Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 057 (Jesus the light of the world)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

ஈ) உலகின் ஒளியாகிய இயேசு (யோவான் 8:12-29)


யோவான் 8:25-27
25அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான். 26 உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். 27 பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

கிறிஸ்து தன்னுடைய தெய்வீகத்தை யூதர்களுக்கு வலியுறுத்திக் கூறியும், அவர்கள், “நீர் யார்? எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும். நாங்கள் புரிந்துகொள்ளும்படி எங்களுக்கு விளக்கும்.” என்று தொடர்ந்து கேட்டார்கள். அவர்களுடைய கேள்விக்கு முன்பாகவே அவர் தன்னை எவ்வளவு தெளிவாக வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்.

இயேசு அவர்களுக்கு பதிலுரைத்தார்: “ஆரம்பத்திலிருந்து நானே மெய்யான இறைவன்; ஆனால் நீங்கள் என்னுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளத் தவறி விட்டீர்கள். என்னுடைய ஆவியானவர் உங்கள் இருதயங்களில் தங்கவில்லை. என்னுடைய பெயர்களையும் குணங்களையும் குறித்த வெளிப்பாட்டினால் உங்களுக்கு எந்தப் பயனுமில்லை. மனுவுருவாக வந்த இறைவார்த்தை நானே. நீங்கள் இறைவனிடமிருந்து வராமல் இவ்வுலகத்திலிருந்து வருவதால் என்னுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவோ அவற்றிற்குச் செவிகொடுக்கவோ தவறிவிட்டீர்கள். கவனம் செலுத்தும் தன்மையை உங்களில் உருவாக்க என்னுடைய ஆவிக்கு நீங்கள் இடம் கொடுக்கவில்லை. உங்கள் இருதயம் கடினமானதாக இருந்ததால் நான் பலமுறைப் போதித்தும் நீங்கள் பலனடையவில்லை. அதனால் நான் உங்களை நேசித்து என்னை உங்களுக்கு வெளிப்படுத்தினாலும் என்னுடைய வார்த்தைகள் உங்களை நியாயந்தீர்க்கும். நான் உங்களை இரட்சித்து உங்களை உயிர்ப்பிக்க விரும்புவதால் உங்களில் ஓரிருவர் என்னுடைய மகத்துவத்தை உணர ஆரம்பித்திருக்கலாம். நான் சத்தியமாயிருப்பதைப் போல இறைவனும் பொய்யரல்ல, சத்தியராயிருக்கிறார். ஆவியானவர் உங்களில் இறங்குவதை நீங்கள் புறக்கணித்தபடியால் அந்த சத்தியம் உங்களை அழிக்கும்.” இன்னும் யூதர்கள் இந்த வெளிப்பாடுகளின் மறைபொருளை அறியவோ, பிதாவுக்கும் அவருக்கும் இடையிலான ஐக்கியத்தின் முக்கியத்துவத்தை உய்த்துணரவோ இல்லை. அவர்கள் அவரை விசுவாசிக்க விரும்பாத காரணத்தினால் இந்த வார்த்தைகளைக் கேட்டும் எதையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவரில் வைக்கும் எளிய விசுவாசம் இந்தக் காரியங்களை நமக்கு வெளிப்படுத்தும்.

யோவான் 8:28-29
28ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். 29 என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.

இயேசுவைப் பற்றிய உண்மைகளை அவருடைய எதிரிகள் மட்டுமல்ல, அவருடைய சீடர்களும்கூட புரிந்துகொள்ளவில்லை என்பதை இயேசு அறிந்தார். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் இன்னும் அருளப்படவில்லை. ஆனால் சிலுவையில் தான் உயர்த்தப்படுவதன் மூலமாக உலகத்தின் பாவம் நீக்கப்படும் என்றும், தான் பிதாவினிடத்தில் எழுந்தருளிச் செல்வதினால் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுவார் என்றும் நிச்சயமுடையவராயிருந்தார். அவரைக் குறித்த இப்படிப்பட்ட அறிவு யூதர்களுடைய மனதிலும் புறவினத்து மக்கள் மனதிலும் மின்னலைப் போல தாக்கக்கூடியதாக இருந்தது. பரிசுத்த ஆவியானவரின் செயலின்றி கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை யாரும் உய்த்துணர முடியாது. தர்க்கரீதியான சிந்தனையின் மூலமாக அவரை அறிந்துகொள்ள முடியாது. மறுபிறப்பு உறுதியான விசுவாசத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவின் மென்மையில் வைக்கும் உறுதியான விசுவாசம் மறுபிறப்பை உருவாக்குவதைப் போலவே இதுவும் நடைபெறுகிறது.

கிறிஸ்து தான் முழுவதும் தனிப்பட்ட தெய்வம் என்று கூறவில்லை. அவர் தமக்கும் பிதாவுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தையும், பிதாவின்றி தன்னால் செயல்பட முடியாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். பிதா அவரில் செயல்படுவதால் அவர் தானாக எதையும் செய்வதில்லை என்று மேலும் கூறினார். “இறைவனுடைய அப்போஸ்தலன்” என்ற பெயரை அவர் ஏற்றுக்கொண்டது அவருடைய மனுஷீகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அதே வாக்கியத்தில் அவர் வரலாற்றின் ஆண்டவர் என்பதையும் வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய பிதாவானவர் அறிவதற்கு எளிமையானவர் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவரை எளிமையாக வெளிப்படுத்துகிறார். இந்த உயர்வான அர்த்தங்களை யோவான் பதிவு செய்யும்போது, திரித்துவத்தின் ஐக்கியம் என்னும் மகத்துவமான சத்தியத்தை இயேசு நம்முடன் பகிர்ந்துகொள்வதையே காண்பிக்கிறார். அவர் தொடர்ந்து பேசினார்: “பிதா எப்போதும் என்னுடன் இருக்கிறார். இப்போதும் என்னுடன் இருக்கிறார். அவர் ஒரு நொடிப்பொழுதுகூட என்னைவிட்டுப் பிரிந்ததில்லை. குமாரனும் ஒருபோதும் தன்னுடைய பிதாவை விட்டு விலகுவதோ அவருக்கு எதிராக கலகம் செய்வதோ இல்லை. மாறாக பிதாவினுடைய நல்ல சித்தத்திற்கு அவர் எப்போதும் கீழ்ப்படிகிறார். அவர் பிதாவினுடைய சித்தத்திற்கு உட்பட்டவராகவே பரலோகத்திலிருந்து இறங்கி மனிதனாக இவ்வுலகத்திற்கு வந்தார்.” “நான் எப்போதும் பிதாவுக்குப் பிரியமானதையே செய்கிறேன்” என்பது எவ்வளவு இன்பமான கூற்று. பரிசுத்த ஆவியின் நிறைவினால் எப்போதும் பிதாவுடன் ஒரே சிந்தையாயிருக்கும் குமாரனைத் தவிர யார் இவ்விதம் கூறமுடியும்? இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். அதற்கும் மேலாக அவரே புதிய ஏற்பாட்டில் பூரணமான பிரமாணமாக இருக்கிறார். ஆனால் யூதர்களோ அவர் தேவதூஷணம் சொல்பவர் என்றும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறவர் என்றும் மக்களைத் தவறான பாதையில் நடத்துகிறவர் என்றும் குற்றம் சாட்டினார்கள். ஆனால் அவர் மட்டுமே நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளக்கூடிய ஒரே நபர்.

கிறிஸ்துவைப் பற்றிய அவருடைய அறிவிப்பில் பரிசுத்த ஆவியின் சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்களா? அவருடைய மகத்துவத்தையும் தாழ்மையையும், அவருடைய சுதந்திரத்தையும் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தலையும் நீங்கள் உணருகிறீர்களா? அவ்விதமாகவே நீங்களும் ஒரே நேரத்தில் ஒப்புக்கொடுத்தலும் சுதந்திரமும் இருக்கின்ற அன்பின் ஐக்கியத்திற்கு அழைக்கப்படுகிறீர்கள். அவர் உங்களை விடுவித்து தம்முடைய பிரசன்னத்தினால் உங்களை சேவைசெய்ய பெலப்படுத்துவார். அவர் உங்கள் போதகராயிருப்பார். அவரில்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது. எப்போதும் அவரைப் பிரியப்படுத்தும்படியே நீங்கள் வாழ்வீர்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே என்னுடைய பிடிவாதம், வஞ்சகம் மற்றும் குற்றம் ஆகியவற்றிற்காக நான் வெட்கப்படுகிறேன். என்னுடைய மீறுதல்களை மன்னியும். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு என்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கும்படி என்னைப் பரிசுத்தப்படுத்தும். என்னுடைய வழிநடத்துனராகவும், போதகராகவும் இரும். உம்முடைய நித்திய அன்பை அறிந்துகொள்ள என் இருதயத்தையும் சிந்தையையும் திறந்தருளும்.

கேள்வி:

  1. பரிசுத்த திரித்துவத்தில் தன்னுடைய நிலைப்பாட்டைக் குறித்து இயேசு என்ன கூறுகிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 08:16 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)