Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 112 (Christ's word to his mother; The consummation)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)
4. சிலுவையும் இயேசுவின் மரணமும் (யோவான் 19:16b-42)

இ) தனது தாயுடன் கிறிஸ்துவின் வார்த்தை (யோவான் 19:25-27)


யோவான் 19:25-27
25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனாமரியாளும் நின்று கொண்டிருந்தார்கள்.26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

முழு உலகத்தையும் மன்னிக்கிற சிலுவையில் இயேசு கூறிய முதலாவது வார்த்தையை யோவான் பதிவு செய்யவில்லை. யூதர்களின் தொடர்ச்சியான பரியாசம் குறிப்பிடப்படவில்லை. வலது பக்கத்தில் இருந்த கள்வனை இயேசு மன்னித்தது இடம் பெறவில்லை. யோவான் இதை எழுதிய போது, இந்தக் காரியங்கள் எல்லாம் திருச்சபையில் நன்கு அறியப்பட்டவையாக இருந்தன. பிதாவின் மன்னிப்பிற்காக இயேசு வேண்டுதல் செய்யும்போது ஆசாரியர்கள் அச் சத்தத்தை கேட்காமல் சிலுவையை விட்டு விலகி சென்றிருந்தார்கள். பஸ்கா பண்டிகைக்காக ஆடுகளைப் பலியிட எருசலேம் நோக்கி ஜனக்கூட்டமும் விரைந்தது. ஆயத்தப்படும் நேரம் மிகவும் குறைவாய் இருந்தது. மிகப்பெரிய அந்த தேசியப் பண்டிகைக்காக, மதச் சடங்குகளை நிறைவேற்றும் படி மதத் தலைவர்களும் சென்றுவிட்டார்கள். நகர சுவர்கள் பக்கம் இருந்து எக்காள சத்தம் தொனித்தது, தேவாலயத்தில் துதிகளின் சத்தம் எதிரொலித்தது. எருசலேமிற்கு வெளியே இறைவனின் ஆட்டுக்குட்டியானவர் சபிக்கப்பட்ட மரத்தில் கைவிடப்பட்டவராய் அசட்டைபண்ணப்பட்டவராய் தொங்கினார். புற இனத்து ரோம காவலாளிகள் சிலுவைகளில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று பேரை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்நேரத்தில் சில பெண்கள் மெதுவாக சிலுவையை நோக்கி வந்தார்கள். அமைதியாக அங்கு நின்றார்கள். நடந்த நிகழ்ச்சிகள் அவர்களுடைய மனங்களை குழப்பம் அடையச் செய்தது. சர்வ வல்லமையுள்ளவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் மனம் மிகுந்த வேதனையில் இருந்தது. ஆறுதலின் வார்த்தைகள் அங்கு காணப்படவில்லை. இருதயங்கள் ஜெபிப்பதற்கு கூட சிரமப்பட்டன. சிலர் சங்கீதங்களின் சில பகுதிகளை முனுமுனுத்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவரது தாயின் வேதனை நிறைந்த அழுகையைக் கேட்டார். அவர் நேசித்த சீஷன் யோவானின் கண்ணீரைப் புரிந்துகொண்டார். அவர் தனது நிலையை, தனது மரணத்தின் அவமானத்தைக் கூட அதிகமாக சிந்திக்கவில்லை. திடீரென்று அவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டார்கள் “ஸ்திரீயே, அதோ உன் மகன்”

கிறிஸ்துவின் அன்பு மிகவும் உயர்ந்தது. உலகத்தாரின் பாவம் போக்கும் பலியாக, தன்னுடைய துன்பத்தின் மத்தியிலும் அவர் நேசிக்கப்பட்டவர்களின் நலனைக் குறித்து அக்கறை கொண்டார். கன்னிகையைக் குறித்ததான சிமியோனின் முன்னுரைக்கப்பட்ட வார்த்தைகள் நிறைவேறின. உனது ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும். (லூக்கா 2:35)

அவருடைய தாய்க்கு அவர் பணத்தையோ, வீட்டையோ வழங்க முடியவில்லை.அவர் சீஷர்களுக்கு பொழிந்தருளின தன்னுடைய அன்பை அவளுக்கு வழங்கினார். யோவான் இயேசுவின் தாயுடன் வந்தார் (மத்தேயு 27:56). இருப்பினும் யோவான் தனது பெயரையோ, கன்னிகையின் பெயரையோ குறிப்பிடவில்லை. கிறிஸ்து மகிமைப்படும் இந்நேரத்தில், அவருக்கு செலுத்த வேண்டிய கனத்தை திசை திருப்ப யோவான் விரும்பவில்லை. அவர் யோவானை அழைத்தபோது தான் அந்த சீஷன் சிலுவைக்கு வெகு அருகில் வந்தான். தனது தாயை அவனது பராமரிப்பின் கீழ் இயேசு ஒப்புவித்தார். அவன் மரியாளை அணைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு கூட்டிச் சென்றான்.

இந்த அன்பின் செயலை மற்ற பெண்கள் கண்டார்கள். அவர்களில் ஒருவளை ஆண்டவர் ஏழு பொல்லாத ஆவிகளிடம் இருந்து விடுவித்திருந்தார். அவள் மகதலேனா மரியாள் ஆவாள். அவள் தனது ஆத்துமாவில் இயேசுவின் வெற்றியுள்ள வல்லமையை அனுபவித்திருந்தாள். அவள் இரட்சகரை நேசித்தாள், அவரைப் பின்பற்றினாள்.


ஈ)முழுமை (யோவான் 19:28-30)


யோவான் 19:28-29
28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.

மிகப் பெரிய நிகழ்வை ஒரு சில வார்த்தைகளில் சொல்லக்கூடிய திறமையை நற்செய்தியாளர் யோவான் பெற்றிருந்தார். பூமியெங்கும் சூழ்ந்த அந்தகாரத்தைப் பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை. நமது பாவங்களுக்கான இறைவனின் கோபாக்கினையில் கிறிஸ்துவின் கதறலை நாம் கேட்க முடிகிறதில்லை. கடைசி மூன்று மணி நேரத்தில் அவருடைய மரணப் போராட்டத்தின் முடிவில் அந்த மரணத்தை வெளிப்படுத்துவதை யோவான் உணர்ந்தார். மரணம் இயேசுவை விழுங்குவதாக யோவான் குறிப்பிடவில்லை. ஆனால் இயேசு அதை மனப்பூர்வமாய் ஏற்றுக் கொண்டார். மீட்பின் உலகளாவிய பணியை முடித்ததில் அவருடைய ஆத்துமா சோர்வுற்றிருந்தது. எல்லோருக்கும் பூரணமான இரட்சிப்பு கிடைப்பதை இயேசு கண்டார். மில்லியன் கணக்கான பாவிகளுக்கு, அவர்களது குற்றத்திலிருந்து விடுதலையை அவருடைய மரணம் தந்தது. அவர் அறுவடையைக் கண்டார். அவருடைய கண் முன்பு அவரது மரணத்தின் கனி காணப்பட்டது.

இந்நேரத்தில் அவரது உதடுகள் வழியே பெருமூச்சு வெளிப்பட்டது. “நான் தாகமாய் இருக்கிறேன்.” இவர் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர். ஆக்சிஜன், ஹைட்ரஜன் இணைந்திருக்கும் தண்ணீரின் மீது நடந்தவர் இப்போது தாகமாயிருக்கிறார். பிதாவானவர் தனது முகத்தை குமாரனிடமிருந்து மறைத்திருந்தார். அன்பின் உருவானவர் இப்போது பிதாவின் அன்பிற்காக ஏங்குகிறார். சரீரமும், ஆத்துமாவும் புத்துணர்ச்சியை பெற முடியாத, மனிதன் தாகத்துடன் இருக்கிற நரகத்தின் காட்சியை இது வெளிப்படுத்துகிறது. நரகத்தில் நித்திய அக்கினியில் தாகத்துடன் இருந்த ஒரு ஐசுவரியவானைக் குறித்து கிறிஸ்து முன்பு சொல்லியிருந்தார். வறண்டு போன இவனது தொண்டையைக் குளிரப்பண்ணுவதற்காக லாசரு தனது விரலின் நுனியில் தண்ணீரைத் தொட்டுவைக்கும்படி அனுப்புமாறு ஆபிரகாமிடம் வேண்டிக் கொண்டான். உண்மையான தாகத்தை அனுபவித்த உண்மையான மனிதனாக இயேசு இருந்தார். ஆனால் இரட்சிப்பின் பணி நிறைவேறும் வரைக்கும், அவர் அதை வெளிக்காட்டவில்லை. சங்கீதம் 22:13-18-ல் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு முன்னுரைக்கப்பட்ட அவருடைய மீட்பின் பணியைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தினார். சங்கீதம்69:21-ல் கசப்பான காடியைக் குடிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. சேவகர்கள் இயேசுவுக்கு திராட்சரசக் காடியை அல்லது தண்ணீரில் கலக்கப்பட்டதைக் குடிக்கும்படி கொடுத்தார்களா என்பது நமக்குத் தெரியாது. அது வெறுப்புடன் அல்லது புலம்பலில் கொடுக்கப்பட்டது. அது தூய்மையான தண்ணீர் அல்ல என்பதை நாம் அறிகிறோம். இறைவனின் மகனாகிய, மானிடர் இயேசு இவ்விதம் உதவியற்றவராக இருந்தார்.

யோவான் 19:30
30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

இயேசு கோபாக்கினையின் கசப்பான காடியை ருசித்த பின்பு அவர் வெற்றியின் வார்த்தையை முழங்கினார். “எல்லாம் முடிந்தது” இந்த வெற்றியின் சப்தத்திற்கு ஒரு நாள் முன்பு, குமாரன் பிதாவிடம் தன்னை மகிமைப்படுத்தும்படி வேண்டினார். நம்மை மீட்கும் பொருளாக சிலுவையில் தொங்கிய இயேசுவின் மூலம் பிதாவானவர் மகிமைப்படுத்தப்பட்டார். இந்த விண்ணப்பத்திற்கான பதில் கொடுக்கப்பட்டதை இயேசு விசுவாசத்தினால் அறிக்கை செய்தார். பிதாவானவர் அவருக்கு கொடுத்த பணியை அவர் நிறைவேற்றி முடித்தார். (யோவான்17:1,4)

ஆ! சிலுவையில் தொங்கிய இயேசுவின் தூய்மை ஒப்பற்றது. வெறுப்பின் வார்த்தைகள் அவர் உதடுகளில் இருந்து வெளிவரவில்லை. இரக்கத்தின் பெருமூச்சோ அல்லது அவமதிக்கும் குரலோ அங்கு வெளிப்படவில்லை. ஆனால் அவர் இறைவனின் அன்பைப் பற்றிக்கொண்டு, தனது பகைவர்களை மன்னித்தார். நமது நிமித்தம் அவர் பகைவன் போல சிலுவையில் காணப்பட்டார். மீட்பின் பணியை நிறைவேற்றி முடித்ததை இயேசு அறிந்தார். பாடுகளின் மூலம் நமது இரட்சிப்பின் அதிபதியை இறைவன் பரிபூரணப்படுத்தினார். திரியேக இறைவனின் அன்பின் ஆழங்கள் மற்றும் உயரங்கள் எவராலும் அளவிடப்பட முடியாதவை. பழுதற்ற, உயிருள்ள பலியாக, நித்திய ஆவியானவர் மூலம் இறைவனுக்கு தன்னைத்தானே குமாரன் ஒப்புக்கொடுத்தார். (எபிரெயர்9:14) கிறிஸ்துவின் இந்த இறுதி வார்த்தையின் போது இரட்சிப்பு முழுமையாய் இருந்தது, பூரணமாய் இருந்தது. நம்முடைய பங்களிப்பு, நமது நற்செயல்கள், நமது விண்ணப்பங்கள், நமது நீதியை வெளிப்படுத்தும். பரிசுத்தமாகுதல் அல்லது நமது வாழ்க்கையில் வெளிப்படும் பரிசுத்தம் இவை எதுவும் இரட்சிப்பைத் தராது. எல்லோருக்காகவும் இறைவனின் குமாரன் இதை ஒரே தரம் செய்திருக்கிறார். அவருடைய மரணத்தின் மூலம் ஒரு புதிய யுகம் உதிக்கிறது. சமாதானம் ஆளுகை செய்கிறது, ஏனெனில் பரலோகில் உள்ள பிதாவுடன் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் நம்மை ஒப்புரவாக்கியிருக்கிறார். விசுவாசிப்பவன் எவனோ அவன் நீதிமானாக்கப்படுகிறான். இறுதியான, தெய்வீகமான இயேசுவின் வார்த்தைகளின் விளக்கவுரைகளாக நிரூபங்கள் இருக்கின்றன. “எல்லாம் முடிந்தது”.

இறுதியாக மகிமையில், மகத்துவத்தில் இயேசு தனது தலையை சாய்த்தார். அவரை நேசித்த பிதாவின் கைகளில் தனது ஜீவனை ஒப்புக்கொடுத்தார். இந்த அன்பு அவரை கிருபையின் சிங்காசனத்திற்கு கொண்டு சென்றது. இன்று இயேசு பிதாவின் வலது பாரிசத்தில், அவருடன் ஒன்றாகி வீற்றிருக்கிறார்.

விண்ணப்பம்: ஓ பரிசுத்தமுள்ள உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த ஆட்டுக்குட்டியானவரே: நீர் வல்லமை, ஐசுவரியம், ஞானம், பலம், கனம், மகிமை, ஆசீர்வாதம் அனைத்தையும் பெற்றுக்கொள்ள பாத்திரர். எனது வாழ்க்கையையும் பெற்றுக்கொள்ள நீரே பாத்திரர் சிலுவையில் உயர்த்தப்பட்ட உம்மை, தலையை உயர்த்தி நோக்கிப் பார்க்கிறேன். எனது பாவங்களுக்காக மன்னிப்பை உம்மிடத்தில் வேண்டுகிறேன். உம்மை நம்புகிறேன், உமது கிருபையால், உமது இரத்தத்தால் என்னை பரிசுத்தப்படுத்தும்.

கேள்வி:

  1. இயேசுவின் மூன்று வார்த்தைகள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:21 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)