Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 011 (Peter’s Sermon at Pentecost)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

6. பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 2:14-36)


அப்போஸ்தலர் 2:14-21
14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். 15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. 16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். 19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

அந்நிய மொழியில் பேசுவது முக்கியமானது. ஆனாலும் தீர்க்கதரிசனம் உரைப்பது அதிலும் முக்கியமானது. அந்நிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியின் வரமாகும். அந்நிய மொழியில் பேசும் ஒருவர் இறைவனுக்கு நன்றி செலுத்தவும், துதி செலுத்தவும், விண்ணப்பிக்கவும் ஆரம்பிப்பார்கள். ஆனாலும் அதன் பொருள் அவருக்குப் புரியாது. இருப்பினும் உண்மையான தீர்க்கதரிசனம் என்பது கேட்பவர்களுடைய உள்ளத்தை உணர்த்தி அவர்களை இறைவனுடைய சமூகத்தில் நிறுத்துகிறது.

மகிழ்ச்சியும் துதியும் நிறைந்து அந்நிய மொழிகளினால் அப்போஸ்தலர்கள் துதித்துக்கொண்டிருந்ததைக் கண்ட யூதர்களுடைய இருதயத்தை பேதுருவின் வாயிலிருந்து புறப்பட்ட பரிசுத்த ஆவியின் பிரசங்கம் உணர்த்தியது. இறைவனுடைய பரிசுத்த ஆவியானவர் தோன்றி, தம்முடைய வருகைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார் என்பதற்கு அப்போஸ்தலர்கள் தெளிவாக சாட்சி பகர்ந்தார்கள்.

தன்னுடைய பேச்சுத் திறமையை வெளிப்படுத்தவும் தனக்குச் செவிகொடுத்தவர்களுக்குக் கிளர்ச்சி உண்டுபண்ணவும் பேதுரு அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை. மாறாக பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் ஒன்றாகக் கூடி விண்ணப்ப வீரர்களாக பேச்சாளரைப் சுற்றி நின்றார்கள். ஏற்கனவே ஆயத்தம் செய்யாதபடியால் அப்போது பேசுவதற்கு பேதுரு பயப்பட்டிருக்கலாம். ஆகிலும் சத்திய ஆவியானவர் அவருடைய இருதயத்தை அமைதிப்படுத்தி, அவருடைய இருயத்தை உற்சாகப்படுத்தினார். சில நாட்களுக்கு முன்பு மற்றவர்களுக்குப் பயந்து அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளிருந்த பேதுரு இப்போது தைரியமாகப் பேசத்தொடங்கினார். இறைவனுடைய வல்லமை அவர்களை நிரப்பியபோது அவர்களுடைய நாவுகள் சரளமாகப் பேசத்தொடங்கின. பரிசுத்த ஆவியிடமிருந்து வந்த வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தை நிரப்பியதால் அவர்கள் மூலமாக இறைவன் பேசத்தொடங்கினார். தனக்குச் செவிகொடுத்தவர்களுக்கு முன்பாக பேதுரு பரவச நிலையை அடையவில்லை. மாறாக அவர்களுக்கு முன்பாக நின்று, தைரியத்தோடும் கனத்தோடும் பேசினார்.

முதலாவது, பேதுரு இப்படிப்பட்ட ஒரு சமய நம்பிக்கை நிறைந்த நகரத்திலே காலை ஒன்பது மணிக்கெல்லாம் மக்கள் குடிபோதைக்கு உள்ளாவது சாத்தியமில்லை என்று அவர்களுடைய தவறான குற்றச்சாட்டிற்கு பதிலுரைத்தார். அப்படிப்பட்ட செய்கையை அயலகத்தார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்ட குடிகாரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.

இரண்டாவது, மக்களைப் பிடிக்கிறவனாகிய பேதுரு, தனக்குச் செவிகொடுத்த மக்களை நோக்கித் திரும்பினார். பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் வரும்படி அவர்கள் செவிகொடுத்து, தங்கள் இருதயத்தைத் திறக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். பேதுரு அவர்களுடன் பேசும்போது கண்ணீர்விட்டு, உணர்வுபூர்வமாக, உளவியல் ரீதியாக அவர்களிடம் பேசவில்லை. அவர்கள் சித்தத்தை அசைக்கத்தக்கதாக கடுமையான தண்டனையைப் பற்றியும் பேசவில்லை. மாறாக, அவர் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களையும் அவை வரலாற்றில் எவ்விதமாக நிறைவேறியுள்ளது என்பதையும் பற்றி பேசினார். அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வுகளை அவர் வேதாகமத்தின் வார்த்தைகளைக் கொண்டு அவர்களுக்கு விளக்கப்படுத்தினார். அவர்களுடைய கண்களுக்கு முன்பாக பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மீது வந்திறங்கிய அந்த நிகழ்வு இறைவன் தம்முடைய வார்த்தையில் ஏற்கனவே முன்னறவித்த நிகழ்வுதான் என்று பேருது அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

யூதர்களுடைய வேதாகமத்தில் நன்கு அறியப்பட்டிருந்த வேதபகுதியில் இருந்து அப்போஸ்தலருடைய தலைவன் மேற்கோள் காட்டினார். “இதுதான் தீர்க்கதரிசியாகிய யோவேலினால் முன்னறிவிக்கப்பட்டது” என்று அவர் எடுத்துரைத்தார். அந்தத் தீர்க்கதரிசனம் வெளிப்படையாக நிறைவேறியது. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்தில் வந்து வாசம்பண்ணுகிறார். ஆகவே நாம் மீண்டும் வரவேண்டும் என்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஒரு சிறு பிள்ளை ஒரு பரிசைப் பெற்றுக்கொள்வதைப் போல நாமும் அவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் அவருக்காக இறைவனைத் துதிப்பதை மட்டுமே செய்ய வேண்டும். நற்செய்தியில் கிறிஸ்து நம்மை மனம் மாற்றி நம்முடைய இருயத்தைப் புதிதாக்குவதைப் போல, இந்த ஆவியானவர் வார்த்தையிலிருந்து நம்முடைய இருதயத்திற்குள் ஊடுருவிச் செல்வார். உபவாசமோ, துறவறமோ அல்லது எந்த கடுமையான சுயவெறுப்போ நம்முடைய சரீரத்தை நல்ல ஆவியின் பிறப்பிடமாக மாற்றாது. திரித்துவத்தின் இந்த தெய்வீக நபர் நம்முடைய இருதயத்தைத் திறந்து அவரை நாம் வரவேற்க வேண்டும் என்று நம்மிடம் எதிர்பார்க்கிறார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று இயேசு தம்முடைய சீடர்களுக்குச் சொன்னதை நாம் மகிழ்ச்சியோடும் நன்றியோடும் நினைவுகூருகிறோம்.

ஆண்களும் பெண்களும், வாலிபரும் வயோதிபரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வார்கள் என்று தீர்க்கதரிசியாகிய யோவேல் முன்னறிவித்திருந்தார். கிறிஸ்துவின் வாக்குத்தத்தம் யூதர்களுக்கு மட்டும் உரியதல்ல. இந்தத் தீர்க்கதரிசனம் யூதர்களுக்கு மிகப் பெரிய அற்புதமாயிருந்தது. ஏனெனில் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இது ஆணுக்கும் பெண்ணுக்கும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், அடிமைகளுக்கும் சுயாதீனருக்கும், யூதர்களுக்கும் புறவினத்து மக்களுக்கும் இடையிலுள்ள அனைத்து ஏற்றத்தாழ்வையும் நீக்குவதாயுள்ளது. இன்று இறைவனுடைய சந்தோஷத்திற்குள் யாரும் நுழையலாம். அவருடைய மகிழ்ச்சி முழு உலகத்தையும் ஆட்சி செய்கிறது. சிலுவையில் அறையப்பட்டு, கொலை செய்யப்பட்டு, உயிரோடு எழுந்தவரை விசுவாசிக்கும் மக்களுடைய நொருங்குண்ட இருதயத்தில் அந்த மகிழ்ச்சி உணரப்படுகிறது.

இறைவன் யோவேல் தீர்க்கதரிசி மூலமாகவும் அப்போஸ்தலனாகிய பேதுரு மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவது இறுதி காலத்தின் ஒரு அடையாளம் என்பதைக் கூறினார். ஆயிரக்கணக்கான வருடங்களாக இறைவன் தீயவர்களுடைய நடவடிக்கைகளைப் பொறுமையோடு சகித்துக்கொண்டு வந்தார். ஆனால் இறைவனுடைய மகனாகிய கிறிஸ்து சிலுவையிலே நம்முடைய பாவங்களை மன்னித்தார். ஆகவே எந்தத் தடையுமின்றி பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வரக்கூடியதாயிருந்தது. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறவர்கள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள், இறைவனை அறிந்துகொள்கிறார்கள், அவரைத் துதித்து, கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார்கள். இறைவனுடைய ஆவியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகிறார்கள். அந்த நியாயத்தீர்ப்பு இறுதி நாளில் வரப்போகும் ஒன்று மட்டுமல்ல. அது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட நாளிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அழியாத வாழ்வைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். இறைவனுடைய ஆவிக்குத் தங்களைத் திறந்துகொடுக்கிறவர்கள் அழியா வாழ்வை அனுபவிக்கிறார்கள். அவர்கள் இறைவனையும் அவரது விருப்பத்தையும் அறிந்துகொள்கிறார்கள். மேலும் யாருடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வாழ்கிறாரோ அவர்கள் இறைவனுடைய பிள்ளைகளாகிறார்கள்.

இந்தக் கிருபையின் நற்செய்தி அறிவிக்கப்படும்போது, இந்த முழு உலகமும் இருளடைந்து, புழுதியாகி அழிந்து போவதும் அறிவிக்கப்படுகிறது. உலக யுத்தங்களில் இரத்த ஆறு ஓடும், பூமியதிர்ச்சிகள் பூமியைப் பிளந்துபோடும், கிறிஸ்துவின் ஆவியினால் முத்திரை போடப்படாத அனைவரும் பிசாசினால் சோதிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.

அதன் பிறகு கர்த்தருடைய நாளாகிய இறுதி நாள் வரும். அப்போது கிறிஸ்து வானத்தில் மின்னல் போல பேரொளியாக மேகங்கள் மீது பிரகாசத்துடன் தோன்றுவார். வரப்போகிறவரைக் குறித்த பயத்தினால் இவ்வுலகமே நடுங்கித் தவிக்கும் என்ற உண்மை அப்போது தெளிவாகத் தெரியும். நரகத்தின் சக்திகள் தங்கள் இறுதி அழிவிற்கு முன்பாக தங்களுடைய இறுதி யுத்தத்திற்கு ஆயத்தப்படும். நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்த அறிவும் போதனையும் அந்நாளில் நடைபெறவிருக்கின்ற அற்புதங்களும் புதிய ஏற்பாட்டின் அடிப்படைப் போதனைகளாகும்.

தன்னில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருப்பவர்கள் பரலோகத்தின் வழியாகக் கடந்து வந்தவர்கள். அவர்களுடைய அழிவிற்குரிய உடலில் இறைவனுடைய உயிர் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் விண்ணப்பத்தின் ஆவியாயிருக்கிற காரணத்தினால் அவர்கள் பதில் கிடைக்கும் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களில் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லிக்கூப்பிடும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய நாவுகளில் கிறிஸ்துவின் நாமத்தை எழுதுகிறார். நம்முடைய விண்ணப்பங்களுக்கு கிறிஸ்து நிச்சயமாக பதில் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால், கிறிஸ்துவினுடைய இரத்தம் தெளித்தலோடு விண்ணப்பம் செய்கிறவர்கள் நிச்சயமாக விடுவிக்கப்படுகிறார்கள். இதுவே நம்முடைய ஆறுதலாகவும், நிச்சயமாகவும், பரிசுத்த ஆவிக்குள்ளான அச்சாரமாகவும் இருக்கிறது. இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் இறைவனுடைய கோபம் பற்றி எரியும் போது, கிறிஸ்து தன்னுடையவர்களை நிச்சயமாகப் பாதுகாப்பார்.

விண்ணப்பம்: இந்த அழிவிற்குரிய உலகத்தில் உம்முடைய பரிசுத்த ஆவியானவரை எங்களுக்கு கொடுத்திருப்பதால் உம்மை மகிமைப்படுத்துகிறோம். அவர் உம்முடைய இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்ட எங்கள் இருதயத்தில் வாழ்கிறார். எங்களுடைய செயல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் நீர் எங்களுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கின்ற அழிவில்லா வாழ்வுக்காக உம்மை மகிமைப்படுத்துகிறோம். பல நண்பர்களை உம்முடைய வல்லமையினால் நிறைத்து அவர்களுடைய செவிகளைத் திறந்தருளும். அப்பொழுது அவர்கள் உம்முடைய சத்தத்தைக் கேட்டு சந்தோஷத்தோடு உம்முடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவார்கள்.

கேள்வி:

  1. பேதுருவினுடைய பிரசங்கத்தின் முதல்பகுதியின் முக்கிய குறிப்புகள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 09:57 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)