Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 064 (The Jews interrogate the healed man)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
2. பிறவிக் குருடனைக் குணமாக்குதல் (யோவான் 9:1-41)

ஆ) குணமாக்கப்பட்ட மனிதனை யூதர்கள் விசாரித்தல் (யோவான் 9:13–34)


யோவான் 9:24-25
24 ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள். 25 அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான்.

இயேசுவில் குற்றம் கண்டுபிடித்து அவரை நியாயம்தீர்க்க பரிசேயர்கள் முயன்றார்கள். அவர்கள் மறுபடியும் சுகமாக்கப்பட்ட மனிதனைக் கொண்டுவந்து, அவனை இயேசுவுக்கு விரோதமாகப் பேசவைத்து, அவரைக் குற்றப்படுத்த முனைந்தார்கள். இயேசு பாவிதான் என்று நியாயப்பிரமாணத்தை நன்கு அறிந்த தங்களுக்குத் தெரியும் என்றும் அவர்களுக்குத் தேவையானது தெளிவான சாட்சி மட்டுமே என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு இயேசுவை அவன் குற்றப்படுத்த வேண்டும் என்று அவர்கள் அவனை நிர்ப்பந்தித்தார்கள். அவனுடைய சுகமாகுதல் நசரேயனுடைய மகிமைக்குரியதல்ல என்று அறிக்கையிடும்படி அவனை வற்புறுத்தினார்கள். அதற்கு அந்த மனிதன், “அவர் பாவியா என்பது எனக்குத் தெரியாது. அது கடவுளுக்குத்தான் தெரியும். எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் குருடனாயிருந்தேன், இப்போது நான் காண்கிறேன் என்பதே” என்று பதிலளித்தான். அந்த உண்மையை மறுதலிக்க முடியாது. ஆகவே அது அற்புதம் நடந்திருக்கிறது என்பதையும், தெய்வீக வல்லமையும் பாவமன்னிப்பின் கிருபையும் செயல்பட்டுள்ளது என்பதையுமே காண்பிக்கிறது. இந்த வாலிபனுடைய சாட்சியை ஆயிரக்கணக்கான விசுவாசிகள் உறுதிசெய்வார்கள். அவர்கள் பரலோகம் மற்றும் நரகம் ஆகியவற்றின் இரகசியங்களை அறியாவிட்டாலும், அவர்கள் மறுபிறப்பைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், “முன்பு நான் குருடனாயிருந்தேன், இப்போது காண்கிறேன்” என்று அறிக்கையிடக் கூடியவர்கள்.

யோவான் 9:26-27
26 அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள். 27 அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்கவேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான்.

இந்த வாலிபனுடைய பதிலில் நம்பிக்கையற்றவர்களாக, அவனுடைய பதிலில் முரண்பாடுகளைக் கண்டுபிடிக்கும்படி, அவனுடைய கதையைத் திரும்பச் சொல்லும்படி கேட்டார்கள். அவன் கோபமுற்றவனாக, “நான் முதல்முறை சொன்னபோது உங்களுக்குப் புரியவில்லையா? நீங்கள் மறுபடியும் கேட்க விரும்புவதால், நீங்களும் அவருக்குச் சீஷராக விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.

யோவான் 9:28-34
28 அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். 29 மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள். 30 அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம். 31 பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். 32 பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. 33 அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். 34 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.

வேதபாரகரையும் அறிஞர்களையும் அந்த வாலிபன் ஏளனம் செய்தவுடன், அவன்மீது வெறுப்புற்று அவனைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தார்கள். “இந்த ஏமாற்றுக்காரனுக்கு நாங்கள் சீஷர்கள் அல்ல. நீதான் அவனுடைய சீஷன். நாங்கள் இறைவனுடன் பேசிய மனிதனாகிய மோசேயைப் பின்பற்றுகிறோம்” என்றார்கள். அவர்கள் மோசேயைச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தால் தன்னுடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்திருப்பார்கள் என்று இயேசு ஏற்கனவே அவர்களிடம் கூறியிருந்தார். ஆயினும் அவர்கள் மோசேயின் வார்த்தைகளைத் திரித்து, தங்களை நியாயப்படுத்த முயற்சித்தார்கள். மோசேயையோ, மோசேயின் மூலமாகப் பேசிய ஆவியையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இதற்கு பதிலாக சுகமாக்கப்பட்ட மனிதன், “பிறவிக் குருடனுடைய கண்களைத் திறக்கக்கூடிய ஒருவர் படைப்பாற்றல் உடையவர். அவர் வல்லமையுள்ளவர். அவர் பெருந்தன்மையானவராக என்னைக் குற்றப்படுத்தவில்லை. என்னிடத்தில் பணம் கேட்கவில்லை. அன்புள்ளத்துடன் இலவசமாகவே என்னைக் குணமாக்கினார். நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றுகூட அவர் எதிர்பார்க்கவில்லை. அவரில் எனக்கு எந்தக் குறையும் தெரியவில்லை” என்று கூறினான்.

அதன் பிறகு அந்த வாலிபன், “பெருமையுள்ளவர்களுடைய விண்ணப்பங்களுக்கு இறைவன் செவிகொடுப்பதில்லை என்பதை பழைய உடன்படிக்கைக்குட்பட்ட ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறார்கள். மனிதனிலிருக்கும் பாவம் இறைவனுடைய ஆசீர்வாதத்தின் ஊற்றைத் தடைசெய்யும். ஆனால் ஒருவன் பரிசுத்தமுள்ள இறைவனுக்கு முன்பாக நொருங்குண்ட இருதயத்தோடு தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்து, நன்றியடன் விசுவாசிக்கும்போது, அவனிடத்தில் இறைவன் பேசுகிறார்.” “உங்களில் யாரும் என்னுடைய கண்களைத் திறக்க முடியவில்லை. எந்த மனிதனாலும் இதைச் செய்யமுடியாது. ஏனெனில் இயேசுவைத் தவிர அனைவருமே பாவம் செய்தவர்கள். அவர் என்னைச் சுகப்படுத்தியதே அவர் பாவமற்றவர் என்பதற்கான அத்தாட்சியாகக் காணப்படுகிறது. இறைவன் அவரில் வாசம்பண்ணுகிறார்.” இந்த விசாரணையில் இயேசுவைப் பற்றி சிந்திக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட அந்த மனிதன் இயேசுவின் பாவமின்மையையும் தெய்வீகத்தையும் அறிந்துகொண்டான்.

இதைக் கேட்ட சுயநீதிக்காரர்களாகிய அந்தப் பரிசேயர், “உன்னைப் போல கேடானவன் யாருமில்லை. உன்னுடைய பெற்றோரும் அப்படிப்பட்டவர்களே. உன்னுடைய இழிவான பாவத்தினால்தான் நீ குருடனாகப் பிறந்தாய்” என்று அவனைச் சபிக்கத் தொடங்கினார்கள். அந்த ஏழை மனிதனைவிட இவர்கள் அதிக குருடர்களாயிருந்தார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை. அந்தக் குருடன் இயேசுவின் சார்பில் ஒரு அப்போஸ்தலனாக அவர்களிடத்தில் அனுப்பப்பட்டான். அவர்களுக்கு அவர் என்ன சொல்ல விரும்பினாரோ அதை அவன் அவர்களுக்குச் சொன்னான். குணமாக்கப்பட்ட அந்த செய்தியாளனை அவர்கள் புறக்கணித்ததன் மூலமாக கிறிஸ்துவின் போதனைகளை அவர்கள் புறக்கணித்தார்கள். முதலில் அவன் ஆலோசனைச் சங்கத்திற்குப் புறம்பாக்கப்பட்டான், பிறகு அவன் தன்னை இயேசுவின் தாசன் என்று அழைத்தபோது சமூகத்தைவிட்டு அவன் தள்ளிவைக்கப்பட்டான். அந்த நாளில் அவன் சுகமாக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுடைய சொந்த இனத்தாரால் புறக்கணிக்கப்பட்டான். இது அவர்களுடைய ஆவியினால் கிறிஸ்துவின் ஆவியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதன் அத்தாட்சியாயிருக்கிறது.

கேள்வி:

  1. தான் விசாரிக்கப்பட்டபோது இந்த வாலிபன் படிப்படியாக உணர்ந்துகொண்டது என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:13 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)