Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 085 (Christ predicts Peter's denial; God is present in Christ)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஆ - கர்த்தருடைய பந்தியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் (யோவான் 13:1-38)

4. பேதுருவின் மறுதலிப்பை கிறிஸ்து முன்னறிவிக்கிறார் (யோவான் 13:36-38)


யோவான் 13:36-38
36 சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். 37 பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். 38 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பேதுரு தன் மனதில் குழப்பமடைந்தவனாக இயேசு அன்பைப் பற்றி பேசிய காரியங்களைத் கேட்கத் தவறினார். அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்ததெல்லாம் ஆபத்து தங்களைச் சூழ்ந்து வரும்போது தங்கள் ஆண்டவர் காட்டிக்கொடுக்கப்பட்டு தங்களைவிட்டுப் போகப்போகிறார் என்பதே. பேதுரு தன்னுடைய உண்மை, தீர்மானம் ஆகியவற்றைச் சார்ந்திருந்தார். தான் எந்த சூழ்நிலையிலும் இயேசுவைப் பின்பற்றி வருவேன் என்று அவர் இயேசுவிடம் உறுதியளித்தார். தன்னுடைய பெருமையான பேச்சுக்களை தான் நிறைவேற்றக்கூடும் என்று கருதியதால் தன்னுடைய பெலவீனங்களையும் இயலாமைகளையும் அவர் உணரவில்லை. அவர் இயேசுவின் மீதுள்ள வைராக்கியத்தால் பற்றி எரிந்தார். அவருக்காக போராடவும் சாகவும் ஆயத்தமாயிருந்தார்.


இ - மேலறையில் பிரிவுபசாரப் பிரசங்கம் (யோவான் 14:1-31)

1. கிறிஸ்துவில் இறைவன் இருக்கிறார் (யோவான் 14:1-11)


யோவான் 14:1-3
1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். 2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். 3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

இயேசு அவர்களை விட்டுப் போகிறார் என்றும் அவர் போகும் இடத்திற்கு அவர்கள் செல்ல முடியாது என்றும் கேள்விப்பட்டபோது அவர்கள் துக்கமடைந்தார்கள். பேதுரு தம்மை மறுதலிப்பார் என்றும் இயேசு முன்னறிவித்தார். ஆனால் பேதுருவோ பெருமையுள்ளவனாக தொடர்ந்து இயேசுவைப் பின்பற்றுவேன் என்று வலியுறுத்தினார். சிலர் சீக்கிரமாக நம்மைவிட்டு போகப்போகிற அல்லது மரிக்கப்போகிற ஒருவரை நாம் தவறாகப் பின்பற்றிவிட்டோமோ என்று நினைத்திருக்கலாம். அவர்களுடைய துக்கத்தையும் வேதனையையும் பார்த்து இயேசு அவர்களுக்கு உறுதியான கட்டளையைக் கொடுத்தார். முழுவதும் இறைவனைச் சார்ந்திருங்கள். அனைத்து சூழ்நிலைகளிலும் அவரே உறுதியான அடித்தளம். அனைத்தும் ஆட்டங்கண்டாலும் அவர் அசையாமல் நிலைத்திருப்பவர். அவர் நம்முடைய கவலைகளைக் கடிந்துகொள்கிறார். பயம் என்பது அவிசுவாசத்தையே குறிக்கிறது. உங்கள் பரலோக பிதா உங்களைக் ஏமாற்றுவதுமில்லை, உங்களைவிட்டு விலகுவதுமில்லை. உங்கள் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

தன்னைப் பின்பற்றுகிற யாவரும் பிதாவுக்கேற்ற விசுவாசத்தையும் ஜெப வாழ்க்கையையும் உடையவர்களாயிருக்க வேண்டும். இயேசுவும் பிதாவும் ஒன்றாயிருக்கிறார்கள். பிதா நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி நமக்கு உறுதியளிப்பதைப் போல குமாரன் நமக்கு நிச்சயமளிக்கிறார். குமாரனின் பிதா இந்த உலகத்தில் இருந்தார். அவருடைய அன்பு நம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானது. அவருடைய சத்தியம் பாறையைப்போல உறுதியானது.

ஆகவே இயேசு தம்முடைய மரணம் மற்றும் பரமேறுதலுக்குப் பிறகு நடைபெறப்போகும் ஒரு காரியத்தை தம்முடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த உலகத்தில் எங்கும் காணமுடியாத வாசஸ்தலங்கள் இறைவனிடத்தில் உண்டு. பரலோகத்திலிருக்கும் இறைவனுடைய வாசஸ்தலம் என்பது எல்லாக் காலத்திலுமுள்ள பரிசுத்தவான்கள் அனைவரையும் உள்ளடக்கக்கூடிய அளவு தாராளமானதாக இருக்கும். இன்று நீங்கள் குச்சுக் குடிசையிலோ, கூடாரத்திலோ வாழ்ந்தாலும் கவலைப்பட வேண்டாம். உங்கள் பிதாவினுடைய வீட்டில் பல வாசஸ்தலங்கள் உண்டு, அவை பெரியவைகளாக இருக்கும். அவர் சுத்தமான, கதகதப்பான, பொருத்தமான வீடுகளை உங்களுக்காக ஆயத்தம் செய்திருக்கிறார். நீங்கள் எப்போதும் உங்கள் பிதாவுக்கு அருகில் வாழும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

இறைவனே, கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை நேசித்து, அவர்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்திருக்கிறார். இயேசு பரலோகத்திற்குச் சென்றபோது அந்த வாசஸ்தலங்களைப் பார்வையிட்டு, அவற்றிற்கு மேலும் மெருகூட்டினார். ஆனால் அவர் திரும்ப நம்மிடம் வருகிறார். அவர் நம்மைவிட்டுத் தூரமாக இருப்பதை விரும்பவில்லை. தம்மைப் பின்பற்றுபவர்களை தம்மிடம் சேர்த்துக்கொள்ளும்படி அவர் திரும்ப வருகிறார். ஒரு மணவாளன் மணவாட்டியை நேசிப்பதைப்போல அவர் அவர்களை நேசித்து, தம்முடைய பிதாவினிடத்தில் திருச்சபையை மணவாட்டியாக நிறுத்த இருக்கிறார். அவர்களை வெறுமனே அறிமுகம் செய்வதற்காக அல்ல, முழுவதும் அவருடைய சாயலில் அவர்களை மாற்றி, பரலோக குடும்பத்தில் ஒரு அங்கமாக அவர்களைச் சேர்க்கவிருக்கிறார். நாம் அவரால் பாதுகாக்கப்பட்டவர்களாக, அவருடைய நன்மையில் மகிழ்ந்திருப்பவர்களாக அவருடன் என்றென்றும் வாழுவோம்.

யோவான் 14:4-6
4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். 5 தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். 6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

“நான் எங்கே போகிறேன் என்பதையும் இறைவனிடத்தில் போகும் வழியையும் நீங்கள் அறிவீர்கள்” என்று இயேசு தம்முடைய சீடர்களிடத்தில் தெரிவித்தார். “நீர் போகும் இடமே எங்களுக்குத் தெரியாது, அதற்கான வழியை நாங்கள் எப்படி அறிவோம்?” என்று தோமா கேட்டார். தன்னுடைய சோகத்தினால் எதிர்காலத்தை அவரால் காண முடியவில்லை. பயம் அவரை ஆட்டுவித்தபடியால் அவர் திசையறியாது தவித்தார்.

இயேசு மென்மையாக அவருக்கு உறுதியளித்தார். “நானே இறைவனிடம் செல்லும் வழி. என்னுடைய அன்பும் சத்தியமுமே பரலோகத்திற்கு வழிநடத்திச் செல்லும் மெய்யான சட்டமாகும். இறைவன் இந்த உலகத்தை நியாயம்தீர்ப்பதற்குப் பயன்படுத்தப் போகும் அளவுகோல் நானே. மனிதர்களுடைய அறியாமையின் அளவுகோல்களை வைத்து உங்களை அளவிடாதீர்கள். இறைவனிடம் செல்லும் வழியைக் காத்துக்கொள்ளுங்கள். என்னிடத்தில் வாருங்கள்; என்னோடு உங்களை ஒப்பீடு செய்யுங்கள்; அப்போது நீங்கள் கேடான பாவிகளன்றி வேறல்ல என்பதை அறிந்துகொள்வீர்கள்.”

கிறிஸ்து பயத்திலுள்ளவர்களை மேலும் பயப்படுத்தமாட்டார். துக்கத்தில் இருப்பவர்களை இன்னும் துக்கப்படுத்த மாட்டார். நீங்கள் அதிகமாக சோகத்தை அடையும்போது அவர் தம்முடைய கரத்தை நீட்டி, “நான் உங்களுக்கு புதிய சத்தியத்தைத் தருகிறேன். பழைய காரியங்களை மறந்து விடுங்கள். நான் உங்களுக்காக மரித்து, புதிய உடன்படிக்கையை கிருபையினால் ஏற்படுத்தியிருக்கிறேன். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டது. உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்திருக்கிறது. நீங்கள் என்னைப் பற்றிக்கொண்டு, புத்திர சுவிகாரத்தில் நிலைத்திருங்கள். என்னால் நீங்கள் சத்தியத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். என்னையல்லாமல் நீங்கள் அழிந்துபோவீர்கள்” என்று கூறுகிறார்.

“இவையனைத்தையும் நான் கேட்டாலும் விசுவாசம், வல்லமை, விண்ணப்பம் மற்றும் பரிசுத்தம் ஆகியவற்றில் நான் குறைவுள்ளவனாயிருக்கிறேன்” என்று நீங்கள் கூறலாம். இயேசு உங்களுக்கு இவ்வாறு பதிலுரைக்கிறார். “நான் உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; நானே வாழ்க்கையின் ஊற்று. விசுவாசத்தினால் என்னைப் பற்றிக்கொண்டால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்கள். அந்த ஆவியில் நீங்கள் பெருவாழ்வைப் பெற்றுக்கொள்வீர்கள்.” கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் எப்போதும் வாழ்கிறார்கள். அவரைவிட்டுத் தூரமாக செல்லாதீர்கள். அவரே உங்கள் வாழ்க்கை. ஒன்று நீங்கள் உங்கள் பாவங்களினால் மரித்திருக்க வேண்டும்; அல்லது கிறிஸ்துவில் உயிர் பெற்றிருக்க வேண்டும். இவையிரண்டுக்கும் நடுவில் ஒரு நிலை கிடையாது. கிறிஸ்துவே விசுவாசியின் வாழ்வாயிருக்கிறார்.

கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டவர்கள் இறைவனுக்கு முன்பாக நின்று அவரை இரக்கமுள்ள தகப்பனாகக் காண்பார்கள். எந்தவொரு சமயமோ, தத்துவமோ, சட்டமோ அல்லது விஞ்ஞானமோ இறைவனிடம் உங்களை இழுத்துக்கொள்ளாது. இறைமகனான கிறிஸ்து மட்டுமே இதைச் செய்ய முடியும்; அவரில் பிதா உங்களுக்கு முன்பாக நிற்கிறார். இறைவனுடைய பூரண வெளிப்பாடு கிறிஸ்துவே. அவராலேயல்லாமல் யாரும் பிதாவை அறியார்கள். இறைவளை அறியும் சிலாக்கியம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து அன்பாயிருப்பதால் அவரை நாம் நெருங்கிச் சேரலாம். அவர் நம்மை இறைவனுடைய பிள்ளைகளாக்குகிறார்.

யோவான் 14:7
7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

இவ்வுலகத்தின் பிள்ளைகள் தங்களுடைய பாவத்தினால் இறைவனை விட்டு வெகுதூரத்தில் இருக்கிறார்கள். எந்த மனிதனும் சுயமாக இறைவனை அறிய முடியாது. பிதாவின் மடியிலிருக்கிற குமாரனேயல்லாமல் வேறு ஒருவரும் இறைவனைக் கண்டதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் என்று அவர் சொன்னார். ஆனால் அவர்கள் அதை அறியவில்லை. அறிவு என்பது தகவல்களைத் தெரிந்திருப்பதோ விஞ்ஞானமோ அல்ல அது மாறுதலும் புதுப்பிக்கப்படுதலுமாகும். இறைவனுடைய அறிவு நம்மில் மனவுருவாகி நமது வாழ்க்கையில் வெளிப்படுகிறது. சமயப் பாடங்கள் என்பது இறைவனை அறிவதல்ல. வஞ்சிக்கப்படாதிருங்கள். இறைவனை அறிவதற்கு நற்செய்தியின் வெளிச்சத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். நீங்கள் மாற்றம் அடைந்து வெளிச்சமாவீர்கள்.

தான் காட்டிக்கொடுக்கப்படும் தருணத்தில் இயேசு தம்முடைய சீடர்களிடம் பேசிய காரியங்கள் ஆச்சரியமானவை. “இப்போதிருந்து நீங்கள் என்னை அறிந்துகொள்வீர்கள். நான் சர்வ வல்லமையுள்ள ஆண்டவரும் ஞானமும் மகிமையும் உள்ளவரும் மட்டுமல்ல, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாகவும் இருக்கிறேன். என்னுடைய பரிகார மரணத்தின் மூலமாக இறைவன் தன்னை ஒப்புரவாக்கும் பிதாவாகத் தன்னை வெளிப்படுத்துகிறார். அதனால் தம்முடைய கோபத்தில் அவர்கள் உங்களைத் தண்டித்து அழிக்காமல், அவருடைய மகனாகிய என்னைத் தண்டிக்கிறார். அதன் மூலமாக நீங்கள் விடுதலையடைந்து மாற்றப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, அவருடைய பிள்ளைகளின் ஐக்கியத்தில் இணைக்கப்படுவீர்கள்.”

சிலுவையில் இறைவன் தன்னைப் பிதாவாக வெளிப்படுத்துகிறார். உயர்த்தப்பட்டவர் நமக்குத் தூரமாக இல்லை. அவர் அன்பாகவும், இரக்கமாகவும், மீட்பாகவும் இருக்கிறார். இறைவன் உங்களுடைய தனிப்பட்ட தகப்பனாயிருக்கிறார். என்னை விசுவாசிக்கும் பிள்ளைகளாக நீங்கள்தான் இருக்கிறீர்கள். நீங்கள் மட்டுமே இறைவனை அறிந்திருக்கிறீர்கள். இந்த அறிவு உங்களை மாற்றி நடைமுறையில் நற்குணங்களாக உங்களில் வெளிப்படும்.

யோவான் 14:8-9
8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

“நீங்கள் பிதாவைப் பார்த்தும் அறிந்தும் இருக்கிறீர்கள்” என்று இயேசு சொன்னபோது பிலிப்பு ஆச்சரியப்பட்டு, “இல்லை. நாங்கள் பிதாவைக் காணவில்லையே” என்று சொல்ல நினைத்தாலும் தனது ஆண்டவரின் மேன்மையினால் அவ்வாறு கூறாமல், “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காட்டும். அது போதும்” என்றார். இயேசுவையும் அவருடைய வல்லமையைக் குறித்த இரகசியத்தையும் பிலிப்பு அறிந்திருந்தார் என்பதை இந்தக் கோரிக்கை காண்பிக்கிறது. அந்த இரகசியம் அவருக்குப் பிதாவுடன் இருக்கும் ஐக்கியத்தில் இருக்கிறது. அவர் அவர்களைவிட்டுச் செல்வதாயிருந்தாலும், ஒரு கனம் அவர் பிதாவை அவர்களுக்குக் காண்பித்துவிட்டால் போதுமானது. அவர்களும் இயேசுவைப் போல கட்டளை பெற்றவர்களாக சர்வவல்லவரினால் காக்கப்பட்டிருப்பார்கள். அதன்பிறகு அவர்கள் இறைவனை அறிந்துகொண்டவர்களாக, பிசாசுகளைத் துரத்தவும் பிணியாளிகளைச் சுகமாக்கவும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.

ஆயினும் அந்த விண்ணப்பத்தின் மூலமாக பிலிப்பு தனக்குப் பிதாவையும் குமாரனையும் தெரியாது என்பதை அறிக்கை செய்கிறார். அவர் தெய்வத்துவத்தையும் சத்தியத்தையும் உணர்ந்துகொள்ளத் தவறுகிறார். இயேசு அவரைக் கடிந்துகொள்ளவில்லை. அவர் இரக்கமுள்ளவராயிருக்கிறார். அந்த இறுதி மாலையில் மாபெரும் சத்தியத்தை அவர்களுக்கு அறிவிக்கிறார். “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.” இந்தப் பொருள் செறிந்த வார்த்தையின் மூலமாக இயேசு தம்முடைய சீடர்களுக்கு முன்பாக இருந்த திரையைக் கிழித்தார். எந்த தரிசனமோ, கனவுகளோ இறைவனைக் குறித்த சத்தியத்தை வெளிப்படுத்தாது. இயேசு கிறிஸ்துவே இறைவனை வெளிப்படுத்துபவர். அவர் ஒரு முக்கியமான நபர் மட்டுமல்ல, அவரில் நாம் இறைவனைக் காண்கிறோம். இன்று நீங்கள் இறைவனை ஒரு தரிசனத்தில் காணும்போது இயேசுவைக் கண்டாலே அவரை அறிந்துகொள்வீர்கள். தோமாவும் இந்த வார்த்தைகளைக் கேட்டார், ஆனால் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் போனார். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுதான் அவர் நொறுக்கப்பட்டவராக “என் ஆண்டவரே, என் இறைவனே” என்று அவரைத் தொழுதுகொண்டார்.

யோவான் 14:10-11
10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். 11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

இயேசுவின் சீஷர்கள் நற்செய்தி முழுவதையும் மனப்பாடம் செய்தாலும், பரிசுத்த ஆவியினால் அவர்களுடைய இருதயம் மாற்றப்படாவிட்டால் அவருடைய அடிப்படைத் தன்மையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அவரை மங்கலாகத்தான் அவர்கள் காண்கிறார்கள். பிலிப்பு தம்முடைய தெய்வீகத்தை ஆழமாக விசுவாசிக்கத்தக்கதாக இயேசு ஒரு கேள்வியைக் கேட்டார். “நான் பிதாவில் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறாயா? என்னுடைய வாழ்வின் நோக்கமே பிதாவை மகிமைப்படுத்துவதுதான். நான் என் பிதாவில் இருக்கிறேன். என்னுடைய பிதா சரீரப்பிரகாரமாக என்னில் வாசமாயிருக்கிறார். தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் என்னில் வாசமாயிருக்கிறது. நான் பரிசுத்த ஆவியினால் பிறந்து, உங்கள் நடுவில் பாவமில்லாதவனாக வாழ்ந்தேன். நான் நித்தயகாலமாக அவரை அறிந்திருக்கிறேன். அந்த அறிவே என்னில் மனுவுருவாகியுள்ளது. என்னில் அவர் தம்முடைய தகப்பன் தன்மையையும் முழுமையான இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்.”

“இவற்றிற்கு என்னிடத்தில் ஆதாரங்கள் உண்டு: என்னுடைய அதிகாரபூர்வமான வார்த்தைகளும் தெய்வீக செயல்களுமே அவ்வாதாரங்கள் ஆகும். பிதா என்னில் இருக்கிறார் என்பதை விசுவாசிப்பது உங்களுக்குக் கடினமாயிருந்தால், என்னுடைய வார்த்தைகளைக் கவனித்துக் கேளுங்கள். அவற்றின் மூலமாக பிதா உங்களிடம் பேசுகிறார். அந்த வார்த்தைகள் உங்களுக்கு ஜீவனையும், வல்லமையையும், தைரியத்தையும் தருகிறது. நீங்கள் என்னுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் என்னுடைய செயல்களைப் பாருங்கள். இறைவனே அச்செயல்கள் மூலமாக உங்கள் நடுவில் தன் தெய்வீகக் கிரியைகளை நடப்பிக்கிறார். தொலைந்துபோன உங்களை என் மூலமாக அவர் இரட்சிக்கிறார். என்னுடைய சிலுவை மரணத்தின்போது இறைவனுடைய மாபெரும் செயலை நீங்கள் காண்பீர்கள். இறைவன் முழு மனுக்குலத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ளப் போகிறார். உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். உங்கள் காதுகளை அடைத்துக்கொள்ளாதீர்கள். சிலுவையில் அறையப்பட்டவரில் நீங்கள் இறைவனைக் காண்பீர்கள். உங்களை நியாயம் தீர்க்காமல் உங்களை இரட்சிக்கிற உண்மையான இறைவன் அவரே.”

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய கிருபையினால், “என்னுடைய இறைவனே, என் ஆண்டவரே” என்று நான் உம்மை நோக்கிச் சொல்கிறேன். என்னுடைய அவிசுவாசத்தையும் அன்புக் குறைவையும் எனக்கு மன்னித்தருளும். உம்மைக் குறித்த அறிவு மரணத்திற்கு ஏதுவாக இல்லாமல் ஜீவனுக்கேதுவாக இருக்கும்படி, நான் உம்மில் பிதாவைக் கண்டு, அவருடைய அன்பின் சாயலில் மறுரூபமாகும்படி என்னுடைய உள்ளான கண்களை பரிசுத்த ஆவியானவரினால் திறந்தருளும். உம்முடைய மகிமையின் சாரத்தை அவிசுவாசிகளுக்கு வெளிப்படுத்தும், அப்போது அவர்கள் தங்கள் விசுவாசத்தினால் புதுவாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள்.

கேள்வி:

  1. கிறிஸ்துவுக்கும் பிதாவாகிய இறைவனுக்கும் இடையிலான உறவு என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:52 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)