலாம் என்றும் கருதினார்கள். பேதுருவை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் விண்ணப்பம் செய்துகொண்டிருந்த போதிலும் அவர்களால் இறைவன் தங்கள் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. யாக்கோபுவுக்காவும் அவர்கள் இவ்வாறுதான் விண்ணப்பித்தார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன்பாகத்தான் அவர் சிரச்சேதம் பண்ணப்பட்டிருந்தார். அவ்வாறு அவர்கள் சந்தேகத்தோடும் நம்பிக்கையோடும் இறைவனுடைய சித்தம் என்ன என்பதை அறியாதவர்களாக விண்ணப்பித்துக்கொண்டிருந்தார்கள். பரலோகத்திலிருக்கும் பிதாவினுடைய சித்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து பரலோகத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தார்கள்.

இரவின் குளிரில் நின்றுகொண்டிருந்த பேதுருவும் தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டிருந்தார். இறுதியாக யாரோ கதவுக்கு வெளியே நின்று தட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். இறைவன் தங்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, அந்தக் கொடூர அரசனை தம்முடைய வல்லமையினால் மேற்கொண்டுவிட்டார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்கள். பேதுரு எவ்வாறு தேவதூதனுடைய கரத்தினால் விடுவிக்கப்பட்டார் என்பதை அவர்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் இன்னும் அதிகமாக இறைவனைத் துதித்து, பரலோக பிதாவின் பராமரிப்பின் செயலைக் குறித்த அவர்களுடைய விசுவாசத்தில் பெலப்படுத்தப்பட்டார்கள்.

அப்போது எருசலேம் திருச்சபைக்குத் தலைமை ஏற்று நடத்திக்கொண்டிருந்தவரும் ஊக்கமாக விண்ணப்பம் பண்ணுபவருமாயிருந்த இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபுக்கு தன்னுடைய விடுதலையைப் பற்றி அறிவிக்கும்படி பேதுரு கேட்டுக்கொள்கிறார். யாக்கோபு கிறிஸ்தவராயிருந்தாலும் நியாயப்பிரமாணத்தை அதிக கவனத்தோடு கைக்கொண்டவராகவும், கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்று வலியுறுத்துபவராகவும் இருந்த காரணத்தினால் யூதர்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் இவருக்கு ஒரு மதிப்பு இருந்திருக்கலாம். மகிமையடைந்த தம்முடைய சகோதரனாகிய இயேசுவுக்கு யாக்கோபு தம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்திருந்தார் என்பது அவருடைய ஊக்கமான விண்ணப்பத்தினாலும் நடைமுறை சேவைகளினாலும் வெளிப்படுத்தப்பட்டது.

அந்த ஆட்சியாளன் கிறிஸ்தவ தலைவர்களைக் கொலைசெய்யத் திட்டமிட்டுக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பேதுரு இரண்டாம் முறையும் விடுவிக்கப்பட்டது அவனுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. தன்னைவிட மேலான வல்லமை ஒன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அவன் உணர்ந்துகொண்டான். தீடீரென்று காணாமல்போன பேதுருவின் நியாயவிசாரணையை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த காரணத்தினால் அவன் மெதுவாகவும் தயக்கத்துடனும் எருசலேமைவிட்டுப் போய்விட்டான். போதையினால் தம்முடைய அதிகாரத்தையும், தவறுகளையும், கவலைகளையும் மறக்கும்படி செசரியாவிற்குச் சென்றுவிட்டான்.

விண்ணப்பம்: ஓ, கர்த்தாவே, நீர் பேதுருவை பாதாளச் சிறையிலிருந்து விடுவித்து, தொடர்ச்சியாக வரவிருந்த உபத்திரவங்களிலிருந்து எருசலேம் திருச்சபையைக் காப்பாற்றிய தயவுக்காக உமக்கு நன்றி. இன்றும் நீரே வெற்றியாளர். எங்களுக்கு விசுவாசத்தையும், விடாமுயற்சியையும், விண்ணப்பிக்கும் ஆவியையும் கொடுத்தருளும். எங்கள் விண்ணப்பகளுக்கு நீர் பதில் கொடுப்பதற்காக உமக்கு நன்றி.

கேள்வி:

  1. பேதுரு கதவைத் தட்டியதைக் கண்டபோது வீட்டில் விண்ணப்பித்துக்கொண்டிருந்தவர்கள் ஆச்சரியமடைய வேண்டிய காரணம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:50 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)