Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 066 (Sheep hear the voice of the true shepherd; Jesus is the authentic door)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
3. நல்ல மேய்ப்பன் இயேசு (யோவான் 10:1–39)

அ) உண்மையான மேய்ப்பனின் சத்தத்தை ஆடுகள் கேட்கிறது (யோவான் 10:1-6)


இயேசு 7 மற்றும் 8-ம் அதிகாரங்களில் தன்னுடைய எதிரிகளின் உண்மையான நிலையை அவர்களுக்குக் காண்பித்தார். அவர் 9-ம் அதிகாரத்தில் இறைவனைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் தங்களைப் பற்றியும் அவர்களுக்கிருந்த குருட்டுத்தனத்தைக் காண்பித்தார். பத்தாம் அதிகாரத்தில் தம்முடையவர்கள் பாவமுள்ள தலைவர்களைப் பின்பற்றாமல் தம்மைப் பினபற்றும்படி அவர்களை அழைக்கிறார். அவர் மட்டுமே இறைவனிடம் மக்களை வழிநடத்தும் ஒரே வாசலாகவும், நல்ல மேய்ப்பனாகவும் இருக்கிறார்.

யோவான் 10:1-6
1 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். 4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5 அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போகும் என்றார். 6 இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.

சில கிராமங்களில் விவசாயிகள் தங்களுடைய மந்தையைப் பட்டியில் அடைத்து இரவில் அதைப் பாதுகாப்பார்கள். காலையில் மேய்ப்பர்கள் மந்தைகளை அழைத்துக்கொண்டே அந்தக் கூடாரத்திற்குள் நுழைவார்கள். அப்போது ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சி நடக்கும். மேய்ப்பர்கள் தங்கள் தங்கள் மந்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க மாட்டார்கள். ஒவ்வொரு மந்தையும் தங்கள் மேய்ப்பனுடைய சத்தத்தைக் கேட்டு அவர்களுக்குப் பின் செல்லும். ஒருவேளை மேய்ப்பன் மாறு வேடத்தில் வந்திருந்தால்கூட, அவனுடைய சத்தத்தை வைத்து மந்தை அவனை அடையாளம் கண்டுகொள்ளும். அதேவேளையில் ஒரு போலியான மேய்ப்பன் மேய்ப்பனுடைய உடையில் வந்து மந்ûதையை அழைத்தாலும் அவை அசையாது. உண்மையான மேய்ப்பனுடைய சத்தத்தை மந்தை சரியாகக் கேட்டு அவனையே பின்பற்றிச் செல்லும். இவ்விதமாக மேய்ப்பன் தன்னுடைய மந்தையை அழைத்து, பசுமையான மேய்ச்சலுக்கும், புத்துணர்வளிக்கும் தண்ணீர்களண்டைக்கும் அவற்றை நடத்திச் செல்வான். மேய்ப்பனுடைய மந்தை அவனை நெருங்கிச் சேரும், ஒன்றும் பின்வாங்காது, ஏனெனில் அவை முழுமையாக தங்கள் மேய்ப்பனை நம்பும்.

தன்னுடைய சத்தத்தைக் கேட்க ஆயத்தமாயிருக்கிற அனைவருக்கும் தானே தெய்வீக மேய்ப்பன் என்பதைக் காண்பிக்கவே இயேசு இந்த உதாரணத்தைப் பயன்படுத்துகிறார். பழைய உடன்படிக்கையின் மக்களை திருடவோ, கொள்ளையிடவோ அவர் வரவில்லை. அவர்களில் இருக்கும் தன்னுடைய மக்களை அவர் தெரிந்துகொண்டு அவர்களை அழைக்க வந்தார். அவர் அவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு ஆவிக்குரிய உணவைக் கொடுக்கிறார். மற்ற “மேய்ப்பர்கள்” மந்தையை விழுங்கும் கொடிய ஓநாய்களைப் போல சுற்றித் திரிபவர்கள். அவர்கள் வஞ்சகமாக உள்ளே நுழைகிறார்கள். மந்தைகளைப் பிடித்து விழுங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்காக வாழ்ந்து, தங்களையே கனப்படுத்துகிறார்கள். அவர்கள் மந்தைக்கு உண்மையாகப் பணிசெய்வதில்லை. இறைவனால் தனிப்பட்ட முறையில் அழைக்ப்படாமலும், கிறிஸ்துவில் உண்மையாக நிலைத்திராமலும் இருக்கும் போதகர்களும் திருச்சபைப் பணியாளர்களும் கொள்ளைக்காரர்கள் என்று இயேசுவினால் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் யாருக்கும் உதவாமல் அவர்களுக்கு ஊறுவிளைவிக்கிறார்கள். இயேசுவை உண்மையாகப் பின்பற்றுபவர்கள், ஆபத்தை உணர்ந்து அப்படிப்பட்ட அந்நிய மேய்ப்பர்களைவிட்டு விலகியிருக்க வேண்டும் என்று இயேசு இதை முன்னறிவித்தார். சங்கீதம் 23ல் கர்த்தரே தன்னுடைய மந்தையின் மேய்ப்பராயிருக்கிறார் என்ற வாக்குத்தத்தத்தை நம்பும்படியாகவும் அவர் அவர்களை ஊக்கப்படுத்தினார்.

தங்களுடைய மேய்ப்பர்கள் உண்மையற்றவர்கள் என்றும் தீயவர்கள் என்றும் உணராத அந்த மக்கள் (எரேமியா 2:8; 10:21; எசே. 34:1-10; சகரியா 11:4-6), இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லை. இருப்பினும் அவர்களுக்கு தானே நல்ல மேய்ப்பனாயிருந்து, தன்னுடைய மக்களை இரட்சித்து, மோசேயையும் தாவீதையும் போன்ற நல்ல மேய்ப்பர்களை அவர்களுக்குத் தர இறைவன் ஆயத்தமாயிருக்கிறார். “மேய்ப்பன்”, “மந்தை”, “தேவனுடைய ஆட்டுக்குட்டி”, “இரத்தம்சிந்தி மீட்டெடுத்தல்” போன்ற வார்த்தைகள் மேய்ப்பர்கள் வாழம் பகுதிகளில் பயன்படுத்தப்படுபவை. இறைவன் தன்னுடைய மகனில் நல்ல மேய்ப்பராகத் தன்னை வெளிப்படுத்துவதன் மூலம் அவர் நம்மீது அடிப்படையில் வைத்திருக்கும் கரிசனையை வெளிப்படுத்துகிறார்.


ஆ) இயேசுவே அதிகாரபூர்வமான வாசல் (யோவான் 10:7-10)


யோவான் 10:7-10
7 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 8 எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. 9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

இறைவனுடைய மந்தைக்குச் செல்லும் வாசல் என்று இயேசு தன்னைச் சித்தரிக்கிறார். கிறிஸ்துவினாலே அன்றி திருச்சபையில் இருக்கும் மீட்கப்பட்டவர்களோடு ஐக்கியம்கொள்ள வேறு வழியில்லை. யார் கிறிஸ்து இல்லாமல் மக்களை பக்தியுள்ளவனாக்க முயற்சித்தால்அவன் இறைவனுடைய மந்தையை தவறான காரியங்களினால் குழப்புகிற திருடனுக்கு ஒப்பாயிருக்கிறான். பரிசுத்த ஆவியானவர் வேற்று வழிகளில் நம்மை நடத்தாமல் கிறிஸ்துவாகிய இடுக்கமான வாசல் வழியாகவே நம்மை நடத்துகிறார். யார் அந்த வழியாகச் செல்லவில்லையோ, யார் அவருடைய மாம்சத்தில் உட்கொண்டு, இரத்தத்தில் பானம்பண்ணவில்லையோ, அவர்கள் இறைமக்களுக்கு ஊழியம் செய்ய உரிமையற்றவர்கள். நாம் நம்முடைய சுயத்திற்கு மரித்து, கிறிஸ்துவின் மந்தைக்குள் சேர வேண்டும். அப்போது நாம் அவருடைய மந்தையாவோம்.

கிறிஸ்துவுக்கு முன்பாகவோ அல்லது அவருக்குப் பின்பாகவோ வந்த புகழ்பெற்ற மக்கள் யாராயிருந்தாலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரினால் வாழ்ந்திராவிட்டால், அவர்கள் ஏமாற்றுகிற திருடர்களோ. தத்துவ ஞானிகள், சிந்தனையாளர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் இயேசுவை விசுவாசிக்காமலும் அவருக்கு ஒப்புக்கொடாமலும் இருப்பார்கள் என்றால் அவர்கள் கொள்ளைக்காரர்களே என்று இயேசு கூறுகிறார். அவர்கள் தங்கள் போதனைகளினாலும் நடத்தையினாலும் மக்களைக் கெடுக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் ஆவியில் நிலைத்திருக்கும் உண்மையான தீர்க்கதரிசிகளோ அவருக்கு முன்னிருந்தவர்களாகவும், நொருங்கிய இருதயமுடையவர்களாகவும் வாசல் வழியாக இறைவனிடம் வருகிறார்கள். இயேசுவே அவர்களை ஆயத்தப்படுத்தி தன்னுடைய மந்தைக்கு உண்மையான சேவை செய்யும்படி அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ஒருவன் சுயத்திற்கு மரித்து, தன்னுடைய இரட்சிப்புக்காக இயேசுவைச் சார்ந்துகொள்ளும்வரை இறைவனுடைய மந்தைக்குள் செல்ல முடியாது. இயேசு தனக்குக் கீழ்ப்படிந்துள்ள மந்தையை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்குகிறார். உண்மையான மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை விட்டு வெளியே சென்று இரட்சிக்கப்படும்படி மக்களை அழைக்கிறார்கள். பிறகு அவர்கள் அவரில் நிலைத்திருக்கும்படியாகவும் அவர் அவர்களில் நிலைத்திருக்கும்படியாகவும் அவர்களை மந்தைக்குள் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட மேய்ப்பர்கள், தாங்களும் கிறிஸ்துவின் மந்தைக்குட்பட்டவர்களாயிருப்பதால் அவர்கள் மந்தைக்கு மேலானவர்களாகத் தங்களைக் கருதுவதில்லை. யார் தாழ்மையுள்ளவர்களாயிருக்கிறார்களோ அவர்கள் பெலத்தையும் ஞானத்தையும் தங்கள் ஆண்டவரில் முழுமையாகப் பெற்றுக்கொள்கிறார்கள். தாழ்மையான இருதயம் இயேசுவில் நிச்சயமான மேய்ச்சலைக் கண்டடையும்.

நான்கு முறை தங்கள் சுய மகிமையைத் தேடி மற்றவர்களைக் கெடுக்கும் வேதபாரகரையும் ஆசாரியர்களையும் குறித்து இயேசு தன்னுடைய மந்தைக்கு எச்சரிப்புக் கொடுக்கிறார்.

அதேவேளையில் அனைவரும் தன்னிடத்தில் வந்து உண்மையான நல்வாழ்வையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறார். யார் கிறிஸ்துவினிடத்தில் வருகிறார்களோ அவர்கள் மற்றவர்களுக்கு நற்குணங்களின் ஊற்றாகத் திகழ்வார்கள். மேய்ப்பர்கள் தங்களுக்காக வாழாமல் தங்கள் நாட்களையும் வாழ்க்கையையும் தங்கள் மந்தைக்காக தியாகம் செய்கிறார்கள். நம்முடைய தனிப்பட்ட இரட்சிப்புக்காக மட்டுமல்ல இறைவனுடைய ஆவியானவர் நமக்கு தெய்வீக வாழ்வைக் கொடுப்பதில்லை. நாம் நம்முடைய சுயத்தை வெறுத்து மற்றவர்களையும் நேசிக்கும்படி நம்மைப் பணியாளர்களாகவும் மேய்ப்பர்களாகவும் ஏற்படுத்துகிறார். நம்மில் அன்பு அதிகரிக்கும்போது அது மற்றவர்களுக்கும் பாய்ந்தோடும். கர்த்தருக்கா சேவை செய்வதைக் காட்டிலும் மேன்மையானது வேறு எதுவும் இல்லை. “அவர்கள் ஜீவன் பரிபூரணப்படவும்” என்ற சொற்றொடர் இதைத்தான் குறிக்கிறது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, இறைவனிடத்தில் நடத்திச் செல்லும் வாசலாக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. இறைவனுக்கும் மக்களுக்கும் சேவை செய்யும்படி நீர் எங்களை அழைத்து உம்மோடு எங்களை ஐக்கியப்படுத்தியமைக்காக உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் உங்களை உன்க்கு ஒப்புக்கொடுத்து மெய்வாழ்வைப் பெற எங்களுக்கு நீர் உதவி செய்யும். உம்முடைய பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த நீர் எங்களை பெலப்படுத்தும், நீர் எங்களுக்கு அருளும் சகாயத்தினால் நாங்கள் அனைவúக்கும் ஆசீர்வாதமாக விளங்க உதவிசெய்யும்.

கேள்வி:

  1. இயேசு தன்னுடைய மந்தைமீது பொழிந்தருளும் ஆசீர்வாதங்கள் யாவை?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:21 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)