Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 053 (Disparate views on Jesus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

ஆ) மக்கள் நடுவிலும் ஆலோசனைச் சங்கத்திலும் இயேசுவைக் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் (யோவான் 7:14-53)


யோவான் 7:45-49
45 பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள். 46 சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள். 47 அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? 48 அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? 49 வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.

இயேசு தேவலயத்தில் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கும்போது சேவகர்கள் அவரைக் கைதுசெய்து தங்களிடத்தில் கொண்டுவருவார்கள் என்று பரிசேயர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். ஒரே பிரதான ஆசாரியன்தான் தன்னுடைய வாழ்நாளில் ஆலோசனைச் சங்கத்திற்குத் தலைமை வகிப்பான். ஆனால் இங்கு பிரதான ஆசாரியர்கள் என்று பன்மையில் வழங்கப்பட்டுள்ளது. ரோம அரசாங்கங்கள் அவர்களை அவ்வப்போது பதவி விலக்குவதால் இவ்வாறிருந்திருக்க வேண்டும். இந்தப் பிரதான ஆசாரியர்கள் சதுசேயர்களாகவும், சுய சிந்தனைக்கு அதிக இடம் தருபவர்களாகவும், பரிசேயர்களுடைய சட்டவாதத்தை இரக்கமின்றிக் கண்டிப்பவர்களாகவும் காணப்பட்டார்கள்.

பரிசேயர்கள் ஆசாரியர்களுடன் ஆலோசனைச் சங்கத்தில் இருந்தார்கள். சட்டவாதிகளாகிய அவர்கள் கிரேக்க சிந்தனையைப் புறக்கணித்து அவர்களுடைய கட்சியின் விசுவாசத்திற்கும் செயல்களுக்கும் நியாயப்பிரமாணத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கடின இருதயத்துடன் தங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் கடுமையைக் காண்பிப்பதன் மூலமாக இறைவனைக் கனப்படுத்த முயற்சிப்பவர்கள்.

இயேசுவைக் கைதுசெய்யவில்லை என்பது பரிசேயர், சதுசேயர் ஆகிய இருவரையும் கோபப்படுத்தியது. அவருடைய சீடர்கள் அவரைப் பாதுகாக்கவில்லை, மக்களும் அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கவில்லை. ஆனால் அவருடைய வார்த்தைகள் அனைவரையும் கவர்ந்தது. அதனால் அவர்கள் அவரைக் கட்டப் பயந்தார்கள். அவர்கள் இயேசுவின் மூலம் புறப்பட்டு வந்துகொண்டிருந்த இறைவனுடைய வல்லமையை அறிந்தார்கள்.

பரிசேயர்கள் கோபமடைந்து, சேவகர்களைப் பார்த்து, “நீங்களும் இந்த வஞ்சகனுடைய வலையில் விழுந்து விட்டீர்களா? ஆலோசனைச் சங்கத்திலிருக்கும் மதிப்பிற்குரிய அங்கத்துவர்கள் யாரும் அவனை விசுவாசிக்கவில்லை. எந்த நேர்மையான விசுவாசியும் இந்தக் கலிலேயனை பின்பற்ற மாட்டார்கள்” என்று கத்தினார்கள்.

பலர் இயேசுவை நேசித்தார்கள். ஆனால் அவர்கள் எளிமையானவர்களும், புறக்கணிக்கப்பட்டவர்களும், பாவிகளும், ஒழுக்கமற்றவர்களாகவும் இருந்தனர். அவர் அவர்களுடன் பந்தியமர்ந்து, அவருடைய பிரசன்னத்தினால் அவர்களைக் கனப்படுத்தினார். ஆனால் பக்தியுள்ளவர்கள் அப்படிப்பட்ட மக்களை புறக்கணித்து அவர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் என்று கருதினார்கள். அவர்களை அவர்கள் சட்டவாதக் கண்ணாடியின் மூலமாகப் பார்த்தார்கள். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மக்கள்கூட்டம்தான் இயேசுவைப் பின்பற்றியது. அவர்களில் சிலர் தங்களுடைய பாவங்களை யோவான் ஸ்நானகனிடம் அறிக்கையிட்டிருந்தார்கள். அந்த மக்களும் தங்கள் மொழியைப் பேசுபவர்கள் என்றும் தங்கள் பழக்கவழக்கங்களையே பின்பற்றியவர்கள் என்பதையும் மறந்து அந்தக் கூட்டத்தைத் தலைவர்கள் வெறுத்தார்கள். அவர்கள் நடுவில் எந்தவகையான பிரிவினைகளும் வகுப்புகளும் காணப்பட்டபோதிலும் அவர்கள் அனைவரும் ஒரே மக்களே.

யோவான் 7:50-53
50 இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி: 51 ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். 52 அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். 53 பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.

அந்த ஆலோசனைச் சங்கத்திலிருந்தவர்களில் சங்கத்தின் முடிவினால் மனவேதனையடைந்த ஒருவர் இருந்தார். அது இரவில் இயேசுவைச் சந்திக்க வந்த நிக்கோதேமு. மறுபிறப்பின் அவசியத்தை இயேசு அவருக்குப் போதித்திருந்தார். இந்த மனிதன் இன்னும் இயேசுவின் செல்வாக்கிற்கு உட்பட்டவராக இருந்து, தான் இயேசுவை ஆதரிப்பதாக வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் அவருக்காகப் பரிந்துபேச விரும்பினார். நீதிமன்றத்தில் இல்லாத ஒருவரை நியாயந்தீர்க்கக்கூடாது என்ற முறையை அவர் பயன்படுத்தினார்.

நியாயாதிபதிகள் இந்த மனிதனுடைய மனசாட்சியைப் பார்த்து பரிகசித்தார்கள். நீதிமன்றம் கூட்டப்பட்டாலும் குற்றமற்றவர்களை நேர்மையற்ற முறையில் தண்டிப்பதுதான் பொதுவாக நடைபெறுவது. நியாயப்பிரமாணத்தைக் குறித்து கவனமற்றிருக்கும் கலிலேயாவைச் சேர்ந்தவராக இயேசு இருப்பதால் அவர் பொய்த் தீர்க்கதரிசியாகத்தான் இருக்க வேண்டும் என்று சதித்திட்டத்தைத் தீட்டியவர்கள் தீர்மானித்தார்கள். அந்தப் பகுதியிலிருந்து இறுதி நாட்களில் மேசியா வருவார் என்று எந்த வேதப்பகுதியும் கூறவில்லை. இயேசு போலித் தீர்க்கதரிசி என்று பரிசேயர்கள் உறுதியாக நம்பிய காரணத்தினால் அவர்கள் நிக்கோதேமுவை பரிகசித்தார்கள். ஏனெனில் இயேசு நிக்கோதேமுவை வலுவான வார்த்தைகளினால் நம்பச் செய்ததைப் போல, நிக்கோதேமுவும் சங்கத்திலுள்ளவர்களை வலுவான வார்த்தைகளினால் இணங்கச் செய்ய முயற்சித்தார்.

கேள்வி:

  1. பரிசேயர்களும் ஆசாரியர்களும் ஏன் சாதாரண மக்களை புறக்கணித்தார்கள்?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 08:03 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)