Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 046 (Christ’s Appearance to Saul)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

4. தமஸ்குவிற்கு அருகில் சவுலுக்கு கிறிஸ்து காட்சியளித்தல் (அப்போஸ்தலர் 9:1-5)


அப்போஸ்தலர் 9:1-5
1 சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;2 இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.3 அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;4 அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.5 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.

பழைய ஏற்பாட்டு பண்டிதரும், ஞானியுமான கமாலியேலின் பாத்தில் அமர்ந்து எருசலேமில் நியாயப்பிரமாணத்தை சவுல் கற்றுக் கொண்டிருந்தான். அவன் இறைவனின் ஒருமைத் தன்மையை விசுவாசித்தான். அவனது நம்பிக்கைக்காக அளவுக்கடந்த பேரார்வம் உள்ளவனாக இருந்தான். இறைவனின் ஒருமைத் தன்மையைக் குறித்த நம்பிக்கைக்காக மிகவும் வைராக்கியமுள்ளவனாக இருந்தான். அவனுடைய நாட்டைவிட்டு இறைவனின் நியாயப்பிரமாணம் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்து வெகுண்டெழுந்தான். முற்பிதாக்களின் விசுவாசத்தை விட்டு விலகுபவர்கள் அல்லது அதற்கு ஒப்புக்கொடுக்க மறுப்பவர்களை சவுல் அதற்கு சம்மதிக்கும்படி வற்புறுத்தினான். அல்லது அவர்களை கொன்றான். ஸ்தேவான் தன்னுடைய வாதத்தை முன்வைத்து ஆலோசனைச் சங்கத்தின் முன்பு பிரசங்கித்தபோது, கிறிஸ்துவைக் காண்பதாக அவன் கூறிய கூற்று இளம் சவுலை அதிகமாக கோபப்படுத்தியது. ஆகவே இந்த போதனையை விசுவாசிப்பவர்களை அவன் துன்பப்படுத்தினான். அவர்களுடைய விசுவாசத்தை அவர்கள் மறுதலிக்கும்படியும்; கிறிஸ்துவை தூஷிக்கும்படியும் வற்புறுத்தினான். சவுலின் செயல்பாடுக்ள் மற்றும் தைரியத்தைக் கண்டு யூத ஆலோசனைச் சங்கம் திருப்தியடைந்திருந்தது. அவனது தேவையான அதிகாரங்களை அவர்கள் வழங்கினார்கள். தமஸ்குவில் உள்ள நீண்ட வனாந்தர பாலைவனச் சோலையில் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை கண்டுபிடித்து நிர்மூலமாக்கும் அவன் கடிதங்களை வாங்கிக்கொண்டு அங்கு சென்றான். அங்குள்ள யூத மார்க்கத்தை அவன் சீராமைக்க முயற்சித்தான். இயேசு என்ற கள்ளப் போதனையை அகற்ற விரும்பினான். முற்பிதாக்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்த நினைத்தான்.

சீரியாவின் தலை நகரை நோக்கி, கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களை அழிக்கும்படி வனாந்தர வழியாக குதிரையில் ஏறி பெருமைமிக்க சவுல் போய்க் கொண்டிருந்தான். இயேசுவைக் குறித்ததான புதியவிசுவாசம் தமஸ்குவிற்கு வியாபாரிகள், அகதிகள் அல்லது பயணிகள் மூலம் வந்திருக்கக்கூடும். அப்போஸ்தலர்களோ அல்லது உதவிக்காரர்களோ இதைக் கொண்டுவரவில்லை. விசுவாசிகள் தங்களுடைய மிகப்பெரிய எதிரியின் நோக்கங்களை அறிந்திருந்தார்கள். அவனுக்காக தொடர்ந்து விண்ணப்பம் செய்தார்கள்.

சவுல் அந்த நகரத்தின் கோபுரங்களையும், மண்டபத்தின் குவிந்த கூரைப்பகுதியையும் தூரத்தில் கண்டபோது, அந்த நகரத்தில் பெருமையுடன் நுழைவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான். இறைவனுக்கு சேவை செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த வைராக்கியமிக்க இந்த வாலிப மனிதன், உண்மையில் பிசாசுக்கு வேலைக்காரனாக செயல்பட்டான். திடீரென்று ஆண்டவரின் மகிமை அவனை சுற்றி பிரகாசித்தது. குதிரையிலிருந்து சவுல் தரையில் கீழே விழுந்தான். இதன்பின்பு சவுல் குதிரை சவாரி செய்தான் என்று நாம் எங்குமே வாசிக்கவில்லை. ஆகையால் அவன் இருதயம் நொறுக்கப்பட்டவனாக, கால்களில் தாழ்மையுடன் நடக்க ஆரம்பித்தான்.

இந்த வாலிப மனிதன், அவனுடைய இருதயத்தை ஊடுறுவக் கூடிய ஒரு சத்தத்தைக் கேட்டான். அவனுடைய மனதை உறைய வைக்கக் கூடியதாக அந்த சத்தம் இருந்தது. “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? அவனுடன் பேசியவர் அவனுடைய பெயர், குணாதிசயம், மற்றும் கடந்தகாலம் அனைத்தையும் அறிந்திருந்தார். இறைவன் அனைத்தையும் திரைவிலக்கி காண்பித்தார். அவனுடைய வாழ்வு மற்றும் தவறுகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். அவன் நித்தியமான நியாயாதிபதி முன்பு குற்றவாளியாக நின்றான்.

அந்த சத்தத்தைக் கேட்டவுடன் சவுல் நடுங்கினான். “நீ என்னை துன்பப்படுத்துகிறாய்” இயேசு இவ்விதமாக சொல்லவில்லை: “நீ சபையை துன்பப்படுத்துகிறாய்” ஆனால் “நீ என்னை தனிப்பட்டவிதத்தில் துன்பப்படுத்துகிறாய்”, ஏனெனில் இயேசு அவருடைய சபையுடன் ஒரு முழுமையான ஐக்கியத்திற்குள் இணைந்திருக்கிறார். ஆண்டவர் தலையாக இருக்கிறார். அவருடைய ஆவிக்குரிய சரீரத்தின் அங்கத்தினர்களாக நாம் இருக்கிறோம். அவரை பின்பற்றுபவர்களில் எளிய ஒருவனுக்கு என்ன நிகழ்ந்தாலும், அது அவரை தனிப்பட்ட விதத்தில் பாதிக்கின்றது. அவருடைய திருச்சபைக்கு எதிரான ஒவ்வொரு அநீதியான செயலின் போதும் ஆண்டவர் துன்பப்படுகிறார். திருச்சபையின் இரகசியத்தையும், அவருடைய திட்டத்தின் முடிவையும் இந்த குறுகிய சொற்றொடர் மூலம் இயேசு அறிவித்துவிட்டார். அவர் தெய்வீகமாகவும், அன்பாகவும் அவரைப் பின்பற்றுபவர்களுடன் பரிசுத்த ஆவியின் மூலமாக இணைக்கப்பட்டுள்ளார்.

இயேசு பெருமைமிக்க சவுலிடம் இவ்விதமாக சொல்லவில்லை. “நீ என்னை துன்பப்படுத்துகிறாய்”, ஆனால் “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்று கேட்டார். பரிசுத்த திரித்துவத்தின் உண்மையை மக்கள் புரிந்துகொள்ளாத போது, அது இறைவனுக்கு வேதனையையும், துன்பத்தையும் தருகின்றது. இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்காமல் இருப்பதற்கு அல்லது அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு மனிதனுக்கு எந்த ஒரு காரணமும் இல்லை அல்லது உரிமையும் இல்லை. கிறிஸ்துவில் வெளிப்பட்டிருக்கிற சிருஷ்டிகரின் மிகப்பெரிய அன்பை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே அடிப்படைத் தவறாக உள்ளது. சிலுவையில் அறையப்பட்டவரின் மூலமாக பாவங்கள் மன்னிக்கப்படுவதை விசுவாசியாமல் இருப்பதே முதன்மையான பாவமாக இருக்கிறது. இது இறைவனுடைய திட்டமான நோக்கத்திற்கு எதிராக உள்ளது. அவர் ஒவ்வொரு கடினமான மனிதனையும் பார்த்து கூறுகிறார்: “நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய், நீ ஏன் பரிசுத்த திரித்துவத்தின் அன்பிற்கு எதிராக இருக்கிறாய்?”.

ஆண்டவரின் மகிமை ஒரேயடியாக தன்னை அழித்துவிடவில்லை என்பதை சவுல் உணர்ந்துகொண்டான். அவன், அவருடைய எதிரியாக இருந்தான். மேலும் அவரை பின்பற்றுபவர்களை அவன் கொன்றான். சத்தத்துடன் பேசியவர் பகையுணர்வுடன் பேசாமல், அன்புடன் பேசினார் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவரிடமிருந்து நியாயத்தீர்ப்பு வெளிப்படவில்லை, மாறாக கிருபை வெளிப்பட்டது. இறைவன் முன்பாக சமர்ப்பிக்கக் கூடிய எந்த நற்செயல்களும் சவுலிடம் இல்லை. அவன் பரிசுத்தவான்களை துன்பப்படுத்தியவனாகவும் , கொலை செய்தவனாகவும் இருந்தான். அவன் மரணத்திற்கும், நரகத்திற்கும் பாத்திரவானாயிருந்தான். அவன் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது இறைவனுடைய கிருபையை எந்த தகுதியின் அடிப்படையிலும் இல்லாமல் இலவசமாக பெற்றுக்கொள்வது ஆகும். குழப்பமடைந்த சவுல் இவ்விதமாக கேட்டான்: “ஆண்டவரே நீர் யார்?” அவன் அவரை “எஜமான்” அல்லது மிகப்பெரிய தூதன்” என்று அழைக்கவில்லை. பேசுகிறவர் இறைவன் தான் என்பதை அவன் அறிந்தான். எனவே அவரை “ஆண்டவரே” என்று அழைத்தான். இறைவனின் நாமம் வெளிப்பட்டதற்கான விண்ணப்பமாக அவனது விண்ணப்பம் காணப்பட்டது. சவுலின் வார்த்தைகள் நடுக்கத்துடன், தன்னடக்கத்துடன் ஏறெடுக்கப்பட்ட விண்ணப்பத்தைக் குறிக்கின்றது. இந்த உன்னதமான ஒளியில் வெளிப்பட்ட சத்தத்தை பேசியவரை அறிந்துகொள்ள அவன் ஆசையாய் இருந்தான். அழிந்து போகக்கூடிய நியாயத்தீர்ப்பின் மத்தியில் சவுல் அளவுக்கதிகமான கிருபையை உணர்ந்தான். அவன் இறைவனுடன் பேசுவதற்கு பயத்துடன் நடுங்கினான்.

ஆண்டவர் அவருடைய எதிரிக்கு பதிலளித்தார். அவர் அவனை அடித்துவிடவில்லை. அவனுடைய விண்ணப்பத்திற்கு பதில் அளித்தார். அவனை ஆசீர்வதித்தார். சவுலிடம் கிறிஸ்து பேசிய வார்த்தைகள் மூலம், ஆண்டவர் துன்மார்க்கமான ஒருவன் மீதும் இரக்கப்படுகிறார் என்று அறிந்துகொள்கிறோம். அவன் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகள் மூலம், அவருடைய சித்தத்தை வெளிப்படுத்துவதற்கு அவர் போதுமான கிருபையுள்ளவராய் இருந்தார். இந்த வார்த்தைகள் சவுலை தூய்மைப்படுத்தியது, நீதிக்குட்படுத்தியது. அவனுடைய எதிர்கால வாழ்க்கைக்கும், ஊழியத்திற்கும் ஆதாரமாக இருந்தது.

இயேசு தனித்துவமான வார்த்தையான “நான் இருக்கிறேன்” என்பதன் மூலம் தனது தன்மையை வெளிப்படுத்தினார். “பரிதாபமான சவுலே, நீ சிறியவன், பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டவன், குழப்பமடைந்துள்ள மனிதன். நான் உயிருள்ளவராய் இருக்கிறேன். நான் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்துள்ளேன். நான் இயேசு, ஓர் ஆவி அல்ல. அல்லது ஒரு பொய்யும் அல்ல. கல்லறையில் சிதைந்து அழிந்து போகவில்லை. நான் மகிமையின் ஆண்டவராக இருக்கிறேன். நான் உனக்கு முன்பாக நிற்கிறேன். உனது ஒவ்வொரு நல்ல நோக்கத்தையும் நான் அறிந்திருக்கிறேன். உனது மதத்தைக் குறித்து வைராக்கியத்தால் உன்னுடைய மனம் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. உனது அருவருக்கத்தக்க மத வெறியின் மூலம், நீ என்னை புரிந்து கொள்ள முடியாது. நீ இறைவனுக்கு சேவை செய்வதாக நினைத்து. மரணத்தைய வென்றவரும், நரகத்தை மேற்கொண்டவருமாகிய என்னை துன்பப்படுத்துகிறாய். இது ஓர் பயங்கரமான உண்மை ஆகும். இன்றும் இயேசு கிறிஸ்துவை துன்பப்படுத்துபவர்கள், உண்மையில் சாத்தானை ஆராதிக்கிறார்கள். உயிருள்ள இயேசு பிதாவாகிய இறைவனின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். பரலோகத்திலும், பூலோகத்திலும் எல்லா அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சந்தேகத்திற்கிடமின்றி கிறிஸ்துவின் காட்சியளித்தலும், வார்த்தைகளும், பெருமைமிக்க சவுல் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கையையும் பரிசேயனாக அவன் நீதியை நம்பியதையும் உடைத்துப் போட்டது. சிலுவையில் அறையப்பட்டவர் இப்போது உயிரோடிருக்கிறார் என்பது அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அவரே அண்டசராசரத்தின் மையமாக இருக்கிறார். அவர் தன்னுடைய எதிரிகளை அழித்துவிடவில்லை. அவர்களுக்கு கிருபையின் மேல் கிருபை அளிக்கிறார். அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள அவருடைய சபையுடன் இணைந்து, முழுமையான ஒருவராக இருக்கிறார். குறுகிய நேரத்தில் சவுலுக்கு இந்த மூன்று உண்மைகள் அறிவிக்கப்பட்டது. இவைகள் இன்றும் புதிய ஏற்பாட்டில் நம்முடைய விசுவாசத்தின் தூண்களாக இருக்கின்றன. 1) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் 2) சிலுவையில் வெளிப்பட்ட அவருடைய கிருபை 3) பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட அவருடைய வாழும் சபை. அருமையான சகோதரனே, பிரியமான சகோதரியே, இந்த மூன்று ஆதாரங்களை நீங்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது நீங்கள் ஆவியானவருக்கும், கிறிஸ்துவைக் குறித்த சத்தியத்திற்கும் எதிர்த்து நிற்கிறீர்களா? அப்படியென்றால், ஆண்டவர் உங்களிடம் இவ்விதமாகக் கூறுகிறார். “இறைவனுடைய நோக்கங்களை எதிர்ப்பது உங்களுக்கு கடினமாம்! சத்தியத்திற்கும், வாழ்விற்கும் எதிரான உங்கள் எதிர்ப்பால் நீங்கள் அதிகம் துன்புறுவீர்கள்.

விண்ணப்பம்: நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எங்கள் மகிமையுள்ள, இரக்கமுள்ள ஆண்டவரே, நீர் சவுலை அழித்துவிடவில்லை. அவனுக்கு நீர் இரக்கம் பாராட்டினீர். நீர் இன்றும் எங்களுடன் வாழுகின்றீர், பிரசன்னமாய் இருக்கிறீர். உம்மைத் தேடுகிற அனைவருக்கும், உம்மை வெளிப்படுத்தும். எதையும் ஆராயாமலே ஏற்றுக்கொள்கின்ற, நல்ல நோக்கத்துடன் உமது சபையை மத வைராக்கியத்துடன் துன்பப்படுத்துகிற அனைவரையும் இரட்சியும். நாங்கள் உமது நாமத்தை மகிமைப்படுத்துகிறோம். நீர் உமது நேச திருச்சபையுடன் ஒன்றாக இருக்கிறீர்.

கேள்வி:

  1. சவுலுக்கு வெளிப்பட்ட கிறிஸ்துவின் காட்சி தருதலின் பொருள் என்னவாக இருக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:56 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)