Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 033 (Healing of the paralytic)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்

1. பெதஸ்தாவில் திமிர்வாதக்காரனைக் குணமாக்குதல் (யோவான் 5:1-16)


யோவான் 5:1-9
1 இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2 எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டுவாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. 3 அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4 ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். 5 முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். 6 படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதியஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். 7 அதற்கு வியாதியஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். 8 இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். 9 உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

இயேசு ஒன்பது மாதங்கள் கலிலேயாவில் செலவு செய்துவிட்டு, கூடாரப் பண்டிகையின்போது எருசலேமிற்குத் திருமபச் சென்றிருக்க வேண்டும். தலைநகரில் தான் விசுவாசத்தின் போராட்டம் ஒரு இறுதிக் கட்டத்தை அடையும் என்று அவர் அறிந்திருந்தார். இயேசு நியாயப்பிரமாண வாதிகளையும் பக்திமார்க்கத்தாரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தபோதிலும் அவர் உண்மையோடு நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டார். எப்பொழுதெல்லாம் சமயம் வாய்த்ததோ அப்பொழுதெல்லாம் ஒரு வருடத்தில் மூன்று முறை எருசலேமிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார் (உபா. 16:16).

நகரத்தின் நடுவில் ஒரு குளம் இருந்தது, சில கிரேக்க வாசகத்தின்படி எப்பொழுதாவது ஒரு தேவதூதன் வந்து அந்த குளத்தைக் கலக்குவான். எரோது அந்தக் குளத்தைச் சுற்றிலும் தூண்களோடு கூடிய மண்டபங்களைக் கட்டியிருந்தார். இந்த மண்டபங்களின் அழிபாடுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமைப்பு இரக்கத்தின் வீடு என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் சுகவீனமான பலர் அந்த இடத்திற்கு வந்து, சுகமடையும்படி தண்ணீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள். அவ்வாறு தண்ணீர் கலங்கும்போது தண்ணீருக்குள் இறங்குகிறவர் சுகமடைவார் என்று அவர்கள் நம்பினார்கள்.

சுகவீனமான மக்களால் சூழப்பட்டிருந்த அந்தக் குளத்திற்கு இயேசு சென்று முப்பத்தெட்டு வருடங்களாக சுகவீனமான ஒரு மனிதன் வேதனையும் கசப்பும் நிறைந்தவராக அங்கிருப்பதைக் கண்டார். அந்த முடவனுக்கு மற்றவர்கள் மீது வெறுப்பும் இருந்தது. இந்த இரக்கத்தின் வீட்டில் அனைவரும் தங்களுக்காகவே வந்திருந்தார்கள், இந்த முடவன் மீது இரக்கம் காட்ட ஒருவருமில்லை. ஆனால் அவர் தன்னுடைய நம்பிக்கையை இழந்து விடாமல், தெய்வீக சுகத்தைப் பெற்றுக்கொள்ளும் அரிதான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார். திடீரென்று மனுவுருவான இரக்கம் அவருக்கு முன் வந்து நின்று, குளத்தை நோக்கிக் கொண்டிருந்த அவரை தன்னை நோக்கும்படிசெய்து தன்னுடைய குணமாக்கும் பணியை ஆரம்பித்தார். பிறகு முடவனுடைய சித்தத்தைத் தூண்டி சுகத்தைப் பெற்றுக்கொள்ளும்படி செய்தார். இயேசுவிடம் இந்த முடவன் தன்னுடைய குறைகளைச் சொல்லும் வாய்ப்பை இயேசு அவருக்கு அளித்தார். அவர், யாரும் என்னைக் கவனிப்பதில்லை! பலமுறை நான் சுகத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய நம்பிக்கை வாடிப்போகிறது. யாரும் என்னை விசாரிப்பதில்லை. ஒருவேளை நீர் தண்ணீர் கலங்கும்வரை எனக்காகக் காத்திருந்து என்னை தண்ணீரில் இறக்கி விடுவீரா? என்றார்.

யாரும் எனக்காகக் கவலைப்படுவதில்லை! சகோதரனே இதுதான் உங்கள் நிலைமையா? மற்றவர்கள் உங்களைப் புறக்கணிக்கிறார்களா? இயேசு உங்களுக்காக நிற்கிறார் என்று நாங்கள் உங்களிடம் கூறுகிறோம். அவர் உங்களைப் பற்றி விசாரித்து உங்களைக் கண்டுபிடிக்கிறார். அவர் உங்களுக்கு உதவிசெய்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த முடவனும் இக்காரியங்களைத்தான் உணர்ந்தான். அவனுடைய கேள்விகள் இயேசுவின் காதில் விழுந்தன. அவருடைய இரக்கம் அன்பின் கர்த்தர் மீது அவனுக்கு நம்பிக்கையை உருவாக்கியது.

இந்த பரிதாபமான மனிதனுடைய சுகமாக வேண்டும் என்ற விருப்பத்தையும் இயேசு தன்னை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் கண்டபோது அவர், எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று கட்டளையிட்டார். இது நடக்க முடியாத காரியத்தை நடக்கக்கூடியதாக மாற்றும் தெய்வீக கட்டளை. முடவன் கிறிஸ்துவின் வார்த்தையை நம்பினார், அவரிடமிருந்து புறப்பட்டு வந்த வல்லமையை விசுவாசித்தார். அது அவருடைய எலும்புகளில் ஓடி, அவருடைய சரீரத்தை உயிர்ப்பித்தது. அவர் பெலன் பெற்று சுகமடைந்தார்.

உடனடியாக அந்த மனிதன் சந்தோஷத்தினால் துள்ளி எழுந்து நின்று தன்னுடைய தலைக்கு மேலாக தன் படுக்கையைச் சுமந்தவனாக புறப்பட்டுப் போனான். அவருடைய விசுவாசத்தின் விளைவாக கிறிஸ்துவினுடைய வார்த்தையின் வல்லமை உடனடியான சுகத்தை அவருக்குக் கொடுத்தது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் இந்த முடக்குவாதக்காரனை கண்டும் காணாதவர்போல் செல்லாமல், அவர் மீது இரக்கம் காட்டியதற்காக உமக்கு நன்றி. அந்த மனிதனுக்கு இரக்கமுள்ள உம்மைத் தவிர யாரும் இருக்கவில்லை. நாங்களும் மனித உதவியை நாடாமல் உம்மையே சார்ந்திருக்க எங்களுக்கு உதவிசெய்யும். உம்முடைய அன்பின் உருவத்திற்கும், மற்றவர்கள்மீது நீர் காட்டும் கரிசனைக்கும் ஏற்றாற்போல நீர் எங்களையும் மறுரூபப்படுத்தும். அப்பொழுது நாங்கள் உம்முடைய ஆசீர்வாதங்களை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்வோம்.

கேள்வி:

  1. பெதஸ்தா குளத்தருகே இருந்த சுகவீனனை இயேசு எவ்வாறு குணமாக்கினார்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 10:54 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)