Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 067 (Jesus is the Good Shepherd)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
3. நல்ல மேய்ப்பன் இயேசு (யோவான் 10:1–39)

இ) இயேசுவே நல்ல மேய்ப்பன் (யோவான் 10:11–21)


யோவான் 10:11-13
11 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 12 நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 13 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.

இராஜாக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் இறைவனுடைய மக்களை மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல சிதறடித்ததை இறைவன் பொறுத்துக்கொண்டிருந்தார். ஆகவே நல்ல மேய்ப்பனாகிய தன்னுடைய மகனை அவர் அனுப்பினார். அவர் வந்தபோது, “நானே உங்களுடைய மெய்யான அரசன், பிரதான ஆசாரியன், உங்களுக்கு இறுதி வெளிப்பாட்டைக் கொடுக்கும் தீர்க்கதரிசி, நான் ஆயத்தமாயிருக்கிறேன்” என்று அறிவித்தார். ஒரு மேய்ப்பனுக்குரிய பணிகள் அனைத்துமே கிறிஸ்துவின் ஆள்த்துவத்தில் அடங்கியிருக்கிறது. “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று அவர் சொல்லுகிறார். நான் உங்களைச் சூரையாட மாட்டேன். தவறான பாதையில் சொல்லும் உங்கள் வாழ்வை அனைத்துத் தீமைகளிலிருந்தும் காப்பேன்.

ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய மந்தைக்காக அவர் தன்னுடைய உயிரைக் கொடுக்க ஆயத்தமாயிருப்பது அவரே நல்ல மேய்ப்பன் என்பதற்கான ஆதாரமாயிருக்கிறது. அவர் தன்னுடைய சரீரத்தை மட்டும் நமக்காகக் கொடுப்பேன் என்று சொல்லாமல், தன்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் அனைத்தையும் தன்னுடைய மந்தையின் மீட்புக்காகக் கொடுக்கிறார். ஆரம்ப தரணத்திலிருந்தே அவர் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு சேவை செய்வதற்கான உழைக்கிறார். அவருடைய சரீர மரணம் அவருடைய சுய தியாகத்தின் மணிமகுடம். இயேசு தனக்காக வாழ்ந்து, தனக்காக மரிக்காமல், உங்களுக்காக வாழ்ந்து, உங்களுக்காக மரித்தார் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.

உண்மையற்ற மேய்ப்பர்கள் ஆபத்து வரும்போது தங்களைக் காத்துக்கொள்ள மந்தையை விட்டுவிட்டு ஓடிப்போவார்கள். மந்தையைத் தாக்க ஓநாய்கள் வரும்போது அவர்கள் மந்தையையக் கைவிட்டு விடுவார்கள். அவர்கள் மிருகங்கள் அல்ல, ஆனாலும் மிருகங்களைப் போல நடந்துகொள்கிறார்கள். அவர்களுடைய தகப்பன் சாத்தான். முதன்மையான ஓநாயாகிய சாத்தானின் நோக்கமே மந்தையை விழுங்குவதுதான். அவன் பயங்கரமாக மந்தையைத் தாக்கி உபத்திரவப்படுத்தி கொலை செய்கிறான். மக்களை அவர்களுக்கு பிடித்தமான காரியங்களைக் காட்டி வசப்படுத்தவும், மெய்போல தோன்றும் பொய்களைக் கொண்டு அவர்களை மயக்கவும் அவன் நன்கறிவான். அன்பைக் காரணம்காட்டி கள்ள உபதேசத்தை போதகர்கள் அனுமதிக்கக்கூடாது. அன்பின் காரணமாக நாம் ஞானத்துடனும் தைரியத்துடனும் கள்ள உபதேசத்தை எதிர்த்து நிற்க வேண்டும். பிசாசின் ஆவிக்கு கிறிஸ்து எப்போதும் எதிர்த்து நின்றார் என்று அவருடைய வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகிறது. அன்புடன் முழுமையான சத்தியத்தை தம்முடைய பணியாளர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார். சாத்தானுடைய தாக்குதல்களிலிருந்து அவர்கள் மந்தையைக் காக்கும்படியே அப்படிச் செய்தார். கொடிய ஓநாயின் நோக்கம் நமக்கு தெளிவாகத் தெரியும். பொய்யான குற்றச்சாட்டுகளினாலும் உபத்திரவத்தினாலும் அவன் இறைவனுடைய சபையை அழிக்க நினைக்கிறான். நீங்கள் இறைவனுடைய மந்தையில் சேவையை விரும்புகிறீர்களா அல்லது உங்களுக்கு கனம் கிடைக்க வேண்டும் என்று நாடுகிறீர்களா? நீங்கள் சேவையை விரும்பும்போது பிரச்சனைகளும், பாடுகளும், தியாகமுள்ள ஒரு வாழ்க்கையே உங்களுக்குக் கிடைக்கும். ஓய்வையோ, ஆதாயத்தையோ, இன்பத்தையோ நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது.

யோவான் 10:14-15
14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

நான் ஒரு தனிச்சிறப்பான மேய்ப்பன் என்று கிறிஸ்து மறுபடியும் உரிமை கோருகிறார். நம்முடைய எதிரி யார் என்பதை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளாமையினாலும், மந்தையின் மனப்பான்மை என்ன என்று சரியாக நமக்குப் புரியாததாலும், அவர்களை எப்படி மேய்ச்சலுக்கு நடத்திச் செல்வது என்று தெரியாததாலும் நாம் ஊழியம் செய்ய வேண்டியபடி செய்ய முடியாதவர்களாயிருக்கிறோம். கிறிஸ்து ஒவ்வொருவருடைய பெயரையும் அறிந்திருக்கிறார். அவர்களுடைய இறந்த காலத்தையும் அவர்களுடைய சிந்தனைகளையும் எதிர்காலத்தையும் அறிந்திருக்கிறார்.

இயேசு தன்னுடைய மந்தையைத் தெரிந்துகொண்டு, தம்மை அறியும் ஆசீர்வாதத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர்கள் மேலும் அவரை அறியும்போது, அவர்கள் ஏன் இன்னும் தங்களை புறக்கணிக்காமல் இருக்கிறார் என்று ஆச்சரியப்படுகிறார்கள். அவருடைய பிரசன்னமே அவர்களுடைய குறைகளைக் காண்பிக்கிறது. அவரைச் சந்தித்தல் அதிக அன்பையும், நன்றியறிதலையும், அவருடனான நித்திய பிணைப்பையும் அவருடன் நமக்கு ஏற்படுத்துகிறது.

இயேசுவுக்கும் அவருடைய மந்தைக்கும் இடையிலான அறிவு மேலோட்டமானதாகவோ, உலகப்பிரகாரமானதாகவோ இல்லாமல், பரிசுத்த ஆவியானவரின் வரத்தினால் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் குமாரன் பிதாவைக் காண்பதுபோலவும் பிதா குமாரனைக் காண்பதைப் போலவும் நாம் அவரை உணர ஆரம்பிக்கிறோம். இது கிறிஸ்துவின் மூலமாக வரும் தெய்வீக அறிவினால், பரிசுத்த ஆவியானவர் வரும்போது ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொள்ளும் சத்தியத்தின் வெளிப்பாடாகிய இரகசியமாகும். அதற்கு பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மந்தையில் வாழ்ந்து அவர்களை நிரப்புகிறார் என்றும் பொருள்படும். அவருடைய மந்தையைச் சேர்ந்த யாரும் புறக்கணிக்கப்படவில்லை.

யோவான் 10:16
16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

கிறிஸ்து ஒரு குறிப்பிட்ட இனத்துக்காக மட்டும் மரிக்காமல் அனைவருக்காவும் மரித்தார். பழைய ஏற்பாட்டின் கடின இருதயமுடையவர்களை மட்டுமல்ல, பல மக்களினங்களில் வாழும் தீயவர்களையும் அவர் இரட்சிக்கிறார். தன்னுடைய மரணம் உலகெங்கிலுமுள்ள அவருடைய மந்தையை திரளான இரட்சிக்கும் என்று முன்னுரைத்தார். யாரும் இறைவனிடத்தில் தானாக வரமுடியாது. நல்ல மேய்ப்பனாகிய வழிகாட்டி அவர்களுக்குத் தேவை. கிறிஸ்துவே அந்த வழிகாட்டி. அவர் தனிப்பட்டவர்களையும் இனங்களையும் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். அவர் தன்னுடைய வார்த்தையினால் ஆவிக்குரிய வழிகாட்டுதலை அவர்களுக்களிக்கிறார். மந்தை தங்கள் மேய்ப்பனுடைய சத்தத்தைக் கேட்பதைப் போல அவருக்காக ஆயத்தம் பண்ணப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் அவருடைய சத்தத்தைக் கேட்டு, உடனடியாக மனமாற்றம் அடைகிறார்கள். பழைய ஏற்பாட்டில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், மக்களினங்களில் இருந்து இரட்சிக்கப்பட்டவர்களும் இணைந்து கிறிஸ்துவின் தலைமையின் கீழாக ஒரு புதிய மனிதனை உருவாக்குகிறார்கள். புதிய ஏற்பாட்டின் மக்கள் இன்று இயேசுவைத் தங்கள் மேய்ப்பராகக் கொண்ட இறைவனுடைய மந்தையாகக் காணப்படுகிறார்கள். நற்செய்தியை மகிழ்வுடன் கேட்டு, இறைமைந்தனாகிய கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள், வெவ்வேறு சபைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும், மெய்யான திருச்சபையிலேயே அவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். நாம் ஒரே ஆவியையும், ஒரே கர்த்தரையும் ஒரே பிதாவையும் பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்ட அனைவரிடத்திலும் பரிசுத்த ஆவியானவர் வந்து வாசம்பண்ணுகிறார். கிறிஸ்துவைச் சேர்ந்தவர்களின் ஐக்கியம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவு பெரியது. பூமியின் நான்கு மூலைகளில் இருந்தும் அவருடைய மந்தை கூட்டிச் சேர்க்கப்படுகிறது. அவரை விசுவாசித்து, எளிமையாக அவரைப் பின்பற்ற முன்வருபவர்களை மகிமைவரை வழிநடத்த நல்ல மேய்ப்பன் அவர்கள் நடுவில் வருகிறார். அப்போது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாயிருக்கும். மனிதனுடைய வழிகளினாலும் முறைகளினாலும் உலக நோக்கத்திற்காக இன்று திருச்சபையை உண்டாக்க நினைப்பவர்கள் கொடிய ஓநாயின் வலையில் சிக்கிவிடுவார்கள். மந்தையின் கவனத்தை அதன் மேய்ப்பரைவிட்டு தன்னிடமாகத் திருப்புவதுதான் அந்த ஓநாயின் நோக்கமாகும். நாம் கிறிஸ்துவை நெருங்கிச் சேராமல் ஒருவர் மற்றொருவரை நெருங்கிச் சேர முடியாது.

யோவான் 10:17
17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். 18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

இறைவன் அன்பாக இருக்கிறார் என்றும் அவர் எப்போதும் தன்னுடைய மகனை நேசிக்கிறார் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். இயேசு எப்போதும் தன்னுடைய பிதாவுக்குப் பிரியமானதையே செய்கிறார். உண்மையில் இறைவனைப் பிரியப்படுத்துவது எது என்று நாம் இங்கே வாசிக்கிறோம். சிலுவை மட்டுமே அவரைப் பிரியப்படுத்தக் கூடியது. கிறிஸ்துவின் மரணம் என்பது இறைவனால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் உண்டாகும் பரிகாரமும் பரிசுத்தமாகுதலும் இல்லாமல், மந்தையை பாவத்திலிருந்து காப்பதற்கு வேறு வழி எதுவும் இல்லை.

இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் மாபெரும் அற்புதங்களாகும். அவர் உயிர்தெழும்படி மரிக்க வேண்டும் என்று அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார். அவர் பாவிகளின் மீட்பை விரும்பியதால், எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் தாமாகவே தம்மை ஒப்புக்கொடுத்தார். அவர் உண்மையான அன்பாயிருக்கிறார். அவர் தன்னுடைய உயிரை உலகத்தின் மீட்பிற்காகக் கொடுக்கவும், அதைத் திரும்ப எடுத்துக்கொள்ளவும் பிதா அவருக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். சிலுவையில் இயேசுவுக்குக் கிடைத்த முழுமையான வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை. பிசாசும் அவனைப் பின்பற்றியவர்களும் அவருடைய மீட்பின் செயலைத் தடுக்க முயற்சித்தார்கள். கிறிஸ்துவின் வல்லமையுள்ள அன்பிற்கு முன்பாக அந்த கெட்ட காரியங்கள் தோற்றுப் போனது. காய்பாவோ, பிலாத்துவோ யாரும் அவரைக் கொலைசெய்யவில்லை. அவரே மரிப்பதற்குச் சித்தம்கொண்டார். ஓநாயைக் கண்டு அவர் ஓடிப்போகாமல், நம்மை மீட்கும்படி அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார். இது இறைவனுடைய பரிபூரண சித்தமாயிருந்தது. அவர் பரலோகத்திற்கும் நரகத்திற்கும் இடையிலான யுத்தத்தை சிலுவையினால் வெற்றிகொண்டார். அந்த நாளிலிலிருந்து அவருடைய மந்தைக்கு ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் நிச்சயமான நம்பிக்கை உண்டாயிருக்கிறது. பாடுகள் துயரங்களிலிருந்து இயேசு நம்மை மகிமைக்குள் நடத்திச் செல்வார்.

யோவான் 10:19-21
19 இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று. 20 அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள். 21 வேறே சிலர்: இவைகள் பிசாசு பிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.

யூதத் தலைவர்களால் அனுப்பப்பட்டவர்கள் தங்கள் அதிகாரிகளை இயேசு கொள்ளைக்காரர்கள் என்றும் சாத்தானுடைய தூதர்கள் என்றும் சொன்னதைக் கேட்ட கோபமடைந்தார்கள். மேலும் அவர் தன்னை நல்ல மேய்ப்பன் என்றும் அதிலும் எல்லா இனங்களுக்கும் நல்ல மேய்ப்பன் என்று உரிமை பாராட்டியதும் அவர்களைக் கோபப்படுத்தியது. ஏனெனில் யூதர்கள் புறவினத்து மக்களை தங்களோடு இணைத்துப் பார்ப்பதைக் கொடிய பாவமாகக் கருதினார்கள். தாங்கள்தான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று கருதினார்கள். அவரைப் பிசாசு பிடித்தவர் என்றும் பைத்தியக்காரன் என்றும் கூறி அவரினிமித்தம் இடறலடைந்தார்கள். அங்கு நின்றுகொண்டிருந்தவர்களில் பலர் இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். இயேசுவின் தெய்வீக போதனைகளை மக்களால் புரிந்துகொள்ள முடியாத காரணத்தினால் அவர்கள் இயேசுவுக்கு எதிராகத் திரும்பினார்கள்.

ஆயினும் அவரைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் சிலர், இயேசுவின் வார்த்தைகளில் இறைவனுடைய வார்த்தைகளைத் தாங்கள் கேட்பதாக தைரியமாகப் பொதுமக்கள் நடுவில் அறிக்கை செய்தார்கள். அவருடைய வார்த்தைகள் பயனற்ற சிந்தனைகள் அல்ல, அவை வல்லமையும் படைப்பாற்றலும் மிக்கவை. அவர் குருடனுடைய பாவங்களை மன்னித்தார். கருத்தோடு அவருக்குச் செவிகொடுத்த சிலரிடத்தில் கிறிஸ்துவின் அன்பு வேர்கொண்டபோது மக்கள் நடுவில் அவர் மீதான வெறுப்பு அதிகரித்தது. இயேசு ஒரு குறிப்பான இலக்கை நோக்கி எப்போதுமே தன்னுடைய மந்தையை அமைதியாக நடத்துகிறார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, மந்தைகளின் மேய்ப்பனே, நீர் பிடிவாதமுள்ள மந்தையைப் புறக்கணிக்காமல், அவர்களைக் கண்டுபிடிக்கும்வரை தேடி, உம்முடைய உயிரை அவர்களுக்காகக் கொடுத்தீர். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நீர் உம்முடைய பிதாவை அறிந்திருக்கிறதுபோல நாங்களும் உம்மை அறிந்துகொள்ளும்படி அறிவின் ஆவியை நீர் எங்களுக்குக் கொடுத்திருக்கிறபடியால் நாங்கள் உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீர் எங்கள் பெயர்களை அறிந்திருக்கிறீர். நீர் எங்களை மறப்பதில்லை. உம்முடைய அனைத்து சீடர்களுடனும் சேர்த்து நீர் எங்களை நடத்துகிறீர். உம்முடைய வார்த்தைக்குச் செவிகொடுப்பவர்களைப் பிற இனங்களிலிருந்து தெரிந்தெடுத்து அவர்களை மந்தையில் இணைக்கிறீர். அவர்களையும் விழுங்கும் ஓநாயிடமிருந்து தப்புவியும்.

கேள்வி:

  1. இயேசு எவ்வாறு நல்ல மேய்ப்பனானார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:25 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)