Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 013 (Peter’s Sermon at Pentecost)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

6. பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 2:14-36)


அப்போஸ்தலர் 2:24-28
24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை ஏழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. 25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; 26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; 27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; 28 ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

மரணத்தின் மீதான இறைவனுடைய வெற்றியே கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் ஏந்தி நிற்கும் வெற்றிக்கொடியாகும். மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்பட்ட கிறிஸ்துவே இந்த வெற்றியின் அடையாளமாயிருக்கிறார். கிறிஸ்து உயிரோடிருக்கிறார். இனி அவர் ஒருபோதும் இறப்பதில்லை. அவரே நம்முடைய உயிர்த்தெழுதலின் உத்தரவாதமாகவும், நம்முடைய நித்திய வாழ்வின் காப்புறுதியாகவும் இருக்கிறார்.

யூதர்களுடைய எதிர்ப்பை இறைவன் மேற்கொண்டார் என்பதை பேதுரு வெளிப்படையாக அறிவித்தார். அவர்கள் புறக்கணித்த இந்த நசரேத்து வாலிபனாகிய இயேசுவை இறைவன் ஏற்றுக்கொண்டு, உயிரோடு எழுப்பினார். அவர் மரணத்தின் கட்டுக்களை அவிழ்த்து அவரை விடுவித்தார் (சங்கீதம் 18:5-6). ஏனெனில் கல்லறை அவரை தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை. அவர் பரிசுத்தராயிருந்தபடியால் மரணத்திற்கு அவர்மேல் வல்லமையிருக்கவில்லை. அவர் நம்முடைய பாவங்களுக்காக மரணத்தை ருசிபார்த்து, நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக உயிரோடு எழுப்பப்பட்டார். கிறிஸ்து இவ்வாறு உயிரோடு எழுப்பப்பட்டது யூதர்கள் மீதான கடுமையான நியாயத்தீர்ப்பாயிருந்தது. அதேவேளையில் அது கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாயிருக்கிறது.

இதைத் தொடர்ந்து தாவீது கிறிஸ்துவைக் குறித்து தனக்கிருந்த ஞானத்தினாலே எவ்வாறு பரிசுத்த திரித்துவத்தின் இரகசியங்களை அறிந்துகொண்டார் என்பதை பரிசுத்த ஆவியானவர் பேதுருவின் மூலமாக தெளிவுபடுத்தினார். பிதாவினுடைய மகிமை முழுவதையும் குமாரன் எல்லாக்காலத்திலும் கண்டு மகிழ்வுற்றிருந்தார் என்பதை பேதுரு அறிக்கை செய்தார். இயேசு கிறிஸ்து இரண்டாவது ஆதாமாகவும், இறைவனுடைய மனமகிழ்வாகவும், அவருடைய மெய்யான உருவமாகவும் இருக்கிறார். அவர் வல்லமையும், அழகும், மகிமையும் நிறைந்தவராக, பிதாவுடன் முழுமையான ஒற்றுமையுள்ளவராக எப்போதும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுபவராக இருக்கிறார்.

சிலுவை மரணத்திற்கு முன்பாக கிறிஸ்து பிதாவை அவருடைய வலதுபக்கத்திலிருந்து பார்த்தார். அவர் பரமேறிய பிறகும் பிதாவினுடைய வலது பக்கத்தில் அமர்ந்தார் என்பதை நாம் அறிவோம். இந்த இடத்தில் நாம் மறுபடியும், பரிசுத்த திரித்துவத்தின் நபர்கள் ஒவ்வொருவரும் தாழ்மையுடன் எப்போதும் மற்றவர்களைக் கனப்படுத்தி, தங்களை கடையானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதைக் கவனிக்கிறோம். இந்தத் தீர்க்கதரிசனத்தில் கிறிஸ்து இறைவனுடைய வெற்றியில் தொடர்ந்து முன்னேறுவார் என்றும், அவர் பிதாவைப் பார்த்து கலக்கமடைவதில்லை என்பதும் அறிவிக்கப்படுகிறது. நாமும் பாவச் சோதனையில் விழுந்துவிடாதபடி எப்போதும் பிதாவை நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலிருக்கிற தொடர்ச்சியான ஐக்கியம், பெருமையினாலோ, பாவத்தினாலோ ஒருபோதும் தடைசெய்யப்படுவதில்லை. ஆனால் அது சந்தோஷமும், இன்பமும், அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக எப்போதும் நிலைத்திருக்கிறது. “நீர் என்னுடைய குமாரன். உம்மில் நான் பிரியமாயிருக்கிறேன். துக்கப்படாதீர்கள், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்” என்று சொல்லும்போது அவர் மகிழ்ச்சியின் இறைவனாயிருக்கிறார் என்பதை அவரே அறிவித்திருக்கிறார்.

இறைவனுடைய ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்திற்கு முன்பாகவே தம்முடைய மரணத்தை அவர் அறிந்திருந்தார். அவருடைய ஞானம் மரணத்தையும் கடந்து நித்தியம் வரை சென்றது. அவர் நம்பிக்கையற்றவராக சிலுவையில் மரிக்காமல் நம்பிக்கையோடு மரித்தார். அவருடைய ஆவியும் ஆத்துமாவும் இறந்தவரகளோடு சிறைப்பட்டிராது என்பதை அவர் அறிந்திருந்தார், ஏனெனில் அவர் தம்முடைய ஆவியைப் பிதாவினுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்திருந்தார். இயேசு பரிசுத்தராயிருக்கிறபடியால் அவருடைய சரீரம் அழிவைக் காணாது என்பதை தாவீது முன்னறிவித்திருந்தார். இது கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கையாகவும் மாறியிருக்கிறது. காரணம் அவர்களுடைய சரீரங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு உயிரோடு எழுப்பப்படும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்திருக்கும் பாவமன்னிப்பு முழுமையானதாக இருப்பதால் அவர்களுடைய சரீரம் முழுவதுமாகச் சுத்திகரிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு சிருஷ்டிகருடைய கொடையாயிருக்கிறது. கிறிஸ்துவின் உயிர்தெழுதல் நம்முடைய வல்லமையாகவும், மகிழ்ச்சியாகவும், நமது நன்றியுணர்விற்கான காரணமாகவும் இருக்கிறது. இயேசு அனைத்து இரகசியங்களையும் நித்திய வாழ்விற்கான வழிகளையும் அறிந்திருக்கிறார். ஏனெனில் அவர்: “நானே உயிரும் உயிர்த்தெழுதலுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிப்பவன் மரணமடைந்தாலும் மீண்டும் உயிர்ததெழுவான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் மரணமடையமாட்டான்” என்று சொல்லியிருக்கிறார். கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலில் நாம் அனைத்து விசுவாசிகளுடைய உயிர்த்தெழுதலையும் காண்கிறோம். அவர் தம்மைப் பின்பற்றுகிற அனைவருக்கும் உயிர்கொடுப்பவரானார். அவரின்றி உண்மையான வாழ்வு மனிதருக்கில்லை.

இறுதி நாளில் தம்முடைய மரணத்தினால் எண்ணற்றோர் உயிரடைவதைப் பார்த்து கிறிஸ்து மகிழ்ந்திருப்பார். அவர்கள் அவரோடு நிலைத்திருக்கவும், இறைவனுடைய கிருபாசனத்திற்கு முன்பாக வரவும் அவருடைய மரணம் அவர்களைத் தகுதிப்படுத்தியிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அவர்களை அவருடைய ஆன்மீக உடலின் அங்கங்களாக மாற்றி, இறைவனுடைய அன்பின் ஆட்சிக்குள் அவர்களைக் கொண்டுவந்து, முடிவற்ற வாழ்வின் உண்மையை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நம்முடைய விசுவாசம் மகிழ்ச்சியிலும், சந்தோஷத்திலும் நம்பிக்கையிலும் கட்டப்பட்டிருப்பதால் மிகப்பெரியதாயிருக்கிறது.

அப்போஸ்தலர் 2:29-32
29 சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. 30 அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை ஏழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், 31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். 32 இந்த இயேசுவை தேவன் ஏழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அப்போது இறைவனுடைய குடும்பத்தில் அங்கமாகாதிருந்தபோதிலும் பேதுரு அவர்களைச் “சகோதரரே” என்றுதான் அழைத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்தில் செயல்படுவதை அவர் கவனித்தார். தாவீதின் தீர்க்கதரிசனம் (அப்போஸ்தலர் 2:25-28), தாவீதைக் குறிக்கவில்லை. ஏனெனில் தாவீதுக்குப் பல குழந்தைகள் பிறந்தார்கள் என்பதோடு அவர் இறந்துபோய்விட்டார். இதை பேதுரு அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அந்த மக்கள் நன்கு அறிந்திருந்த தாவீதின் கல்லறையைவிட்டு அவர் வெளியேறவில்லை. தாவீது அபிஷேகம் பண்ணப்பட்டவரும், வேறு எந்த தீர்க்கதரிசியோ, அரசனோ, அல்லது ஆசாரியனோ பெற்றுக்கொள்ளாத வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டவருமாகிய மெய்யான தீர்க்கதரிசியாயிருக்கிறார். அவருடைய பிள்ளைகளில் ஒருவர் இறைமகனாவார் என்பதை அந்த தீர்க்கதரிசனம் முன்னுரைக்கிறது. அந்த இறைமகனுடைய அரசு அழிவைக் காண்பதில்லை (2 சாமுவேல் 7:12-14). கிறிஸ்துவைக் குறித்த இந்த வாக்குத்தத்தத்தை யூதர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே அவர்கள் மனுமகனும் இறைமகனுமாகிய ஒருவருக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். வேதபாரகர்கள் கிறிஸ்துவின் வருகையைப் பற்றி அதிகம் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவானவர் பரிசுத்த ஆவியினால் பிறப்பவராயிருப்பதால் அவர் மரணத்தை மேற்கொள்வார் என்பதை அறிந்துகொள்ளும்படி அவர்கள் வேதாகமத்தை ஆய்வு செய்தார்கள். ஆகவே அவருடைய உடல் அழிவடையாது, அவருடைய ஆன்மாவை மரணத்தின் சக்தியினால் கட்டுப்படுத்த முடியாது. அவர் மரணத்தின் வல்லமையை வெற்றிகொண்டதால் அவருடைய அரசு முடிவில்லாத அரசாக இருக்கும். அவர் மன்னாதி மன்னனும் பிதாவோடு ஒன்றானவருமாயிருப்பதால் அழிவிற்குரிய தற்காலிக அரசனைப்போல் அவர் ஆட்சிசெய்வதில்லை.

அதன் பிறகு பரிசுத்த ஆவியானவர் ஏவியபடி பேதுரு, புறக்கணிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தாவீதின் மகன் என்றும் இறைவனால் உயிருடன் எழுப்பப்பட்ட நித்திய அரசன் என்றும் வெளிப்படையாக சான்று பகர்ந்தார். பேதுரு தம்முடைய எதிரிகளைப் பார்த்து அஞ்சவுமில்லை, அனைத்துக் காரியங்களையும் அவர்களுடன் விவாதிக்கவும் இல்லை. இறைவனுடைய வல்லமையினால் நிறைவேறி முடிந்த இந்த மாபெரும் உண்மைக்கு அவர் எளிமையாக சான்று கூறினார். அவர் தம்முடைய சொந்தக் கண்களினாலேயே இறைவனுடைய இந்த வெற்றியைக் கண்டு, தன்னுடைய சொந்தப் பாவங்களுக்கான மன்னிப்பின் வார்த்தைகளை உயிருள்ள இயேசுவினிடமிருந்து பெற்றுக்கொண்டவர். இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு தம்முடைய சீடர்களுடன் உணவருந்தினார். தம்முடைய உயிர்த்தெழுந்த சரீரத்தோடு அவர் அவர்களைச் சந்தித்து, தம்முடைய உள்ளங்கைகளில் இருந்த ஆணி பாய்ந்த அடையாளத்தை அவர்களுக்குக் காண்பித்தார். இறைவனுடைய மகன் இறந்துபோய்விடவில்லை, அவர் மறுபடியும் உயிரோடு எழுந்தார். எனக்கு அன்பான விசுவாசிகளே நாம் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோமா?

இந்தக் கூற்றோடு பேதுருவினுடைய பிரசங்கத்தின் இறுதிப் பகுதி நிறைவடைந்தது. முதலாவது, பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டது யோவேலுடைய தீர்க்கதரிசனத்தின் விளைவாக நடைபெற்றது என்பதை அவர்களுக்கு அறிவித்தார். இரண்டாவது, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைக் கொலைசெய்தவர்கள் யூதர்களாகிய அந்த மக்களே என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். மூன்றாவது, கிறிஸ்து மெய்யாகவே இறந்தவர்களிடமிருந்து உயிரோடு எழுந்து வந்தார் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நீரே வாழ்வின் அதிகாரி. உம்மையும் உம்முடைய உயிர்த்தெழுதலையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். நீரே எங்கள் அரசனாகவும் எங்களுக்கு வாழ்வளிப்பவராகவும் இருக்கிறீர். நீரே எங்கள் ஒரே நம்பிக்கை. பலரை உம்முடைய பரிசுத்த ஆவியானவரால் நிறைத்து, அவர்கள் வாழ்வடையும்படி அவர்களை உம்மிடத்தில் திருப்பியருளும்.

கேள்வி:

  1. தாவீதின் தீர்க்கதரிசனத்திலிருந்து அந்த மக்கள் எதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்று பேதுரு விரும்பினார்?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 09:59 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)