Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 063 (The Jews interrogate the healed man)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
2. பிறவிக் குருடனைக் குணமாக்குதல் (யோவான் 9:1-41)

ஆ) குணமாக்கப்பட்ட மனிதனை யூதர்கள் விசாரித்தல் (யோவான் 9:13–34)


யோவான் 9:13-15
13 குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள். 14 இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. 15 ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான்.

யூதர்களுடைய வாழ்க்கை சட்டவாதத்தின் அடிமைத்தனத்திற்கு உட்பட்டதாக இருந்தது. அவர்கள் ஒரு மனிதன் குணமாக்கப்படுவதைவிட ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதையே அதிக மகிழ்ச்சியானதாகக் கருதினார்கள். இந்த சுகம் இறைவனால் கிடைக்கப்பெற்றதா அல்லது சாத்தானுடைய செயலா என்பதை தீர்மானிக்கும்படி மக்களும் உளவாளிகளும் அந்த மனிதரைப் பரிசேயரிடத்தில் கொண்டுபோனார்கள்.

இவ்வாறு அவர்கள் அந்த மனிதனிடத்தில் இயேசுவைக் குறித்த தங்களுடைய விசாரணையை ஆரம்பித்தார்கள். தனக்கு எவ்வாறு சுகம் கிடைத்தது என்பதை அந்த வாலிபன் விவரித்துச் சொன்னான். இயேசுவின் எதிரிகளிடம் காணப்பட்ட பகைமை காரணமாக அவன் குணமடைந்ததால் உண்டான மகிழ்ச்சி பாழ்பட்டபடியால் அவன் தன்னுடைய வார்த்தைகளைச் சுருக்கிக்கொண்டான்.

யோவான் 9:16-17
16 அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. 17 மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்.

அவனுடைய சாட்சியைக் கேட்டவுடன் சட்டவாதிகள் வாதாட ஆரம்பித்துவிட்டார்கள். இயேசு இறைவனுடைய கட்டளையை மீறியபடியால் அவரிடத்தில் இறைவனுடைய சக்தி எதுவும் இருக்க முடியாது. தங்களுடைய சட்டவாதச் சிந்தனையின்படி அவர்கள் இயேசுவை இவ்வாறு நியாயம்தீர்த்தார்கள்.

மற்றவர்கள் அந்தக் குருடனுடைய பாவத்திற்கும் அவனுக்குக் கிடைத்த பாவமன்னிப்பு மற்றும் சுகம் ஆகியவற்றிற்கும் இடையில் என்ன தொடர்புள்ளது என்று சிந்தித்தார்கள். இந்த குணமாக்குதல் இறைவனுடைய பாவமன்னிப்புடன் தொடர்புள்ள காரணத்தினால், அதற்கு அதிக ஆழமான அர்த்தம் இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். ஆகவே பாவங்களை மன்னித்து, துயரத்துக்கான காரணத்தைத் தீர்த்துவைத்த இயேசு பாவியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றனர்.

இருதரப்பினருக்கும் சமரசம் ஏற்படவில்லை. இன்று இயேசுவைக் குறித்து அர்த்தமற்ற முறையில் உரையாடும் பலரைப் போலவே இரண்டு தரப்பினரும் அறியாமையில் பேசினர். இயேசுவிடம் வேறு ஏதாவது இருக்கிறதா என்றும் அந்தக் குருடன் இயேசுவைப் பற்றி என்ன நினைக்கிறான் என்றும் அறிந்துகொள்ளும்படி அவர்கள் அவனிடத்தில் கேள்விகளைக் கேட்டார்கள். இயேசுவைப் பற்றி ஏதாவது அறிந்தவர்களுக்கு இப்படிப்பட்ட கேள்விகள் பயனுள்ளதாக இருக்கும். மறுபடியும் பிறந்தவர்களால் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஏனெனில் அவர்கள் பாவத்திலிருந்தும் இறைவனுடைய கோபத்திலிருந்தும் தப்பிப்பது எப்படி என்று அவர்கள் அறிவார்கள். நாம் ஆவிக்குரிய நிலையில் பிறக்காவிட்டால் நம்மால் இறைவனைக் காண முடியாது.

குணமாக்கப்பட்ட மனிதன் பேச ஆரம்பித்தான். “யார் இந்த இயேசு?” அவன் வரலாற்றில் வாழ்ந்த இறைவனுடைய மனிதர்களுடன் இயேசுவை ஒப்பிட்டான். அந்த வரலாற்றுக் காலத்தில் பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது, ஆனால் யாரும் பிறவிக்குருடனுடைய கண்களைத் திறந்ததில்லை. இயேசுவின் செயல்களைப் பார்க்கும் எந்த சிந்தனையுள்ள மனிதனும் அவர் ஒப்பற்ற இரட்சகர் என்பதை நிச்சயமாக காணமுடியும். ஆகவே அந்த மனிதன், எதிர்காலத்தைக் காணவும் தற்காலத்தை இறைவனுடைய வல்லமையினால் தீர்மானிக்கக்கூடியவருமாயிருந்த அவரைத் தீர்க்கதரிசி என்று அழைத்தான். அவர் மனிதருடைய இருதயத்தை ஆராய்ந்து இறைவனுடைய சித்தத்தை வெளிப்படுத்துபவர்.''

யோவான் 9:18-23
18 அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து, 19 அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். 20 தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக; இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். 21 இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். 22 அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். 23 அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள்.

கிறிஸ்துவின் தெய்வீகமான அற்புத செயல்களை பழைய ஏற்பாட்டு அற்புதங்களுடன் ஒப்பிடும் முறையை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசி என்றோ, இறைவனால் அனுப்பப்பட்டவர் என்றோ அவர்கள் நம்பவில்லை. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களுடைய நிலைப்பாடு தவறானது என்றும் கண்டிக்கப்பட வேண்டியது என்று நிரூபணமாகிவிடும்.

அந்த அற்புதம் போலியானது என்றும் அவன் குருடனாகவே இருக்கவில்லை என்றும் அவர்கள் பொய் கூற ஆரம்பித்தார்கள். இயேசுவின் அற்புதத்தை மறுதலிப்பதற்காக அது ஒருபோதும் சாத்தியமற்றது என்று சாதித்தார்கள். ஒருவன் பிறவியிலேயே குருடனாகப் பிறப்பது அவனுடைய மூதாதையர்கள் செய்த பாவமாகும். எனவே அப்படிப்பட்ட ஒருவனுக்கு சுகம் கிடைப்பது சாத்தியமாகாத ஒன்று என்று அவர்கள் வாதிட்டார்கள். அதிகாரிகள் மூலம் தங்கள் மகனுடைய பிரச்சனையைப் பற்றிக் கேள்விப்பட்ட பெற்றோர் அங்கு வந்தார்கள். அவர்கள் பரிசேயருக்குப் பயந்ததினால், முன்பு தங்கள் மகன் சொன்ன காரியங்களை மறுதலித்து, கவனமாகப் பேசினார்கள். தாங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்கள் அவனைக் கைவிட்டு விட்டார்கள். ஆகவே, இப்போது மகன் தன்னுடைய காரியத்திற்கு தானே பொறுப்பாளியாக விடப்பட்டான். ஆலோசனைச் சங்கத்தினால் தள்ளி வைக்கப்படுதல் என்பது மிகவும் பயங்கரமான காரியமாகும். அது ஒரு குஷ்டரோகி சமூகத்தினால் தள்ளி வைக்கப்படுவதைப் போன்றது. அவ்வாறு தள்ளிவைக்கப்பட்டவர்களுக்கு திருமணம் போன்ற உரிமைகள் மறுக்கப்படும். இயேசுவைப் பின்பற்றுபவர்களை இவ்வாறு தண்டிக்கும் அளவுக்கு இயேசுவின் மீதான அவர்களுடைய வெறுப்பு அதிகரித்திருந்தது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் மாம்சத்தில் வந்த இறைவனுடைய அதிகாரமாயிருப்பதால் உமக்கு நாங்கள் நன்றி சொல்லுகிறோம். எங்களுக்கு உபத்திரவங்கள் வரும்போது எங்கள் பாதுகாப்பையும் ஆறுதலையும் பற்றிக்கொண்டிராமல் உம்மைப் பற்றிக்கொண்டிருக்கும்படி எங்களைக் காத்துக்கொள்ளும். நாங்கள் எங்களை வெறுத்து, தைரியமும் விசுவாசமும் உள்ளவர்களாக, உம்மை மறுதலிப்பதைவிட மரணத்தைத் தெரிவுசெய்ய எங்களை வழிந்த்தும்.

கேள்வி:

  1. பிறவிக் குருடனைக் குணமாக்க முடியாது என்று யூதர்கள் ஏன் கூறினார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:10 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)