Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 078 (The Greeks seek Jesus' acquaintance)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
அ - பரிசுத்த வாரத்திற்கு முந்திய நிகழ்ச்சிகள் (யோவான் 11:55 - 12:50)

3. கிரேக்கர்கள் இயேசுவை அறியத் தேடுகிறார்கள் (யோவான் 12:20-26)


யோவான் 12:20-24
20 பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். 21 அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். 22 பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 23 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. 24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.

யூத மார்க்கத்தில் சேர்ந்திருந்த கிரேக்கர்களும் எருசலேமிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் கிரேக்க உலகத்திலிருந்து பஸ்கா பண்டிகைக்காக அங்கு வந்தனர். மக்கள் கூட்டம் இயேசுவை அரசனைப் போல வரவேற்றதைப் பார்த்த கிரேக்கர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆகவே அவர்கள் தாங்களும் அவரைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அவர்களுடைய இந்த வேண்டுகோளில் புறவினத்து மக்களுடைய விருப்பம் தெளிவாகக் காண்பிக்கப்படுகிறது. பிலிப்பு கிரேக்க மொழியைப் பேசுகிறவனாயிருந்தபடியால், முதலில் அவரிடம் சென்று பேசினார்கள். அவர் அந்திரேயாவிடம் காரியத்தைத் தெரிவித்தார். புறவினத்து மக்களிடத்திலிருந்து முதற்கனியாக அவர்கள் வந்தபடியால் அதிக மகிழ்ச்சியுடன் அவர்கள் இயேசுவிடம் அதைச் சொன்னார்கள். மதவெறிபிடித்த யூதர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு கிரேக்கர்களுடைய நாடுகளில் போய்த் தங்குவது வசதியாயிருக்கும் என்று அவர்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம்.

கிரேக்கர்களுடைய வேண்டுகோளில் உள்ள புறவினத்து மக்களின் ஏக்கத்தையும் சீஷர்களின் சிந்தனையையும் இயேசு அறிந்தார். “மனுஷ குமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது” என்ற மேன்மையான கூற்றை அவர் கூறினார். அதை அவர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், அது ஒரு வெற்றிக்கான அழைப்பாக இருந்தது. அதுதான் யோவான் நற்செய்தி நூலின் சுலோகமானது. அவர் மகிமைப்படும்படியான நேரம் வந்தது. வானமும் பூமியும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளை நெருங்கி வந்தது.

ஆயினும் போரில் கிடைக்கும் வெற்றியோ அரசியல் ஆக்கிரமிப்போ அவருடைய மகிமைக்கான அடையாங்கள் அல்ல என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். யோவான் மறுரூப மலையில் காணப்பட்ட இயேசுவின் மகிமையைக் குறித்துப் பேசவில்லை. அது இயேசுவின் அடிப்படையான மகிமை என்று அவர் கருதவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரணத்திற்கும் அவருடைய மகிமைக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து அவர் பேசுகிறார். சிலுவையில்தான் அவருடைய தெய்வீகத்தின் அடிப்படையாகிய அன்பைக் காண்கிறோம்.

பரத்திலிருந்து பூமியில் விழுந்த ஒரு கோதுமை மணியாக இயேசு தன்னைப் பார்த்தார். அவர் தன்னை வெறுமையாக்கியதால் நீதியையும் மகிமையையும் விளங்கப்பண்ணினார். இயேசு எப்போதுமே மகிமையானவர். தீமையுள்ள மனிதர்களாகிய நம்மை அவருடைய மரணம் மகிமைப்படுத்தி, அவருடைய மகத்துவத்தில் பங்கடைய அது நம்மைத் தகுதிப்படுத்துகிறது. கிரேக்கர்களுடைய அழைப்பு, அவர் அனைத்து இன மக்களையும் தன்னிடத்தில் அழைக்கிறார் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. அவர்களில் அவர் தன்னுடைய ஆதி மகிமையைப் புதுப்பிப்பார். அந்த மகிமை சிலுவையின் மூலமாகத்தான் அனைத்துப் படைப்புகளையும் ஊடுருவிச் செல்லும்.

யோவான் 12:25-26
25 தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். 26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

மரணத்தின் மூலமாக மகிமையைப் பெறும் தன்னுடைய வழி தமது சீஷர்களுக்கும் பொருந்தும் என்பதை இயேசு காண்பித்தார். குமாரன் எவ்வாறு மனுக்குலத்தை மீட்பதற்காக தன்னுடைய தெய்வீக மகிமையைத் துறந்து, இறைத் தன்மைகளைக் களைந்து தம்மை வெறுமையாக்கினாரோ, அவ்விதமாகவே நாமும் மேன்மையையோ புகழையோ விரும்பாமல் தொடர்ந்து நம்மை வெறுக்க வேண்டும். நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா அல்லது வெறுக்கிறீர்களா என்பதை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் உங்களைத் துறந்து அவருடைய இராஜ்யத்தில் உண்மையாகப் பணிசெய்வீர்களானால் தெய்வீக வாழ்வை நிச்சயமாகப் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் ஆன்மாவை நித்தியத்திற்காகக் காத்துக்கொள்வீர்கள். இந்த வார்த்தைகள் மூலமாக இயேசு மகிமைக்கான மெய்யான வழியைக் காண்பிக்கிறார். உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக வாழாதீர்கள். பெருமையோ சோம்பலோ உங்களுக்கு இருக்கக்கூடாது. இறைவனுடைய கட்டளைகளுக்குச் செவிகொடுத்து அவரிடத்தில் திரும்புங்கள். பரிதாபமானவர்களையும் கீழ் நிலையில் உள்ளவர்களையும் தேடி அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். இவ்விதமாகவே இயேசுவும் தன்னுடைய மகிமையைத் துறந்து இவ்வுலகத்திற்கு வந்து பாவிகளோடும் ஏழைகளோடும் பந்தியமர்ந்தார். நற்செய்தியினிமித்தமாக இப்படிப்பட்டவர்களுடன் நீங்கள் உங்கள் வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும்போது, இறைவனுடைய மகிமை உங்கள் வாழ்க்கையில் தோன்றும். நீங்கள் மற்றவர்களைவிடச் சிறந்தவர்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய தோல்விகள், தவறுகள் நடுவிலும் அவர் உங்களைப் பயன்படுத்த முடியும். சுய வெறுப்பின் மூலமாக மட்டுமே அந்த மாற்றம் ஏற்படும்.

நாம் இயேசுவுக்குச் சேவை செய்வது என்பது அவரைப் பின்பற்றி, அவரைப் போல் நாமும் அனுபவிப்பதில்தான் தங்கியுள்ளது என்பதையே இங்கு அவர் தெளிவுபடுத்துகிறார். மேன்மையையும் சுகபோகத்தையும், பெருமையையும் கிறிஸ்துவின் சீடர்கள் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் புறக்கணிப்பையும், எதிர்ப்புகளையும், பாடுகளையும் மரணத்தையுமே எதிர்பார்க்க முடியும். அவருடைய நாமத்திற்காக நீங்கள் பாடுஅனுபவிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? “நான் எங்கிருக்கிறேனோ அங்கு என்னுடைய சீஷர்களும் இருப்பார்கள்” என்று அவர் சொன்னார். பாடுகளின் பாதையில் அவர் நமக்கு முன்பு சென்றபடியால் அவர் நம்முடன் பாடுபடுகிறவராயிருக்கிறார். இந்தப் பிரயாணத்தில் வெளிப்படையான மகிமை என்பது கிறிஸ்துவின் பிள்ளைகளுக்குரியதல்ல. மற்றவர்களுடைய தேவைகளைச் சந்திப்பதே நம்முடைய மகிழ்ச்சி, நம்மைத் திருப்தி செய்வதில்லை. தியாகத்துடன் அவரைப் பின்பற்றுபவர்களின் ஆவியில்தான் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுகிறது. நாம் குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாறும்போது பிதாவின் நாமம் மகிமைப்படுகிறது.

இன்று கிறிஸ்து எவ்விதமாக பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்து அவருடன் ஒரு பரிபூரண ஐக்கியத்தை அனுபவிக்கிறாரோ அதைப்போல, அவர் நிமித்தமாக இன்று பாடுகளை அனுபவிக்கும் அவருடைய சீஷர்களும் ஒரு நாளிலே பிதாவுடன் இணைக்கப்படுவார்கள். இது ஒரு பெரிய இரகசியம். பிதா தன்னுடைய பிரியமான குமாரனுடைய சீஷர்களுக்கு எவ்விதமான கனத்தைக் கொடுப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? அவர் படைப்பில் இருந்ததைப் போல அவர்களிலுள்ள தன்னுடைய சாயலைப் புதுப்பிப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தம்முடைய ஆவியின் முழுமையில் அவர்கள் மீது இறங்குவார். அவர்கள் அவருடைய முதற்பேரான குமாரனாகிய கிறிஸ்துவைப் போல மாற்றப்படுவார்கள். அவர்கள் பரலோகத்தில் என்றென்றும் பிதாவுடன் இருப்பார்கள் (ரோமர் 8:29; வெளி. 21:3,4).

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் உம்முடைய மகிமையை அனுபவிக்காமல், உம்முடைய மேன்மைய விட்டு இறங்கி வந்தீர். அப்படிப்பட்ட உம்முடைய தாழ்மைக்காக நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். சுய திருப்தியிலிருந்து நீர் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்வில் உம்முடைய அன்பை அறிந்து, விடுதலையுடன் உமக்குச் சேவைசெய்யும்படி எங்களுக்கு நீர் அருள்புரியும்.

கேள்வி:

  1. கிறிஸ்துவின் மரணமே சத்தியத்தின் மகிமையாக ஏன் கருதப்படுகிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:41 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)