Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 035 (God works with His Son)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்

2. இறைவன் தன் குமாரனோடு செயல்படுகிறார் (யோவான் 5:17-20)


யோவான் 5:17-20
17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்துவருகிறார், நானும் கிரியை செய்துவருகிறேன் என்றார். 18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலை செய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

பெதஸ்தாவின் குணமாக்குதலுக்கு முன்பாக இயேசுக்கிருந்த எதிர்ப்பு சிறிய அளவிலானது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெருகியது. அவருடைய எதிரிகள் அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள். ஆகவே அந்த அற்புதம் யூதர்களுடனான அந்த உறவைப் பொறுத்தவரை ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதன் பிறகு இயேசு துன்பங்களை அனுபவித்தார், குற்றவாளியாகக் கருதப்பட்டார். நிகழ்ச்சிகள் இவ்வாறு மாற்றமடைவதற்குக் காரணம் என்ன?

கிறிஸ்துவினுடைய அன்பின் செயல்பாட்டிற்கும் நியாயப் பிரமாணத்தின் அதிகாரத்தினுடைய கடுமைக்கும் இடையில் ஒரு போராட்டம் ஆரம்பித்தது. பழைய ஏற்பாட்டில் மக்கள் சிறைச் சாலையில் இருப்பதைப் போல வாழ்ந்தார்கள். நற்கிரியை களினால் உண்டாகும் நீதியைப் பெற்றுக்கொள்ளும்படி நியாயப் பிரமாணத்தை நுணுக்கமாக மக்கள் கைக்கொள்ள வேண்டும் என்று பல தண்டனைகள் கொடுக்கப்பட்டன. பக்தியுள்ள மக்கள் தெய்வீக அனுக்கிரகத்தைப் பெறும்படி நியாயப்பிரமாணத்தின் சிறிய விவரங்களைக்கூட மீறாதபடி கவனத்துடன் இருந்தார்கள். சுயநலத்திற்கும் அன்பற்ற தன்மைக்கும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல் என்பது ஒரு சாக்குப்போக்காகிப் போனது. இறைவனுடனான உடன்படிக்கையில் அந்த இனம் வாழ்ந்த படியினாலும், முழுச்சமுதாயமும் ஒன்றாகக் கருதப்பட்ட படியினாலும் சில தீவிரப் போக்குடையவர்கள் தங்களுடைய எண்ணற்ற விதிமுறைகளுக்கு எல்லாரும் கீழ்ப்படிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஓய்வுநாளில் வேலைசெய்வதற்கான தடை மிகவும் முக்கியமானது. ஏழாவது நாளில் இறைவன் தன்னுடைய படைப்பின் செயலைவிட்டு ஓய்ந்திருந்தபடியால், அந்த ஆராதனை நாளில் மனிதர்களும் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்று தடைசெய்யப்பட்டிருந்தது. மீறுபவர் களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

யூதர்களுக்கும் அவர்களுடைய இறைவனுக்கும் இடையில் காணப்படும் இணக்கத்தின் அடையாளமாக ஓய்வுநாள் கருதப் பட்டது. ஏதோ, அவர்கள் இறைவனுடைய பிரசன்னத்தைக் கெடுக்கும் எந்தப் பாவத்தையும் செய்யாதவர்கள் போல, இந்த ஓய்வுநாள்தான் அவர்கள் நடுவில் அவருடைய பிரசன்னத்திற்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.

இயேசு ஓய்வுநாளைக் குறித்த கட்டளையை மீறினார் என்ற பரிசேயர்களுடைய குற்றச்சாட்டிற்கு இயேசு கொடுத்த எளிமையான பதில் இறைவன் வேலை செய்கிறார் என்பதே. பரிசேயர்களிடமான இயேசுவின் கூற்றில் ஏழுமுறை வேலை செய்தல் போன்ற, வேலை என்ற வார்த்தையையும் அதிலிருந்து வரும் மற்ற வார்த்தைகளையும் நாம் வாசிக்கிறோம். அவர் களுடைய உணர்ச்சியற்ற நியாயப்பிரமாணவாதத்திற்கு இயேசுவின் பதில் இறைவனுடைய அன்பின் செயல்பாட்டை அறிவிப்பதாகவே இருந்தது. இறைவனுடைய படைப்பின் செயலிலிருந்து அவர் எப்படி ஓய்ந்திருக்க முடியும், அவர் எப்படி தொடர்ந்து வேலை செய்கிறார்? பாவம் உலகத்தில் பிரவேசித்து, அனைத்து படைப்புகளையும் கெடுத்து, அண்டத்தை அதன் ஆதாரத்திலிருந்து பிரித்ததிலிருந்து, வழிதவறியவர்களை இரட்சிப் பதில் இறைவன் வல்லமையோடு செயல்படுகிறார், கலகம் செய்தவர்களைத் தன்னுடனான ஐக்கியத்திற்குள் கொண்டு வருகிறார். நம்முடைய பரிசுத்தமே அவருடைய நோக்கம். நாம் அவருடைய அன்பைத் தூய்மையில் அறிந்திருக்க வேண்டும்.

ஓய்வுநாளில் குணமாக்குவது இறைவனுடைய அடிப்படையான வேலையின் ஒரு படமாயிருக்கிறது. இயேசு கிருபையைப் பிரசங்கித்து அன்பின் செயல்களைச் செய்தார். சில வேளைகளில் அவருடைய செயல்கள் நியாயப்பிரமாணத்திற்கு எதிரானதாகத் தோன்றினாலும் அவர் அதிலிருந்து பின்வாங்கவில்லை. அன்பே நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. ஓய்வுநாளில் குணமாக்குதல் அன்பற்ற போலியான பக்திக்கு கொடுக்கப்படும் நெற்றியடியாகும்.

இயேசு ஓய்வுநாளை மீறுகிறான்! உதவிசெய்யுங்கள்! உடன்படிக்கையின் தூண்கள் உடைகிறது. நியாயப்பிரமாணத்தின் இந்த எதிரி தேவதூஷணம் சொல்லுகிறான். தன்னைப் புதிய நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பவனாக நிறுத்துகிறான், நம்முடைய இனத்திற்கே பேரழிவு என்று யூதர்கள் கத்தினார் கள்.

பரிதாபத்திற்குரியவர்கள் மீது கிறிஸ்து காட்டும் அன்பை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை. இவ்வுலகில் அவருடைய வெற்றியையும் அவர்கள் கவனிக்கவில்லை. அவர்களுடைய மதவெறி அவர்களைக் குருடராக்கியது. அப்படிப்பட்ட மத வெறியினால் இன்றும் மக்கள் இயேசுவை இரட்சகராக அறிந்து கொள்ளத் தவறும்போது ஆச்சரியப்பட வேண்டாம்.

இயேசு இறைவனை தன்னுடைய பிதா என்று அழைத்ததினால் அவர் தேவதூஷணம் சொன்னார் என்றும் யூதர்கள் அவர் மீது கோபப்பட்டார்கள். இது அவர்களுக்கு அருவருப்பாகத் தெரிந்தது. இறைவன் ஒருவரே; அவருக்கு குமாரன் இல்லை. இயேசு தன்னை இறைவனுடைய குமாரன் என்று எப்படி அழைக்கலாம் என்று கத்தினார்கள்.

இது அவர்களுடைய அறியாமையைக் காட்டுகிறது; அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் போதனைக்கோ, வேதாகமத்தின் போதனைக்கோ தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. ஏனென்றால் இறைவனுடைய பிதாதன்மையைக் குறித்து அற்புதமான தீர்க்கதரிசனங்கள் அதிலிருக்கிறது. இறைவன் உடன்படிக்கையின் மக்களை என்னுடைய குமாரனே என்று அழைத்திருக்கிறார் (யாத். 4:22; ஓசியா 11:1). இஸ்ரவேல் இனம் இறைவனை பிதாவே என்று அழைக்கிறது (உபா. 32:6; சங். 103:13; ஏசாயா 63:16; எரே. 3:4, 19; 31:9). தன்னை விசுவாசிக்கிறவர்களை இறைவன் என் மகனே என்று அழைக்கிறார் (2 சாமு. 7:14). ஆனால் உடன்படிக்கையின் தனிப்பட்ட அங்கத்துவர் யாரும் இறைவனை பிதாவே என்று அழைக்க முடியாது. ஒரு யூதனுடைய சிந்தைக்கு இது இயலாத காரியம், அகம்பாவமுள்ள செயலாகக் கருதப்பட்டது. மேசியா இறைவனிடத்திலிருந்து வருபவர் என்றும் நித்திய வாழ்வைக் கொண்டு வருபவர் என்றும் யூதர்கள் அறிந்திருந்தார்கள். இயேசுவை அவர்கள் வெறுத்தது அவர்கள் அவருடைய மேசியத்துவத்தை விசுவாசிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

அவருடைய வார்த்தையைக் கேட்டு ஆச்சரியப்பட்ட யூதர்களுக்கு, தானும் பிதாவும் ஞானத்துடனும் அன்புடனும் ஒரே வேலையைச் செய்கிறோம் என்று தெளிவாக பதிலுரைத்தார். இயேசு தான் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்றும் இறைவனுக்குச் சமமானவர் என்றும் உறுதிப் படுத்தினார். இவ்விதமான சிந்தனைகளுக்கு யூதர்களுடைய பதில் கொடூரமானதாகவும் கருணையற்றதாகவும் இருந்தது. யார் தன்னை இறைவனுக்கு இணையாக உயர்த்துகிறானோ அவனை அழித்துவிட வேண்டும். மரணத்திற்குப் பாத்திரமான தேவதூஷ ணக்காரனாகவே இயேசுவைக் கருதி யூதர்கள் எதிர்த்தார்கள்.

யோவான் 5:19-20
19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். 20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.

யூதர்களுடைய வெறுப்புக்கு இயேசு அன்போடு பதிலளித்தார். இறைவனுடைய அன்பின் செயலைச் சுட்டிக்காட்டியதன் மூலம் அவர்களுடைய வெறுப்பை அவர் எதிர்கொண்டார். ஆம், பிதா செய்வதையே குமாரனும் செய்கிறார். இயேசு தாமாக செயல் படுவதில்லை. ஏனென்றால் ஒரு குழந்தை தன் தகப்பனை அருகாமையில் கவனித்து, அவர் எவ்வாறு தன்னுடைய கைகளைப் பயன்படுத்தி காரியங்களைச் செய்கிறார் என்று பார்த்து அப்படியே செய்யுமோ, அதுபோலவே பிதாவுக்கும் அவருக்கும் இடையிலான ஐக்கியம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் தன்னைத் தாழ்த்தி தன்னுடைய மகிமையை பிதாவுக்குத் திரும்பக் கொடுக்கிறார். அவர் தன்னுடைய பிதாவை மகிமைப் படுத்தினார். நாமும் இயேசுவைப் போல பிதாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்தும்படி அழைக்கப்பட்ட அப்பிரயோஜனமான ஊழியக்காரர் என்பதை உணருவோமாக.

சுய வெறுப்பு மற்றும் தாழ்மையின் மூலமாக பிதாவினுடைய வேலையைச் செய்யும் அதிகாரத்தை இயேசு பெற்றுக் கொண்டார். பிதாவினுடைய தன்மைகள், நாமங்கள் மற்றும் பணிகள் அனைத்தும் அவருக்கும் உரியவைகள். அவர் உண்மையான இறைவனும் நித்தியமும், வல்லமையும், அன்பும், மகிமையுமுள்ள கடவுளுமாயிருக்கிறார். அவருக்கும் இறை வனுக்கும் இடையிலான ஐக்கியம் பரிபூரணமானது.

கிறிஸ்து சுயத்தை வெறுத்து தன்னிடமிருந்து எதையும் மறைக்காமல் இருப்பதால் பிதா அவரை நேசிக்கிறார். பிதா தன்னுடைய உரிமைகள், திட்டங்கள் மற்றும் பணிகள் அனைத்தையும் குமாரனுடன் பகிர்ந்துகொள்கிறார். இந்தக் கூற்றுகளின் மூலமாக நாம் திரித்துவத்திலுள்ள ஒருமையை தெளிவாக உறுதிப்படுத்துகிறோம் அது செயலிலுள்ள அன்பின் ஐக்கியம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவரும் எல்லாக் காரியத்திலும் ஒன்றாகச் சேர்ந்து இடைவிடாமல் செயல்படுவதால் பரிசுத்த திரித்துவம் இவ்வுலகத்திலுள்ள போர்கள், பகைமைகள் மற்றும் மதவெறிகள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்ற அறிவு நமக்கு ஆறுதலைத்தர வேண்டும். செயலிலுள்ள அன்பின் ஐக்கியத்திற்கும் செயலற்றி ருக்கும் நியாயப்பிரமாண வாதத்திற்கும் இடையிலுள்ள வித்தி யாசம் எவ்வளவு பெரியது.

விண்ணப்பம்: பரலோக பிதாவே, உம்முடைய குமாரனை நீர் இவ்வுலகத்திற்கு அனுப்பியமைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய செயலில் நீர் யார் என்றும் என்ன செய்கிறீர் என்றும் நீர் வெளிப்படுத்தினீர். சுய நீதியின் கிரியைகளிலிருந்து எங்களை விடுவித்து அன்பின் கிரியைகளைத் தெரிந்துகொள்ள எங்களுக்கு உதவிசெய்யும். நாங்கள் மதவெறியிலிருந்து மனந்திரும்ப எங்களுக்கு உதவிசெய்யும். ஆவிக்குரிய நிலையில் குருடாயிருக்கிறவர்கள் உம்முடைய அன்பின் சுதந்திரத்தைக் கண்டு, தாழ்மையோடு உமக்குக் கீழ்ப்படிய அருள்புரியும்.

கேள்வி:

  1. எவ்வாறு, ஏன் இறைவன் தன்னுடைய குமாரனுடன் சேர்ந்து செயல்படுகிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:00 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)