Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 072 (Jesus meets Martha and Mary)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
4. லாசருவை உயிர்ப்பித்தலும் அதன் விளைவுகளும் (யோவான் 10:40 – 11:54)

ஆ) இயேசு மார்த்தாளையும் மரியாளையும் சந்திக்கிறார் (யோவான் 11:17-33)


யோவான் 11:17-19
17 இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். 18 பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது. 19 யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.

லாசருவைக் கல்லறையில் வைத்து நான்கு நாட்கள் கடந்துவிட்டது. லாசரு மரித்த அன்றே அவன் கல்லறையில் வைக்கப்பட்டான். அந்நாளிலேயே இயேசுவுக்குச் செய்தி கிடைத்துவிட்டது. உடனடியாக இயேசு வந்திருந்தாலும் பயனில்லை ஏனெனில் லாசரு ஏற்கனவே அடக்கம்பண்ணப்பட்டுவிட்டான். மரணம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிசெய்யப்பட்டு விட்டது.

பெத்தானியா ஒலிவமலையிலிருந்து 1000 மீட்டர் தாழ்வாக, கிழக்குப் பக்கமாக அமைந்திருந்தது. அதற்கு அப்பால் சவக்கடல் இருந்தது. கதரோன் பள்ளத்தாக்கிற்கு அப்புறமாக பெத்தானியாவிலிருந்து மேற்கே மூன்று கிலோமீட்டர் தள்ளியுள்ள மலையின் மேல் எருசலேம் அமைந்திருந்தது.

மரித்தவனுடைய உற்றார் உறவினர் பலர் அழுதுகொண்டும் மார்பில் அடித்துக்கொண்டும் அங்கு வந்திருந்தார்கள். அந்த குடும்பத்தை உழைத்துக் காப்பாற்றியவன் லாசருதான் என்பதால் துக்கம் அதிகமாயிருந்தது. மரணத்தின் நிழல் கூடியிருந்தவர்ளைச் சூழ்ந்திருந்தது.

யோவான் 11:20-24
20 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். 21 மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22 இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். 23 இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். 24 அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

இயேசு வந்திருக்கிறார் என்பதை மார்த்தாள் கேள்விப்பட்டபோது, வேகமாக எழுந்து அழுதுகொண்டே அவரைச் சந்திக்கப்போனார். அவர் ஏற்ற நேரத்தில் இங்கு வந்திருந்தால் மரணத்தைத் தடுத்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டு சென்றாள். இயேசுவை அவள் சந்தித்தபோது, இயேசுவின் காலம் கடந்த வல்லமையைக் குறித்து தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிட்டாள். தன்னுடைய துயரத்தை அவரிடம் சொல்லுவதில் காலம் தாழ்த்தாமல், அவர் மரணத்தைத் தடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அவர் எப்படி அதைச் செய்வார் என்பது அவருக்குத் தெரியாது. அவருடைய முழுமையான அதிகாரத்தை அவள் நம்பினாள். இறைவனுக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்பையும் இறைவன் எந்த நேரத்திலும் அவருடைய விண்ணப்பத்திற்கு செவிகொடுப்பார் என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.

இயேசு அவளுடைய விசுவாசத்தைக் கண்டு வல்லமையான ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார். “உன்னுடைய சகோதரன் எழுந்திருப்பான்.” இந்த வார்த்தைகளின் முழுமையான முக்கியத்தவத்தை அவள் அறியாதவளாக அவர் இறுதி உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசுகிறார் என்று நினைத்தாள். மரணம் முடிவல்ல என்று இப்போது அவளுக்க நம்பிக்கை பிறந்தது. உயிர்த்தெழுதலே விசுவாசிகள் எதிர்பார்த்திருக்கும் நம்பிக்கை.

யோவான் 11:25-27
25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். 27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.

தன்னுடைய சீஷர்கள் கேட்கும்படி இயேசு மார்த்தளிடம் கூறினாள்: “உயிர்த்தெழுதல் நிச்சயமாக உண்டு. நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாயிருக்கிறேன். அவன் உயிர்த்தெழுதலின் நாளில் அவன் உயிரோடு எழுவான் என்று நான் சொல்லவில்லை. இன்றே நான் அவனை உயிரோடு எழுப்புவேன். நானே சிருஷ்டிகர். என்னிடத்திலிருந்தே பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வருகிறார். நான் உங்களுக்காக மரித்து, உங்கள் பாவங்களை எடுத்துப்போட்டு, உங்களுக்கு தெய்வீக வாழ்வைத் தருவேன். மரணம் உங்களை ஆண்டுகொள்ளாது. நான் என்னுடைய உயிர்த்தெழுதலின் மூலம் உங்களுடைய உயிர்த்தெழுதலை உறுதிசெய்வேன். அப்போது நீங்கள் மரித்தாலும் விசுவாசத்தினால் என்னோடு கூட எழுந்திருப்பீர்கள். நீங்கள் என்னில் வாழ்கிறீர்கள் நான் உங்களில் வாழ்கிறேன்”

கிறிஸ்துவின் வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே நிபந்தனை கிறிஸ்துவுடனான விசுவாச உடன்படிக்கையே. நீங்கள் அவரோடு இணைக்கப்படவில்லை என்றால் அவருடைய ஜீவன் உங்களுக்குள் ஊடுருவிப் பாயாது. கிறிஸ்துவின் மீது நமக்கிருக்கும் விசுவாசமே பிதாவையும் நித்தியத்தையும் குறித்த நமது அறிவுக் கண்களைத் திறக்கும். அவருடைய அன்பு என்றும் அழியாத மகிழ்ச்சியையும், சமாதானத்தையும், அன்பையும் நம்முள்ளத்தில் விதைக்கும். கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த ஒருவன் மரிப்பதில்லை, ஏனெனில் கிறிஸ்துவின் ஆவி நித்தியமானவர். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுடைய இருதயங்களில் இந்த ஆவி வாசமாயிருக்கிறார்.

இயேசு லாசருவை எழுப்பும்போது மரணத்தின் மீதான தன்னுடைய வெற்றியைப் பற்றி ஒரு சொற்பொழிவாற்றவில்லை. தன்னுடைய ஆவியினால் உயிர்பெற்றவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலில் ஏற்கனவே பங்கடைந்த காரணத்தினால் மரணம் அவர்களை ஆண்டுகொள்ளாது என்று இயேசு அவர்களுக்கு உறுதியளித்தார். அவருடைய இந்த நிபந்தனையற்ற வாக்குறுதியின் வல்லமையை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் அவரை விசுவாசித்தால் உங்களுக்கு மரணம் இல்லை. வரப்போகும் மரணத்தையோ அல்லது திறந்திருக்கும் கல்லறையையோ பார்க்காமல், கிறிஸ்துவை நோக்கி உங்களுடைய கண்களைத் திருப்புங்கள். அவர் உங்களை நித்திய வாழ்வில் நிலைநிறுத்துவார் என்பதால் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

அன்புள்ள சகோதரனே, வாழ்வுதரும் இயேசுவை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மரணத்தின் ஆளுகையிலிருந்தும் பாவத்தின் அழிவிலிருந்தும் அவர் உங்களை விடுவித்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் இந்த ஆவிக்குரிய எழுப்புதலை அனுபவிக்கவில்லையென்றால், ஜீவாதிபதி உங்கள் அருகில் நின்று தன்னுடைய ஆதரவின் கரத்தை உங்களை நோக்கி நீட்டுகிறார். அவருடைய வல்லமையையும் அன்பையும் நம்புங்கள். அவருடைய கரத்தைப் பிடியுங்கள் அவர் உங்கள் பாவங்களை மன்னித்து உங்களுக்கு நித்திய வாழ்வைத் தருவார். அவரே உங்களுக்கிருக்கும் உண்மையுள்ள ஒரே இரட்சகர்.

மார்த்தாள் இயேசுவின் வாக்குத்தத்தை ஏற்றுக்கொண்டாள். அவள் நித்திய வாழ்வை மட்டுமல்ல, வாழ்வைக் கொடுக்கும் இரட்சகரையும் அனுபவபூர்வமாக அறிந்திருந்தாள். மரித்தோரையும் உயிரோடு எழுப்பும் வல்லமையுள்ள- வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா இயேசுவே என்றும் அவள் விசுவாசித்தாள். இறுதி நியாயத்தீர்ப்பை நடத்தும் அதிகாரம் அவருக்கிருக்கிறது. அவர் தன்னுடைய வல்லமையினால் அவளை உயிர்ப்பித்து, பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். இயேசு தன்னை இறைமகன் என்று சொன்னதினால் யூதர்கள் அவரைக் கல்லெறிய எத்தனித்திருந்தபோதிலும், அவர் மீதிருக்கும் தன்னுடைய விசுவாசத்தை அவள் தைரியமாக அறிக்கையிட்டபடி நடந்து சென்றாள்.

விண்ணப்பம்: கர்த்ராகிய இயேசுவே நீர் நித்தியத்திற்கும் பெரியவராயிருக்கிறீர். மரணம் உம்மை ஆண்டுகொள்வதில்லை. நீர் எங்கள் மரணத்தை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய வல்லமையினால் உயிர்த்தெழுந்தீர். நாங்கள் உம்மை ஆராதித்து உமக்கு நன்றி செலுத்துகிறோம். மரணம் எங்களையும் ஆண்டுகொள்ளாதபடி உம்முடைய ஜீவனை நீர் எங்களுடன் பகிர்ந்துகொண்டீர். எங்கள் குற்ற உணர்வு, பயம், மரணம் ஆகியவற்றிலிருந்து நீர் எங்களை விடுவித்தபடியால் நாங்கள் உன்க்கு நன்றி செலுத்துகிறோம்.

கேள்வி:

  1. இன்று நாம் மரணத்திலிருந்து எவ்வாறு உயிர்த்தெழுகிறோம்?

யோவான் 11:28-31
28 இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். 29 அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள். 30 இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார். 31 அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.

ஒருவேளை இயேசு அழுகிறவர்களுடைய சத்தத்தைவிட்டு மரியாளைத் தனியாக தன்னிடம் அழைத்துவரும்படி மார்த்தாளிடம் சொல்லியிருக்கலாம். நம்பிக்கையையும் ஆறுதலையும் தரும் தன்னுடைய வார்த்தைகளினால் மரியாளைத் தேற்ற அவர் நினைத்திருக்கலாம். அதன் மூலமாக அவள் தன்னுடைய விசுவாசத்தில் வளர முடியும். கிறிஸ்து துயரத்தையும் ஆற்றாமையையும் விசுவாசத்தின் தைரியத்தினால் மேற்கொள்கிறார். துயரத்திலுள்ள மரியாளை இறைவனுடைய வெளிச்சத்திற்குள் கொண்டுவருவதால், அவளுக்கு வாழ்வையும் ஆவிக்குரிய உற்சாகத்தையும் அவர் கொடுக்க விரும்பினார்.

மரியாள் துக்கத்தில் ஆழ்ந்துகொண்டிருந்தபடியால் இயேசுவின் வருகையை அவள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மார்த்தாள் அவளிடம் வந்து, இயேசு உன்னை அழைக்கிறார் என்று மரியாளிடம் சொன்னாள். மரியாள் கவலையோடு எழுந்து கர்த்தரைச் சந்திக்கச் சென்றாள். அவள் எழுந்து சென்றதைப் பார்த்த மற்றவர்கள் அவள் கல்லறையினிடத்தில் அழுவதற்குச் செல்கிறாள் என்று கருதி எழுந்து அவளைப் பின்பற்றி கல்லறையினிடத்திற்கு வந்தார்கள். அவர்கள் அவளைப் பின்பற்றி கல்லறையினிடத்திற்குச் செல்லும் காட்சி துக்கத்தினால் நிறைந்த மனித வாழ்க்கை அழிவை நோக்கிச் செல்வதைக் காண்பிக்கும் படமாயிருக்கிறது. மனிதனுடைய தத்துவங்களோ மதங்களோ மனித வாழ்விற்கோ மரணத்திற்கோ சரியான பதிலைத்தர முடியாது. ஆனால் கிறிஸ்தவனுக்கு சத்தியத்தின் மீதிருக்கும் நம்பிக்கை நிச்சயமான ஆறுதலை அவனுக்குத் தரும்.

யோவான் 11:32-33
32 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். 33 அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:

இயேசுவைப் பார்த்த மரியாள் நொருங்குண்ட இருதயத்துடன் இயேசுவின் பாதத்தில் விழுந்தாள். தெய்வீக அற்புதங்களைச் செய்யும் அவருடைய வல்லமையைக் குறித்த தன்னுடைய விசுவாசத்தை அவள் அறிக்கை செய்தாள். அவர் அங்கிருந்திருப்பாரானால அவளுடைய சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று நினைத்தாள். இயேசுவே இறைவன் என்று அந்தக் குடும்பம் உறுதியாக நம்பியது. மரணம் அவர்களுடைய விசுவாசத்தை அசைத்து அந்தச் சகோதரிகளைக் குழப்பத்தற்குள்ளாக்கியது.

தன்னுடையவர்களின் விசுவாசத்தையும் மக்களின் அறியாமையையும் பார்த்தபோது இயேசு தன்னுடைய ஆவியில் கலக்கமுற்றார். அவர்கள் மரணத்தின் பாதிப்புக்கு எவ்வளவாக உட்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர் கவனித்தார். அவர்களுடைய அழுகையைப் பார்த்தார். தீமையின் வல்லமை உலகத்தை எவ்வளவாக ஆட்கொண்டிருக்கிறது என்பதையும் கண்டார். மீண்டும் உலகத்தின் பாவம் தன்னுடைய தோள்களில் அழுத்துவதை உணர்ந்தார். தம்முடைய ஆவியில் சிலுவையின் அவசியத்தையும் தன்னுடைய மரணத்தினால் மட்டுமே இவற்றை வெல்ல முடியும் என்பதையும் கண்ணுற்றார். நடக்கப்போகிற உயிர்த்தெழுதலைக் குறித்து நிச்சயமுள்ளவராயிருந்தார். அதுதான் மரணம், அவிசுவாசம் மற்றும் துயரம் ஆகியவற்றிற்கான முடிவான நியாயத்தீர்ப்பாகும்.

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)