Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 075 (The Jewish council sentences Jesus to death)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
4. லாசருவை உயிர்ப்பித்தலும் அதன் விளைவுகளும் (யோவான் 10:40 – 11:54)

ஈ) யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கிறது (யோவான் 11:45-54)


யோவான் 11:45
45 அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

உயிரோடு எழுப்பப்பட்ட லாசரு உணவருந்தினான், குடித்தான், பேசினான். மக்கள் உயிருள்ளவனாக அவனை வீட்டிலும் வீதிகளிலும் கண்டார்கள். இயேசுவின் மகிமையைக் கண்டு பலர் ஆச்சரியப்பட்டு, உயிருள்ள இறைவனின் மகனாகிய மேசியா இவர்தான் என்று விசுவாசித்தார்கள். அவ்விதமாக சீஷர்கள் பெருகினார்கள். இயேசுவையும் லாசருவையும் காணும்படி மக்கள் மரியாளுடைய வீட்டிற்கு விரைந்தார்கள். அவர்கள் லாசருவைப் பார்க்க வந்தார்கள். இயேசுவை விசுவாசித்தவர்களாகத் திரும்பிச் சென்றார்கள்.

யோவான் 11:46-48
46 அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். 47 அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. 48 நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.

இந்த அற்புதத்தைப் பார்த்தவர்களில் சிலர் இயேசுவின் இந்த செயல்பாட்டைக் குறித்து பரிசேயர்களுக்குத் தகவல் சொன்னார்கள். அவர்கள் இன்னும் அவிசுவாசிகளாகத்தான் இருந்தார்கள். ஐசுவரியவானுடைய உவமையில் இயேசு சொன்னதைப் போல, “அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து எழும்புகிறவனுக்கும் அவர்கள் செவிகொடுக்க மாட்டார்கள்” (லூக்கா 16:31) என்பது இவர்களுக்கு சரியாகப் பொருந்தியது. வல்லமையான அற்புதங்களைப் பார்த்த பிறகும் இயேசவை விசுவாசிக்க மறுக்கும் கல்லான இருதயத்தை இறைவனுடைய ஆவியானவரால் மாற்ற முடியாது.

சமய நடவடிக்கைகளுக்காக உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் பரிசேயர்களுக்கு அதிக செல்வாக்கு உண்டு. பிரதான ஆசாரியர்கள் அவர்களுக்கு செவிகொடுப்பார்கள். எழுபது அங்கத்துவர்களும் காரியத்தைப் பற்றி விவாதிக்கக் கூடினார்கள். உயிர்தெழுதலை மறுதலித்த சதுசேயர்கள் சங்கம் கூட்டப்பட்டதை வரவேற்றார்கள். கைது செய்வதற்குரிய எந்தக் குற்றத்தையும் இயேசு செய்யாத காரணத்தினால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவர்கள் குழப்பமடைந்தார்கள். பஸ்காவுக்காக எருசலேமில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் ஒரு எழுப்புதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களுக்குப் பிறகு அலோசனைச் சங்கத்தார் இயேசு ஒரு இறைவனுடைய மனிதனோ அல்லது தீர்க்கதரிசியோ அல்ல, சாதாரண மனிதன்தான் என்று முடிவு செய்தார்கள். இவ்வாறு முடிவு செய்தபோதிலும் அவருடைய அற்புதத்தை அவர்களால் மறுதலிக்க முடியவில்லை.

இந்தக் காரியங்கள் நடக்கும்போது, இவற்றை அறிந்து ரோம அரசாங்கம் இதில் தலையிட்டு விடுமோ என்ற அச்சம் ஆலோசனைச் சங்கத்தில் நிலவியது. மேசியாவைப் போல அற்புதங்களைச் செய்யும் ஒருவரைச் சுற்றி மக்கள் கூடினால் ஒரு கலகம் ஏற்பட்டுவிட்டதாகவே ரோமர்கள் கருதுவார்கள். அதனால் அவர்கள் இறைவனுடைய வாசஸ்தலமான தேவாலயத்தை மூடிவிடுவார்கள். அதோடு பலிகள், விண்ணப்பங்கள், ஆசீர்வாதங்கள் ஆகிய தேவாலயத்தின் சேவைகள் தடைப்பட்டுப் போகும்.

யோவான் 11:49-52
49 அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந்தெரியாது; 50 ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். 51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், 52 அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

ஆலோசனைச் சங்கத்தில் இவ்விதமான குழப்பம் நிலவியபோது, காய்பா என்ற பிரதான ஆசாரியன் எழுந்து நின்று தேசத்தின் தலைவர்களுடைய அறியாமையைக் கண்டித்துப் பேசினான். அவன் பிரதான ஆசாரியனாயிருந்த காரணத்தினால் அவனே கூட்டத்தை தலைமையேற்று நடத்தியதால் இவ்விதம் பேசுவதற்கு அவனுக்கு அதிகாரமிருந்தது. அவன் பரிசுத்தத்தின் அடையாளமாகிய எண்ணெயினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தாலும் அவன் ஒரு அந்திக் கிறிஸ்துவாயிருந்தான். தேசத்தின் தலைவனாகிய அவன் மூலமாக இறைவன் பேசுவதற்கு அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். ஆனாலும் அவன் தீமையையும் கேட்டையுமே சிந்தித்தான். பிராதான ஆசாரியனாகிய அவனுடைய நிலையிலிருந்து, தீர்க்கதரிசியாக அனைத்து மக்களும் அறிவீனர் என்று அறிவித்தான்.

காய்பா எப்படிப்பட்ட ஆவியில் பேசினான் என்பது உடனடியாக் வெளிப்பட்டது. சாத்தானே அவன் மூலமாகப் பேசினான். இறைவனுடைய சித்தத்தை அவன் பேசினாலும் நடைமுறையில் இறைவனுக்கு எதிராகவே அவன் பேசினான். மக்களுக்காக இறைவனுடைய ஆட்டுக்குட்டி மரிப்பதன் மூலமாகவே அவர்கள் இறைவனுடைய கோபத்திற்குத் தப்பி, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிசாசின் பேச்சாளனாகிய காய்பா அரசியல் காரணங்களுக்காகப் பேசினான். “ரோமர்களுடைய கோபத்திலிருந்து நாம் தப்பிக்கும்படி இயேசு மரிக்கட்டும்” என்று அவன் சொன்னான். இந்த பிசாசுத்தனமான முன்னறிவிப்பின் மூலம் கிறிஸ்துவின் வார்த்தைகள் உறுதிப்படுகிறது. பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாகிய பிசாசு பல யூதர்களுக்குத் தகப்பன் என்று அவர் சொல்லியிருந்தார்.

பிசாசின் மனநிலையைப் பெற்றிருந்த காய்பாவின் கூற்றில் ஒரு தெய்வீக உண்மை இருந்ததை யோவான் கண்டார். அவனுடைய அதிகார பூர்வமான வார்த்தைக்கு மேலான பொருள் இருக்கிறது என்பதை உணராமல் இயேசுவின் மரணம் அனைவருக்கும் விடுதலை என்று அவன் விளக்கினான். கிறிஸ்துவின் பரிகார பலியைக் குறித்த தீர்க்கதரிசனத்தைச் சொல்லும்படி பரிசுத்த ஆவியானவர் அவனை வழிநடத்தியிருந்தாலும், அவன் இயேசுவை விசுவாசியாத காரணத்தினால் அறியாமையுள்ளவனும் சிந்தனையற்றவனுமாக காய்பா காணப்பட்டான். அவன் எதிரிடையான காரியத்தைச் சொன்னதால் தன்னுடைய கூற்றின் மெய்யான பொருள் என்வென்பதை அவன் அறியாதிருந்தான்.

உலகத்தின் இரட்சிப்பைக் குறித்த பரந்த அர்த்தமுடையதாக யோவான் இந்தக் கூற்றைப் பார்த்தார். இயேசு தன்னுடைய மக்களின் பாவங்களுக்காக மட்டும் மரிக்காமல் அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களுடைய பாவங்களுக்காகவும் மரித்தார். அவரை விசுவாசிக்கிறவர்கள் அவருடைய பிள்ளைகளாகி, நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

நம்முடைய விசுவாசத்தின் நோக்கம் நம்முடைய தனிப்பட்ட இரட்சிப்பு மட்டுமல்ல, இறைவனுடைய அனைத்து மக்களும் கிறிஸ்துவில் ஒன்றுபடுதல். அவருடைய அன்பே கிறிஸ்தவத்தின் அடையாளமாகவும் வல்லமையாகவும் காணப்படுகிறது. அவருடைய பெயர் அவருடைய சீஷர்களை இணைக்கிறது. அவர்கள் தங்கள் இரட்சகரோடு இணையும்போது ஒருவரோடொருவர் இணைகிறார்கள். நாம் வேகமாக எழுந்து அவரிடம் சென்று, நாம் இறைவனுடைய குடும்பத்தில் சகோதர சகோதரிகள் என்பதை அறிந்துகொள்வோம். இந்த உறவு உலக உறவுகளைவிட நெருக்கமானது.

யோவான் 11:53-54
53 அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். 54 ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.

ஆலோசனைச் சங்கத்திலிருந்த சிலருக்கு காய்பாவின் இந்த முன்னறிவிப்பு வேதனையைக் கொடுத்தது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் இறைவன் காய்பாவின் மூலமாகப் பேசி, ஏமாற்றுக்காரனைத் தண்டித்து தேசத்தைக் காப்பாற்றுகிறார் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தார்கள். எல்லாரும் அதை ஏற்றுக்கொண்டு இயேசுவை அவர்கள் கொலைசெய்ய முடிவு செய்தார்கள். அவர்களில் நீதியுள்ள சிலர் அதை எதிர்த்தார்கள். ஆனால் யாரும் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. மக்கள் நடுவில் குழப்பம் ஏற்படாதபடி இரகசியமாக இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்தை நோக்கி காய்பா வெற்றிகரமாக சங்கத்தை வழிநடத்திச் சென்றான்.

இயேசு இந்த சதித்திட்டத்தைக் கேள்விப்பட்டு, ஆலோசனைச் சங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அப்பால் சென்று நெபுலசின் கிழக்குப்பகுதியான யோர்தான் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கினார். அங்கு அவர் தன்னைப் பலியிடுவதற்கும் உயிர்த்தெழுவதற்குமான நேரத்திற்காகக் காத்திருந்தார்.

அவருடைய போர்க்களம் தெளிவாகக் காணப்பட்டது. தேவாலயத்தைச் சுத்திகரிப்பதில் ஆசாரியர்களுடன் அவருக்கு ஏற்பட்ட முரண்பாடு, சீஷர்களுக்கும் சட்டவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சை, ஓய்வு நாளில் குணமாக்கியதால் ஏற்பட்ட குழப்பம் ஆகியவை லாசருவை உயிரோடு எழுப்பியதும் உச்ச கட்டத்தை அடைந்தது. ஆகவே தங்களுக்கு நன்மை செய்ய வந்தவரை ஒரேயடியாகக் கொலைசெய்ய வேண்டும் என்று மக்களுடைய தலைவர்கள் முடிவு செய்தார்கள்.

ஒளி இருளில் பிரசாகிக்கிறது, ஆனால் இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. அன்புள்ள சகோதரனே கிறிஸ்துவே ஒளி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அவருடைய நற்செய்தி உங்கள் மனதுக்கு ஒளியூட்டி, உங்கள் இருதயத்தைப் புதுப்பித்திருக்கிறதா? நித்திய வாழ்வை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? பரிசுத்த ஆவி உங்களை மனந்திரும்புதலுக்குள்ளும் பாவ அறிக்கைக்குள்ளும் வழிநடத்தியிருக்கிறாரா? உங்களுக்குள் விசுவாசத்தைக் கொடுத்து உங்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறாரா? உங்களைப் பரிசுத்த ஆவிக்குத் திறந்துகொடுங்கள். கிறிஸ்தவினிடத்தில் சேர்ந்து உங்கள் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது நீங்கள் அவருடைய எதிரிகளுடன் சேர்ந்து அவரை நியாயம்தீர்ப்பதிலிருந்து தப்பிப்பீர்கள். மாறாக அவருடைய சீஷர்களுடன் சேர்ந்து, பரிசுத்தரை அறிந்து, “நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஒப்பான மகிமையாக கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது” என்று அறிக்கையிடுவீர்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, துயரத்தின் நேரத்திலும் நீர் சத்தியத்தை மறுதலிக்காதபடியால் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய பரலோக பிதாவை நீர் எப்போதும் மகிமைப்படுத்துகிறீர். எங்களுடைய நிர்விசாரத்தையும் பெலவீனமான விசுவாசத்தையும் எங்களுக்கு நீர் மன்னித்தருளும். நித்திய வாழ்வைப் பெற்று முடிவில்லாமல் உமக்குச் சேவைசெய்ய எங்களைப் பிதாவினிடமாக இழுத்துக்கொள்ளும். உம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக எங்கள் வாழ்வை ஏற்றுக்கொள்ளும்.

கேள்வி:

  1. யூத ஆலோசனைச் சங்கம் இயேசுவை ஏன் கொலை செய்தது?

கேள்வித்தாள் 4

அன்பின் வாசகரே, இந்த 17 கேள்விகளில் 15க்கு சரியான பதிலனுப்புவீர்களானால், இப்பாடத் தொடரின் அடுத்த நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  1. யூதர்கள் ஆபிரகாமுடைய பிள்ளைகள் அல்ல என்பதை இயேசு எவ்வாறு அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினார்?
  2. இயேசு நமக்குத் தெளிவுபடுத்திக் காண்பிக்கும் பிசாசின் தன்மைகள் யாவை?
  3. ஏன் யூதர்கள் இயேசுவைக் கல்லெறிய நினைத்தார்கள்?
  4. பிறவிக் குருடனை இயேசு ஏன் சுகப்படுத்தினார்?
  5. பிறவிக் குருடனைக் குணமாக்க முடியாது என்று யூதர்கள் ஏன் கூறினார்கள்?
  6. தான் விசாரிக்கப்பட்டபோது இந்த வாலிபன் படிப்படியாக உவ்ர்ந்துகொண்டது என்ன?
  7. இயேசுவுக்கு முன்பாகப் பணிந்தகொள்வது எதைக் காட்டுகிறது?
  8. இயேசு தன்னுடைய மந்தைமீது பொழிந்தருளும் ஆசீர்வாதங்கள் யாவை?
  9. இயேசு எவ்வாறு நல்ல மேய்ப்பனானார்?
  10. கிறிஸ்து தன்னுடைய மந்தையை எப்படி நடத்துகிறார்?
  11. இயேசு தன்னுடைய தெய்வீகத்தை எவ்வாறு அறிவிக்கிறார்?
  12. லாசரு மரித்த நிலையிலும் இயேசு ஏன் இறைவனுடைய மகிமையைப் பற்றிப் பேசுகிறார்?
  13. லாசருவைக் காப்பாற்ற இயேசு ஏன் வெற்றிப்பயணமாகச் சென்றார்?
  14. இன்று நாம் மரணத்திலிருந்து எவ்வாறு உயிர்த்தெழுகிறோம்?
  15. இயேசு ஏன் மனங்கலங்கி அழுதார்?
  16. லாசரு உயிரோடு எழுப்பப்பட்டதன் மூலம் இறைவனுடைய மகிமை எவ்வாறு காணப்பட்டது.
  17. யூத ஆலோசனைச் சங்கம் இயேசுவை ஏன் கொலை செய்தது?

உங்கள் பெயரையும் முகவரியையும் தெளிவாக எழுதி உங்கள் பதிலுடன் அனுப்ப வேண்டிய முகவரி:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:51 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)