Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 109 (The choice; The flogging of Jesus; Pilate awed by Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)
3. ரோம ஆளுநர் முன்பு குடிமகனுக்குரிய விசாரனை (யோவான் 18:28 – 19:16)

ஆ) இயேசு மற்றும் பரபாஸ் இருவரில் ஒருவரை தெரிந்தெடுத்தல் (யோவான் 18:39-40)


யோவான் 18:39-40
39 பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.40 அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.

இயேசு உண்மையுள்ளவர் என்றும் ஆபத்து விளைவிக்காதவர் என்றும் பிலாத்து உணர்ந்து கொண்டான். அவன் வெளியே காத்துக்கொண்டிருந்த யூதர்களிடம் போனான். குற்றம் சாட்டப்பட்டவரிடம் எந்த குற்றமும் இல்லை என்பதை வெளிப்படையாக அறிக்கையிட்டான். நான்கு நற்செய்தி நூல்களும் மத சட்டம் மற்றும் தேச சட்டத்தின்படி இயேசு பாவமற்றவர் என்பதை நிரூபிக்கிறது. இயேசுவின் மீது எந்த குற்றச்சாட்டையும் ஒரு ஆளுநராக அவனால் குறிப்பிட முடியவில்லை. ஆகவே அந்த ஆளுநர் இயேசு குற்றமற்றவர் என்பதை ஏற்றுக்கொண்டார்.

பிலாத்து இந்த அபூர்வ நபரை குற்றம்சாட்டுவதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள விரும்பினார். ஆனாலும் யூதர்களை பிரியப்படுத்த ஆர்வம் கொண்டார். பண்டிகைக் காலத்தில் ஏதேனும் ஒரு குற்றவாளியை மன்னித்து விடுதலை செய்யும் வழக்கம் இருந்ததை அவன் அறிவித்தான். இயேசுவை யூதருடைய ராஜா என்று கேலியாக அறிவித்து, அதன் மூலம் பிரதான ஆசாரியனை அவன் சாந்தப்படுத்த முயற்சித்தான். பிலாத்து அவரை விடுவிப்பான் என்றால், இயேசு தனது உரிமை கோருதலை இழந்துவிடுவார். (இவ்விதம் பிலாத்து வாதிட்டான்) ஏனெனில் இயேசு ரோம அடிமைத்தனத்தில் இருந்து தனது மக்களை விடுவிக்கவில்லை. எப்படி இருப்பினும் “யூதருடைய ராஜா” என்ற கூற்றில் ஆசாரியர்கள் மற்றும் மக்கள் தீவிர நம்பிக்கையுடன் இருந்தார்கள். அவர்கள் ஒரு இராணுவ கதா நாயகரை எதிர்பார்த்தார்கள். ஆகவே அவர்கள் பரபாஸ் என்ற பெருங்குற்றவாளியை தெரிந்தெடுத்தார்கள். இறைவனின் பரிசுத்தமான ஒருவருக்கு பதிலாக பாவம் நிறைந்த ஒரு மனிதனை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள்.

ஆலோசனை சங்கம் இயேசுவுக்கு முரண்பட்டு எதிர்த்து நின்றது. ஜனங்களும் அவரைப் பரியாசம் பண்ணினார்கள். தாழ்மை மற்றும் படைபலம் இல்லாத உண்மையின் பக்கம் நீ தரித்து நிற்கிறாயா? கலகம் மற்றும் வஞ்சகத்தை சார்ந்து நின்ற சட்டவாதிகளை நீ விரும்புகிறாயா? இரக்கத்தையும், சத்தியத்தையும் விட்டுவிடுவாயா?


இ) குற்றம் சாட்டியவர்கள் முன்பு இயேசு வாரினால் அடிக்கப்படுதல் (யோவான் 19:1-5)


யோவான் 19:1-3
1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். 2 போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:3 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.

பிலாத்து தனது பதவியைப் பயன்படுத்தி இயேசுவை விடுவிக்கவும், அவரை குற்றம் சாட்டியவர்களை கைது செய்யவும் முடியும். ஆனால் அது நடைபெறவில்லை. அவன் உண்மையை திரித்தான். அவன் ஒத்துபோக முயற்சித்தான். ஆகவே இயேசுவை வாரினால் அடிப்பிக்கக் கட்டளையிட்டான. அத்தண்டனை திகிலூட்டக்கூடியதாக மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. வாரின் நுனியில் எலும்புத்துகள்கள் மற்றும் ஈயக் குண்டுகள் பதித்திருக்கும். அவைகள் தோலைப் பிய்த்துவிடும். சேவகர்கள் இயேசுவை வெறும் முதுகுடன் தூணில் கட்டி, மூர்க்கத்தனமாக அடிக்க ஆரம்பித்தார்கள். அவரது தோள், சதை கிழிந்து, சொல்லொண்ணா வேதனையை அவருக்குத் தந்தது. இந்த சித்ரவதையின் போது அநேகர் இறந்து விடுவார்கள். நமது குற்றமில்லாத ஆண்டவர் சரீரத்திலும், ஆத்துமாவிலும் மிகுந்த வேதனையுற்றார்.

இயேசுவின் கிழிக்கப்பட்ட சரீரத்தைக் கொண்டுவந்து, சேவகர்கள் பரியாசம் பண்ணத் தொடங்கினார்கள். இந்த சேவகர்கள் யூத எல்லைப் பகுதிகளில் பயத்துடன் வாழ்ந்து வந்தார்கள். இரவு நேரத்தில் அணிவகுப்பு செய்ய அஞ்சியவர்கள் ஆவர். இப்பொழுது பழிவாங்கும் தருணமாக யூதரின் ராஜா என்று சிலரால் அழைக்கப்பட்ட இவரை துன்புறுத்தினார்கள். இந்த அமைதியற்ற மக்கள் மீது கொண்டிருந்த எல்லா வன்மமும் அவர் மீது ஊற்றப்பட்டது. அவர்களில் ஒருவன் ஓடி, முட்களை எடுத்து, கிறிஸ்துவின் தலையில் அதை கிரீடமாக சூட்டினான். முட்களினால் ஆன கிரீடத்தை அழுத்துவதன் மூலம் இரத்தம் வழிந்தோடியது. மற்றவர்கள் அதிகாரியின் வசம் இருந்த கிழிந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவரைச் சுற்றிக் கட்டினார்கள். காயங்களிலிருந்து வெளியேறுகிற இரத்தம் வெளியே தெரியாத வண்ணம் செந்நிற சாய உடையுடன், அவருடைய இரத்தம் கலந்தது. மேலும் அவர் உதைக்கப்பட்டார், மூர்க்கத்தனமாக குத்தப்பட்டார். சிலர் அவருடைய முடிசூட்டு விழாவிற்கு ஆயத்தமாக, அவரை பணிந்து வணங்கினார்கள். இந்தப் படை வீரர்கள் வேறுபட்ட ஜரோப்பிய நாடுகளை பிரதிபலித்தார்கள். பல்வேறு உலக இன மக்கள் இறைவனின் ஆட்டுக்குட்டியை பரியாசம் மற்றும் தூஷணம் செய்தார்கள்.

யோவான் 19:4-5
4 பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.5 இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.

இயேசுவின் வழக்கைப் பார்த்த பிலாத்து அவர் நிரபராதி என்று கண்டு கொண்டான். மூன்றாவது முறையாக அவன் வெளியே சென்று யூதத் தலைவர்களிடம் மறுபடியும் அறிக்கை செய்தான். “நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். “அவன் வஞ்சகத்தை மறைக்கவும், சத்தியத்தை நிலை நாட்டவும் முயற்சித்தான். இயேசுவை வாரினால் அடிப்பட்ட அடையாளங்கள், காயங்களுடன், அவன் கொண்டுவந்தான். முட்கிரீடம் சூட்டப்பட்ட அவர் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவருடைய தோள்களில் இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்ட கருஞ்சிவப்பு நிற ஆடை இருந்தது.

உலக பாவத்தை சுமந்த இறைவனின் ஆட்டுக்குட்டியைப் பற்றிய படத்தை உங்களால் காண முடிகிறதா? அவரது பொறுமையில் காணப்பட்ட ஒப்பிட முடியாத அவரது அன்பின் காரணமாக அவரது தாழ்ச்சி அவருடைய உயர்வாக இருந்தது. அவர் கிழக்கு முதல் மேற்கு வரை உள்ள மக்களை பிரதிபலித்த பரியாசக் கூட்டம் முன் நின்றார். அவர் மட்டுப்படுத்தப்பட்டார், முட்கிரீடம் சூட்டப்பட்டார். எல்லாப் பாவங்களையும் பரிகரிக்கும் இரத்தத்தை உடைய முட் கிரீடத்துடன் ஒப்பிடும்போது ஜொலிக்கும் மாணிக்கங்களை உடைய எல்லா உலகக் கிரீடங்களும் மதிப்பற்றவையாக இருக்கின்றன.

கடினமான மனிதர்கள் முன்பு பிலாத்து இக் காட்சியினால் அசைக்கப்பட்டான். இயேசுவின் முகத்தில் வெறுப்பின் அடையாளம் இல்லை. அவரது உதடுகள் சபிக்கவில்லை. அவர் மௌனமாக அவரது பிதாவிடம் விண்ணப்பம் பண்ணினார். தனது எதிரிகளை ஆசீர்வதித்தார். தன்னைத் திட்டியவர்களின் பாவங்களை சுமந்தார். ஆளுநர் வலிமையான வார்த்தைகளை உச்சரித்தார், “இதோ இந்த மனிதன்” அவன் இந்த மனிதனுடைய மகத்துவத்தையும், கனத்தையும் உணர்ந்தான். அவன் கிறிஸ்துவைக் குறித்து சொல்லியது என்னவென்றால், “இறைவனுடைய சாயலை உடைய இவர் தனித்துவம் மிக்க மனிதன், “சாகும் ஆபத்தில் இருந்த நேரத்திலும் அவரது இரக்கம் வெளிப்பட்டது. சிதைக்கப்பட்ட சரீரத்தில் இருந்து அவரது பரிசுத்தம் பிரகாசித்தது. அவர் தனது சொந்த தவறுகளுக்காக துன்புறவில்லை, என்னுடைய உங்களுடைய பாவம், மனுக்குலத்தின் பாவத்திற்காக துன்புற்றார்.


ஈ)கிறிஸ்துவின் தெய்வீக சுபாவத்தால் பிலாத்துவிடம் ஏற்பட்ட பயம். (யோவான் 19:6-12)


யோவான் 19:6-7
6 பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.7 யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும் என்றார்கள்.

சித்ரவதையின் நேரங்கள் தொடர்ந்த போது, பெருந்திரளான மக்கள் ஆளுநரின் வாசல் முன்பு கூடினார்கள். அவர்களது கலகத்தன்மையை மென்மையாக்க யூதத் தலைவர்கள் விரும்பவில்லை. அவர்கள் ஒரே சத்தத்துடன், மிகுந்த அமளியுடன் இயேசுவின் மரணத்தண்டனை கொடுக்கும்படி கேட்டார்கள். தயை காட்டுபவர்களையும் அச்சுறுத்தி மனச்சோர்வுண்டாக்கி தங்கள் பக்கம் திருப்பினார்கள். இறைவன் இயேசுவை கைவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். மீட்கும்படியாக ஒரு அற்புதத்தை அவர்களுக்கு இறைவன் நிகழ்த்தவில்லை. ஆகவே மரண தண்டனைக்கான கோரிக்கையில் சத்தம் வளர்ந்தது. கடுமையான தண்டனைத் தீர்ப்பை பிலாத்து கொடுக்கும்படி எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் இயேசுவை முற்றிலும் வெறுத்து ஒதுக்கினார்கள். ஏளனத்தின் ஆழங்களுக்கு அவரை உட்படுத்தினார்கள்.

இந்நேரத்தில் அமைதியின்மையின் அடையாளத்தைக் குறித்து எச்சரிக்கையுடன் பிலாத்து இருந்தான். சட்டத்திற்கு புறம்பாக ஒருவனைக் கொல்ல விருப்பமில்லாதவனாக இருந்தான். ஆகவே அவன் யூதர்களிடம் கூறினான், “இவனைக் கொண்டு போய் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். “மூன்றாவது முறையாக இயேசு குற்றமற்றவர் என்பதை அவன் ஒத்துக்கொண்டான். குற்றமில்லாத ஒருவரை வாரினால் அடிப்பித்ததின் மூலம் பிலாத்து தன்னைத் தானே குற்றவாளியாக தீர்ப்பு செய்து கொண்டான்.

எவரையும் கொல்லுவதை ரோமச் சட்டம் தடுக்கிறது என்று யூதர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஒரு வேளை யூதர்கள் அப்படிச் செய்திருந்தால் பிலாத்து அவர்களுக்கு எதிராக திரும்பியிருப்பான். யூதச் சட்டம் சிலுவைத் தண்டனையை நிறைவேற்றும் உரிமையை பெற்றிருக்கவில்லை. கல்லெறியும் தண்டனையை வழங்க முடியும். இயேசு இறை தூஷணம் செய்தார் என்றால், அவர் கல்லெறியப்படத் தகுதியானவர்.

இறைவனுடைய மகன் என்ற கிறிஸ்துவின் கோரிக்கை சரியென்றால், அவரைத் தாழ விழுந்து பணிந்து கொள்ள வேண்டும் என்பதை யூதத் தலைவர்கள் அறிந்திருந்தார்கள். எல்லா வேதனையுடன் அவர் துன்பப்பட்ட சிலுவை மரணம், அவர் தெய்வீகமானவர் அல்ல என்பதை நிரூபித்தது. இறைவனின் அனுமதியுடன் நடைபெறும் வெறும் சிலுவை மரணமாக அவர்கள் கருதினார்கள். அதை பாவப் பரிகார பலியாகிய இரத்தமாக அவர்கள் ஏற்கவில்லை.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வலிகள், வேதனைகளுக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். எங்கள் காயங்களை நீர் ஏற்றுக்கொண்டீர். உமது பொறுமை, அன்பு மற்றும் மகத்துவத்திற்காக நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். நீரே எங்கள் ராஜா, உமக்குக் கீழ்ப்படிய எங்களுக்கு உதவிசெய்யும். எங்கள் எதிரிகளை ஆசீர்வதிக்க கற்றுத்தாரும். எங்களை வெறுப்பவர்களுக்கு இரக்கம் காண்பிக்க கற்றுத்தாரும். எங்கள் பாவங்களை உமது இரத்தம் சுத்திகரிப்பதற்காக நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். ஓ இறைமைந்தரே நாங்கள் உம்முடையவர்கள். உமது பரிசுத்தத்தில் எங்களை நிலைப்படுத்தி இரக்கத்துடன் நடக்கச் செய்யும். உமது துன்பங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

கேள்வி:

  1. வாரினால் அடிக்கப்பட்ட, செவ்வங்கி தரித்த, முட்கீரிடம் சூட்டப்பட்ட இயேசுவைக் குறித்த காட்சியின் மூலம் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:14 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)