Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 004 (Introduction to the Book)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

1. அப்போஸ்தலர் நடபடிகளுக்கான அறிமுகமும் கிறிஸ்துவின் இறுதி வாக்குத்தத்தமும் (அப்போஸ்தலர் 1:1-8)


அப்போஸ்தலர் 1:6-8
6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். 7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. 8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

சீடர்கள் இந்த இவ்வுலகத்திற்குரிய, அரசியல் ரீதியான கேள்வியைக் கேட்க இயேசுவிடம் வந்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் இன்னும் யூதர்களாக தங்கள் தேசப்பற்றைப் பற்றியும் எருசலேமில் தங்களுக்கு என்ன பங்கு கிடைக்கும் என்றும் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்திருக்கும் அரசனாகிய கிறிஸ்து, எருசலேமிலிருந்து மகிமையோடும் மகத்துவத்தோடும் அனைத்து மக்களையும் ஆளுகை செய்வார் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். இயேசு இந்தக் கேள்வியைப் புறக்கணித்துவிடவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாயிருக்கிறது. ஆனால் தெய்வீக அரசாட்சி நிச்சயமாக வரும் என்பதை அவர் உறுதிசெய்தார். ஆனாலும் பரலோக அரசு மனிதர்களுடைய கற்பனைகளின்படி நிறுவப்படாது என்றும், உடனடியாக அந்த நிகழ்வு நடந்துவிடாது என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்கு உறுதிசெய்கிறார்.

இறைவனிடம் சிறப்பான திட்டம் ஒன்றிருந்தது. உலகத்தின் முழு வரலாற்றையும் அவர் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே தம்முன் கொண்டவராக, ஒவ்வொரு கோத்திரமும் இனமும் மனந்திரும்புவதற்கும் உயிருள்ள விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் அவர் போதிய அளவு காலம் கொடுத்திருந்தார். மேலும் அவர் தம்முடைய பொறுமைக்கு காலத்தையும் எல்லையையும் குறித்திருந்தார். இந்த வரலாற்றின் திட்டவட்டமான போக்கு அழிவிற்குரிய தலைவிதியைப் போலவோ அல்லது பயங்கரமான தெய்வீக ஆணையாகவோ நமக்கு முன்பாக நிற்பதில்லை. மாறாக நம்முடைய தகப்பன் காலத்தின் போக்கை இவ்விதமாக நிர்ணயித்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவருடைய அன்பு எப்போதும் இவ்வுலகத்திற்கு நன்மையைத்தான் கொண்டு வந்திருக்கிறது என்றும் கொண்டு வருகிறது என்றும் நாம் அறிவோம். அவருடைய அன்பு காலங்களையும் தன்வசம் வைத்திருப்பதால் நாம் பயப்பட வேண்டிய தேவையே இல்லை எனலாம். நம்முடைய தகப்பன் ஆட்சியாளராகவும் உண்மையான அதிகாரியாகவும் இருக்கிறார். எந்தவித புரட்சியின் நடவடிக்கைகளோ, ஆயுதங்களின் குவியல்களோ அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. ஏனெனில் அவருடைய அரசு ஆவிக்குரிய நிலையில் மட்டுமல்ல, மகிமையோடும், வல்லமையோடும் தவறேதுமின்றி நிச்சயமாக வரும். இறைவனுடைய அதிகாரம் அன்பிலும் சத்தியத்திலும் கட்டப்பட்டிருக்கிறது, அநியாயத்திலும் அக்கறையின்மையிலும் கட்டப்படவில்லை. யார் இறைவனைத் தகப்பனாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து மகிழ்ச்சியுடையவர்களாயிருப்பார்கள்.

கிறிஸ்து தம்முடைய சீடர்களுடைய மனதில் இருந்த அனைத்து அரசியல் சிந்தனைகளையும் துடைத்தெறிந்துவிட்டு, காணக்கூடியதாக இருக்கும் பிதாவின் வாக்குறுதிக்காக அவர்கள் காத்திருக்க வேண்டும் என்று அவர்களை ஆயத்தப்படுகிறார். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறும் போது அவர்கள் “வல்லமையைப் பெற்றுக்கொள்வார்கள்” என்று கிறிஸ்து குறிப்பிடுகிறார். அன்பார்ந்த வாசகரே, நீங்கள் பலவீனமானவர் என்றும், மற்ற மனிதர்களைப் போலவே நீங்களும் இறந்து போவீர்கள் என்றும் அறிந்திருக்கிறீர்களா? இறைவனுடைய பரிசுத்தத்தோடும், மகிமையோடும், ஞானத்தோடும் ஒப்பிடும்போது நீங்கள் முட்டாள் என்றும் அசிங்கமானவர் என்றும் தீமையுள்ளவர் என்றும் அழிந்துபோகக் கூடியவர் என்றும் உங்களுக்குத் தெரியுமா? அவருடைய வல்லமை இயற்கையான சுபாவமுள்ள மனிதர்களிடத்தில் இறங்குவதில்லை. உங்கள் சொந்த பலத்தினால் உங்களை நீங்களே சீரமைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் எல்லா மனிதர்களைப் போல நீங்களும் பெலவீனர்களாகவும் பாவத்திற்கு அடிமைகளாகவும் இருக்கிறீர்கள். கிறிஸ்து தம்முடைய மறைவான அரசை நிறுவும்போது முதலாவதாக தம்முடைய சீடர்களுக்கு அவர் வல்லமையைக் கொடுக்கிறார். வல்லமை என்று கிரேக்க வார்த்தைக்கு “வெடிகுண்டு” என்று பொருள். இறைவனுடைய வல்லமை நம்முடைய கல்லான இருதயத்தை உடைத்து நொறுக்கி, இரக்கமுள்ள இருதயத்தை நமக்குக் கொடுத்து, நாம் இறைவனுக்குரிய காரியங்களைச் சிந்திக்கத்தக்கதாக நம்முடைய மனக்கடினத்தை மேற்கொள்கிறது. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு இறைவன் கொடுக்கும் தெய்வீக ஈவு அவர் உலகங்களைப் படைத்தபோது பயன்படுத்திய அதே தெய்வீக வல்லமையே ஆகும். இந்த இறைவனுடைய வல்லமையை இயேசுவில் நாம் வெளிப்படையாகக் காணக்கூடியதாயிருந்தது.

நீங்கள் இறைவனுடைய வல்லமையைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா அல்லது இன்னும் உங்கள் பாவத்தில் மரித்த நிலையிலேயே இருக்கிறீர்களா? நீங்கள் பிதாவின் அன்பில் வாழ்கிறீர்களா? உங்களை விடுவித்தவரினால் நீங்கள் அனைத்தையும் செய்கிறீர்களா? அவருடைய பெலன் உங்கள் பெலவீனத்தில் உதவி செய்கிறதா? நீதிமானின் ஊக்கமான வேண்டுதல் அதிக பெலமுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

இறைவனுடைய வல்லமை என்பது ஒரு இரகசியமல்ல. பரிசுத்த வல்லமையாகிய அவர் நித்திய நித்தியமாக இருப்பவராகவும், இறைவனுடைய பரிசுத்த திரித்துவத்தில் ஒருவராகவும், நம்முடைய ஆராதனைக்கும் ஒப்படைப்புக்கும் பாத்திரராகவும் இருக்கிறார். முழு நம்பிக்கையோடும் நன்றியறிதலோடும் நாம் இந்த தெய்வீக ஆவியானவரைத் தொழுதுகொண்டு, பிதா மற்றும் குமாரனுடைய வெளிச்சத்திலே அவரை மகிமைப்படுத்துகின்றோம். அவர் ஏழைகளாகிய நம்மில் உண்மையாகவே வாழ்ந்து, கிறிஸ்துவிலுள்ள நம்முடைய இரட்சிப்பை உறுதிசெய்து, இறைவனை அறிந்துகொள்ளும்படி நம்முடைய மனக்கண்களைத் திறந்தருளுகிறார். அவர் நம்முடைய பரலோக தகப்பன். இயற்கையான எந்த மனிதனுக்குள்ளும் இவ்விதமான தெய்வீகத் தன்மை குடிகொண்டிருப்பதில்லை. அது நமக்கு வெளியே இருந்து உள்ளே வந்து, கிறிஸ்துவை நேசிப்பவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து, அவர்களைத் தம்முடைய உயிரினாலும், அன்பினாலும், அமைதியினாலும் நிரப்புகிறது.

சத்திய ஆவியினால் வழிநடத்தப்படாத எந்த நபரும் இயேசுவைக் “கிறிஸ்து” என்று அறிக்கை செய்ய முடியாது. அவர் நம்மிலே உண்மையான விசுவாசத்தை ஏற்படுத்துகிறார். குமாரனுடைய ஆவியானவர் நம்முடைய வாய்களைத் திறந்து, பரலோக மொழியில் பேசும்படி நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். அவர் நமக்கு, “பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய அரசு வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக” என்று விண்ணப்பிக்கும்படி கற்றுக்கொடுக்கிறார். இந்த நல்ல ஆவியானவருக்கு நீங்கள் உங்களைத் திறந்துகொடுத்திருக்கிறீர்களா? அவர் வந்து உங்களை நிரப்ப விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

பெலனற்ற சீடர்கள் பரிசுத்த ஆவியினால் பெலனைப் பெற்றுக்கொண்டு இயேசுவின் தெய்வீகத் தன்மையை அறிந்துகொண்டார்கள். அவர் அவர்களில் விசுவாசத்தை உண்டுபண்ணி, அவருடைய சத்தியத்திற்குச் சாட்சியிடவும், அவருடைய சித்தத்தைச் செய்யும்படி தங்களைத் தாழ்த்தவும் அவர்களுக்கு பெலன் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவின் சாட்சிகளாக்குகிறார். நாம் நம்மையே புதுப்பித்துக்கொள்ளவோ, நம்முடைய மறுபிறப்பைக் குறித்து பெருமைகொள்ளவோ தேவையில்லை. நம்முடைய இரட்சகரும் நம்மைப் புதுப்பிப்பவருமாகிய கிறிஸ்துவை நாம் காண்பித்து, நம்முடைய பாவங்களை அவருக்கு முன்பாக அறிக்கை செய்து, பாவத்தை மன்னிக்கும் அவருடைய வல்லமைக்கு சாட்சி கொடுத்து, பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள் அனைவரும் உண்மையான இறைவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்க வேண்டும். அவர் தம்முடைய இரத்தத்தினால் நம்மைப் பரிசுத்தப்படுத்தி, தம்முடைய ஆவியினால் நம்மை பெலப்படுத்துகிறார். கர்த்தராகிய இயேசு தம்முடைய நற்செய்தியின் ஆவியானவரினால் இன்றும் பலரை மாற்றுகிறார் என்பதை நாம் விசுவாசித்து மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும். அவர் தம்முடைய வசனத்தினால் பாவமுள்ள மனிதர்களிடத்திலிருந்து தீய ஆவிகளைத் தம்முடைய வார்த்தையினால் துரத்திவிட்டு, உடைந்துபோன இருதயங்களில் தம்முடைய அரசைக் கட்டுகிறார். “ஷாஹித்” என்ற அரபிய வார்த்தை “சாட்சி” என்பதையும் “இரத்த சாட்சி” என்பதையும் குறிக்கும் வார்த்தையாகும். இந்த உலகத்தின் ஆவி நமக்கு எதிராக எழுந்து வருமானால் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அது ஏற்கனவே எழுந்து நம்முடைய கர்த்தரை சிலுவையில் அறைந்திருக்கிறது.

பரிசுத்த ஆவியானவர் எருசலேமில் எழுந்தருள ஆரம்பித்தார். அது நெருப்பைப் போல யூதேயாவிற்குப் பரவி, சமாரியாவைச் சென்றடைந்து, அந்தியோகியாவிற்கு முன்னேறி, சின்ன ஆசியா முழுவதும் பரவியது. அதே வேளையில் அது வடக்கு ஆப்பிரிக்காவுக்கும், எத்தியோப்பியாவிற்கும், ஈராக்குக்கும் பரவி, கிரேக்கத்தில் நுழைந்து, தலைநகரமாகிய ரோமாபுரியைக் கைப்பற்றியது. இறைவனுடைய அன்பின் தீவிரமான பரவுதலை நற்செய்தியாளனாகிய லூக்கா உணர்ந்துகொண்டவராக அதைத் தன்னுடைய நூலில் பதிவு செய்திருக்கிறார். அன்புள்ள விசுவாசியே, இன்று நற்செய்தி உங்கள் கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் உங்களைப் பார்த்து: “இறைவனுடைய மகனுடைய அன்பை உங்கள் சுற்றுப்புறத்தில் எங்கும் ஒளிரச் செய்யுங்கள். ஏனெனில் நீங்களே உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள்” என்று சொல்கிறோம். ஆனால் முதலில் உங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இறைவனுடைய வல்லமையைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறாரா? இல்லையென்றால், பிதாவினுடைய வாக்குத்தத்தம் உங்களில் நிறைவேறும்படி காத்துக்கொண்டிருங்கள். விண்ணப்பத்தோடு கேளுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். நற்செய்தியை வாசிக்கும்போது பிதாவின் வாக்குறுதியை நீங்கள் கண்டுகொள்வீர்கள். அது உங்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்படும்.

விண்ணப்பம்: பிதாவே, உம்முடைய மகனுடைய மரணத்தின் மூலமாக நீர் எங்களை உம்முடைய பிள்ளைகளாக்கினதற்காக நாங்கள் உம்மை நேசித்துத் தொழுதுகொள்கிறோம். உம்முடைய பரிசுத்த ஆவியானவரினால் உம்முடைய மகிமையை நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். நீர் எங்கள் பிதாவாயிருப்பதால் உம்முடைய அன்பில் எங்களைக் காத்துக்கொள்ளும். எங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினால் ஒளிகொடுக்கும்படி, எங்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பும்படியாக, நாங்கள் நன்றியோடு எங்களை ஒப்புக்கொடுக்கிறோம்.

கேள்வி:

  1. பரிசுத்த ஆவியானவர் யார்? அவருடைய திட்டம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 09:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)