Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 002 (Introduction to the Book)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)

1. அப்போஸ்தலர் நடபடிகளுக்கான அறிமுகமும் கிறிஸ்துவின் இறுதி வாக்குத்தத்தமும் (அப்போஸ்தலர் 1:1-8)


அப்போஸ்தலர் 1:1-2
1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு, 2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.

அநேக மனிதர்கள் அநேக நூல்களை எழுதியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் ஒன்றாக அடுக்கி வைத்தால் மிகவும் பெரிய உயர்ந்த மலைபோல அவை குவிந்துவிடும். ஒரு நாளில் அவை அனைத்தும் இறைவனுடைய கோபத்தின் சுவாலையினால் சுட்டெரிக்கப்படும், ஏனெனில் மனிதர்களுடைய வார்த்தைகள் மதிப்பற்றவைகளும், பெருமையுள்ளவைகளும், வெறுமையானவைகளுமாகவே இருக்கின்றன.

ஆனால் மருத்துவனாகிய லூக்கா எழுதிய இரண்டு நூல்களும் நியாயத்தீர்ப்பு நாளில் சூரியனைவிட அதிகமாக ஒளிரும். அவைகள் ஒருபோதும் அழிந்து போகாமல் இறைவனுடைய சிம்மாசனத்திற்கு முன்பாக எழுந்தருளும். நற்செய்தியாளனாகிய லூக்கா தன்னுடைய நற்செய்தி நூலில் கிறிஸ்துவின் வார்த்தைகளையும் செய்கைகளையும் விளக்கியிருக்கிறார். கிறிஸ்துவின் வார்த்தைகளை எழுதுவதற்கு முன்பாகவே லூக்கா அவருடைய செயல்களைப் பற்றி எழுதியிருக்கிறார். காரணம் கிறிஸ்து போதகராக மட்டும் இவ்வுலகத்திற்கு வராமல் இந்த முழு உலகத்தின் இரட்சகராகவும் வந்தார். நற்செய்தியாளன் அவரை மகிமைப்படுத்த விரும்பினார். இயேசுவின் முன்பு பாவிகள் எவ்வாறு தங்கள் பாவங்களை உணர்ந்து அறிக்கையிட்டு, கர்த்தருடைய கிருபையின் மேல் உள்ள விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டார்கள் என்பதை அவர் காண்பித்திருக்கிறார். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட அந்தத் திருடனும் அவரோடு பரதீசுக்குச் சென்றபோது இதையே அனுபவித்தார். லூக்காவின் நற்செய்தி நூல் மாபெரும் மகிழ்ச்சியின் நூலாகும். மாட்டுத் தொழுவத்தில் கிறிஸ்து குழந்தையாகப் பிறந்தபோது, இந்த மகிழ்ச்சியான செய்தியை ஒரு வானதூதன் வந்து அறிவித்தான். இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவும் கர்த்தர் தாமே மனுவுருவில் தோன்றினார். லூக்காவினுடைய இந்த நற்செய்தியினால் அநேக மக்கள் விடுதலையைப் பெற்றிருக்கிறார்கள் என்று நாம் இன்று இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த நற்செய்தி நூலின் எழுத்துக்களிலிருந்து விசுவாசிகளுடைய சிந்தைக்குள்ளும் இருதயத்திற்குள்ளும் முடிவற்ற வாழ்வின் வல்லமை பாய்ந்தோடுகிறது.

ரோம அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகிய தியோப்பிலு கிறிஸ்து தரும் இந்த விடுதலையின் அனுபவத்தைப் பெற்றிருந்தார். அதனால்தான் அவர் நாசரேத்து இயேசுவினுடைய வாழ்வைக் குறித்த விவரங்களைச் சேகரித்து ரோமப் பேரரசின் காலத்தில் நடைபெற்ற விடுதலையின் நற்செய்தியைக் குறித்த துல்லியமான வரலாற்றை எழுதும்படி தன்னுடைய நண்பரும் மருத்துவருமாகிய லூக்காவினிடத்தில் பணித்தார். அந்த ரோம ஆளுநர் வெறும் உணர்வுபூர்வமான காரியங்களோடு திருப்தியடையாமல் தன்னுடைய உயிருள்ள விசுவாசத்தின் வரலாற்று ஆதாரத்தை அறிந்துகொள்ள விரும்பினார். அந்த அதிகாரி தன்னுடைய ஆன்மீக வாழ்வில் நிலைபெற்று, ரோமப் பேரரசின் ஒரு முக்கியமான சேவகனாக இருக்கும் அவர் ஒரு விசுவாசியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கல்வி அறிவுடையவராயிருந்த லூக்கா இந்த இரண்டு நூல்களையும் அவருக்கு எழுதுகிறார். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் நம்முடைய உலகத்திற்கு உயிருள்ளவராகிய இயேசு கிறிஸ்துவாலே அன்றி வேறெங்கும் நம்பிக்கை இல்லை என்று லூக்கா அவருக்குச் சாட்சி கொடுத்தார்.

நம்முடைய உலகத்தில் இருக்கும் நாடுகள் அனைத்தும் அழிந்து போகும். தங்கள் அறிவைக் குறித்த ஆதாரங்களை முன்வைத்தாலும் அனைத்துத் தத்துவ ஞானிகளும் பயனற்றவர்களே. மாபெரும் சிந்தனையாளர்களுடைய அறிவையோ, பெரும் பலம் கொண்ட இராணுவத்தையோ நம்பி இறைவன் தம்முடைய அரசைக் கட்டாமல் சாதாரண மனிதர்களாக இருந்த கல்வி அறிவற்ற மீனவர்களை அப்போஸ்தலராக அழைத்து, அவர்கள் மூலம் தம்முடைய அரசை நிறுவினார். எளிமையானவர்களையும் சமூகத்தில் தாழ்வான நிலையில் உள்ளவர்களையும் தெரிந்துகொண்டதன் மூலம் இவ்வுலகத்தில் மேன்மையானவர்களையும், பெலமுள்ளவர்களையும், புத்திமான்களையும் இறைவன் புறக்கணிக்கிறார். பெருமையுள்ளவர்களுக்குக் கர்த்தர் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ அவர் கிருபை அளிக்கிறார்.

பெலனற்றவர்களுக்கு பெலன்கொடுத்து, சோர்ந்து போகிறவர்களுக்கு வாழ்வளிப்பதே பரிசுத்த ஆவியின் செயல்முறையாகும். கிறிஸ்து ஒருபோதும் சுயமாகச் செயல்படுவதில்லை. அவர் எப்போதும் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் பிதாவின் சித்தத்தையே உறுதியாக நிறைவேற்றினார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கிடையிலான முழுமையான ஐக்கியத்தை நம்முடைய அறிவினால் புரிந்துகொள்ள முடியாது. தொலைந்து போன இந்த உலகத்தில் தம்முடைய திருச்சபையைக் கட்ட வேண்டும் என்றும் இவ்வுலகில் இறந்து கிடக்கும் மக்கள் நடுவில் பரலோகத்தை பரப்ப வேண்டும் என்றும் பரிசுத்த திரித்துவம் நித்தியத்திலேயே தீர்மானித்துவிட்டது. கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொண்டு, அழைத்து, பயிற்சியளித்து, நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி கட்டளைகொடுத்து அனுப்பியதிலிருந்து இறைவன் தரும் விடுதலையின் வரலாறு ஆரம்பமாகிறது. இந்த சாதாரண மீனவர்களில் இறைவனுடைய அன்பின் வல்லமை தங்கியிருந்தது என்பதை அறிந்துகொண்ட லூக்கா கர்த்தர் தெரிந்துகொண்ட இந்த மனிதர்களுடைய செயல்பாட்டை விளக்கினார். அவைகள்தான் உலகத்தில் நடைபெற்ற புதிய அற்புதங்களாகவும் மேன்மையான எதிர்காலத்தின் ஒரே நம்பிக்கையாகவும் இருக்கின்றன.

இந்த அற்புதம் நடைபெற வழிசெய்யும்படி, உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம்முடைய சீடர்களோடு அரசனாக இருந்து அவர்களை ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அரசாகப் பரப்பும் செயலில் ஈடுபடவில்லை. அதற்கு மாறாக அவர் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனார். தம்முடைய சீடர்கள் தவறுசெய்து விடுவார்களோ என்று அவர் பயப்படவில்லை. காரணம் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் வாழ்ந்து அவர்கள் பணியை முடிக்கும்படி அவர்களை வழிநடத்துவார் என்று அவர் அறிந்திருந்தார். அவர் எந்தக் கவலையும் பயமும் இல்லாமல் பரலோகத்திற்கு எழுந்தருளிப் போனார். அவர் தம்முடைய பிதாவினிடத்திற்கு எழுந்தருளி, அவருடைய வலதுபக்கத்தில் வீற்றிருந்து, அவரோடு ஆளுகை செய்து, அவருடைய பரிசுத்த திருச்சபையை இந்த தீமைநிறைந்த உலகத்தில் கட்டிவருகிறார். அதற்காக அவர் இறைவனுக்கு எதிரான சக்திகளை மேற்கொண்டு, இலட்சக்கணக்கான மக்களை விடுதலை செய்கிறார். மறைவாக இருக்கும் இறைவனுடைய அரசு இந்த உலகத்தில் வளர்ச்சியடைவதைக் கண்டு லூக்கா பெரிதும் ஆச்சரியப்படுகிறார். அவர் தம்முடைய இரண்டாவது புத்தகத்தில், எருசலேமில் தொடங்கி ரோமாபுரிவரை அது எவ்விதமாகப் பரவியது என்பதை விளக்குகிறார்.

விண்ணப்பம்: உயிருள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உம்மை நாங்கள் தொழுதுகொள்கிறோம். இன்றும் உம்முடைய திருச்சபையில் செயல்படும் உம்முடைய மறைவான மகிமைக்காகவும் உமது அன்புக்காகவும் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். எங்களிடத்திலும் வந்தடைந்த உம்முடைய இரக்கத்திற்காக உமக்கு நன்றி. மதிப்பிற்குரிய அப்போஸ்தலருடைய நடபடிகளில் உம்முடைய நடபடிகளைக் காண எங்களுக்குத் துணை செய்யும். அவர்களுடைய போதனைகள் எங்களுடைய வாழ்வில் செயல்படுத்தப்படுவதைக் கண்டு நாங்கள் உம்மை அதிகமாக மகிமைப்படுத்த விரும்புகிறோம்.

கேள்வி:

  1. லூக்காவினுடைய முதல் நூலில் அவர் என்ன எழுதினார்? அவருடைய இரண்டாவது நூலின் நோக்கமும் கருப்பொருளும் யாது?

www.Waters-of-Life.net

Page last modified on May 29, 2013, at 09:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)