Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 051 (The Wonderful Works of Christ at the Hand of Peter)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

8. பேதுருவின் கரத்தினால் செய்யப்பட்ட கிறிஸ்துவின் அற்புத செயல்கள் (அப்போஸ்தலர் 9:31-43)


அப்போஸ்தலர் 9:36-43
36 யோப்பா பட்டணத்தில் கிரேக்குப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். 37 அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். 38 யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். 39 பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். 40 பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். 41 அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான். 42 இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். 43 பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.

“இறைவனுடைய அரசு சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கியுங்கள். நோயாளிகளைக் குணமாக்கி, குஷ்டரோகிகளைச் சுத்தமாக்கி, மரித்தோரை எழுப்பி, பிசாசுகளைத் துரத்துங்கள். இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று இயேசு தம்முடைய சீடர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகக் கட்டளை கொடுத்தார் (மத்தேயு 10:7-8). இந்த காரியங்களை தம்முடைய நாமத்தினால் நிறைவேற்றுவதற்கு அப்போஸ்தலர்களுக்கு இயேசு அதிகாரம் கொடுத்திருந்தார். அவர்கள் முழுவதும் கிறிஸ்துவோடு இணைந்து இந்தக் காரியங்களைச் செய்தார்கள். அப்போஸ்தலருடைய பணியின் மூலமாக கிறிஸ்துவின் சித்தம் செய்யப்பட்டது. குமாரனை மகிமைப்படுத்தவும் அவருடைய அன்பின் அரசை செயல்படுத்தவும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார்.

யோப்பாவில் ஒரு சீடர் மரித்துப்போனார். இந்த இடத்தில்தான் முதல் முறையாக ஒரு பெண்ணைக் குறிப்பதற்கு சீடர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணுடைய பெயர் “தபீத்தாள்” என்பதாகும். அந்த அராமிக் பெயரின் பொருள் மான் என்பதாகும். இந்த சகோதரி தன்னுடைய தெய்வபக்தியுள்ள குணாதிசயத்தினாலும், தாழ்மையினாலும் நன்கு அறியப்பட்டிருந்த நபராயிருக்கிறார். தனது அயலகத்தார் நடுவில் பிரிவினையை விதைக்க அந்த சகோதரி முற்படவில்லை, சுகவீனமானவருக்கு உதவிசெய்தார். வயதானவர்களுடைய வீடுகளை அவர் சுத்தம் செய்தார், சோர்வடைந்த தாயாரின் குழந்தைகளைப் பராமரித்தார், மிகுந்த துயரத்தில் வாழ்ந்த விதவைகளுக்கு இரக்கம் பாராட்டினார். இந்த மான் என்ற சகோதரி தனது சக விசுவாசிகளுக்கு உதவிசெய்வதற்காக தன்னுடைய சொத்துக்களில் பெரும்பகுதியை இழந்தார். தனது ஓய்வு நேரங்களில் சித்திரத் தையல் வேலைகளைச் செய்தாள். கிறிஸ்து தன்னுடைய பெயரை விசுவாசிகளுடைய இருதயத்தில் பதியவைப்பார் என்ற ஏக்கத்தோடு அவ்வாறு செய்தாள். இவ்வாறு அந்த திருச்சபை முழுவதும் கடவுளுடைய மகிமையை வெளிப்படுத்தும் அழகு நிறைந்த கம்பளமாக இருப்பதை அவர் விரும்பினார்.

இந்தப் பரிசுத்தவான் திடீரென்று இறந்துபோனார். இறந்து போனவர்களை மேலறையில் வைப்பது அவர்களுடைய வழக்கம் அல்ல. ஆனால் தபீத்தாளைப் பொறுத்தமட்டில் மக்கள் வந்து அவருடைய அன்பையும் தியாகத்தையும் நினைத்து அவருக்காக துக்கங்கொண்டாட வசதியாக அவ்வாறு மேலறையில் வைத்திருந்தார்கள். அன்புள்ள சகோதரனே, நீங்கள் இறந்து போனால், உங்களுடைய நற்செயல்களுக்காகவும் தியாகத்திற்காகவும் மக்கள் உங்களை நினைத்து அழுவார்களா? அல்லது உங்கள் சுயநலத்திற்காகவும், கடின இருதயத்திற்காகவும், தியாகம் செய்ய நீங்கள் விருப்பமற்றவர் என்பதற்காகவும் உங்களைச் சபிப்பார்களா?

அப்போஸ்தலரின் தலைவராகிய பேதுரு அந்த நகரத்திற்கு அருகில் வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட அந்தத் திருச்சபையின் மூப்பர்கள், அவர் வந்து துக்கத்தில் இருக்கும் திருச்சபையைத் தேற்றும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அந்த சகோதரியும் கிறிஸ்துவின் வருகைவரை உயிரோடிருப்பார் என்றுதான் மக்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்து வருவதற்கு முன்பாகவே தங்களில் விசுவாசிகளில் நற்குணசாலியான ஒருவர் மரித்தது அந்த திருச்சபையாருக்கு அதிக அதிர்ச்சியாகவே இருந்தது.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பேதுரு லித்தாவிலிருந்து யோப்பாவிற்கு 18 கிலோமீட்டர் பிரயாணம் செய்து அந்தத் திருச்சபையை வந்தடைந்தார். மக்கள் துக்கங்கொண்டாடிக்கொண்டிருந்த யவீருவின் வீட்டில் கர்த்தர் எவ்வாறு நுழைந்தார் என்பதை பேதுரு நினைவுகூர்ந்தார். அங்கு அழுதுகொண்டிருந்த பெண்களையும் விதவைகளையும் வெளியே அனுப்பிவிட்டு, “சிறு பெண்ணே, எழுந்திரு” என்று சொல்லி அப்பெண்ணை உயிரோடு எழுப்பியதையும் பேதுரு நினைவுகூர்ந்தார்.

அதேவிதமான சூழ்நிலையில் பேதுரு அந்த சகோதரியின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கே சத்தமிட்டு அழுகிற பெண்களைக் கண்டபோது பேதுருவின் இருதயமும் துக்கதால் நிறைந்தது. கிறிஸ்துவுக்குள் வாழும் மக்களுடைய வாழ்விலும் மரணத்தின் வல்லமையை நினைத்து பேதுரு கோபமுற்றார். அழுகிற பெண்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, அவர் முழங்கால்படியிட்டு விண்ணப்பம் செய்தார். இயேசு தம்முடைய சீடரை உயிரோடு எழுப்ப வேண்டும் என்ற அவருடைய விண்ணப்பத்தை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தினார். இயேசு தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தப்போகிறார் என்பதை நிச்சயமாக அறிந்த பேதுரு, சிறப்பான வார்த்தைகளையோ அசைவுகளையோ அடக்கிக்கொண்டார். யவீருவின் மகளை எழுப்பும்போது இயேசு பயன்படுத்திய அதே வார்த்தைகளை பேதுருவும் பயன்படுத்தினார்: “தபீத்தாளே எழுந்திரு”.

இயேசுவின் பெயரை வெளிப்படையாகப் பேதுரு பயன்படுத்தாதது ஆச்சரியமாக இருந்தாலும், கர்த்தர் பயன்படுத்திய அதே வார்த்தைகளைத் தானும் பயன்படுத்தியதால், இயேசுவின் தெய்வீக வல்லமை அப்பெண்ணுக்கு உயிர்கொடுத்தது. மிகவும் தைரியமாகப் பேசக்கூடியவரும் அப்போஸ்தலரில் முதன்மையாகக் கருதப்பட்டவருமான பேதுரு கூட தன்னுடைய சொந்த நாமத்தில் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. மனிதர்கள் மரணத்தை வெல்ல முடியாது. அன்றும் என்றும் பாவமில்லாதவராக நிலைத்திருக்கும் கிறிஸ்து மட்டுமே மரணத்தைத் மேற்கொண்டவர். அவர் மட்டுமே மரணத்தின் மீது அதிகாரமுள்ளவர். இயேசு கிறிஸ்துவிலுள்ள பேதுருவின் விசுவாசம் மரணத்தின் வல்லமையை உரிந்துகொண்டு, அப்பெண்ணை மரணத்தின் பிடியிலிருந்து வெளியே கொண்டுவந்தது.

அந்தப் பெண் பேதுருவின் வார்த்தைகளில் கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்டு, அந்த விசுவாசி தன்னுடைய கண்களைத் திறந்தார். அவர் எழுந்து அமர்ந்திருந்து தன்னைச் சுற்றிலுமிருந்த நறுமணத்தை முகர்ந்தார். தனக்காக விண்ணப்பித்துக் கொண்டு தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் புதிய நபரை அப்பெண் கண்ணுற்றார். பேதுரு கையை நீட்டி அப்பெண்ணின் கையைப் பிடித்து எழுந்து உட்கார அவருக்குத் துணை செய்தார். இன்னும் சில காலம் அவர் கிறிஸ்துவுக்காக இவ்வுலகத்தில் பணிசெய்வதை கிறிஸ்து விரும்புகிறார் என்பதை அவருக்குப் பேதுரு விளக்கினார். அந்தக் கடற்கரைப் பட்டணங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் அதிகாரத்திற்கு அவர் ஒரு உயிருள்ள சாட்சியாக இருக்க வேண்டும்.

அங்கிருந்த மக்கள் கூட்டம் அறைக்குள் நுழைந்தபோது, ஆச்சரியத்தினாலும் வெட்கத்தினாலும் நிறைந்தது. அவர்களில் சிலர் விண்ணப்பம் செய்தார்கள். வேறுசிலர் தலைகளைத் தாழ்த்தி மரணத்தை வென்ற கிறிஸ்துவை துதித்துக்கொண்டிருந்தார்கள். அந்த செய்தி நகரமெங்கிலும் வேகமாகப் பரவியது. மக்கள் கூட்டமாக வந்து கிறிஸ்துவை விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் வரும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள வந்தார்கள். ஆனாலும் அவர்களில் பலர் ஜீவனின் அதிபதியில் நிலைத்திருக்கவில்லை. ஆனாலும் பலர் திருச்சபையில் சேர்ந்து, கிறிஸ்துவின் அங்கமானார்கள். அங்கு ஏற்பட்ட எழுப்புதலின் காரணமாக பேதுரு யோப்பா பட்டணத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்து திருச்சபையைக் கவனித்துக்கொண்டார்.

பேதுரு திருச்சபையில் இருந்த பணக்காரர் ஒருவருடைய வீட்டில் தங்கியிருக்கவில்லை. துர்நாற்றம் வீசுகிற தோல் பதனிடும் தொழிலாளி ஒருவருடைய வீட்டில் தங்கியிருந்தார். இந்த நபருடைய வீடு இறந்துபோன மிருகங்களை அவர் கையாள வேண்டியிருந்ததால் நகரத்திற்கு வெளியே இருந்தது. பேதுரு தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரராகிய இந்த ஏழையில் பெயர் பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கும்.

விண்ணப்பம்: யோப்பாவில் நீர் மரணத்திலிருந்து அந்த சகோதரியை உயிர்ப்பித்து செய்த அற்புதத்திற்காக உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம். உம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டு விசுவாசித்த பேதுருவின் விசுவாசத்திற்காக உமக்கு நன்றி. உம்முடைய நாமத்தில் நாங்கள் சேவை செய்யும்படி, உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் புரிந்துகொண்டு அதற்குக் கீழ்ப்படிய எங்களுக்கு உதவிசெய்தருளும். நாங்கள் உம்முடைய வல்லமையில் உமக்கு சேவை செய்யும்படி நீர் எங்களைச் சுத்திகரியும்.

கேளவி:

  1. மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள் என்று இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்த கட்டளை எவ்வாறு நிறைவேறியது?

www.Waters-of-Life.net

Page last modified on August 12, 2013, at 10:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)