Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 047 (Sifting out of the disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)

5. சீடர்கள் சலித்தெடுக்கப்படல் (யோவான் 6:59-71)


யோவான் 6:66-67
66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். 67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.

ஐயாயிரம் பேருக்கு இயேசு உணவளித்ததால் மக்கள்கூட்டத்தில் அவரைக் குறித்த ஆர்வம் அதிகரித்தது. இந்த ஆர்வத்தின் வஞ்சனையை இயேசு காண்பித்தார்: அது பலரை அவரைவிட்டு விலகிச் செல்ல வைத்தது. ஒரு உறுதியற்ற நோக்கத்திற்காக மோலோட்டமான ஆர்வத்தையோ, பக்தியையோ அல்லது நம்பிக்கையையோ அவர் விரும்புவதில்லை. அவர் இரண்டாவது பிறப்பை, அதாவது எந்தத் தயக்கமுமில்லாமல் மெய்யான விசுவாசத்துடன் அவருக்கு ஒப்புக்கொடுப்பதையே விரும்புகிறார். அதேவேளையில் எருசலேம் ஆலோசனைச் சங்கத்திலிருந்து உளவாளிகளும் அவரைப் பின்பற்றியவர்களின் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் ஏமாற்றுக்காரன் என்று அழைத்த இயேசுவை யாரும் தொடர்ந்து பின்பற்றினால் ஜெப ஆலயத்திலிருந்து புறம்பாக்கப்படுவார்கள் என்று விசுவாசத்துடன் அவரைப் பின்பற்றியவர்களை பயமுறுத்தினார்கள். கப்பர்நகூமைச் சேர்ந்த பலரும் அவ்வாறு பின்வாங்கியதால் பொதுமக்களும் அவருக்கு எதிராகத் திரும்பினார்கள். உண்மையாக அவரைப் பின்பற்றியவர்கள்கூட ஆலோசனைச் சங்கத்திற்குப் பயந்தார்கள். இயேசுவினுடைய போதனைகள் கடுமையானவைகள் என்று அவர்கள் கருதியதால் ஒரு சிறுபான்மைக் கூட்டம் மட்டுமே அவரைப் பின்பற்றியது. கர்த்தர் கோதுமையிலிருந்து களையைச் சலித்து அகற்றிக்கொண்டிருந்தார்.

இதற்கு முன்பாக கிறிஸ்து தன்னுடைய மக்களின் பன்னிரெண்டு கோத்திரங்ளை பிரதிபலிக்குமாறு தன்னைப் பின்பற்றியவர்களிலிருந்து பன்னிரெண்டு அப்போஸ்தலர்களைத் தெரிவு செய்திருந்தார். இந்த எண் 3 ல 4 என்று கணக்கிடப்படுவதால் அது வானத்தையும் பூமியையும் குறித்தது, அதிலும் குறிப்பாக பரிசுத்த திரித்துவத்தையும் பூமியின் நான்கு மூலைகளையும் குறித்தது. மூன்றையும் நான்கையும் பெருக்கும்போது நமக்குப் பன்னிரெண்டு கிடைக்கிறது. இவ்வாறு அவருடைய சீடர்கள் வட்டத்தில் பூமியும் வனமும் இணைந்திருப்பதுடன் பரிசுத்த திரித்துவமும் பூமியின் நான்கு மூலைகளும் இணைந்திருக்கிறது.

சிலர் அவரைவிட்டு விலகிச் சென்ற பிறகு தெரிந்துகொள்ளப்பட்டவர்களை அவர் மேலும் பரிசோதிக்க விரும்பி, “நீங்களும் என்னைவிட்டுப் போக மனதாயிருக்கிறீர்களா?” என்று கேட்டார். இந்தக் கேள்வியின் மூலம் சீடர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கும்படி வற்புறுத்தினார். இவ்விதமாகத்தான் உங்களையும், உங்கள் நண்பர்களையும் பார்த்து உங்கள் துயரமான, உபத்திரப்படும் வேளைகளில் என்னோடு இருக்கப் போகிறீர்களா அல்லது போகப்போகிறீர்களா என்று அவர் கேட்கிறார். எது முக்கியமானது உங்களுடைய பாரம்பரியம், உணர்வுகள், தர்க்கங்கள், பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவையா அல்லது இயேசுவுடனான உங்கள் உறவா?

யோவான் 6:68-69
68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. 69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.

“உறுதியான பாறை” என்று தன்னைப் பற்றி கிறிஸ்து கூறிய தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவத்தை பேதுரு விளக்கப்படுத்திக் காண்பித்தார். மற்றவர்களின் சார்பாகப் பேசிய பேதுரு, “கர்த்தரே நாங்கள் யாரிடத்தில் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடத்தில்தானே இருக்கிறது” என்று பதிலளித்தார். அவர் இயேசுவின் நோக்கங்களை முழுமையாக அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நசரேயனாகிய இயேசு என்னும் மனிதர் பரலோகத்திலிருந்து வந்த கர்த்தர் என்றும் அவரிடத்திலிருந்து வரும் வார்த்தைகள் வெறும் மனித வார்த்தைகள் அல்ல என்றும் அவை படைக்கும் ஆற்றலுள்ள உயிர்ப்பிக்கும் வார்த்தைகள் என்றும் ஆழமாக அறிந்திருந்தார். கர்த்தர் அங்கிருந்தார் என்பதை பேதுரு விசுவாசித்தார். அவர் அந்த அப்பங்களை மக்களுக்குப் பகிர்ந்தளித்தவர்களில் ஒருவராக இருந்தார். பேதுரு தண்ணீரில் மூழ்கிய போது இயேசுவின் கரம் அவரைத் தூக்கிவிட்டது. பேதுருவின் இருதயம் இயேசுவின் இருதயத்தோடு இணைந்திருந்தது; மற்ற எதையும்விட அவர் கர்த்தரை அதிகமாக நேசித்தார் அதனால் அவர் இயேசுவை விட்டுப் போக மறுத்தார். இயேசு முதலாவது பேதுருவைத் தெரிந்துகொண்டிருந்த காரணத்தினால் பேதுரு இயேசுவைத் தெரிந்துகொண்டார்.

அப்போஸ்தலர்களுடைய தலைவன் தன்னுடைய சாட்சியை இவ்வாறு முடித்தார்: “நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.” “நாங்கள் அறிந்தும் விசுவாசித்தும் இருக்கிறோம்” என்று அவர் சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். இருதயத்தின் தரிசனத்தைத் திறந்து காண்பிப்பது விசுவாசம்தான். பேதுருவும் அவருடைய சக சீடர்களும் அவர்களைச் சத்தியத்தை அறியச் செய்து கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படி தங்களை நடத்திய பரிசுத்த ஆவிக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருந்தார்கள். அவருடைய மறைக்கப்பட்ட மகிமையை அறிந்துகொள்வதில் அவர்கள் வளர்ந்தார்கள். இயேசுவினிடமிருந்து வரும் அனைத்து மெய்யான அறிவும் இறைவனிடமிருந்து நேரடியாக வரும் கிருபையின் கொடையாகும்.

இயேசுவின் மீதான சீடர்களுடைய விசுவாசத்தின் தன்மை யாது? அவர்களுடைய விசுவாசத்தின் பொருள் யாது? ஆவியானவரின் நிறைவு வாசமாயிருக்கும் தெய்வீக மேசியாவுடன் அவர்கள் இணைக்கப்பட்டிருந்தார்கள். அவர் தன்னில் ஆசாரியத்துவம், அரசாளுகை மற்றும் தீர்க்கதரிசனப் பணி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த நபராகக் காணப்பட்டார். பழைய ஏற்பாட்டில் அரசர்களும் பிரதான ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள். பரலோகத்தின் அனைத்து சக்திகளும் ஆசீர்வாதங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அவர் சர்வவல்லமையுள்ள தெய்வீக அரசன்; அதேவேளையில் மனுக்குலத்தை அவர்களுடைய படைப்பாளியுடன் ஒப்புரவாக்கும் பிரதான ஆசாரியன். அவர் இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும் இவ்வுலகத்தை நியாயம் தீர்க்கவும் கூடியவராயிருக்கிறார். பேதுரு விசுவாசத்தினால் கிறிஸ்துவின் மகிமையைக் கண்டார்.

பேதுருவின் இந்த முக்கிய சாட்சி அனைத்து சீடர்களுடைய அறிக்கையாகக் காணப்பட்டது: இந்த இயேசு இறைவனுடைய பரிசுத்தர், சாதாரண மனிதனல்ல, மெய்யான இறைவனாகவும் இருக்கிறார். இறைவனுடைய மகனாகிய அவருக்குள் இறைவனுடைய தன்மைகள் அனைத்தும் காணப்பட்டது. யோவான் ஸ்நானகன் முன்னுரைத்தபடி அவர் பாவமற்றவராக நிலைத்திருந்து, இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக தன்னுடைய பணியை நிறைவேற்றினார். அவருடைய பிரசன்னம் இறைவனுடைய பிரசன்னம் என்பதை அறிந்தபடியால் சீடர்கள் அவரை நேசித்து கனப்படுத்தினார்கள். குமாரனில் அவர்கள் பிதாவைக் கண்டு, இறைவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டார்கள்.

யோவான் 6:70-71
70 இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். 71 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால் அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.

சீடர்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சியைக் காண்பிக்கும் சாட்சியை இயேசு மகிழ்ச்சியோடு வரவேற்றார். ஆயினும் அவர்களில் ஒருவன் பல சந்தர்ப்பங்களில் தன்னை எதிர்ப்பதை அறிந்திருந்தார். அந்த மனிதனுடைய இருதயம் மிகவும் கடினப்பட்ட காரணத்தினால் இயேசு அவனை “சாத்தான்” என்றே அழைத்தார். அனைத்து அப்போஸ்தலர்களும் இயேசுவினால் தெரிந்துகொள்ளப்பட்டு, குமாரனிடத்தில் பிதாவினால் இழுத்துக்கொள்ளப்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் இறைவனுடைய கரங்களில் பொம்மைகளாயிருக்கவில்லை. அவர்கள் ஆவியின் சத்தத்திற்கு செவிகொடுக்கவோ அல்லது அதைப் புறக்கணிக்கவோ சுதந்திரமுடையவராயிருந்தார்கள். யூதாஸ் மனப்பூர்வமாக இறைவனுடைய சத்தத்திற்கு தன் மனதை அடைத்துக்கொண்டு தன் மனதோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சத்தானுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான். மற்ற சீடர்கள் இயேசுவைவிட்டு ஓடியபோது, மாய்மாலமாக ஒரு விசுவாசியைப்போல அவரோடு நிலைத்திருந்தான். அவன் பொய்க்குப் பிதாவாகிய சாத்தானுடைய பிள்ளையாகி தன்னுடைய நம்பிக்கைத் துரோகத்தில் தொடர்ந்து முன்னேறினான். மேசியாவாகிய இயேசுவின் பணியை பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசுவை ஆலோசனைச் சங்கத்திற்குக் காட்டிக்கொடுப்பதற்கு யூதாஸ் திட்டம்பண்ணிக் கொண்டிருந்தான். வெறுப்பினால் தூண்டப்பட்டு, தன்னுடைய துரோகத் திட்டத்தை அவன் இரகசியமாக தீட்டிக்கொண்டிருந்தான்.

நற்செய்தியாளனாகிய யோவான் இந்த முக்கியமான அத்தியாயத்தை சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பற்றி பேசி முடிக்கவில்லை. ஆனால் விசுவாசமுள்ள மக்கள் நடுவிலும் ஒரு துரோகி இருக்கிறான் என்ற உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இயேசு யூதாûஸத் துரத்திவிடவோ அல்லது அவனுடைய பெயரை மற்ற சீடர்களிடம் சொல்லவோ முன்வரவில்லை. யூதாஸ் தன்னுடைய இருதயத்திலுள்ள தீமையிலிருந்து மனந்திரும்புவான் என்று பொறுமையோடு அவனைக் கையாண்டார்.

சகோரனே, உங்களை நீங்கள் தாழ்மையுடன் சோதித்துப் பாருங்கள். நீங்கள் இறைவனுடைய பிள்ளையா அல்லது சாத்தானுடைய பிள்ளையா? பரிசுத்த ஆவியனால் நீங்கள் கவரப்படுகிறீர்களா அல்லது சாத்தானுடன் உடன்படிக்கை செய்துகொள்கிறீர்களா? உங்கள் வாழ்வின் நோக்கத்தை இழந்துவிடாதபடி எச்சரிக்கையாயிருங்கள். உங்கள் கர்த்தர் உங்களை நேசித்து, உங்களை இரட்சித்திருக்கிறார். இருப்பினும் நீங்கள் அவருடைய இரட்சிப்பை நிராகரித்தால் நீங்கள் தீமையின் பாதையில் விழுந்து, சாத்தானுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பீர்கள். கிறிஸ்துவிடம் திரும்புங்கள் அவர் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் பரிசுத்தமும், இரக்கமும், வல்லமையுமுள்ளவரும் வெற்றி சிறந்தவருமாகிய இறைவனுடைய குமாரன். என்னுடைய மீறுதல்களை மன்னியும். நான் பரிசுத்தமாக வாழவும், உம்முடைய பிரசன்னத்தில் இருக்கவும், உம்முடைய சாயலுக்கு ஒப்பாக மாறவும் தக்கதாக என்னை உம்முடைய உடன்படிக்கையில் நிலைநிறுத்தும். உம்மைப் பின்பற்றுபவர்கள் தங்கள் விசுவாசத்திலும் அறிவிலும் வளரவும், உயிருள்ள இறைவனின் மகனான நீர் மட்டுமே கிறிஸ்து என்பதை அனைவருக்கும் சாட்சியிடவும் அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்.

கேள்வி:

  1. பேதுருவினுடைய சாட்சியிலிருந்து நாம் எவற்றைக் கற்றுக்கொள்கிறோம்?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 07:42 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)