Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 104 (Jesus intercedes for the church's unity)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
உ - இயேசுவின் பரிந்துபேசும் விண்ணப்பம் (யோவான் 17:1-26)

4. இயேசு திருச்சபையின் ஐக்கியத்திற்காக வேண்டுகிறார் (யோவான் 17:20-26)


யோவான் 17:20-21
20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன். 21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

இயேசு தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக பிதா தமது சீஷர்களைப் பொல்லாங்கனிடத்திலிருந்து காக்கும்படி வேண்டிக்கொண்டதன் மூலமாக அவர்களைக் கிறிஸ்துவின் அன்பிலும் பரிசுத்த ஆவியின் வல்லமையிலும் நிலைநிறுத்தினார். தமது அப்போஸ்தலர்களுக்காகவும் திருச்சபைக்காகவும் அவர் ஏறெடுத்த வேண்டுதல்களுக்கு பதில் நிச்சயம் என்பதை உறுதி செய்த பிறகு, எதிர்காலத்தில் அப்போஸ்தலர்களுடைய செய்தியினால் தம்மை விசுவாசிக்கப்போகிற பெருந்திரளான மக்களைப் பற்றி கிறிஸ்து சிந்தித்தார். சாத்தானையும் பாவத்தையும் சிலுவையில் வெற்றிகொண்டவரின் உருவம் அவர்களை இழுத்துக்கொள்ளும். உயிருடனுள்ள கிறிஸ்துவை அவர்கள் விசுவாசிப்பதன் மூலமாக பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்தில் வந்திறங்குவார். அவர்கள் தெய்வீக வாழ்வின் கிருபையில் பங்கடைவார்கள். விசுவாசத்தினால் அவர்கள் பிதாவோடும் குமாரனோடும் நித்திய ஒருமைப்பாட்டில் இணைக்கப்படுவார்கள்.

தம்முடைய அப்போஸ்தலர்கள் மூலமாக தம்மை விசுவாசிக்கப்போகிறவர்களுக்காகவும் கிறிஸ்து வேண்டுதல் செய்கிறார். அவர் அவர்களுக்காக வேண்டிக்கொண்டபோது அவர்கள் அங்கு காணப்படவில்லை. அப்போஸ்தலர்களுடைய செய்தியானது எவ்வளவுதூரம் நம்பத்தகுந்தது என்பதை கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் காண்பிக்கிறது. அவர் நமக்காக வேண்டிக்கொள்ளுவதின் சாரம் என்ன? நம்முடைய ஆரோக்கியத்திற்காக அவர் வேண்டிக்கொள்கிறாரா? நமது செழிப்பு அல்லது எதிர்கால வெற்றிக்காக வேண்டிக்கொள்கிறாரா? இல்லை. நாம் அனைத்து உண்மையான கிறிஸ்தவர்களோடும் ஒன்றாயிருக்கும்படி நமக்குத் தாழ்மையும் அன்பும் வேண்டும் என்று நமக்காக அவர் வேண்டிக்கொள்கிறார். நாம் மற்றவர்களைவிடச் சிறந்தவர்கள் என்று நினைக்கக்கூடாது. அவர்களுடைய நடத்தை நம்மால் பொறுக்கக்கூடாது என்று நாம் கருதக்கூடாது.

விசுவாசிகளின் ஐக்கியமே கிறிஸ்துவின் நோக்கமாயிருக்கிறது. பிரிந்திருக்கும் சபை அவருடைய திட்டத்திற்கு முரணானது. ஆயினும் கிறிஸ்து வேண்டிக்கொள்ளும் இந்த ஐக்கியம் சபை நிர்வாக ஏற்பாடுகளினால் உருவாக்கப்பட முடியாது. அது அனைத்திற்கும் மேலாக ஆவியிலும் விண்ணப்பத்திலும் ஏற்படும் ஆன்மீக ஐக்கியமாகும். இறைவன் அடிப்படையில் ஒன்றாயிருப்பதைப்போல நாம் அனைவரும் அவருக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி, பிதா அனைத்து விசுவாசிகளையும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று கிறிஸ்து வேண்டுகிறார். “என்னில் அவர்கள் ஒன்றாயிருக்க வேண்டும் அல்லது உம்மில் அவர்கள் ஒன்றாயிருக்க வேண்டும்” என்று அவர் வேண்டிக்கொள்ளாமல் “நம்மில்” அவர்கள் ஒன்றாயிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். இதன் மூலம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோருக்குள் இருக்கும் பரிசுத்த ஐக்கியமே நம்முடைய மாதிரி என்பதைக் காண்பிக்கிறார். அவர் நம்மைத் தம்முடைய நிலைக்கு உயர்த்த விரும்புகிறார். ஏனெனில் இந்த திரித்துவ ஐக்கியத்திற்கு வெளியில் நரகம் மட்டுமே இருக்கிறது.

நம்மை நாமே ஆவிக்குரிய நிலையில் பிரியப்படுத்துவதல்ல இறைவனுடைய ஐக்கியத்தில் நாம் உறுதிசெய்யப்படுவதன் நோக்கம். இறைவனை விட்டுத் தூரமாயிருக்கும் மக்களுக்கு நாம் சாட்சிகளாயிருக்க வேண்டும் என்பதே நமது ஐக்கியத்தின் நோக்கமாகும். நம்முடைய ஐக்கியத்தைப் பார்த்து அவர்கள் தாங்கள் பாவத்தில் மரித்திருக்கிறோம் என்றும் பெருமையில் அகப்பட்டிருக்கிறோம் என்றும் உணர்ச்சிகளுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்பதையும் அறிந்துகொண்டு, மனம் வருந்தி இரட்சகரிடத்தில் திரும்புவார்கள். பிதா குமாரன் பரிசுத்த ஆவியோடு இணைந்துகொள்கிறவர்கள் தாழ்மையாகவும் அன்பாகவும் இருப்பதற்குரிய பெலத்தைப் பெற்றுக்கொண்டு, விசுவாசிக்கிற அனைவரையும் ஆவிக்குரிய விடுதலையோடு நேசிப்பார்கள். அவர்களுடைய ஐக்கியம் கிறிஸ்துவின் அன்பிற்கான விலையேறப்பெற்ற சாட்சியாக இருப்பதால் அதில் மகிழ்ந்திருப்பார்கள். நாம் அனைவரும் மனிதனாகிய இயேசுவின் தெய்வீகத்துவத்திற்குச் சாட்சிகளாயிருக்கிறோம். அனைத்துக் கிறிஸ்தவர்களும் பொறுப்புள்ளவர்களாயிருந்தால் இவ்வுலகத்தில் கிறிஸ்தவரல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய அன்பும் சமாதானமும் அனைவரையும் இழுத்து அவர்களையும் மாற்றிவிடும். இயேசுவின் கோரிக்கைக்கு செவிகொடுத்து நாம் ஐக்கியப்படுவோம். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் பிரிவினைக்கு நீங்கள் காரணமாகி, விசுவாசிகளுடன் ஐக்கியப்பட மறுப்பதினால் மக்கள் இயேசுவை விசுவாசிப்பதற்கு நீங்கள் தடையாயிருக்க விரும்புகிறீர்களா?

யோவான் 17:22-23
22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

கிறிஸ்துவின் மகிமை எது? அது அவருடைய பிரகாசம் அல்லது மகத்துவத்தின் வெளிச்சமா? இல்லை. அவருடைய மகிமை அவரது தாழ்மை, பொறுமை, பெருந்தன்மை ஆகியவற்றில் மறைந்திருக்கிறது. யோவான் அந்த மகிமையைக் கண்டு “நாங்கள் அந்த மகிமையைக் கண்டோம்” என்று சாட்சியிடுகிறார். அவர் இயேசுவின் மறுரூபமாகுதலையும் உயிர்த்தெழுதலையும் மட்டும் குறிப்பிடவில்லை, அவருடைய மாட்டுத்தொழுவத்தையும் கொடூரச் சிலுவையையும் குறிப்பிட்டார். இந்த தெய்வீக அன்பின் மகிமையில்தான் குமாரன் வெளிப்படையான மகிமையைத் துறந்து, மனித உருவில் தம்முடைய மேன்மையை வெளிப்படுத்தினார் என்பது விளங்குகிறது. இந்த மகிமையைக் கிறிஸ்து நம்மீது அருளியிருக்கிறார். பிதா மற்றும் குமாரனுடைய ஆவியானவர் நம்மீது இறங்கியிருக்கிறார்.

இந்த மகிமையின் நோக்கம் நம்முடைய சுயத்தை மேன்மைப்படுத்துவதல்ல, ஒன்றாக இணைந்து பணிசெய்வதும், ஒருவருக்கொருவர் சேவைசெய்து, ஒருவரையொருவர் கனப்படுத்துவதே. இந்தக் குணாதிசயங்களை நமக்குக் கொடுக்கும்படியாக இந்த ஆவிக்குரிய கொள்கைகளுடன் திரித்துவத்திலுள்ள அதே ஐக்கியத்தை நமக்கும் கொடுக்கும்படியாக பிதாவிடம் இயேசு விண்ணப்பிக்கிறார். திருச்சபையைப் பரிசோதிப்பதற்கான அளவுகோல் இறைவனுடைய அன்புதான். தம்முடைய நித்திய சாயலுக்கொப்பாக நம்மை அவரே வடிவமைக்கிறார்.

உண்மையாகவே இறைவன் தம்முடைய முழுமையுடன் திருச்சபையில் வாசம் செய்கிறார் (எபேசியர் 1:23; கொலோசெயர் 2:9). அல்லது “தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் கிறிஸ்துவில் சரீரப்பிரகாரமாக வாசமாயிருக்கிறது. நாம் அவருக்குள் நிறைவடைந்திருக்கிறோம்” என்று அதே பகுதியில் சொல்லப்படும் சத்தியத்தை தைரியமாக அறிவிக்கத் தயங்குகிறீர்களா? இயேசு தமது மரணத்திற்கு முன்பாக ஏறெடுத்த விண்ணப்பத்திற்கான பதிலே இந்த அப்போஸ்தலனுடைய சாட்சியாக இருக்கிறது. பரிதாபத்திற்குரியவர்களும் குற்றவாளிகளுமாகிய நம்மை அவர் புறக்கணிக்காமல், நம்மைக் கழுவி சுத்திகரித்து அவருடன் இணைத்துக்கொண்டு, நம் மூலமாக அவர் வாழ நினைப்பதற்காக நாம் அவரைத் துதித்து ஆராதிப்போம்.

நாம் அன்பிலும் தாழ்மையிலும் பரிபூரணப்படுவோம் என்று கிறிஸ்து நம்பிக்கையுடன் இருந்தார். நாமும் ஒருவரையொருவர் நேசித்துக் கனப்படுத்துவோம். செல்வம், திறமைகள், ஞானம் இவற்றில் நாம் பரிபூரணமாயிருக்க வேண்டும் என்பதை அல்ல, நாம் இரக்கமும் அன்பும் தயவும் உள்ளவர்களாயிருக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார். “உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல நீங்களும் பூரண சற்குணராயிருங்கள்” என்று அவர் சொன்னபோது இரக்கத்தையும் சகிப்புத் தன்மையையுமே அவர் முதன்மையாகக் குறிப்பிட்டார். இந்தக் கட்டளை அவர் எதிரிகளையும் நேசிக்கும் அவருடைய குணாதிசயத்தை நமக்குச் சுருக்கித் தருகிறது. ஆனால் இயேசு தம்முடைய பரிந்துபேசுதலின் விண்ணப்பத்தில் அதிலும் மேலான பரிபூரணத்திற்காக வேண்டுகிறார். திருச்சபைக்குள்ளும் இறைவனோடும் இருக்க வேண்டிய ஆவிக்குரிய ஐக்கியமே அந்தப் பரிபூரணமாகும். பரிசுத்த ஆவியானவர் பிரிவினையை ஏற்படுத்தாமல் பரிசுத்தவான்கள் நடுவில் ஐக்கியத்தையே ஏற்படுத்துகிறார். திரித்துவத்தின் ஐக்கியமே நமது மாதிரி. நாம் ஒன்றாக இராவிட்டால் நாம் உலகத்திற்கு இறைவனைக் காண்பிக்க முடியாது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தனிநபர்கள் இறைவனுடைய சாயலைச் சுமந்து திரிந்ததைப்போல, திருச்சபையின் அங்கத்துவர்கள் பரிசுத்த திரித்துவத்தின் சாயலை உலகிற்குக் காண்பிக்க வேண்டும்.

திருச்சபையில் காணப்படும் ஐக்கியம் நாம் இறைவனால் உண்டானவர்கள் என்பதை உலகத்திற்குக் காண்பிக்கும். இறைவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை அப்போதுதான் உலகத்தார் பார்க்க ஆரம்பிப்பார்கள். வெறும் வார்த்தைகளோ நீண்ட பிரசங்கமோ அவர்களில் விசுவாசத்தை உருவாக்காது. இறைமக்களுடைய ஒன்று கூடுகைகளில் காணப்படும் மகிழ்ச்சிதான் நீண்ட பிரசங்கங்களைவிட சிறப்பாகவும் சத்தமாகவும் பேசக்கூடியது. இவ்விதமாகத்தான் ஆதித்திருச்சபையை எருசலேமில் பரிசுத்த ஆவியானவர் மெய்யான ஆவிக்குரிய ஐக்கியத்தில் இணைத்திருந்தார்.

விண்ணப்பம்: தகுதியற்ற எங்களை விசுவாசத்திற்குள் நடத்தியபடியால், கர்த்தராகிய இயேசுவே. நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். உம்முடைய அன்பின் சாட்சியினால் நீர் எங்களை உம்முடைய வேலைக்காரராக மாற்றினீர். நாங்கள் உம்முடைய ஆவிக்குரிய சரீரத்தின் அவயவங்களாகும்படி எங்களைச் சுத்திகரித்துத் தகுதிப்படுத்தியதற்காக நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். பரிசுத்த திரித்துவத்தின் அன்பில் எங்களை உறுதிப்படுத்தும். நடைமுறையில் உயிருள்ள ஐக்கியத்தை நாங்கள் எங்கள் திருச்சபைகளில் காத்துக்கொள்ள எங்களுக்கு வல்லமையைத் தாரும் என்று நாங்கள் உம்மை வணங்கிக் கேட்கிறோம்.

கேள்வி:

  1. நம்முடைய நன்மைக்காக இயேசு பிதாவிடம் எதைக் கேட்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:59 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)