Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 042 (Jesus offers people the choice)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)

4. ஏற்றுக்கொள் அல்லது நிராகரி என்ற விருப்பத் தேர்வை இயேசு மக்களுக்குக் கொடுக்கிறார் (யோவான் 6:22-59)


யோவான் 6:22-25
22 மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள். 23 கர்த்தர் ஸ்தோத்திரஞ் செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது. 24 அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். 25 கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள். 26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசு படகில் செல்லவில்லை என்றும் அவர்களைவிட்டு அவர் எப்படியோ சென்றுவிட்டார் என்றும் மக்கள் உணர்ந்துகொண்டார்கள். இரவில் அவர்களுக்குத் தெரியாமல் இயேசு மறைவாக சென்றிருந்தார்

இலசவமாக கொடுக்கப்பட்ட உணவைப் பற்றிய செய்தியை சுமந்துகொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் கப்பர்நகூமுக்குத் திரும்பினார்கள். மக்கள் ஆச்சரியப்பட்டு தங்களுக்கும் கிடைக்காமல் போய்விட்டதே என்று பொறாமைப் பட்டார்கள். மக்கள் கூட்டம் இயேசுவை அவருடைய சீடர்களின் வீடுகள்தோறும் தேடித்திரிந்து இறுதியில் அவர்கள் நடுவில் அவரைக் கண்டது. “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என்னுடைய நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ அவர்கள் நடுவில் நான் இருப்பேன்” என்ற கிறிஸ்தவ சத்தியத்தை அவர்கள் உணரத் தொடங்கினார்கள்.

அற்புதங்களைக் காண ஆர்வமுள்ளவர்கள் புதிய அற்புதங்களைப் பற்றி அறிந்தார்கள். அவர்கள் “எப்பொழுது இவ்விடத்திற்கு வந்தீர் என்று கேட்டார்கள்?” இயேசு அவர்களுடைய கேள்விக்கு பதில் தரவில்லை. மாறாக ஆவிக்குரிய கரிசனையுடன் விசுவாசத்தின் பொருளை அவர்களுக்குக் தெரியப்படுத்தினார். அவர்களில் உண்மையாக அவரைத் தேடியவர்களைத் தன்னுடைய அன்பினால் இழுத்துக்கொண்டு, எதிரிகளின் வஞ்சனையை அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் குளிரும் அற்ற நிலையை இயேசு விரும்பவில்லை, உண்மையான விசுவாசிகளின் வட்டத்தை மேலோட்டமான பக்தர்களின் கூட்டத்திலிருந்து அவர் பிரித்தெடுத்தார்.

யோவான் 6:26-27
26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

இயேசு மக்கள் கூட்டத்தை தெளிவாக எச்சரித்தார். அவர்கள் இயேசுவுக்காக அவரைப் பின்பற்றாமலும் இறைவனைப் பற்றிய சரியான சிந்தனையற்றவர்களாகவும் தங்கள் வயிற்றைப் பற்றியும் உணவைப் பற்றியும் மட்டுமே சிந்தித்தார்கள் என்று கூறினார். நான் அற்புதத்தைச் செய்தபோது உங்களுடைய பசியை தீர்ப்பது மட்டும் என்னுடைய நோக்கமல்ல,என்னுடைய வல்லமையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றார். நீங்கள் கொடைகளையே தேடுகிறீர்கள் கொடுப்பவரை விட்டுவிடுகிறீர்கள். நீங்கள் உலகத்திற்கு ஏற்ற காரியங்களைச் சிந்திக்கிறீர்கள்,என்னுடைய தெய்வீகத்தை நீங்கள் விசுவாசிப்பதில்லை

நாள் முழுவதும் உண்பதற்காகவும் குடிப்பதற்காகவும் மட்டும் உழைக்காதீர்கள், இறைவனுடைய வல்லமைக்கும் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள். உண்பதற்காகவே வாழும் மிருகங்களைப் போல் இல்லாமல், ஆவியாயிருக்கிற இறைவனிடத்தில் சேருங்கள். அவர் தன்னுடைய முடிவற்ற வாழ்வைக் கொடுப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.

இயேசு மேலும் அவர்களுக்கு விளக்கப்படுத்தினார்: இறைவனுடைய மாபெரும் கொடையைக் கொடுப்பதற்காகவே நான் உலகத்திற்கு வந்தேன். நான் வெறும் மாம்சமும் இரத்தமுமுள்ள மனிதன் மட்டுமல்ல. உங்களுடைய ஆசீர்வாதத்திற்காக நானே அந்தக் கொடையை என்னில் சுமக்கிறேன். உங்களுக்கு ஆவிக்குரிய வாழ்வைக் கொடுக்கவும் பரலோக வல்லமையினால் உங்களை உயிர்ப்பிக்கவும் இறைவன் என்னைப் பரிசுத்த ஆவியினால் முத்தரித்திருக்கிறார்.

இந்தக் கூற்றின் மூலம் இறைவன் எல்லார் மீதும் கரிசனையுள்ளவராக, முழு மனுக்குலத்தையும் போஷித்து அவர்களை நேசிக்கிறார் என்ற மாபெரும் இரகசியத்தை அறிவித்தார். ஆசீர்வதிப்பதற்கு முன்பாக நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிற கோபமுள்ள தெய்வமல்ல அவர். அவர் நீதிமானையும் துன்மார்க்கனையும் ஆசீர்வதிக்கிறார், வேறுபாடின்றி அனைவரின் மீதும் தன்னுடைய சூரியனை உதிக்கப்பண்ணுகிறார். நாத்திகர்களுக்கும் இறைவனைத் தூஷிக்கிறவர்களுக்கும்கூட அவர் அப்படியே செய்கிறார். இறைவன் அன்பாயிருக்கிறார், அந்த திரளான மக்களை அவர்களுடைய உலக சிந்தையிலிருந்து விடுவித்து பிதாவாகிய இறைவனிடம் திரும்பக் கொண்டுவரும்படி இயேசு முயற்சித்தார். அதனால் அவர் தன்னுடைய அரசு உணவு, செல்வம் மற்றும் ஆளுகை ஆகியவற்றைச் சார்ந்த இவ்வுலகத்திற்குரிய அரசு அல்ல என்றும் தம்மிடத்தில் கேட்கிறவர்களுக்கு ஆவியானவரைக் கொடுக்கிற கிறிஸ்துவிடம் வரும் மக்களுக்கு அவர் அருளும் ஆன்மீக வாழ்வின் அரசாகும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

யோவான் 6:28-29
28 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். 29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.

அந்த மக்கள் கூட்டம் இயேசு என்ன சொல்லுகிறார் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் இறைவனிடமிருந்து ஒரு பெரிய கொடையைக் கொடுக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டார்கள். அனைவரும் அந்த முடிவில்லா வாழ்வைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். அந்தக் கொடைக்காக அவர்கள் எதையும் செய்வதற்குக் கூட ஆயத்தமாயிருந்தார்கள். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல், பலி செலுத்துதல், உபவாசித்தல், விண்ணப்பித்தல் மற்றும் புனிதப் பயணங்கள் மேற்கொள்ளுதல் போன்ற மனித செயல்களினால் இறைவனுடைய கொடையை சம்பாதிக்கலாம் என்று நினைத்தார்கள். இங்கே நாம் அவர்களுடைய குருட்டுத்தனத்தைக் காண்கிறோம். அவர்கள் நியாயப்பிரமாணவாதிகளாக சட்டத்தைக் கைக்கொள்வதினால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இழந்து போனவர்களாகவும் இருப்பதால் அவ்வாறு அவர்களால் இறைவனுடைய கொடையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் உணரத் தவறினார்கள். அவர்கள் இறைவனுடைய செயலைச் செய்வதாகவும், தங்களிடம் பரிசுத்தம் இருப்பதாகவும், அவற்றைச் செய்வதற்கு தங்களுக்கு வல்லமை இருப்பதாகவும் கருதிக்கொண்டார்கள். மனிதன் தன்னுடைய இருதயத்தின் மெய்யான நிலையை அறியமுடியாத அளவுக்கு குருடனாக இருக்கிறான். ஆனால் தன்னை ஒரு சிறிய இறைவனாக கருதிக்கொண்டு, தன்னைப் பார்த்து இறைவன் பிரியம்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

அவர்கள் அப்படிப்பட்ட காரியங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை என்றும் தன்னை விசுவாசித்தால் மட்டும் போதும் என்றும் அழைக்கப்பட்டார்கள். இறைவன் நம்முடைய முயற்சியையோ அல்லது பெலத்தையோ கேட்காமல், நாம் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இந்த வார்த்தை அந்த மக்களுக்கு இடறலை உண்டுபண்ணியது. இயேசுவுக்கும் மக்களுக்கும் இடையில் பிரிவினை ஆரம்பமானது. அவர்கள் அவரை விசுவாசிக்க வேண்டும் என்றுதான் இறைவன் செயல்படுகிறார் என்பதை அவர்களுக்கு அவர் மேலும் விளக்கினார். “நீங்கள் உங்கள் ஆத்துமாக்களை பரிசுத்த ஆவிக்கு திறந்துகொடுத்தால், என்னுடைய அதிகாரத்தையும், நோக்கங்களையும், அன்பையும் அறிந்துகொள்வீர்கள். அப்பொழுது நான் ஒரு தீர்க்கதரிசி மட்டுமல்ல என்றும், பிதாவினால் உங்களிடத்தில் அனுப்பப்பட்ட குமாரன் என்றும் உணர்ந்துகொள்வீர்கள்.”

இயேசுவை விசுவாசித்தல் என்பது அவரைப் பற்றிக்கொண்டு, அவர் உங்கள் வாழ்வில் செயல்படும்படி அனுமதித்து, அவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அவருடைய வல்லமையினால் முடிவில்லா வாழ்வைப் பெற்றுக்கொள்வதாகும். விசுவாசம் என்பது இவ்வுலகிலும் மறுமையிலும் கிறிஸ்துவோடு இணைந்துகொள்வது. விசுவாசிகளை தன்னுடைய குமாரனுடன் இணைப்பது இறைவனுடைய செயல். அப்பொழுது அவர்களுடைய வாழ்வில் இருந்து பாவம் மறைந்து, அவர்கள் எப்போதும் அவரில் நிலைத்திருப்பார்கள்.

யோவான் 6:30-33
30 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? 31 வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள். 32 இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 33 வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.

அவரிடம் வந்த மக்கள் கூட்டத்திடம் முழுமையான ஒப்புக்கொடுத்தலை இயேசு கோரியது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இறைவனுக்கு மட்டுமே தாங்கள் செலுத்த வேண்டியதை இயேசு அவர்களிடம் கேட்டுவிட்டார் என்று அவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே அவருடைய கோரிக்கையை நியாயப்படுத்தும் ஒரு ஆதாரத்தை அவரிடம் அவர்கள் கேட்டார்கள். “நீர் உம்முடைய தெய்வீகத்திற்கான ஆதாரத்தைக் காண்பியும். மோசே வானந்தரத்தில் மக்களுக்கு மன்னாவை அனுதினமும் புதுமையாகக் கொடுத்தார். ஆனால் நீர் ஒருமுறை மட்டுமே எங்களுக்கு அப்பத்தைக் கொடுத்தீர். இலட்சக் கணக்கான மக்களுக்கு மோசே உணவளித்தார். நீரோ ஐயாயிரம் பேருக்கு மட்டுமே உணவளித்தீர். நாங்கள் நம்பும்படி இன்னும் ஒரு அற்புதத்தை எங்களுக்குக் காண்பியும்” என்று கேட்டார்கள். இதுதான் மனிதனுடைய பிரச்சனை. அவன் இயேசுவின் நிபந்தனையற்ற அன்புக்குத் தன்னை ஒப்புக்கொடாமல் முதலில் தனக்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறான். ஆனால் இயேசு, “காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களே தங்களுடைய நம்பிக்கையினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்” என்று கூறுகிறார்.

நியாயப்பிரமாணத்தின் மூலம் இரட்சிப்பு என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களை படிப்படியாக தன்மீது விசுவாசம்கொள்ளும்படி நடத்தும் இயேசுவைப் போல் மேலான போதகர் யாரும் இல்லை. உணவுக்காக அலைந்தவர்களை விடுவித்து அவர்களை ஒளிர்வித்தார்; அவரே இறைவனுடைய மாபெரும் கொடையாக இருக்கிறார்.

இயேசு அவர்களுக்கு மெதுவாக விளக்கம் கொடுக்கும்போது, வேதாகமத்தைக் குறித்த அவர்களுடைய தவறான நம்பிக்கைகளைக் களைந்தார். மோசேதான் மன்னாவைக் கொடுத்தார் என்று அவர்கள் கருதிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இறைவனே அனைத்தையும் கொடுக்கும் செழிப்புள்ள கொடையாளன். இறைவன் அதிலும் சிறப்பான என்றும் அழியாத பரலோக உணவைக் கொடுப்பவர் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அவர்கள் கவனித்தபோது இயேசு தன்னை இறைமகன் என்று அழைத்ததை அவர்கள் கவனித்தார்கள், ஏனெனில் அவர் இறைவனைப் பிதா என்று அழைத்தார். ஆனாலும் அந்த மக்கள் கூட்டம் இன்னும் மோசேயின் கரத்தினால் பரலோகத்திலிருந்து வரும் இவ்வுலகத்திற்குரிய உணவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.

இறைவன் அருளும் உணவு அவர்களுடைய வயிற்றுப் பசியை நீக்குவதற்குரியதல்ல என்றும் சத்தியத்திற்கும் முடிவற்ற வாழ்வுக்கும் ஏங்கும் மனிதனுடைய அகப்பசியை ஆற்றும் கிறிஸ்து என்னும் நபரே அந்த உணவு என்றும் அவர்களுக்கு உணர்த்தினார். அதைக் கொடுப்பதற்காக பரலோகத்திலிருந்து வல்லமையோடும் ஆசீர்வாதங்களோடும் அவர் வந்திருக்கிறார். இறைவன் தரும் உணவு அழிந்துபோகக்கூடிய இவ்வுலகத்திற்குரிய உணவல்ல, அது என்றென்றைக்கும் இருக்கும் ஆவிக்குரிய உணவாகும். மன்னாவைப் போல அவர்கள் அதை மண்ணிலிருந்து பொறுக்க வேண்டியதில்லை, அது அனைத்து மக்களுக்கும் எல்லாக் காலத்திற்கும் இறைவனிடமிருந்து வரும் உணவாகும். அது ஆபிரகாமுடைய வித்துக்கு மட்டுமுரியதல்ல, ஏனெனில் அவர் முழு உலகத்தையும் குறித்து கரிசனையுள்ளவராயிருக்கிறார்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே எங்களை சுயநல நடவடிக்கைகளிலிருந்து விலக்கிக்காத்துக்கொள்ளும். நீர் எங்களில் செய்வதைக் கவனிக்கவும், நாங்கள் செய்யும்படி நீர் சொல்வதைக் கேட்கவும் எங்களுக்கு தாழ்மையுள்ள விசுவாசத்தைத் தாரும். உம்மோடு எங்களை முழுவதும் ஐக்கியப்படுத்தும். உம்முடைய பிரசன்னத்தினால் எங்கள் இருதயத்தின் பசியை ஆற்றும். நித்திய வாழ்வுக்கு எங்களைப் பாதுகாத்தருளும். பிதாவே நீர் எங்களிடம் வந்து, ஆசீர்வாதத்தையும் வல்லமையையும் கொடுப்பதற்காக உமக்கு நன்றி.

கேள்வி:

  1. உணவுக்காக தேடிவந்த மக்களை இயேசு எவ்வாறு தன்னில் விசுவாசம் வைக்கும்படி நடத்துகிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:26 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)