Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 092 (Abiding in the Father's fellowship appears in mutual love)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஈ - எருசலேமிற்குச் செல்லும் வழியில் பிரியாவிடை (யோவான் 15:1 - 16:33)

2. நாம் ஒருவர் மீது ஒருவர் பாராட்டும் அன்பில் பிதாவின் ஐக்கியத்தில் நாம் நிலைத்திருப்பது வெளிப்படுகிறது (யோவான் 15:9-17)


யோவான் 15:9
9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் எடுத்தபோது பிதா குமாரனில் வைத்த அன்பினால் வானத்தைத் திறந்து அவருக்குச் சாட்சி கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர் மீது புறாவைப்போல இறங்கினார். “இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்” என்ற பிதாவின் சத்தம் கேட்கப்பட்டது. பரிசுத்த திரித்துவ இறைவனுடைய இந்த அறிவிப்பானது இயேசு ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக பலியிடப்படும்பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டார் என்பதை எடுத்துக்கூறியது. குமாரன் நம்முடைய மீட்புக்காகத் தம்மைத் தாமே வெறுமையாக்கி பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படி தம்மை ஒப்புக்கொடுத்தார். இந்த அன்பு பிதாவோடும் குமாரனோடும் மட்டும் நின்றுவிடவில்லை. அவர்களுடைய அன்பு ஒன்றாக இணைந்து தீய உலகத்தின் மீட்புக்கான மாபெரும் திட்டத்தை ஆயத்தப்படுத்தியது.

பிதாவின் அன்பிற்கொப்பாக குமாரன் நம்மை நேசிக்கிறார். அவர் தம்முடைய பிதாவிற்குக் கீழ்ப்படிந்தார். நாமோ அவ்வாறு கீழ்ப்படியத் தவறினோம். உலகத்தோற்றத்திற்கு முன்பாக நம்மில் யாரும் பிறக்கவில்லை. ஆனால் அக்காலத்தில்தானே குமாரன் நம்மைத் தெரிந்தெடுத்து, பரிசுத்தப்படுத்தினார். அவர் ஆவியானவரின் இரண்டாம் பிறப்பை நமக்குக் கொடுத்து நம்மைப் பரிசுத்தப்படுத்தினார். நாம் அவருடைய கையில் அவருடைய விருப்பத்தின்படி தூக்கி எறியப்படும் விளையாட்டுப் பொருட்களாக இருக்கவில்லை. அவர் நாள் முழுவதும் நம்மை நினைத்து, தெய்வீக கரிசனையினால் நம்மை விசாரிக்கிறார். அவர் நமக்காகப் பரிந்துபேசி, நமக்கு அன்பின் கடிதங்களைத் தம்முடைய நற்செய்தி நூல்களில் எழுதிக்கொடுத்துள்ளார். விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய குணாதிசயங்களை நாம் கொண்டிருக்கும்படி அவர் நம்மைத் தூண்டுகிறார். இவ்வுலகத்திலுள்ள அனைத்துத் தாய் தந்தையருடைய தூய்மையான அன்பையும் ஒன்றாக இணைத்தாலும் என்றும் மாறாத கிறிஸ்துவின் அன்போடு அது ஒப்பிடத்தக்கதல்ல.

யோவான் 15:10
10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

இயேசு இவ்வாறு நம்மை எச்சரிக்கிறார்: “என்னடைய அன்பைவிட்டுப் பிரிந்து செல்லாதீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன், அத்துடன் நீங்கள் என்னை நேசிப்பதற்கான அடையாளங்களை நான் உங்களில் தேடுகிறேன். உங்கள் விண்ணப்பங்கள் எங்கே? அவை பரலோகத்துடன் உங்களுக்கிருக்கும் தொலைபேசி இணைப்பைப் போல இருக்கிறதா? எனது இரட்சிப்புக் உகந்த பதில் செயலாக நீங்கள் தேவையுள்ளவர்கள் மீது காட்ட வேண்டிய கரிசனை எங்கே? நன்மையானதையும் செம்மையானதையும் நீங்கள் செய்து, இரக்கமாகவும் பரிசுத்தமாகவும் இருங்கள். என்னில் நிலைத்திருங்கள். இறைவன் எப்போதும் நன்மையைச் செய்வதைப்போல நீங்களும் நன்மையையே செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களைத் தூண்டுவாராக.”

இறைவன் நேசிப்தைப்போல நாமும் நேசியாமல் இருப்பது பாவமாகும். இறைவனுடைய இரக்கத்தின் அளவுக்கு கிறிஸ்து நம்மை உயர்த்த விரும்புகிறார். “நானும் என் பிதாவும் இரக்கமுள்ளவர்களாயிருப்பதைப் போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.” இது நடைபெறுவது சாத்தியமில்லை என்ற நீங்கள் கருதலாம். மனிதனுடைய சிந்தனையின்படி இது நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல என்பது உண்மைதான். ஆனால் கிறிஸ்து விரும்புவதை அவரால் உங்களில் செயல்படுத்த முடியும் எனபதை நீங்கள் அறிவீர்களா? இறைவன் நேசிப்பதைப் போல நீங்களும் நேசிக்க வேண்டும் என்பதற்காக அவர் தம்முடைய ஆவியானவரை நமக்கு அருளியிருக்கிறார். இந்த ஆவியினால்தான் பவுல், “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று கூறுகிறார்.

இயேசு எப்போதும் தம்முடைய பிதாவின் சித்தத்தைவிட்டு விலகாமல், எப்போதும் அவருடைய அன்பில் நிலைத்திருந்தார் என்பதற்கு அவரே சாட்சியிடுகிறார். இறைவனுடனான சமாதானத்தையும், பரிசுத்த ஆவிக்குள்ளான விண்ணப்பத்தையும், அன்புடன்கூடிய சேவையையும் கிறிஸ்து நம்மில் ஏற்படுத்துகிறார்.

யோவான் 15:11
11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

இறைவனைவிட்டு வெகுதூரம் விலகியிருக்கும் மனித இதயம் தாகத்தினால் அவதியுறும். பிதாவின் அன்பில் எப்போதும் நிலைத்திருக்கும் கிறிஸ்துவோ மகிழ்ச்சியினாலும் ஆசீர்வாதத்தினாலும் நிறைந்திருக்கிறார். அவருக்குள் எப்போதும் பாடலும் துதியும் இருந்துகொண்டே இருக்கும். நமக்கு அவர் அருளும் இரட்சிப்புடன் ஒரு உள்ளன்பின் பெருக்கையும் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறார். இறைவன் மகிழ்ச்சியின் இறைவனாவார்.

அன்பைத் தொடர்ந்து சந்தோஷம் என்பது ஆவியின் கனிகளின் வரிசையில் இரண்டாவதாக வருகிறது. எங்கிருந்து பாவம் அகற்றப்படுகிறதோ அங்கே மகிழ்ச்சிப் பெருக்கெடுக்கிறது. கிறிஸ்து நமது இரட்சிப்பின் மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தி மற்றவர்களுக்கும் அது கிடைக்கும்படி செய்கிறார். மகிழ்ச்சியுள்ள மனிதனால் தனது மகிழ்ச்சியைத் தனக்குள் மட்டும் அடக்கிக்கொள்ள முடியாது. அவன் மற்றவர்களையும் பாவ மன்னிப்பின் ஆசீர்வாதத்திற்குள்ளும், இறைவனில் உண்டாகும் நிச்சயத்தில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் அவர்களைக் கொண்டுவர முயற்சிப்பான். பலர் இரட்சிக்கப்படும்போது நம்முடைய மகிழ்ச்சி பெரியதாக இருக்கும். “எல்லாரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் வேண்டும்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். போராட்டங்களும் பாடுகளும் காணப்பட்டாலும் நற்செய்திப்பணி அவற்றின் நடுவில் நம்முடைய மகிழ்ச்சிக்கான நிரூற்றாகத் திகழும்.

யோவான் 15:12-13
12 நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. 13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.

இயேசு நம்மை நேசித்து, நம்முடைய பெயர்களையும், நமது குணாதிசயங்களையும், இறந்த காலங்களையும் அறிந்து வைத்திருக்கிறார். அவர் நம்முடைய பாடுகளையும் துன்பங்களையும் அறிந்திருக்கிறார். அவர் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்த ஒரு திட்டத்தையும் அதற்கான ஒத்தாசையையும் வைத்திருக்கிறார். அவர் எப்போதும் விண்ணப்பத்தில் நம்முடன் உரையாட விருப்பமுள்ளவராயிருக்கிறார். அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து சத்தியத்தின்படி பரிசுத்த வாழ்க்கை வாழும்படி நம்மை இழுத்துக்கொள்கிறார்.

இயேசு நம்மை நேசிப்பதைப்போல நாமும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்ற விரும்புகிறார். நாம் நமது உறவினர் நண்பர்களைப் பற்றி கருத்துள்ளவர்களாக அவர்களுடைய சூழ்நிலைகளையும் துன்பங்களையும் குறித்து கருத்துள்ளவர்களாயிருக்கிறோம். நாம் அவர்களுடைய நோக்கங்களையும் ஆளத்துவங்களையும் அறிந்துகொள்ளத் தொடங்குகிறோம். நாம் அவர்களுடன் நேரம் செலவுசெய்து, அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறோம். அவர்கள் தவறு செய்யும்போது அவர்களை மன்னித்து, அவர்களுடைய தவறுகளையும் தோல்விகளையும் பெரிதுபடுத்தாமல் இருக்கிறோம்.

இயேசு அன்பின் உச்சத்தை இவ்வுலகில் வெளிப்படுத்தினார். அவர் வெறுமனே பேசியதுடன் அல்லது உதவி செய்ததுடன் நின்று விடாமல், பாவிகளுக்காக தம்மையே அவர் பலியாக ஒப்புக்கொடுத்தார். இறைவனுடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தும் அன்பின் சிகரமே சிலுவைதான். நாம் இந்த இரட்சிப்பின் செய்தியைப் பரப்பவும் நம்முடைய நேரத்தையும் பணத்தையும் அதற்காகத் தியாகம் செய்யவும் வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் மற்றவர்களோடு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமானால், நமக்குக் கிறிஸ்து செய்ததைப்போல நாமும் அவர்களுக்காக நம்முடைய பணத்தையும் பெலத்தையும் செலவு செய்ய வேண்டும். அவர் தமக்குத் தீமைசெய்தவர்களுக்காக விண்ணப்பித்து, அவர்களை நண்பர்களைப்போல நடத்துகிறார். “பிதாவே, இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். இவர்களுக்கு மன்னியும்” என்ற அவர் தம்முடைய எதிரிகளுக்காக விண்ணப்பித்தார். அவர் அவர்களை வெறுமனே சகோதரர்களே என்றோ, இறைவனுடைய மக்களே என்றோ அழைக்கவில்லை. அவர்களை “எனக்குப் பிரியமானவர்கள்” என்று அழைத்தார். தம்முடைய அன்புக்குத் தகுதியில்லாதவர்களை மீட்கும்படியாகவே அவர் தம்முடைய உயிரைக் கொடுத்தார்.

யோவான் 15:14-15
14 நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். 15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

“பிரியமானவனே” என்று இறைவன் உங்களை அழைக்கிறார். ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அவர் அவ்விதமாகவே அழைக்கிறார். நீங்கள் யாருமற்ற அனாதையாக இருக்கலாம். உங்களுக்காக மரித்து, உங்களுக்காக வாழும் இயேசுவை நோக்கிப்பாருங்கள். எப்போதும் உங்களுக்கு உதவ ஆயத்தமாயிருக்கும் உங்கள் உற்ற நண்பன் அவரே. அவர் உங்கள் சிந்தனைகளை அறிந்தவராக உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறார். அவர் எல்லாரையும் நேசிப்பதைப்போல நாமும் எல்லாரையும் நேசித்து அவருடைய அன்பில் நிலைத்திருந்தால், நாம் அவரில் நிலைத்திருப்போம். கிறிஸ்துவை நேசிக்கிறோம் என்று சொல்லுகிற இருவர் தங்களுக்குள் ஒருபோதும் பிரிந்திருக்க முடியாது. நாம் அவரை நேசித்தால் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார். அவர் நம்மைப் பிரியமானவர்கள் என்று அழைக்கிறார். அவர் நம்மைப் படைத்த காரணத்தினால் நாம் அவருக்குச் சொந்தமானவர்களாயிருக்கிறோம். நம்மை அடிமைகளாக நடத்துவதற்கும் அவருக்கு உரிமையிருக்கிறது. அவர் நம்முடைய அடிமைத்தளையை முறித்து நம்மை உயிருடன் எழுப்பியிருக்கிறார். அவருடைய தெய்வீகச் செயல்களைப் பற்றி நமக்கு அறிவிக்கிறார். அவர் நம்மை அறிவீனர்களாக விட்டுவிடாமல், பிதாவின் அன்பையும், சிலுவையின் வல்லமையையும், பரிசுத்த ஆவியின் அன்பையும் அவர் நமக்குப் போதிக்கிறார். அவர் பரிசுத்த திரித்துவத்தின் இரகசியத்தை நமக்குப் போதித்திருப்பதால் நித்தியத்தின் மறைவான சத்தியங்களை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அவற்றை நமக்கு வெளிப்படுத்தும்படி பிதா அவற்றை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய பணியிலும், ஆதரவிலும், கனத்திலும், வல்லமையிலும் வாழ்விலும் பங்குபெற நம்மை அனுமதிக்குமளவுக்கு அவருடைய நட்பு மிகவும் பெரியதாயிருக்கிறது. அவர் நமக்குப் புத்திர சுவிகாரத்தையும் கொடுத்து, தம்முடைய பிள்ளைகளாக நம்மை மாற்றுகிறார்.

யோவான் 15:16-17
16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். 17 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்.

இயேசுவுடனான உங்களுடைய உறவு முதன்மையாக உங்களுடைய சித்தம், விருப்பம், அனுபவம் ஆகியவற்றைச் சார்ந்ததல்ல. அது அவருடைய அன்பு, அழைப்பு மற்றும் தெரிந்துகொள்ளுதலைச் சார்ந்தது. நீங்கள் உங்கள் பாவத்திற்கு அடிமைகளாகவும், சாத்தானுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாகவும், மரணத்தின் ஆளுகைக்குள்ளாகவும் இருந்தீர்கள். நீங்கள் அந்தச் சிறைச்சாலையிலிருந்து வெளிவர முடியாதவர்களாயிருந்தீர்கள். ஆனால் இயேசு உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே உங்களைத் தெரிந்துகொண்டு, தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உங்களை மீட்டுக்கொண்டார். அவர் உங்களைத் தம்முடைய நண்பராக்கி, தம்முடைய குமாரத்துவத்தின் உரிமைப்பேறுகளை உங்களுக்குக் கொடுத்தார். முழுவதும் கிருபையினால் அவர் உங்களைத் தெரிந்துகொண்டார். நீங்கள் ஒன்று அவரைத் தெரிந்துகொள்கிறீர்கள் அல்லது புறக்கணிக்கிறீர்கள். கிறிஸ்து சிலுவையில் பாவப்பரிகாரம் செய்தபோது அவர் எல்லா மனிதரையும் தெரிந்துகொண்டார். ஆனால் அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்காமல் தங்கள் பாவச் சேற்றில் நிலைத்திருப்பதைத் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் இறைவனுடைய பிள்ளைகள் பெறும் விடுதலையை அறியார்கள். நீங்கள் பாவத்திலிருந்து விடுவிக்கப்படவும் இறைவனோடு ஐக்கியம் கொள்ளவுமே அவர் உங்களை அழைத்திருக்கிறார். உங்களை அன்பில் பயிற்றுவியுங்கள். கர்த்தருக்கும் இவ்வுலக மனிதருக்கும் மனப்பூர்வமாக சேவை செய்ய வேண்டும் என்பது மட்டுமே உங்கள் வாழ்வின் ஒரே குறிக்கோளாயிருக்க வேண்டும். நீங்கள் அடிமைகளைப் போல கட்டாயப்படுத்தப்படுவதில்லை. இயேசு அன்பினிமித்தமாக மனப்பூர்வமாக வேலைக்காரனானார். அவர் தம்மைக் குறித்துக் கவலைப்படாமல் தாம் நேசிக்கிறவர்களைக் குறித்துக் கவலைப்படுவதால் அவரே நமக்கு மாதிரியானார்.

ஆகவே, நீங்கள் ஒரு மேய்ப்பன் தன் மந்தைமீது கரிசனைப்படுவதைப் போல உங்கள் நண்பர்கள் மீது கரிசனைகொள்ள வேண்டும் என்று அவர் உங்களுக்காக ஏங்குகிறார். நம்முடைய திறமைகள் மட்டுப்பட்டவைகளாயிருப்பதால் மனிதன் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மற்றொருவனை விடுவிக்க முடியாது. அதனால்தான் இயேசு அவருடைய நாமத்தினால் நாம் விண்ணப்பிக்க வேண்டும் என்று நம்மிடம் கூறுகிறார். விடுவிக்கப்பட்டவர்களை இயேசு ஒழுக்கத்திலும் ஆவிக்குரிய வாழ்விலும் கட்டி எழுப்பி, அவர்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றிற்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கும்படி அவர்களுக்காக விண்ணப்பித்தால், கர்த்தர் தம்முடைய நல்ல சித்தத்தின்படி நமக்கு பதில்தருவார். அன்பே பதிலளிக்கப்படும் விண்ணப்பத்தின் இரகசியமாகும். இந்த ஆவியில் நீங்கள் உங்கள் நண்பர்களுக்காக விண்ணப்பீர்களானால், அவர் உங்கள் சாதாரண பாவங்களையும் உங்களுக்குக் காண்பித்து, உங்களை ஒரு பயனுள்ள மற்றும் சரியான ஒரு ஜெப வாழ்க்கைக்குள் நடத்தி, தாழ்மையை உங்களுக்குக் கொடுப்பார். உங்கள் நண்பர்களுடைய பரிசுத்தத்திற்காகவும் இரட்சிப்பிற்காகவும் கேட்பீர்களானால் கர்த்தர் நிச்சயமாக பதிலளிப்பார். நீங்கள் விண்ணப்பத்தில் நிலைத்திருக்கும்படி உங்களை அழைக்கிறோம். மங்கிப்போகும் பணியை அல்ல, நிலைத்திருக்கும் கனியையே அவர் உங்களுக்கு வாக்களிக்கிறார். உங்கள் விண்ணப்பத்தின் மூலமாகவும் சாட்சியின் மூலமாகவும் விசுவாசிப்பவர்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குட்பட்டு நித்திய காலமாக வாழ்வார்கள்.

உங்கள் விசுவாசம், விண்ணப்பம் மற்றும் சாட்சி இவைகளுக்கும் மேலாக நீங்கள் உங்கள் நண்பர்களை உள்ளபூர்வமாகவும் தூய அன்புடனும் நேசிக்க வேண்டும் என்று இயேசு உங்களுக்குக் கட்டளையிடுகிறார். இறைவன் உங்களை பெருந்தன்மையுடன் நடத்துவதைப்போல நீங்களும் அவர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களுடைய கடினமான குணாதிசயங்களைக்கூட சகித்துக்கொண்டு பொறுமையுடன் நடந்துகொள்ளுங்கள். கறைபட்டு அழுக்காயிருக்கும் இந்த உலகத்தை இறைவனுடைய அன்பின் ஒளியினால் பிரகாசிப்பியுங்கள். சேவைசெய்தல், செவிகொடுத்தல், தியாகம் செய்தல், மற்றவர்களின் தேவைக்கேற்ப நடந்துகொள்ளுதல் போன்ற காரியங்களில் உங்களைப் பயிற்றுவியுங்கள். கிறிஸ்துவின் அன்பு உங்களில் பிரகாசிக்கட்டும்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எங்களைப் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அன்புள்ளவர்களாக மாற்றியமைக்காக உமக்கு நன்றி. நீர் எங்களை நேசித்ததைப்போல நாங்கள் அனைவரையும் நேசிப்பவர்களாக எங்களை மாற்றும். நாங்கள் உம்மை ஆராதித்து எங்களை உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறோம். நாங்கள் அன்பின் கனிகளை நிறைவாகக் கொடுக்கும்படி கீழ்ப்படிதலைப் போதித்தருளும்.

கேள்வி:

  1. பாவத்திற்கு அடிமையாயிருப்பவர்களை இயேசு தமக்குப் பிரியமானவர்களாக எவ்வாறு மாற்றுகிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 09:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)