Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 025 (Church Members having all Things in Common)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

13. சபை மக்கள் அனைத்தையும் பொதுவாக வைத்திருத்தல் (அப்போஸ்தலர் 4:32-37)


அப்போஸ்தலர் 4:32-37
32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. 33 கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. 34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, 35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. 36 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், 37 தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

பெந்தேகொஸ்தே நாளின் போது பேதுருவின் பிரசங்கத்தைத் தொடர்ந்து நற்செய்தியாளர் லூக்கா ஆதித்திருச்சபை எவ்விதம் அனைத்தையும் பொதுவாக வைத்திருந்தனர் என்ற தனது இறுதிக் கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறார். சப்பாணியாய் இருந்த மனிதன் சுகமாக்கப்பட்டவுடன் அதிகாரிகள் முன்பான அப்போஸ்தலர்களின் சாட்சியைக் குறித்து கூறுகிறார். பின்பு ஆதித்திருச்சபையின் உள்ளான வாழ்வு குறித்த தனது சிறப்பான கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறார். கிறிஸ்துவின் அன்பினால் அப்போஸ்தலர்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை. எல்லா விசுவாசிகளும் காணக்கூடிய சரியான ஐக்கியத்தில் ஒருவருடன் ஒருவர் இணைந்து அன்பினால் நிரப்பப்பட்டிருந்தார்கள். நாம் இந்த ஐக்கியத்தைக் குறித்து சிந்திப்போமானால் அநேக குறிப்புகளை தெளிவாக அறியமுடியும்.

ஆதித்திருச்சபையின் இரகசியமானது அதனுடைய உண்மையான அன்பில் அடங்கியிருந்தது. வெறுமனே கடந்துபோகும் உணர்வாக அது இல்லை. அது பரிசுத்த ஆவியானவரின் கனியாக இருந்தது. கிறிஸ்துவின் மீதான அவர்களின் விசுவாசம் பொதுவான திட்டத்தில் அவர்களை இணைத்தது. அவர்கள் கூட்டமாக இணைந்து விண்ணப்பம் செய்ததினால் திருச்சபையின் மையமான அவர்களது ஆண்டவரிடம் இன்றும் அதிகமாக அவர்களை நெருக்கமாக்கியது. விண்ணப்பத்தின் மூலம் அவர்கள் ஒரே இருதயம், ஒரே சிந்தையுடன் வளர முடிந்தது. ஒவ்வொருவரும் பிறரின் தேவையை உணர்ந்தார்கள். அவர்கள் உபத்திரவம் மற்றும் சந்தோஷம் இரண்டையும் பகிர்ந்து கொண்டார்கள். அது ஒரு மனிதனின் இருதயம் மற்றவரின் மார்பில் துடிப்பதைப் போலவும், ஒருவருடைய ஆத்துமா மற்றவரின் சரீரத்தில் தங்கியிருப்பதைப் போலவும் இருந்தது. ஒவ்வொருவரும் தனித்துவமான ஆள்தன்மையை பெற்றிருந்தார்கள். ஆனாலும் ஒவ்வொருவரும் சுயத்தை மறுத்தார்கள். இவ்விதத்தில் சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் ஸ்தல சபையின் ஒரே ஆத்துமாவாக மாறப்போகிற ஒரு புதிய, அறிந்து கொள்ளக்கூடிய பொதுவான ஆத்துமாவை பெற்றார்கள்.

கிறிஸ்தவத்தில் காணப்படும் சகோதரத்துவம் ஒரு சிறந்த இரகசியம் ஆகும். சொத்துக்களிலும், செலவினங்களிலும் அது முடிகிறதில்லை. அது அநேக சூழ்நிலைகளில் அனுபவப்பூர்வமாக உணரப்படுகிறது. ஒவ்வொருவரும் பிறருடைய உதவிக்காக காத்திருப்பதில்லை. தேவையுள்ள சகோதரனுக்கு விரைவாக உதவும்படி ஒவ்வொருவரும் கொடுக்கிறார்கள். கொடுப்பது சந்தோஷமான காரியமாக இருந்தது. பண ஆசையை கிருபையற்ற ஒன்றாக அவர்கள் கருதினார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்காக வேலை செய்யவில்லை. தங்களின் வரங்கள், பணம், சொத்துகள் மூலம் பிறருக்கு பணிவிடை செய்தார்கள். ஆண்டவர் விசுவாசிகளை கஞ்சத்தனம், பொறாமை, பணஆசை, தனிப்பட்ட சொத்தை சார்ந்திருத்தல் ஆகியவைகளிலிருந்து விடுவித்திருந்தார். நற்செய்தியாளர் லூக்கா மற்ற நற்செய்தியாளர்களைவிட பணஆசையைக் குறித்த இயேசுவின் எச்சரிப்பை அதிகமாக தனது நற்செய்தியில் குறிப்பிடுகிறார். பண ஆசையோ அல்லது சொத்தின் மீதான சுயநல ஆசையோ ஆதி சபையில் இருக்கவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் சாட்சியிடுகிறார். அனைத்து காரியங்களும் அவர்களுடைய சகோதரர்களுடன் பொதுவாக நடந்தேறியது.

அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் உடனடி வருகையை எதிர்பார்த்து இருந்தார்கள். அவரை வரவேற்பதற்கு தங்களை பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள். அவர்களுடைய இந்த எதிர்பார்ப்பின் மத்தியில் அப்போஸ்தலர்கள் வல்லமையோடும், மகிழ்ச்சியோடும் இயேசு உயிருடன் பிரசன்னமாயிருந்து தனது இரட்சிப்பை கொண்டு வருகிறார் என்பதை அறிவித்தார்கள். உயிருள்ள ஆண்டவர் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசம் தான் அவர்களது வல்லமையாய் இருந்தது. விசுவாசத்தின் மூலமாக அவர்களும் அவருடன் மரணத்திலிருந்து எழுந்திருந்தார்கள். இறைவனின் ஜீவன் அவர்களுக்குள் தங்கியிருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்கள் வெறுமனே கொள்கைகளை போதிக்கவில்லை. மிகவும் பெரிதானதும் செயல்படுகிறதுமான வல்லமையுடன் பிரசங்கித்தார்கள்.

ஆண்டவர் அவர்களுடைய சாட்சியை உறுதிப்படுத்தினார். அவருடைய நாமத்தை அறிக்கையிடுபவர்களிடம் தமது கிருபையை அபரிமிதமாக வெளிப்படுத்தினார். அவருடைய வல்லமை செயல்பட்டது. அவர்களுடைய திறமைகள் மற்றும் வரங்களின் மூலம் அது வெளிப்பட்டது. அவருக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் தியாகம் மற்றும் அன்பின் ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். விசுவாசிகளில் தங்கியிருந்த இறைவனின் வல்லமை மற்றும் கிருபையை பற்றிபேசும்போது, “பெரிதான” என்ற வார்த்தையை லூக்கா இரண்டு முறை குறிப்பிடுகிறார். நற்செய்தியில் நாம் இந்த வார்த்தையை பொதுவாக வாசிக்கிறதில்லை. இறைவனின் வரங்கள் பொங்கி வருகின்றது. இரட்சிப்பு முழுமையாய் வருகிறது. அப்போஸ்தலர்களின் தாக்கத்தை ஏற்படுத்தும் சாட்சியின் இரகசியத்தை நம்மால் உணரமுடிகிறது. சபை வாழ்வில் வெளிப்பட்ட ஒருமனத்தை உணரமுடிகிறது.

இந்த தன்னார்வமான ஆவிக்குரிய சமூகஅமைப்பில் ஏழை, நாதியற்றவன், துன்புறுபவன், புறக்கணிக்கப்பட்டவன் அல்லது தகுதியற்றவன் என்ற நிலை இல்லாதிருந்தது. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி, நெருக்கம், விண்ணப்பத்துடன் இணைந்திருப்பது, உயிருள்ள இறைவனுடன் இணைந்திருப்பது என்ற அனைத்தையும் அனுபவித்தார்கள். பாடுகள் மற்றும் போராட்டங்கள் திருச்சபையில் விண்ணப்பத்தின் வல்லமையினால் மேற்கொள்ளப்பட்டன. மறுப்புகள் பெருந்தன்மை மற்றும் துதியுடன் சரிசெய்யப்பட்டன. பரிசுத்த ஆவியானவர் மூலம் ஓர் பரலோக வல்லமை பூமியில் வாசம்பண்ணியது. அப்போஸ்தலர்கள் தங்களுடைய தேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் தேவைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தை பெற்றிருக்கவில்லை. ஆனால் தங்களுடைய சபையின் அங்கத்தினர்களின் தேவைகளை சந்தித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதை உணர்ந்தார்கள். ஆகவே எந்த ஒரு போராட்டமும் அவர்கள் மத்தியில் தோன்றுவதற்கு அனுமதிக்கவில்லை.

கிறிஸ்துவுக்குள்ளான இந்த சகோதரர்கள் அனைவரும் தங்களுடைய வீடு பரலோகில் இருந்ததை அறிந்திருந்தார்கள். தங்களுக்கென்று சொந்தமாய் இருந்ததை அவர்கள் உரிமை கொண்டாடவில்லை. இறைவனுக்காக அனைத்தையும் மனப்பூர்வமாக இழந்தார்கள். அவர்கள் சிருஷ்டிகராகிய இறைவனே அனைத்திற்கும் சொந்தமானவர் என்பதை அறிந்திருந்தார்கள்.திருச்சபையில் பணம் ஆளுகை செய்யவில்லை. பரிசுத்த ஆவியானவரே ஆளுகை செய்தார். இந்த கொள்கையின் அடிப்படையில் யூத விசுவாசிகள் அனைவரும் உலகப்பொருளின் (மம்மோன்) மீதான ஆசையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததை நம்மால் காணமுடிகிறது. கிறிஸ்து கூறுகிறார் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.(மத்தேயு6:24)

திருச்சபை தனக்கு கொடுக்கப்பட்ட பணத்தை வீணடிக்கவில்லை. சொத்துகள் மூலம் பெறப்பட்ட பணமானது அப்போஸ்தலர்களின் பாதத்தின் கீழ் வைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இயேசுவிற்காக அனைத்தையும் இழந்தார்கள். வறுமையிலும் உறுதியுடன் அவரைப் பின்பற்றினார்கள். அப்போஸ்தலர்கள் அந்த பணத்தின் ஒரு சிறு பகுதியைக் கூட தங்கள் நலனிற்காக பயன்படுத்தமாட்டார்கள் எனற் நிச்சயத்தை சபை அங்கத்தினர்கள் அனைவரும் பெற்றிருந்தார்கள். மேலும் பரிசுத்த ஆவியானவர் எந்த ஒரு அநீதியான செயலும் நடைபெற அனுமதிக்கவில்லை. அவர் அனைவரையும் மகிமைக்கு நேராக வழிநடத்தினார்.

திருச்சபை அங்கத்தினர்களின் எண்ணிக்கை அந்நேரத்தில் உயர்ந்திருந்தது. மக்களைப் பார்ப்பதற்கும், அவர்களிடம் பேசுவதற்கும் அப்போஸ்தலர்கள் உயர்வான இடத்தில் அமரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. போதனைகள் மற்றும் பிரசங்கங்களைத் தொடர்ந்து தன்னார்வ காணிக்கைகள் அப்போஸ்தலர்களின் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் அருளப்பட்ட இறைவனின் அருட்கொடைக்காக அவர்கள் நன்றியை ஏறெடுத்தார்கள். பிரியமுள்ள விசுவாசியே, எந்த எல்லை வரைக்கும் நீ இறைவனுக்கு நன்றி செலுத்துகிறாய்?

திருச்சபையின் எதிர்கால பாதுகாப்பிற்காக அப்போஸ்தலர்கள் பணத்தை சேமித்து வைக்கவில்லை. அவர்கள் நன்கொடைகள் அனைத்தையும் உடனடியாக பகிர்ந்தளித்தார்கள். நிதியானது ஒரே சமயத்தில் நிரம்பி வழிந்தது. அதே சமயத்தில் வெறுமையாயும் இருந்தது. பேதுரு கூறியது போல “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை என்ற நிலை காணப்பட்டது. எல்லா நேரங்களிலும் தேவையுள்ளளோருக்காக கொடுக்கப்பட்டது. ஆண்டவர் தங்களுடைய கரங்களில் பணத்தை கொடுக்கவில்லை என்பதை மனதில் வைத்திருந்தார்கள். தேவையுள்ளோருக்கு உடனடியாக அதைக் கொடுக்கும் மனது அவர்களிடம் இருந்தது

அப்போஸ்தலர் நடபடிகளில் அநேக இடங்களில் (9:27,11:22-30,13:12,14:12-28,15:2) வரும் பர்னபா என்ற பெயரைக் குறித்து ஆர்வமூட்டும் காரியத்தை லூக்கா நமக்கு குறிப்பிடுகிறார். அவன் “ஆறுதலின் மகன் என்பது மூல வார்த்தையில் “உற்சாகத்தின் மகன் என்று பொருள்படுகிறது. அவன் தெய்வீக ஆறுதல் தருபவர் மற்றும் உதவுபவராகிய பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருந்தான். இந்த வரத்தின் மூலமாக அவன் பொறுமையோடு அநேக மக்களை உற்சாகப்படுத்தி ஆண்டவருக்கென்று பணிசெய்தான். ஆறுதலின் மகன் சீப்புருதீவைச் சேர்ந்த ஒரு லேவியன் ஆவான். அவன் அல்லது அவனுடைய தகப்பன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி எருசலேமில் அதிக விலையுள்ள அடக்கநிலம் ஒன்றை வாங்கியிருந்தனர். முதல் சந்திப்பில் அவர்கள் அவரை பார்க்க எண்ணினார்கள். கிறிஸ்தவரல்லாத யூதர்களும் தங்கள் மிகுந்த இறைபக்தியினால் இப்படி எண்ணினார்கள். பர்னபா மெய்யான கிறிஸ்துவை அறிந்தான். வரப்போகும் மகிமைக்கு ஆதாரமாக அவனுக்குள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருந்தான். யூத முறைமைகளில் இருந்து அவன் விடுதலையாகி இருந்தான். இந்த விலையேறப்பெற்ற நிலத்தை விற்றான். இந்த விற்கப்பட்ட தொகையானது தள்ளப்பட்ட மீந்த யூதர்களுக்கு உரியது. இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார் என்ற எதிர்பார்ப்பிற்கு சாட்சியாக இருந்தது. இந்த பர்னபா தன்னுடைய பணத்தின் எந்த ஒரு பகுதியையும் தனக்கென்று வைத்துக்கொள்ளவில்லை. பூமியில் மீதமுள்ள தனது வாழ்விற்காக பரிசுத்த நகரத்தில் அவன் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக எதையும் எடுக்கவில்லை. அவனுடைய நிலத்தின் முழுத் தொகையையும் அவன் கொண்டுவந்து அமைதியுடன், தாழ்மையுடன் அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான்.

விண்ணப்பம்: ஆண்டவரே, உமது அன்பு பரலோகத்தைவிட பெரியது. உம்முடைய சத்தியம் சுயநலமுள்ள இருதயங்களை மாற்றுகிறது. உமது உடனடி வருகைக்காக எனது பணத்தை ஏற்றுக்கொள்ளும். எனது விசுவாசத்தை பெலப்படுத்தும். போராட்டத்தில் இருக்கும் உம்முடைய சபையில் தேவையுள்ளோர் எவரும் இராதபடி நான் அனைவருக்கும் உதவும்படி செய்யும்.

கேள்வி:

  1. ஆதி கிறிஸ்தவ ஐக்கியத்தில் காணப்பட்ட குணாதிசயங்களில் எந்த ஒன்று உங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 10:39 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)