Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 076 (Jesus anointed in Bethany)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
அ - பரிசுத்த வாரத்திற்கு முந்திய நிகழ்ச்சிகள் (யோவான் 11:55 - 12:50)

1. இயேசு பெத்தானியாவில் அபிஷேகம் செய்யப்படுதல் (யோவான் 11:55 – 12:8)


யோவான் 11:55-57
55 யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். 57 பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.

பழைய ஏற்பாட்டின் முக்கிய பண்டிகை பஸ்கா பண்டிகையாகும். எகிப்தில் எபிரெயர்கள் அனுபவித்த தேவகோபாக்கினையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டது அப்பண்டிகையில் கொண்டாடப்பட்டது. அவர்களுக்குக் கிடைத்த விடுதலையின் மூலமாக அவர்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட தெய்வீக ஆட்டுக்குட்டியின் பாதுகாப்பின்கீழ் அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களாக இருந்தபோதிலும் அவர்களுடைய விசுவாசத்தின் நிமித்தம் காக்கப்பட்டார்கள்.

இறைவன் தங்களை தன்னுடைய கோபத்திலிருந்து பாதுகாத்ததற்காக நன்றி செலுத்தும்படி யூதர்கள் வருடந்தோறும் எருசலேமிற்குச் செல்வார்கள். அவர்கள் எண்ணற்ற ஆட்டுக்குட்டிகளைக் கொன்று தின்பார்கள். பலர் சற்று முன்பாகவே எருசலேமிற்குச் சென்று, இறைவனுடைய ஆட்டுக்குட்டியுடன் இணைக்கப்படுவதற்கு மனந்திரும்பி, பஸ்காவிற்காக ஆயத்தப்படுவார்கள். அவர்களில் யாராவது பிணத்தைத் தொட்டுவிட்டால், அவர்கள் தேவாலயத்திற்குள் நுழைவதற்குத் தகுதியடையும்படி ஏழுநாட்களுக்கு தொடர்ச்சியான சுத்திகரிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் (எண். 19:11).

இந்தச் சூழ்நிலையில் எருசலேமிற்கு வந்திருந்த யூதர்கள் “அவர் எருசலேமிற்கு வருவாரா, இல்லையா?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். சயமத் தலைவர்களின் சங்கம் இயேசுவைக் கொல்லத்திட்டமிட்டுள்ளது என்பதும் அவர்களுக்குத் தெரியும். இயேசுவின் நடமாட்டைத்தைக் கண்காணித்துத் தங்களுக்கு தகவல் தரும்படிய உளவாளிகளையும் அத்தலைவர்கள் நியமித்திருந்தனர். இயேசுவை விழுங்குவதற்கு மரணத்தின் வாய் திறந்திருந்தது.

யோவான் 12:1-3
1 பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். 2 அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். 3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.

இயேசு தன்னுடைய எதிரிகளுடைய தந்திரத்தைக் கண்டு பயப்படவில்லை. தன்னுடைய பிதாவின் சித்தத்தின்படி அவர் எருசலேமை நோக்கிய தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். அவர் மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள நாடாமல், பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே எருசலேமிற்குத் திரும்பி வந்தார். எருசலேமிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த பெத்தானியா வழியாக அவர் பயணத்தை மேற்கொண்டார். இறந்து போனவனை உயிருடன் எழுப்பி, தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தி, பிதாவை மகிமைப்படுத்திய அந்த வீட்டிற்கு அவர் வந்தார். உயிரோடு எழுப்பப்பட்ட லாசரு உணவருந்தினான், சந்தை வெளியில் நடந்து திரிந்தான். மக்கள் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டாலும், ஆவிகளைக் குறித்த பயமும் அவர்களுக்கிருந்தது.

மரியாளும், மார்த்தாளும், லாசருவும் இறைவனுடைய மகிமையை அனுபவித்து, ஆலோசனைச் சங்கத்தின் மிரட்டலுக்குப் பயப்படாமல் அதைக் குறித்து சாட்சியிட்டார்கள். லாசரு இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் வரவேற்று, மகிழ்ச்சி பொங்க அவர்களுக்கு விருந்தளித்தான். லாசரு இயேசுவின் நண்பனாக இருந்து, உணவருந்தும்போது தன்னை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இயேசுவிற்கு அருகில் அமர்ந்திருந்தான். இந்தக் காட்சி பரதீûஸக் குறித்து நமக்கு சில காரியங்களைப் போதிக்கவில்லையா? அங்கு இறைவன் நமக்குத் தூரமானவராக இருக்க மாட்டார். மகிமையில் நாம் அவரோடு அமர்ந்திருப்போம்.

விருந்துபசாரத்தில் சிறந்தவளாகிய மார்த்தாள், இயேசுவே மரணத்தை வெற்றிகொண்ட மெய்யான மேசியா என்பதை அறிந்தவளாக தன்னுடைய வீட்டை அவருக்குத் திறந்துகொடுத்தாள்.

அதிக ஆவிக்குரிய தன்மையுள்ளவாளாகிய மரியாளோ, தனக்கே உரிய பாணியில், ஒரு கூலித்தொழிலாளியின் ஒரு வருட உழைப்பிற்குச் சமனான விலையுள்ள ஒரு வாசனைப் பொருளைக் கொண்டுவந்தாள். மரியாள் தான் அதிகம் போற்றிக் காத்ததை இயேசுவுக்குக் கொடுக்க விரும்பினாள். ஆயினும் அவருடைய தலையை அபிஷேகிக்க தனக்கு தகுதியில்லை என்று உணர்ந்த காரணத்தினால் அவருடைய பாதத்தை அந்த விலைமதிப்புள்ள தைலத்தினால் அபிஷேகம் செய்தாள். அன்பு என்பது ஈனமானதல்ல, பெரிய தியாகங்களைச் செய்யக்கூடியது. அதன் பிறகு அவள் தன்னுடைய தலைமுடியை வைத்து அவருடைய பாதத்தைத் துடைத்தாள். உண்மையோடும் பரிசுத்தத்தோடும் செய்த இந்த அன்பின் செயல் அந்த வீட்டை வாசனையினால் நிரப்பியது. அங்கிருந்த அனைவரும் மரியாளுடைய தியாகத்தின் வாசனையை நுகர்ந்தார்கள்.

யோவான் 12:4-6
4 அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து 5 இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். 6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.

யூதாஸ் இயேசுவை நேசித்ததைவிட பணத்தை அதிகமாக நேசித்தான். மெய்யான விசுவாசத்தைவிட பொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான். ஆகவே அவன் மரியாளுடைய அந்தத் தியாகச் செயலுடன் தொடர்புடைய ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைப் புறக்கணித்து, அதைப் பொருளாதார ரீதியாகக் கணிப்பிடத் தொடங்கினான். மரியாளுடைய நன்றியுணர்வு, ஆராதனை, இயேசுவிடமான அவளுடைய ஒப்படைப்பு போன்றவற்றை அவன் சற்றும் புரிந்துகொள்ளவில்லை. யார் பணத்தை நேசிக்கிறார்களோ அவர்கள் பிசாசுகளாகிவிடுகிறார்கள். அவன் இயேசுவின் மீதிருந்திருந்த தனது வெறுப்பை மறைக்கும்படி, தான் ஏழைகள் மீது அதிக அக்கறையுள்ளவன் போல தன்னைக் காட்டி, போலியான பக்தியை வெளிப்படுத்தினான். ஆனால் உண்மையில் அவன் ஏழைகளைக் குறித்து அக்கறையுள்ளவனல்ல. அவன் ஏழைகளுக்காக எதையும் கொடுக்க மாட்டான். அனைத்தையும் தானே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். தன்னுடைய திருட்டுத்தனத்தை மறைக்க அவன் ஏழைகளைப் பற்றிப் பேசுகிறான். ஆனால் அவன் உண்மையில் எப்போதும் தன்னுடைய பணப்பையை நிறைக்க விரும்பும் திருடன்.

பொருளாளனாயிருந்த அவனுடைய கணக்கை இயேசு ஒருபோதும் சரிபார்க்கவில்லை. இறுதியில் அவனே தன்னுடைய ஏமாற்று வேலையையும் பாவத்தையும் அறிந்துகொள்ளும்படி விட்டுவிட்டார். யூதாஸ் ஒரு கொள்ளைக்காரனாகவும், பணத்தின் மேன்மைகளினால் தன்னை நிறைத்துக்கொள்ள விரும்பிய ஒரு அடிமையாகவும் இருந்தான். சகோதரனே நீங்கள் இறைவனுக்கும் பணத்துக்கும் ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது. நீங்கள் ஒன்றை நேசித்து மற்றதை வெறுப்பீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். இறைவன்தான் உங்களுடைய வாழ்க்கையின் நோக்கமாயிருக்கிறாரா அல்லது சுகபோகமான வாழ்க்கையை நீங்கள் நாடுகிறீர்களா?

யோவான் 12:7-8
7 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். 7 தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.

நாம் பணத்தை வீணடிப்பதைக் இறைவன் விரும்புவதில்லை. நாம் ஒருவர் மற்றவருடைய பாதத்தில் இவ்வித விலையுயர்ந்த தைலங்களை ஊற்றவேண்டும் என்றும் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. நாம் நம்மைச் சுற்றியுள்ள ஏழைகளுடைய தேவைகளைக் கண்திறந்து பார்த்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எந்த அரசியல் கட்சியோ, சமயமோ அல்லது தத்துவமோ ஏழைகள் எப்போதும் நம்மிடம் இருப்பார்கள் என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை அழித்துப்போட முடியாது. நம்முடைய சுயநலம் பெரியது, நமது அன்போ சிறியது. ஆவிக்குரிய சோசலிசம் இவ்வுலகில் ஏற்பட முடியாது. அனைவரும் தங்களுடைய வரங்கள், செல்வம், மற்றும் மதிப்பு ஆகியவற்றில் ஒன்றுபோல இருக்க முடியாது. நாம் கிழக்கு நோக்கிச் சென்றாலும் மேற்கு நோக்கிச் சென்றாலும், பரிதாபமானவர்களையும், புறக்கணிக்கப்பட்டவர்களையும், தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் நிச்சயமாகக் காண்போம். நீங்கள் கிராமத்திற்கோ, நகரத்திற்கோ எங்கு சென்றாலும் அங்குள்ள ஏழைகளின் முகத்தில் கிறிஸ்துவைக் காணலாம்.

மனிதருடைய இருதயம் கல்லைப்போலக் கடினமானது என்பது இயேசுவுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை நேசித்து அவர்களுக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்கவே அவர் இவ்வுலகத்தற்கு வந்தார். மேலும் தன்னுடைய அடக்கத்திற்கு அடையாளமாகவே மரியாளைக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் இச்செயலைச் செய்தார் என்பதையும் அவர் அறிவார். தெய்வீக அன்பு மக்களுடைய இதயங்களை நிரப்பும்போது, எதிர்பாராத ஆச்சரியங்களை நிகழ்த்தும்படி அவர் மக்களை நடத்துவார். தெய்வீக விருந்தாளியாகிய மரியாளை மகிமைப்படுத்த மரியாள் எண்ணினாள், ஆகவே பரிசுத்த ஆவியானவர் காலத்திற்கு முன்பாகவே அவரை அபிஷேகிக்கும்படி மரியாளை நடத்தினார். நன்மையும் கிருபையும் நிறைந்த இறைவனோடு இந்த பாவம் நிறைந்த உலகத்தை ஒப்புரவாக்கும் பணியைக் கிறிஸ்து ஆரம்பிக்கிறார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் லாசருவை உயிருடன் எழுப்பியதற்காக நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். பயங்கரமான கல்லறையைக் கண்டு நீர் பயப்படுவதில்லை. நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடும் எங்கள் சொத்து சுகத்தோடும் உமக்குப் பணிசெய்ய நீர் எங்களுக்குப் போதித்தருளும். ஈனத்தனத்திற்கும், மாய்மாலத்திற்கும், திருட்டுக்கும், வெறுப்புக்கும் விலக்கி எங்களைக் காத்துக்கொள்ளும். உம்முடைய அன்பினால் எங்களை நிறைத்து, நன்றியுடன் தியாகப் பாதையில் நடக்க எங்களை வழிநடத்தியருளும்.

கேள்வி:

  1. மரியாளுடைய அபிஷேகத்தை இயேசு ஏன் ஏற்றுக்கொண்டார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:38 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)