Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 083 (The traitor exposed and disconcerted)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஆ - கர்த்தருடைய பந்தியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் (யோவான் 13:1-38)

2. துரோகி வெளிப்படுத்தப்படுகிறான் (யோவான் 13:18-32)


யோவான் 13:21-22
21 இயேசு இவைகளைச் சொன்னபின்பு. ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். 22 அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.

இயேசு பரஸ்பர அன்பு மற்றும் சேவையைப் பற்றி தம்முடைய சீஷர்களுக்குப் போதித்தார். தாழ்மை மற்றும் சாந்தத்தின் மாதிரியாக அவர் அவர்களுக்கு முன்பாக நின்றார். அவருடைய மரண நேரத்தில்கூட அனைத்து நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துபவர் என்பதை அவர்கள் அறியும்படி தம்முடைய பெலவீன நேரத்திலும் சர்வாதிகாரம் தெளிவாக விளங்கும் என்று அவர்களுக்கு முன்னுரைத்தார். இந்த விளக்கத்தின் ஒரு பகுதியாகவே யூதாஸின் தீமையான இரகசிய திட்டத்தையும் வெளிப்படுத்தினார். இதன் மூலமாக அவனுடைய செயல்பாடு அவனுடைய சொந்த திட்டத்தினால் அல்ல இறைவனுடைய திட்டத்திற்கு உட்பட்டே செயல்படுகிறது என்பதை அவனும் அறிந்துகொண்டான்.

இயேசு தம்முடைய சீஷர்களின் ஒருவன் தம்மை யூத சங்கத்திடம் காட்டிக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளான் என்பதை வெளிப்படுத்தினார். ஒரு மகிழ்ச்சியான திருவிழாவின் நடுவில் இயேசு இந்த அறிவித்தலைக் கூறினார். இயேசு இதைச் சாதாரணமான ஒரு உண்மையாகத் தெரிவிக்காமல், லாசருவினுடைய கல்லறையினருகிலேயே தம்முடைய ஆவியில் கலக்கமுற்ற காரணத்தினால் இப்படிக் கூறுகிறார். தம்முடைய பிதா தம்மைக் கைவிட்டுவிடுவார் என்பது குறிப்பாக அவருக்குக் கலக்கத்தை உண்டுபண்ணியது. இயேசு யூதாûஸ நேசித்துத் தெரிந்துகொண்டிருந்தார். தெரிந்துகொள்ளப்பட்ட நண்பன் ஒருவன் தம்மைக் காட்டிக்கொடுப்பான் என்பது மிகவும் கடினமாயிருந்தது. இதைப்பற்றி வேதாகமம் சங்கீதம் 41:9-ல் ஏற்கனவே பேசியிருக்கிறது : “என் பிராண சிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.” இதைக் கேட்டு சீடர்கள் தங்களுக்குள் ஒவ்வொருவனையும் பார்த்து “இவன்தான் அந்தத் துரோகியா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். தங்களில் யாரும் இயேசுவைக் காட்டிக்கொடுப்பான் என்பதை அவர்களால் நம்பமுடியாதிருந்தது. ஆனால் அவருக்கு நிந்தையும் புறக்கணிப்பும் ஆரம்பித்தபோது, எவ்வளவு சீக்கிரமாக அவரைவிட்டு விலகிப்போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக விலகிப்போனார்கள். தங்களுடைய உண்மை நிலை வெளிப்படுத்தப்பட்டதைப் பார்த்து, வெட்கமைந்து, இயேசுவின் உள்ளங்களை ஆராயும் வெளிச்சத்தைச் சந்திக்கக்கூடாதவர்களாயிருந்தார்கள்.

யோவான் 13:23-30
23 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 24 யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 25 அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். 26 இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். 27 அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். 28 அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை. 29 யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். 30 அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.

இயேசுவைக் காட்டிக்கொடுத்தலைப் பற்றி பேசப்படும் இந்தச் சூழ்நிலையிலும் அருமையான அன்பின் காட்சியைப் பற்றி வாசிக்கிறோம். யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். யோவான் தன்னுடைய பெயரை இந்த நற்செய்தி நூலில் ஒருமுறைகூட எழுதவில்லை. ஆனால் அன்பின் அடையாளமாக அவர் இயேசுவுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை முக்கியமாகக் குறிப்பிடுகிறார். அவர் இயேசுவினால் அன்பு செய்யப்படுவதைவிட மேலான ஆசீர்வாதம் அவருக்கு வேறு எதுவுமில்லை. இந்தவகையில் யோவான் தன்னுடைய சொந்தப் பெயரை மறைத்து இறைமகனுடைய பெயரை மகிகைப்படுத்துகிறார்.

துரோகி யார் என்பதை நேரடியாகக் கேட்க பேதுரு தயங்கினாலும் அவரால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. காட்டிக்கொடுப்பவன் யார் என்பதைக் கேட்கும்படி யோவானிடம் சைகை காட்டினார். யோவான் இயேசுவிடம் குனிந்து, “காட்டிக்கொடுப்பவன் யார்?” என்று கேட்டார்.

இயேசு அந்தக் கேள்விக்கு அமைதியான முறையில் பதிலுரைத்தார். காட்டிக்கொடுப்பவனுடைய பெயரைச் சொல்லாமல் ஒரு செய்கையின் மூலமாக அதை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இயேசு காட்டிக்கொடுப்பவனின் பெயரை வெளிப்படையாகக் கூற விரும்பவில்லை. யூதாஸ் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பிருந்தது. இயேசு அப்பத்தைப் பிட்டு அதைப் பாத்திரத்தில் தோய்த்து யூதாஸிடம் கொடுத்ததன் மூலம் அவனுக்கு அவர்களுடன் இருக்கும் ஐக்கியமாகிய கிருபை நீக்கப்பட்டது. இந்தச் செயலின் நோக்கம் ஒரு சீடனை நித்திய வாழ்விற்கு நேராக உறுதிப்படுத்துவதே. யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டபடியால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட அந்த அப்பத்துண்டு அவனைக் கடினப்படுத்தியது. கிருபை நுழையாதபடி அவனுடைய இருதயம் மூடிக்கொண்டது. சாத்தான் அவனுடைய இருதயத்திற்குள் நுழைந்தான். எவ்வளவு பயங்கரமான எதிர்காலம்? இயேசு தன்னுடைய சர்வாதிகாரத்தினால் கடின மனதுள்ளவனைக் கடினப்படுத்தினான். இயேசு அவனுக்கு அப்பத்துண்டைக் கொடுத்தபோது சாத்தான் அவனுடைய சிந்தனைகளை ஆட்கொண்டான். அவன் அப்பத்துண்டைப் பெற்றுக்கொண்டபிறகு அவன் மீது தீமை இறங்கியது. இயேசுவின் நியாயத்தீர்ப்பின் காரணமாக அவனைச் சுற்றியிருந்த தெய்வீக பாதுகாப்பு அகற்றப்பட்டது. அவன் சாத்தானுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டான்.

திடீரென்று அந்த அப்பத்துண்டை வாங்கும்போது அவன் வெளிப்படுத்தப்பட்டதைக் கண்டுகொண்டான். இயேசுவின் கட்டளை அவனுக்குக் கொடுக்கப்பட்டது. “உன்னுடைய தீய எண்ணங்களை நீ நடைமுறைப்படுத்து. தீமை தன்னுடைய காரியத்தை நிறைவேற்றும்படி காரியங்களை சீக்கிரமாய் செய். அதிலிருந்து நன்மை தோன்றும்.”

இயேசு யூதாஸ் ஏன் சீக்கிரமாக அனுப்பினார் என்பதை சீஷர்கள் அறிந்துகொள்ளவில்லை. வழக்கமாக யூதாûஸ அனைவருக்கும் உணவு வாங்க அனுப்புவதுண்டு. இயேசுவின் வெளிச்சத்தைவிட்டு இருளை நோக்கிச் சென்றபோது காணப்பட்ட யூதாஸின் பயங்கர தோற்றத்தை யோவானால் மறக்க முடியவில்லை.

யோவான் 13:31-32
31 அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். 32 தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.

இந்தத் துரோகச் செயலில் இயேசு எவ்வாறு மகிமைப்படுத்தியது? தீய செயல்களிலிருந்து எப்படி நன்மை பிறக்கமுடியும்?

இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட அவருடைய சீடன் அவரைக் கைவிட்டுவிட்டதால் அவர் துக்கப்பட்டார். அவரைக் காட்டிக்கொடுப்பவன் திரும்பிவிடாதபடி இயேசு தன்னுடைய அன்பின் பார்வையைக் கட்டுப்படுத்தினார். ஆனால் அவன் இயேசுவை இரவில் கைதுசெய்யும்படி ஆயுதம் தரித்த போர்ச் சேவகர்களுடன் ஆயத்தமாயிருந்த யூத ஆலோசனைச் சங்கத்திற்கு நேராகச் சென்றான்.

இயேசு தம்மைக் காட்டிக்கொடுக்கும்படி யூதாûஸ அனுப்பிவிட்டபோது அரசியல் மேசியாவாக வேண்டும் என்ற பேய்த்தனமான சோதனையை எதிர்த்து மேற்கொண்டார். அவர் தாழ்மையினாலும் சாந்தத்தினாலும் மனுக்குலத்தை மீட்கும்படி ஆட்டுக்குட்டியாக மரிப்பதற்கு ஆயத்தமாயிருந்தார். அதன்மூலம் தியாகமான மரணமே அவருடைய மகிமையின் சாரம் என்று அறிவித்தார்.

இயேசு தம்முடைய மகிமையைத் தேடாமல் தமது மரணத்தின் மூலமாகப் பிதாவின் மகிமையைத் தேடினார். இழந்துபோனவர்களை இரட்சிப்பதற்காக அவருடைய பிதா அவரை உலகத்திற்கு அனுப்பினார். விழுந்துபோன மனுக்குலத்தில் பிதாவின் சாயலைப் புதுப்பிக்க குமாரன் விரும்பினார். இந்தப் புதுப்பித்தலுக்காக இயேசு பிதாவை வெளிப்படுத்தி, இறைவனுடைய நன்மையை அவர்கள் விசுவாசிக்கும்படி அவர்களை ஊக்கப்படுத்தினார். மக்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலமாக மட்டுமே மாற்றத்தை உண்டுபண்ண முடியாது. ஏனெனில் பாவம் இறைவனுக்கும் அவரது படைப்புகளுக்கும் இடையில் ஒரு பிரிவினையை உண்டுபண்ணியிருக்கிறது. இறைவனையும் நம்மையும் பிரிக்கும் தடை நீக்கப்படுவதற்கும், நீதியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கும் குமாரன் மரிக்க வேண்டும். பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்துவதற்கு குமாரனுடைய மரணமே முக்கியமானது. அந்த மரணமில்லாமல் யாரும் பிதாவை அறிந்துகொள்ள முடியாது, யாரும் அவருடைய பிள்ளைகள் ஆக முடியாது, யாரும் புதுப்பிக்கப்பட முடியாது.

தம்முடைய மரணத்தின் மூலமாக பிதாவுக்கு மகிமையைக் கொண்டுவரும்படி, இயேசு தம்மையே வெறுத்தார். அதன் மூலம் தான் அனைவருக்கும் வரங்களைக் கொடுக்கும்படி தனக்கு பிதா அனைத்து மகிமையையும் தருவார் என்றும் அறிவித்தார். அவர் கைது செய்யப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் முன்பாக தன்னுடைய உயிர்த்தெழுதலையும் பரமேறுதலையும் இயேசு கண்டார். கிறிஸ்து மகிமையில் நுழைவதற்காக மரிக்க வேண்டியிருந்தது.

இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் புறக்கணிப்பவர்கள் அனைவரும் அல்லது அவை அவருடைய பெலவீனத்தின் அடையாளம் என்று கருதுபவர்கள் அனைவரும் சிலுவையில் நிறைவேறிய இறைவனுடைய சித்தத்தையும், கல்லறையைத் திறந்த குமாரனுடைய பரிசுத்தத்தையும் உணரத் தவறுகிறார்கள். அவரை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் நீதிமான்களாக்கப்படும்படியாக அவர்களுக்காக அவர் தன்னை சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தபோது அவர் தம்முடைய மகிமையைக் காண்பித்தார்.

விண்ணப்பம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரே, உம்முடைய இரட்சிப்பு, தாழ்மை, பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்காக நாங்கள் உம்மை உயர்த்துகிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டோம் என்பதை நாங்கள் நம்புகிறோம். ஆவியானவரின் வல்லமையினால் நாங்கள் உமக்கு மகிமையைச் செலுத்துகிறோம். வாழ்வில் வேதனைகள் போராட்டங்கள் நடுவிலும் நீர் எங்களைக் காப்பாற்றுகிறீர். நீர் எங்களுக்குக் கொடுக்கும் வாழ்வு நித்திய வாழ்வு. உம்முடைய குமாரன் சீக்கிரமாக மகிமையில் தோன்றுவார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆமென்.

கேள்வி:

  1. யூதாஸ் இயேசுவை விட்டுப் போனபோது எவ்விதமாக கிறிஸ்து தன்னுடைய மகிமையை வெளிப்படுத்தினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:49 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)