Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 081 (Jesus washes his disciples' feet)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
ஆ - கர்த்தருடைய பந்தியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் (யோவான் 13:1-38)

1. இயேசு தன்னுடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவுகிறார் (யோவான் 13:1–17)


யோவான் 13:1-5
1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். 2 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்; 3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; 4 போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, 5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

இந்த அதிகாரத்திலிருந்து யோவான் நற்செய்தியின் ஒரு புதிய நிலைக்கும் ஒரு புதிய செய்திக்கும் முன்னேறிச் செல்கிறார். இதுவரை அவர் பொதுமக்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். “வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது; ஆனால் இருளோ அதைப் பற்றிக்கொள்ளவில்லை” என்பது அவர்களுடைய வாழ்க்கையில் நிருபணமானது. அப்படியானால் இயேசு தோல்வியடைந்து விட்டாரா? இல்லை! பொதுமக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவரை விசுவாசித்து ஆயத்தமாயிருந்த ஒரு கூட்டத்தை அவர் தம்முடைய சீடர்களாகச் சேர்த்து வைத்திருந்திருந்தார். இந்த அதிகாரங்களில் ஒரு மணவாளன் மணவாட்டியினிடத்தில் பேசுவதுபோல தெரிந்துகொள்ளப்பட்டவர்களிடம் இயேசு பேசுகிறார். அவர் அவர்களுடையவராயிருப்பதுபோல அவர்களும் அவருடையவர்களாயிருக்கிறார்கள். இயேசுவின் இந்தச் சொற்பொழிவுகளில் இறைவனுடைய அன்பே கருப்பொருளாயிருக்கிறது. இந்த அன்பு வெறும் சுயநலமான உணர்ச்சியாக இல்லாமல் சேவைக்கான அழைப்பாக இருக்கிறது. வேதாகமத்தில் அன்பு என்பது தகுதியற்றவர்களுக்காக நம்மை தாழ்மையுடன் ஒப்புக்கொடுப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களில் இயேசு தம்முடைய குணாதிசயங்களில் சிறப்பானதைத் தம்முடைய சீடர்களுக்கு விளக்குகிறார். ஒரு வேலைக்காரன் என்ற உருவகத்தின் மூலமாக அவருடைய வாழ்வு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசுகிறார்.

அடுத்த பஸ்காவிற்கு முன்பாக தான் மரிக்கப்போவதாக அவர் தம்முடைய சீடர்களிடம் சொன்னார். அவர் தம்முடைய பிதாவினிடத்தில் செல்கிறார். இதுதான் உங்கள் வாழ்வில் திசையாகவும் இருக்கிறதா? அவர் இந்த உலகத்தில் இருந்தபோதிலும் அவருடைய பார்வை எப்போதும் தம்முடைய பிதாவை நோக்கியதாயிருந்தது. வல்லமையும், வழிகாட்டுதலும், சந்தோஷமும், தீய மனிதர்களுடன் போராடும் திறனும் அங்கிருந்தே அவருக்குக் கிடைத்தது. தம்முடைய பிதாவுடன் இருந்த ஐக்கியத்தினால் தமது சீடர்களில் ஒருவன் சாத்தானை தன்னுடைய இருதயத்தில் ஆராதிக்கிறான் என்பதையும் அவர் கண்டார். அந்த மனிதன், பொருளாசை, பெருமை, வெறுப்பு போன்ற தன்னுடைய பாவங்களை மெதுவாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். ஆயினும் அந்தத் துரோகியையும் இயேசு வெறுக்காமல், இறுதிவரை அவரை நேசித்தார்.

அந்தத் துரோகியின் செயலுக்கு இயேசு வேறு வழியில்லாமல் விட்டுக்கொடுக்கவில்லை. யூதாúஸô, காய்பாவோ, பிலாத்துவோ, யூதமதத் தலைவர்களோ அல்லது மக்கள் கூட்டமோ என்ன நடக்கப்போகிறது என்பதைத் தீர்மானிக்கவில்லை. குமாரன் தம்முடைய பிதாவுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த காரணத்தினால் அவர் அனைத்து ஆவிகளையும் மனிதர்களையும் கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுத்தார். இந்த பயங்கரமான நிகழ்ச்சிகள் வழியாகக் கடந்து வரும்போது இவையனைத்துக்கும் தோற்றுவாயாகிய பிதாவையே இயேசு நோக்கிக்கொண்டிருந்தார். நடக்க வேண்டிய நிகழ்ச்சிகளின் கால அட்டவணைப்படி அவர் இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக மரிப்பதற்கு ஆயத்தமாயிருந்தார். இயேசுவே வரலாற்றின் போக்கை மாற்றும் ஆண்டவராயிருக்கிறார்.

இயேசு தான் மட்டும் தம்முடைய பிதாவினிடத்தில் செல்வதை விரும்பாமல் தம்முடைய சீடர்களும் இறைவனுடைய நல்ல சித்தத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்பினார். நடைமுறையில் தெய்வீக அன்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காண்பிப்பதற்காக தாழ்மையின் அடையாளம் ஒன்றைப் பயன்படுத்தினார். அவர் ஒரு வேலைக்காரனைப் போல தம்முடைய சீடர்களின் பாதங்களைக் கழுவி அவற்றைத் துடைத்தார். அவர்கள் நடுவில் அவர் தன்னைத் தாழ்த்திய இந்தச் செயலின் மூலமாக இறைவன் மனுக்குலத்திற்குச் சேவை செய்கிறார் என்பதைப் புரிய வைத்தார். கர்த்தர் இறுமாப்பாய் ஆண்டுகொள்பவர் அல்ல, முழங்கால்படியிட்டு நம்மைச் சுத்திகரித்து அவருடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுத்துகிறார்.

இயேசுவே நம்முடைய மேலான உதாரணம். நாம் எப்போது அவருக்கு முன்பாக விழுந்த அவரை ஆராதிப்போம்? நாம் எப்போது நம்முடைய வணங்காத தலைகளையும் கடினமான கழுத்துகளையும் அவருக்கு முன்பாக முடக்குவோம்?

சகோதரனே நீங்கள் உடைக்கப்படாதவராக, உங்கள் சகோதரருக்குச் சேவை செய்யாதவராக, உங்கள் எதிரிகளை நேசிக்காதவராக, காயப்பட்டவர்களுக்கு காயம்கட்டாதவர்களாக இருக்கும்வரை நீங்கள் உண்மையான கிறிஸ்தவராக இருக்க முடியாது. நீங்கள் வேலைக்காரனா அல்லது எஜமானா? இயேசு எல்லா மக்களுக்கும் வேலைக்காரனாகவும், உங்களுக்குச் சேவைசெய்ய தன்னை தாழ்த்துபவராகவும் இருக்கிறார் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த சேவையை ஏற்றுக்கொள்ளும்படி உங்களைத் தாழ்த்துவீர்களா? அல்லது பெருமையுடன் அது உங்களுக்குத் தேவையில்லை என்று கூறுவீர்களா?

யோவான் 13:6-11
6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். 7 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். 8 பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். 9 அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான். 10 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். 11 தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.

தங்களுடைய போதகர் தங்கள் கால்களைக் கழுவியபோது இயேசுவின் சீடர்கள் சங்கடப்பட்டார்கள். “கர்த்தருடைய பந்திக்குப்” பிறகு அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தால் அவர்கள் தாங்காளாகவே முன்வந்து ஒருவர் மற்றொருவருடைய பாதங்களைக் கழுவியிருப்பார்கள். அவர்களுடைய ஆண்டவர் அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தியதோடு நின்று விடாமல், அதன் உட்பொருளையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்திக் காண்பித்தார். அது அன்புள்ள சேவையேயன்றி வேறல்ல.

சீடர்களில் பேதுருதான் பெருமையும் அதிக வைராக்கியமும் உடையவர். அவர் இயேசுவின் சேவையைத் தடுத்தார். அவருடைய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளாமல், அவரைத் தடுக்கப்பார்த்தார். அப்போது இயேசு கால் கழுவுவதன் இரகசியத்தை அவருடைய சீடர்களுக்கு அறிவித்தார். அது அவர் நம்மிடத்தில் பேசுவதைப் போல் உள்ளது. “உங்கள் கால்களை நான் கழுவாவிட்டால் இராஜ்யத்தில் உங்களுக்குப் பங்கில்லை. உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாமல் நீங்கள் என்னில் நிலைத்திருக்க முடியாது.” அவருடைய இரத்தத்தினால் நாம் தொடர்ந்து கழுவப்பட வேண்டும். அந்த சுத்திகரிப்பில் நிலைத்திருத்தல் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். அவரே உங்களைக் கிருபையினால் பாதகாத்து, இறைவனோடு தொடர்ந்து ஐக்கியப்படுத்துகிறவர்.

இதைக் கேட்டவுடன் இயேசுவைத் தடைசெய்த தன்னுடைய கரங்களை வேதனையுடன் பார்த்தார், இறைவனுடைய திட்டத்தைப் புரிந்துகொள்வதில் மந்தமாயுள்ள தன்னுடைய புத்தியையும் எண்ணி வருந்தினார். அவர் வெட்கமடைந்தவராய் தன்னை முழுவதுமாக சுத்திகரிக்கும்படி கேட்டுக் கொண்டார். “என்னிடத்தில் வருகிற எவரும் தங்களுடைய விசுவாசத்தினால் தூய்மையாகி முழுமையடைகிறார்கள்” என்று மறுபடியும் இயேசு உறுதிப்படுத்தினார். இதன் மூலமாக இயேசுவின் இரத்தம் நம்மை அனைத்துப் பாவங்களிலிருந்தும் சுத்திகரிப்பதால், அதற்குமேல் சிறப்பான சுத்திகரிப்போ, கூடுதல் பரிசுத்தமோ நமக்குத் தேவையில்லை என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினால் உண்டாகும் பாவமன்னிப்பைவிட மேலான பரிசுத்தம் வேறு எதுவும் இல்லை. அனுதினம் நடக்கும்போது நம்மில் தூசிபடிவதைச் சுத்திகரிப்பதைப் போல நாம் தினமும் “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்” என்று விண்ணப்பிக்கிறோம். இறைவனுடைய பிள்ளைகள் தங்கள் கால்களை மட்டும் கழுவினால் போதும். இந்த உலகத்தின் பிள்ளைகளுக்கோ முழுமையான சுத்திகரிப்பு அவசியம்.

இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து “நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்” என்று கூறினார். அவர்கள் இறைவனுடன் உடன்படிக்கை செய்யும்படி அவர்களை அழைக்கிறார். தெய்வீக ஐக்கியத்தில் அவர்கள் நிலைத்திருக்கும்படி ஆட்டுக்குட்டியாகிய அவர் அவர்களுக்காக மரித்திருக்கிறார். எந்த மனிதனும் தன்னில்தான் சுத்தமுள்ளவனல்ல, கிறிஸ்துவின் இரத்தமே நம்முடைய பாவங்கள் அனைத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். இன்று போலவே அன்றும் அவரைப் பின்பற்றிய அனைவரும் சுத்தமுள்ளவர்களாயிருக்கவில்லை. சிலர் உதட்டளவில் இந்த சுத்திகரிப்பைப் பற்றி பேசினாலும், கிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசிக்கிறவர்களைப் போல அவர்கள் நடந்துகொண்டாலும், அவர்களில் பரிசுத்த ஆவியானவர் இல்லை. வெறுப்பு, பொறாமை, பெருமை, விபச்சாரம் போன்ற பாவங்களை சாத்தானுடைய ஆவி இவர்களில் தூண்டிவிடுகிறது. ஆகவே பக்தியுள்ளவர்கள் நடுவில் ஈனமானவர்களையும் பொருளாசையுள்ளவர்களையும் நீங்கள் எப்போதும் காணலாம். நீங்கள் இறைவனோடு ஐக்கியப்படும்படியாக முழுவதுமாக அவர் உங்களைச் சுத்திகரித்து, அனுதினமும் உங்கள் பாதங்களைக் கழுவி, அனைத்துப் பாவங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கிறார். நீங்கள் வேலைக்காரனாக இருக்கிறீர்களா அல்லது எஜமானாக இருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் உம்முடைய மகிமையை விட்டு உம்மை வெறுமையாக்கி, அசுத்தர்களாகிய எங்களிடத்திற்கு இறங்கி வந்ததற்காக உமக்கு நன்றி. நீர் குனிந்து உம்முடைய சீடர்களின் பாதங்களைக் கழுவினீர். எங்கள் பாவங்களிலிருந்து எங்கள் இருதயத்தைச் சுத்திகரித்தீர். உம்முடைய வேலைக்காரராக நாங்கள் உம்மை வந்து பணிந்துகொள்ளும்படி நீர் எங்களுடைய பெருமைகளை எல்லாம் எங்களை விட்டு அகற்றும். அனைவரிலும் சிறியவனாக மாறி திருச்சபையிலும் குடும்பத்திலும் பணிசெய்ய எனக்கு உதவிபுரியும்.

கேள்வி:

  1. இயேசு தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவியதன் பொருள் என்ன?

யோவான் 13:12-17
12 அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு. தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? 13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். 14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். 15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். 16 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. 17 நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

இயேசு தம்முடைய பிரியாவிடை உரையை வெறும் வார்த்தைகளினால் ஆரம்பிக்கவில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகள் செயலில் காண்பிக்கப்படாதவரை அவற்றிற்கு எந்தப் பயனும் இல்லை. அவருடைய அடையாளச் செயலின் பொருளை சீடர்கள் புரிந்துகொண்டார்களா என்று அவர் கேட்டார். “உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள், நான் உங்களில் ஒருவனாயிருக்கிறேன். நான் உங்களுக்கு முன்பாக சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டு, நீங்கள் எனக்கு முன்பாக அடிமைகளைப் போல குனிந்து நிற்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இல்லை! நான் என்னுடைய மகிமையைத் துறந்து உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். அதிலும் மேலாக நான் ஒரு போதகராகவும் ஆண்டவராகவும் இருந்தும் ஒரு வேலைக்காரனுடைய நிலையை எடுத்திருக்கிறேன். தெய்வீக அன்பு எவ்விதமாகச் செயல்படுகிறது என்பதை நீங்கள் இப்போது புரிந்துகொள்கிறீர்களா? பெருமைக்காரன் தன்னையே புகழ்ந்து பேசுகிறான். அன்புள்ளவன் தன்னைத் தாழ்த்தி, அனைத்தையும் தாங்கி, தன்னை வெறுத்து மற்றவர்களுக்கு சரீரப்பிரகாரமாகவும் நடைமுறையிலும் உதவிசெய்கிறான்.”

“நீங்கள் என்னுடைய சீடர்களாயிருக்க வேண்டுமெனில், வார்த்தையினால் மட்டுமல்ல செயலினாலும் காண்பிக்கும் என்னைப் பின்பற்றுங்கள். நீங்கள் என்னைப் பின்பற்றி வரவிரும்பினால் உங்களைத் தாழ்த்தி மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள். உங்களில் முதன்மையாக இருக்கிறவன் மிகவும் சிறியவனாக இருப்பான். மற்றவர்களுக்குச் சேவைசெய்து அமைதியாக இருப்பவனே உண்மையில் பெரியவன்.”

“திருச்சபை என்பது பூரண பரிசுத்தவான்களின் கூட்டம் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் அனைவருமே மாற்றமடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நான் தூய்மைப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் கொள்கைப்படி பரிசுத்தவான்களே. ஆனால் ஒவ்வொரு அங்கத்துவர்களுக்கும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பொறுமையும் காலமும் தேவையாயிருக்கிறது. அனைவருமே தவறுவதும் இடறுவதும் இயற்கை. நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளை இதுதான்: உங்கள் பாவங்களையும் தவறுகளையும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஒருவரையொருவர் நியாயம்தீர்க்காமல் ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். மற்றவர்களுடைய தலைகளை அல்ல, கால்களைக் கழுவுங்கள். ஒருவரும் மற்றவரை இறுமாப்பாக நடத்தக்கூடாது, நீங்கள் அனைவரும் சகோதரர்கள். இவ்விதமாக நீங்கள் நடக்கும்போது நீங்கள் என்னைப் பின்பற்றுவீர்கள். நான் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யும்படி வந்தேன். என்னுடைய வாழ்வே சேவையும், தியாகமும், மற்றவர்களுக்கான ஒப்புக்கொடுத்தலுமே ஆகும்.”

“அன்பின் அப்போஸ்தலர்களாக நான் உங்களை உலகத்திற்குள் அனுப்புகிறேன். அனுப்பப்பட்டவன் அனுப்புகிறவனைவிடப் பெரியவன் அல்ல. உங்கள் முதல் கடமை என்னைப்போல ஒரு வேலையாளாக மாற வேண்டும் என்பதே. இதை நீங்கள் புரிந்துகொண்டால் கிறிஸ்தவம் எது என்பது உங்களுக்குப் புரிந்துவிடும்.”

“இதை அறிந்திருக்கிற நீங்கள் இதை நடைமுறைப்படுத்துவீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். இதை நான் வெறும் வார்த்தைகளினால் சொல்லாமல் செய்கையில் காண்பித்திருக்கிறேன். உண்மையான ஆராதனை என்பது உழைப்பும் தியாகமும் ஆகும். வெறும் வார்த்தைகளும், விண்ணப்பங்களும், உணர்வுகளும் அல்ல. சேவை செய்ய வேண்டும் என்பதே ஒரு விசுவாசியை எப்போதும் உந்தித்தள்ளும் எண்ணமாயிருக்கும். இதிலிருந்துதான் அன்பின் செயல்கள் புறப்படுகின்றன. சேவை செய்யாதவன் விசுவாசியாக இருக்க முடியாது. செயலற்ற மனிதனுடைய விண்ணப்பங்கள் அனைத்தும் மாய்மாலமே. உங்களுடைய நற்செயல்கள் உங்களை இரட்சிக்காது. என்னுடைய இரத்தமே உங்களை இரட்சிக்கிறது. ஆனால் நீங்கள் துயரப்படுகிறவர்களுக்கும், பரதேசிகளுக்கும் தொடர்ச்சியாகச் சேவை செய்வீர்களானால் இறைவனுடைய மகிழ்ச்சியினால் நிறைந்திருப்பீர்கள். இறைவனுடைய நல்ல எண்ணங்கள் கிறிஸ்துவின் வேலையாட்களை வந்து நிரப்பும்.” சகோதரனே நீங்கள் போதகராகவும் எஜமானாகவும் மாற விரும்புகிறீர்களா? இயேசுவை நோக்கிப்பாருங்கள். அவர் இணையற்ற போதகர். ஆனால் அவர் உங்களுக்கு முன்பாக வேலைக்காரனாக நிற்கிறார். அவருடைய போதனைகளை நடைமுறைப்படுத்த விரும்புகிறீர்களா? இன்றே உங்கள் சேவையை ஆரம்பியுங்கள். நீங்கள் எவ்வாறு, எப்படி, யாருக்குச் சேவை செய்ய வேண்டும் என்று இறைவனிடம் கேளுங்கள். நீங்கள் அதை அறிந்திருப்பீர்களானால் அதைச் செய்வதால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள்.

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)