Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 096 (The Holy Spirit reveals history's developments)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)

4. வரலாற்றின் முக்கியமான வளர்ச்சியைப் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார் (யோவான் 16:4-15)


யோவான் 16:4-7
4 அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை. 5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. 6 ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. 7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

ஆரம்பத்தில் பாடுகளையும், துயரத்தையும், உபத்திரவங்களையும் பற்றி தம்முடைய சீஷர்களுக்கு அறிவிக்கவில்லை. மாறாக வானங்கள் திறக்கப்படுவதையும் மனுஷகுமாரன் மீது தேவதூதர்கள் ஏறுவதையும் இறங்குவதையும் அவர்கள் காண்பார்கள் என்பதை அறிவித்தார். இயேசு அற்புதங்களைச் செய்யும்போது, அவர்கள் இறைவனுடைய வல்லமையைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள். மதவெறியர்கள் சிறிது சிறிதாக அவரைக் குறித்து தங்கள் மனதைக் கடினப்படுத்தினார்கள். மக்கள் கூட்டமும் யூதர்களுக்குப் பயந்து அவரைவிட்டு விலகினார்கள். சீஷர்களைத் தவிர மற்ற அனைவரும் அவரைவிட்டு விலகிவிட்டார்கள். இப்போது அவர்களை விட்டுவிட்டு அவர் பரலோகத்திற்கு தம்முடைய பிதாவிடம் செல்லப்போகிறார். அப்போது அவர் உபத்திரவத்தையும் மரணத்தையும் பற்றி அவர்களுடன் பேசினார். அது அவர்களை இன்னும் துக்கப்படுத்தியது. தங்களை எதிர்காலத்தில் உற்சாகப்படுத்தக்கூடிய எந்த நோக்கத்தையோ காரணத்தையோ அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆனாலும் இயேசு தம்முடைய சொந்த வலியைப்பற்றியோ, தாம் அனுபவிக்கப்போகும் சித்திரவதைகளைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ எதுவும் பேசவில்லை என்பதை அவர்கள் கவனித்தார்கள். அவர் தம்முடைய பிதாவினிடத்தில் போவதைக் குறித்து, அதனால் ஏற்படும் நன்மைகளைக் குறித்தே அவர்களிடம் பேசினார். “நீர் எங்கே போகிறீர்?” என்று அவர்கள் கேட்டார்கள். அவர் தங்களைவிட்டுப் பரமேறிப் போகக்கூடாது என்றும் தங்களுடனேயே தங்கிவிட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இயேசு, தாம் அவர்களை விட்டுப் பிரிய வேண்டியது அவசியம் என்றும் சிலுவையில்லாமல் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படமாட்டார்கள் என்றும் அவர்களுக்கு விளக்கினார். இறைவன் மனிதனோடு ஒப்புரவாகுதலின் மூலமாகவும், இறைவனுடைய ஆட்டுக்குட்டியின் பதிலாள் மரணத்தினால் பாவப்பரிகாரம் செய்யப்படுதலின் மூலமாகவும் மட்டுமே இறைவனுடைய வல்லமை அவருடைய சீஷர்கள் மீது பொளிந்தருளப்பட முடியும். இறைவனுடைய ஜீவனும் அன்பும் அவர்கள் மீது பொழிந்தருளப்படும்படியாக இயேசு அனைத்து நீதிகளையும் நிறைவேற்றியிருந்தார். இயேசுவின் மரணமே புதிய உடன்படிக்கையின் ஆதாரமாயிருந்து இறைவனோடு நீங்கள் ஐக்கியம் கொள்ளும் உரிமையை உங்களுக்குத் தருகிறது. பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்குக் கொடுத்து உங்களை ஆறுதல்படுத்தி, இறைவன் உங்களோடும் உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்பதை உறுதிசெய்கிறார்.

யோவான் 16:8-11
8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை ஆறுதல்படுத்த முடியும். ஏனெனில் இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் அவர் விசுவாசிகளுடைய கண்களைத் திறந்து, அவிசுவாசிகளுடைய இருதயத்தை நியாயம்தீர்க்கிறார்.

ஆவியானவர் பாவத்தின் அர்த்தத்தையும் அது எவ்வளவு பயங்கரமானது என்பதையும் நமக்குப் போதிக்கிறார். கிறிஸ்துவினுடைய வருகைக்கு முன்பாக பாவம் என்பது நியாயப்பிரமாணத்தை மீறுவதாகவும் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் தவறுவதுமாகவே இருந்தது. அது இறைவனுக்கு விரோதமாக கலகம் செய்வதாகவும் அவரை நேசிக்காமலும் நம்பாமலும் இருப்பதாகவும் கருதப்பட்டது. அதாவது பாவம் என்பது இறைவனின்றி அவருக்கு எதிராக வாழும் வாழ்க்கையாகும். ஒழுக்க ரீதியான, சமூக ரீதியான மற்றும் ஆவிக்குரிய ரீதியான பாவங்கள் அனைத்தும் இறைவனுடைய மகத்துவத்தை மீறுவதாகவே கருதப்பட்டது. சிலுவைக்குப் பிறகு இந்த அர்த்தங்களுடன் கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது இறைவனுடைய இலவசமான கிருபையைப் புறக்கணித்தல் என்பதும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இயேசுவின் இலவசமான பாவமன்னிப்பைப் புறக்கணிக்கும் எவரும் பரிசுத்தருக்கு விரோதமாக இறைநிந்தனை செய்கிறார்கள். இறைவன் பிதா என்றும் இயேசு அவருடைய குமாரன் என்றும் விசுவாசிக்காதவர்கள் பரிசுத்த திரித்துவத்தின் எதிரிகளாயிருக்கிறார்கள். இறைவன் அன்பாகவே இருக்கிறார். யாரெல்லாம் கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த அன்பைப் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் இரட்சிப்பை இழந்துபோகும் மரணத்திற்கு ஏதுவான பாவத்தைச் செய்கிறார்கள்.

சிலுவையில் இயேசு உலகத்திற்கான இரட்சிப்பை நிறைவேற்றி முடித்தார். அவர் மறுபடியும் மரிக்க வேண்டிய தேவையில்லை, ஏனெனில் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் உள்ள மக்களுடைய பாவங்களை அவர் சிலுவையில் மன்னித்து விட்டார். கிருபையினால் இயேசுவின் இரத்தத்தில் எல்லாரும் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். அவர் ஒரு பிரதான ஆசாரியனைப் போல மூன்று நிலைகளில் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார். ஒன்று, பலியாக வேண்டிய நபர் கொல்லப்படுதல். இரண்டாவது, இறைவனுக்கு முன்பாக பாவப்பரிகாரம் செய்யப்படுவதற்காக மகாபரிசுத்த ஸ்தலத்தில் இரத்தம் தெளிக்கப்படுதல். மூன்றாவது, ஆசீர்வாதத்திற்காகக் காத்திருக்கும் பெருமெண்ணிக்கையான மக்கள் மீது ஆசீர்வாதங்களைப் பொழிதல். இவையனைத்தையும் இயேசு செய்தார். இந்தப் பலியின் மூலமாக நாம் நீதிமான்கள் என்பதை உறுதிப்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதத்தை அவர் பொழிந்தருளுகிறார். சிலுவையில் தொடங்கப்பட்ட நம்முடைய நீதிமானாக்கப்படுதலை அவர் தமது உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுகையினால் நிறைவாக்குகிறார்.

உலகம் நியாயந்தீர்க்கப்படுதலின் நோக்கதை அவிசுவாசிகள் நரகத்தில் தள்ளப்படுவதாக மட்டும் இயேசு பார்க்கவில்லை. சாத்தானையும் அவனுடைய அடிமைத்தனத்தையும் முற்றிலும் அழித்து அதற்கு ஒரு முடிவுகட்டுவதாகவே இயேசு நியாயத்தீர்ப்பைப் பார்த்தார். இறைவனுடைய அன்பின் ஐக்கியத்திலிருந்து மனிதர்களைப் பிரிப்பவன் சாத்தானே. அவன் அவர்களை வெறுப்பின் சங்கிலிகளினால் கட்டி, பேய்தனமான சதித்திட்டங்கள் நிறைந்த பிசாசின் பிள்ளைகளாக மாற்றுகிறான். ஆனால் இயேசுவோ இவ்வுலகத்தில் வாழ்ந்தபோது, மனத்தாழ்மையாக நடந்துகொண்டு, வஞ்சகனுடைய பெருமையை கண்டித்தார். குமாரனுடைய அன்பு பொல்லாங்கனுடைய ஆயுதங்களைக் களைந்து அவனை நிராயுதபாணியாக்கியது. இயேசு தம்முடைய ஆவியைப் பிதாவின் கரங்களில் ஒப்புக்கொடுத்தபோது, சாத்தான் பரப்பிவந்த இருளை மேற்கொண்டார். அவர் சிலுவையில் பெலவீனமாகக் காணப்பட்டதன் மூலமாக அவர் சாத்தானை மேற்கொண்டார். அவர் மரணம்வரை உண்மையுள்ளவராக இருந்தபடியால் சாத்தானை வென்று அவனை அழித்தார். அவருடைய வெற்றி செயல்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். நாம் இறைவனால் பாதுகாக்கப்பட்டு, இரட்சிப்பின் உறுதியை கிறிஸ்துவின் வெற்றியினால் பெற்றுக்கொண்டதால்தான் “நீர் எங்களை சோதனையில் பிரவேசிக்கப்பண்ணாமல், தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்” என்று நாம் விண்ணப்பிக்கக்கூடியவர்களாயிருக்கிறோம்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் நல்ல போராட்டத்தைப் போராடி, தாழ்மையிலும் நம்பிக்கையிலும் அன்பிலும் உண்மையாக நிலைத்திருந்தமைக்காக உமக்கு நன்றி. நீர் பிதாவை அண்டிச் சேர்ந்து எங்களை நீதிமானாக்கினீர். உம்முடைய பலியின் ஆசீர்வாதங்களை உம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலமாக எங்கள் மீது பொழிந்தருளியபடியால் அல்லேலூயா என்று உம்மைத் துதித்து நாங்கள் ஆர்ப்பரிக்கின்றோம். எங்கள் எதிரி எங்களை ஆண்டுகொள்ளாதபடி, உம்முடைய நீதியின் அன்பிலே எங்களைக் காத்துக்கொள்ளும். உம்முடைய இராஜ்யம் வரும்படியாகவும், உலகம் முழுவதும் உம்முடைய பிதாவின் நாமம் மகிமைப்படும்படியாகவும் நீர் சாத்தானிடத்திலிருந்து எங்களை விடுவித்தருளும்.

கேள்வி:

  1. இவ்வுலகில் பரிசுத்த ஆவியானவரின் பணி என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)