Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 093 (The world hates Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)

3. உலகம் கிறிஸ்துவையும் அவரது சீஷர்களையும் வெறுக்கிறது (யோவான் 15:18 – 16:3)


யோவான் 15:18-20
18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். 19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. 20 ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.

இயேசு இறைவனுக்கும் தனக்கும் உள்ள பரிபூரண ஒற்றுமையை தம்முடைய சீஷர்களுக்கு விளக்கிக்காண்பித்து, தேற்றரவாளனாகிய ஆவியானவரின் வருகையை முன்னறிவித்த பிறகு, உலகத்தின் வெறுப்பை அவர்கள் எதிர்கொள்ளும்படி அவர்களை ஆயத்தப்படுத்துகிறார்.

இவ்வுலகம் கிறிஸ்தவ ஐக்கியத்திற்கு எதிரானது. இவ்வுலகத்தை வெறுப்பு ஆளுகை செய்கிறது, ஆனால் கிறிஸ்தவ ஐக்கியத்தையோ அன்பு கட்டிக்காக்கிறது. பிரச்சனைகள் நிறைந்த உலகத்திலிருந்து இயேசு தம்முடைய சீஷர்களை சந்தோஷத்தின் தீவிற்கு இடமாற்றம் செய்வதில்லை. அவருடைய அன்பு கடுமையான தீமையை மேற்கொள்ளும்படி அவர் தம்முடையவர்களை தீமையான சூழ்நிலைகளுக்குள் அனுப்புகிறார். இது பயப்பட வேண்டிய பணியல்ல, மாறாக ஆவிக்குரிய போராட்டம். அன்புக்காகக் குரல்கொடுப்பவர்கள் புறக்கணிப்பையும், சேவை செய்யும்போது கடுமையான எதிர்ப்பையும் சந்திக்க நேரிடுகிறது. இவை அவர்களுடைய தவறுகளினிமித்தமாக ஏற்படாமல், இயேசுவின் வார்த்தைகளுக்கு எதிராக தீய ஆவிகள் மக்களைத் தூண்டிவிடுவதால் ஏற்படுகிறது. அன்பிலும் ஞானத்திலும் பரிபூரணராயிருந்த அவர்களுடைய கர்த்தரே மரணம்வரை அந்த வெறுப்பைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அனுபவித்த துன்பம் மிகவும் கடுமையாக இருந்தபோதிலும், அவர் போர்க்களத்தைவிட்டு ஓடாமலும், இவ்வுலகத்தைவிட்டுப் போகாமலும், அவரை வெறுத்தவர்களை நேசித்தவாறே மரித்தார்.

நம்மில் யாரும் தேவதூதர்கள் அல்ல. நம்முடைய இருதயத்திலிருந்து தீய எண்ணங்கள் புறப்பட்டு வருகிறது. கிறிஸ்துவின் கிருபையினால் புதிய ஆவியானவர் நம்மீது வந்திருக்கிறார். மனந்திரும்புதல் என்றால் மனதில் ஏற்படும் மாற்றமாகும். ஆவியினால் பிறந்தவன் இவ்வுலகத்திற்குரியவனாக இல்லாமல் கர்த்தருக்குரியவனாக இருக்கிறான். அவர் நம்மை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டார். “சபை” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் பொருள் தெரிந்துகொள்ளப்பட்டு, உலகத்திலிருந்து அழைக்கப்பட்டு, சில பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக கூடும் கூட்டம் என்று பொருள். ஆகவே உலகம் திருச்சபையை ஒரு அந்நிய காரியமாகப் பார்க்கிறது. இந்தப் பிரிவினை ஒரு குடும்பத்தில் இயேசு சந்தித்ததைப்போல ஆழமான துக்கத்தையும் பிரிவினையையும் உண்டுபண்ணுகிறது (யோவான் 7:2-9). இந்த நிலையில் உலகத்தின் பரியாசத்தையும் உபத்திரவத்தையும் எதிர்கொள்வதற்கு கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் விசுவாசிகளுக்கு அதிகமான ஞானமும் தாழ்மையும் தேவைப்படுகிறது. நீங்களும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருப்பீர்களானால், இயேசுவும் இவ்விதமாகவே காரணமில்லாமல் பாடுபட்டார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். அவர் அந்த மக்களை நேசித்து அவர்களைச் சுகப்படுத்தியதற்காக ஒரு குற்றவாளியைப்போல அவர் கொல்லப்பட்டார்.

மனிதர்கள் உங்களை உபத்திரவப்படுத்தி உங்களுடன் போராடினாலும் சிலர் இயேசுவுக்குச் செவிகொடுத்ததுபோல உங்களுக்கும் செவிகொடுப்பார்கள் என்ற மாபெரும் வாக்குத்தத்தத்தை இயேசு அருளுகிறார். பரிசுத்த ஆவியினால் பயன்படுத்தப்படும் வார்த்தை எவ்வாறு மனிதர்களுடைய வாழ்வில் அன்பையும் விசுவாசத்தையும் உருவாக்குகிறதோ, அதுபோலவே உங்களுடைய சாட்சியின் மூலமாக சிலருக்க நித்திய ஜீவன் அருளப்படும். இந்த எதிர்ப்பு நிறைந்த உலகத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் கிறிஸ்துவின் ஸ்தானாபதியாயிருக்கிறான். ஆகவே உங்கள் பரம அழைப்புக்குப் பாத்திரராக நடந்துகொள்ளுங்கள்.

யோவான் 15:21-23
21 அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். 22 நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. 23 என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

இயேசு தம்முடைய பரமேறுதலுக்குப் பிறகு சீஷர்கள் அவருடைய நாமத்தினிமித்தமாக கடுமையான உபத்திரவத்தை சந்திக்க நேரிடும் என்று அவர்களை எச்சரித்தார். யூதர்கள் ஒரு தாழ்மையான ஆட்டுக்குட்டியாகிய மேசியாவை எதிர்பார்க்கவில்லை. தங்களை ரோமர்களுடைய காலனியாதிக்கத்திலிருந்து விடுவிக்கும் ஒரு அரசியல் மேசியாவையே அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். இறைவனுடைய மெய்யான மகத்துவத்தை அறியாததால்தான் அவர்கள் அரசியல் விடுதலையைக் குறித்த ஒரு மாயமான நம்பிக்கையில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு இறைபக்தியையும் அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை. அவர்கள் ஒரு இராணுவத்தின் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தார்கள். சகல ஆறுதல் மற்றும் சமாதானத்தின் இறைவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் போர்களை தண்டனையாக அனுமதித்தாலும், அந்தப் போர்களை வைத்து தம்முடைய அரசைக் கட்டுவதில்லை. அவர் தம்முடைய ஆவியினால் சத்தியத்திலும் தூய்மையிலும் தம்முடைய அரசைக் கட்டுகிறார்.

கிறிஸ்து தம்முடைய பிதாவின் கொள்கைகளைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறவராக வந்திருந்தார். ஆனால் யூதர்கள் அன்பு மற்றும் ஒப்புரவாகுதலின் ஆவியைப் புறக்கணித்தார்கள். அவர்கள் தீவிரவாதத்தையும் போரையுமே தேடினார்கள். சமாதான கர்த்தராகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத எந்த இனமும் யூதர்கள் விழுந்த அதே குழியில் விழுகிறார்கள். நம்முடைய பாவங்களை நாம் வெறும் ஒழுக்கரீதியான குறைபாடுகளாக மட்டும் கருதக்கூடாது. அவை இறைவனுக்கு எதிரானவையாகவும் அவருடைய சமாதானத்தின் ஆவியைப் புறக்கணிப்பதாகவும் அமைகிறது.

இயேசுவையும் அவருடைய இராஜ்யத்தையும் சமாதானத்தையும் மக்கள் புறக்கணிப்பதற்கான காரணம் அவர்கள் உண்மையான இறைவனைப் பற்றி அறியாதிருப்பதேயாகும். மக்கள் தங்களுடைய விருப்பப்படி இறைவனைக் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆனால் இயேசு அன்பின் இறைவனை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அன்பை வெறுக்கிறவன் தீவிரவாதத்தின் பாதையைத் தெரிவுசெய்கிறான். கிறிஸ்துவைப் புறக்கணிக்கிறவன் உண்மையான இறைவனைப் புறக்கணிக்கிறான்.

யோவான் 15:24-25
24 வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள். 25 முகாந்தரமில்லாமல் என்னைப்பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.

இயேசு இறைவனைத் தம்முடைய பிதா என்று அறிவித்தது, அவருடைய ஆவியை எதிர்ப்பவர்கள் மீதான ஒரு நியாயத்தீர்ப்பாக இருந்தது. இதை அவர் பல அற்புதங்களோடு சேர்த்து செய்தார். இவ்வுலகில் யாரும் இயேசுவைப்போல சுகமளிக்கவோ, பிசாசுகளைத் துரத்தவோ, காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தவோ, இறந்தவர்களை எழுப்பவோ யாராலும் முடியாது. இறைவன் இந்த அற்புதங்கள் மூலமாகச் செயல்பட்டு, அவற்றைத் தம்முடைய புதிய படைப்பின் ஆதாரங்களாகக் காண்பித்தார். இந்த அற்புதங்களில் யூத இனத்திற்கு எதுவித அரசியல் அல்லது பொருளாதார ஆதாயம் எதுவும் இல்லாத காரணத்தினால் அவற்றின் முக்கியத்துவத்தை அவர்களால் காண முடியவில்லை. ஆனால் இயேசுவினுடைய அன்பின் அதிகாரத்தை அவர்கள் கண்ணுற்றபோது, இந்த அற்புதங்களே பிதாவை விசுவாசிக்காதபடி அவர்களுக்கு இடறலாயிருந்தது. பரிசுத்த ஆவியானவருக்கு யூதர்கள் எவ்வாறு தங்கள் ஆத்துமாக்களை அடைத்துக்கொண்டார்களோ, அவ்வாறே இன்றும் இலட்சக்கணக்கான மக்கள் இறைவனை எதிர்க்கும் ஆவியில் அடைபட்டிருக்கிறார்கள். கிறிஸ்து இறைவனுடைய குமாரன் என்று அறிக்கை செய்யாதவர்கள் அவருடைய சீஷர்களை வெறுக்கிறார்கள், தங்கள் பாவங்களில் வாழ்ந்து, பரிசுத்த திரித்துவத்திற்கு எதிராக தூஷணம் பேசி, உண்மையான இறைவனை அறியாதிருக்கிறார்கள். ஆயினும் இயேசு அவர்களைத் தண்டிக்காமல் தம்முடைய பணியாளர்கள் மூலம் அன்பின் செயலை தொடர்ந்து நடத்துகிறார். சகோதரர்களே, இந்த ஆவிக்குரிய போராட்டத்திற்கு ஆயத்தப்படுங்கள். துன்பம் அனுபவிப்பதற்கு வேண்டிய ஆயத்தத்தையும் பொறுமையையும் தரும்படி கர்த்தரிடம் மன்றாடுங்கள்.

விண்ணப்பம்: மக்கள் உம்மை வெறுத்தாலும் நீர் உமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உமக்கு நன்றி. எங்கள் எதிரிகளும் இரட்சிக்கப்படும்படியாக அவர்களை நேசிக்கும்படி எங்களுக்குப் போதித்தருளும். உம்முடைய ஆறுதலின் ஆவியானவரை ஏற்றுக்கொள்ளும்படியாக, உம்முடைய சத்தத்தைக் கேட்டு, உமது சித்தத்தைச் செய்ய பலருடைய இருதயங்களைத் திறந்தருளும். எங்களை வழிநடத்தி, அதிக வல்லமையையும் பொறுமையையும் எங்களுக்குத் தாரும்.

கேள்வி:

  1. கிறிஸ்துவையும் அவருடைய அன்புக்குரியவர்களையும் உலகம் ஏன் வெறுக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)