Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 031 (Jesus leads his disciples to see the ready harvest; Evangelism in Samaria)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
இ - கிறிஸ்துவின் முதலாவது எருசலேம் பயணம் (யோவான் 2:13 - 4:54) -- கருப்பொருள் : எது உண்மையான தொழுகை?
4. சமாரியவில் இயேசு (யோவான் 4:1–42)

ஆ) ஆயத்தமாயிருக்கும் அறுவடையைக் காண இயேசு தம்முடைய சீஷர்களை வழிநடத்துகிறார் (யோவான் 4:27-38)


யோவான் 4:31-38
31 இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள். 32 அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். 33 அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். 34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 35 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. 38 நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.

ஒரு பாவமுள்ள பெண்ணுடைய ஆத்துமாவை விடுவித்து, அவளை நித்திய வாழ்வுக்குள் வழிநடத்திய பிறகு, தன்னுடைய சீஷர்களுக்கும் அதே சேவையைச் செய்யும்படி அவர்களிடம் இயேசு திரும்பினார். அவர்களுடைய சிந்தனைகள் உலகப் பிரகாரமாகவே இருந்தது. அந்தப் பெண்ணுடைய இருதயத்தில் இறைவனுடைய ஆவியானவர் செய்த செயலைக் கண்டு அவர்கள் சந்தோஷப்படவில்லை. உணவும் தண்ணீரும் உயிர் வாழ்வதற்கு அவசியமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சரீரத்திற்குத் தேவையான உணவைவிட முக்கியமான ஒரு உணவிருக்கிறது, சரீரத் தாகத்தைத் தீர்க்கும் தண்ணீரைக் காட்டிலும் நிரந்தர திருப்தி தரும் ஜீவ தண்ணீர் இருக்கிறது. அதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இயேசுவைப் பக்தியோடு பின்பற்றினாலும் இதில் அவர்கள் அந்தப் பெண்ணைக் காட்டிலும் மேலானவர்கள் அல்ல, ஏனென்றால் பரத்திலிருந்து பிறக்காவிட்டால் ஒருவனும் இறைவனுடைய இராஜ்யத்தைக் காணமாட்டான்.

எந்த சரீர உணவைக் காட்டிலும் ஆத்துமாவைத் திருப்தி செய்யும் பரலோக அல்லது ஆவிக்குரிய உணவைக் குறித்து இயேசு அவர்களுக்கு விளக்கினார். ஆசீர்வாதங்களை வழங்கு வதிலும் தன்னுடைய பிதாவின் சித்தத்தைச் செய்வதிலுமே இயேசு எல்லாவற்றைக் காட்டிலும் திருப்தியடைந்தார்.

இயேசு இறைவனுடைய அப்போஸ்தலன். அவர் சுயாதீனமுள்ள இறைமைந்தனாகக் காணப்பட்டாலும், தன்னுடைய தகப்ப னுக்குக் கீழ்ப்படிந்தவராக, சந்தோஷத்தோடு அவருடைய சித்தத்தைச் செய்தார், ஏனெனில் இறைவன் அன்பாக இருக்கிறார். யாரெல்லாம் அன்பில் நிலைத்திருக்கிறார்களோ அவர்கள் இறைவனில் நிலைத்திருக்கிறார்கள். பிதாவுக்கு கிறிஸ்து கீழ்ப்படிவதினால் அவர் பிதாவைவிட சிறியவர் என்று அர்த்த மாகாது, அது அவருடைய அன்பின் அளவைக் காட்டுகிறது. குமாரன் தானே உலகத்தின் இரட்சிப்பை நிறைவேற்றிய போதிலும், அதைத் தன் பிதாவின் வேலை என்று குறிப் பிடுகிறார். முன்பு எப்படி பிதா எல்லாவற்றையும் குமார னிடத்தில் கொடுத்தாரோ அதுபோல குமாரன் எல்லா மகிமையையும் பிதாவுக்குக் கொடுக்கிறார். பிதா குமாரனுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய வலது பாரிசத்தில் அவரை அமரச் செய்து வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

வெறுத்தொதுக்கப்பட்ட இந்தப் பெண்ணை இரட்சிப்பதுதான் இறைவனுடைய சித்தமாயிருந்தது. யூதர்கள் மட்டுமல்ல, முழு மனித குலமும் மீட்பிற்காக அழைக்கப்படுகிறது. அனைவரும் சீரழிந்தவர்களும் இறைவனுக்காக ஏங்குபவர்களுமாகவே இருக்கிறார்கள். இயேசு இந்தப் பெண்ணைச் சந்தித்தபோது அவர் அவளிடம் ஒரு முதிர்ச்சியைக் கண்டார். அதாவது தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று அவளுடைய உள்ளத்தின் ஆழத்தில் ஒரு ஏக்கம் இருந்தது. யூதர்களில் காணப்பட்டதைவிட இறைவனுடைய பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான ஆயத்த நிலை இந்தப் பெண்ணிடம் அதிகமாகக் காணப்பட்டது. திடீரென்று இயேசு முழு மனுக்குலத்தையும் அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கும் ஒரு பெரிய முதிர்வடைந்த கோதுமை வயலைப் போல பார்த்தார். அக்கதிர்கள் பரிசுத்த ஆவியானவரினால் அசைவாடிக் கொண்டிருந்தது.

ஆனால் உலகம் அறுப்புக்கு ஆயத்தமாயிருக்கும் இக்காட்சியைச் சீஷர்கள் காணவில்லை. இயேசு குளிர்காலத்தில்தான் சமாரி யாவிற்குச் சென்றிருந்தார், அறுவடைக்கு இன்னும் பல மாதங் கள் செல்ல வேண்டியிருந்தது. வெளிப்படையாகத் தெரிகிற சாதாரண உண்மைகளைப் பாருங்கள்; மனிதனுடைய ஆவியின் உள்ளான உண்மையைக் கவனியுங்கள்; பதிலளிக்கப்படாத கேள் விகள், மெய்வாழ்வுக்கான ஏக்கம், இறைவனைத் தேடுதல் அனைத்தும் அங்கு காணப்படுகிறது. இன்றைக்கே அறுப்புக் காலம் என்று இயேசு சொல்வதைப் போல் இருந்தது. இரட்சிப் பின் செய்தியை ஞானத்தோடும் அன்போடும் எடுத்துச் சொன் னால் இறைவனுடைய குமாரனை இரட்சகராக ஏற்றுக்கொள்ள பலர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்கள்.

நீங்கள் ஒருவேளை வேறுவிதமாகச் சிந்திக்கலாம். என்னைச் சுற்றி யிருக்கிறவர்கள் அனைவரும் கடினமானவர்கள், அடிப்படை வாதிகள் அல்லது குருடர்கள் என்று நீங்கள் கருதலாம். சீஷர்கள் அவ்வாறுதான் சிந்தித்தார்கள்; அவர்கள் மேலோட்டமாக நிதானித்தார்கள். ஆனால் இயேசு இருதயத்தை ஆராய்கிறவர். ஆரம்பத்தில் தன்னை அந்நியராக நடத்திய அந்தப் பெண்ணை அவர் நியாயம் தீர்க்கவில்லை. ஆவிக்குரிய உரையாடல் அவளு டைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது என்பதை அறிந் திருந்தும் அவளோடு உரையாடுவதற்கு அவர் தயங்கவில்லை. அவர் எளிமையாகவும் தெளிவாகவும் அவளிடம் பேசினார். அவர் பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலோடு அவளுக்கு உதவி செய்து, ஆராதனையையும் மேசியாவின் மகத்து வங்களையும் அவளுக்கு நினைப்பூட்டி, அவள் ஒரு நற்செய்தி அறிவிப்பவளாக மாறும்வரை அவளோடு உரையாடினார். என்ன மாற்றம்! பக்தியுள்ள நிக்கோதேமுவைவிட இவளே பரிசுத்த ஆவியானவரின் செயலுக்கு அதிக நெருக்கமானவளாகக் காணப்பட்டாள். கர்த்தருக்காக பணிசெய்யும் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பகுதியில் இறைவனுடைய நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களைக் காணும் இயேசுவின் அன்புள்ள ஞானக் கண்கள் தேவை. அவர்களுடைய கடினத்தன்மையையும் அக்கறை யின்மையையும் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். இறைவன் அவர்களை நேசிக்கிறார். இயேசு அவர்களை அழைக்கிறார். அவர்களுடைய மனங்கள் கிருபையினால் மெதுவாக ஒளியூட்டப்படும். இறைவனைத் தேடும் மக்கள் இத்தனைபேர் இருக்கும் உலகத்தில் எத்தனை காலம்தான் நீங்கள் அமைதியாக இருப்பீர்கள்?

ஒரு நபர் கிறிஸ்துவிடம் திரும்பும்போது நித்திய வாழ்வு அவருக்குச் சொந்தமாகிறது; சந்தோஷம் அவருடைய இருதயத்தை நிரப்பும். மனந்திரும்புகிற பாவியினிமித்தம் பரலோ கத்திலும் பெரிய மகிழ்ச்சி உண்டாகும். எல்லா மக்களும் இரட் சிக்கப்படவும் சத்தியத்தை அறிகின்ற அறிவை அடையவும் இறைவன் சித்தமுள்ளவராயிருக்கிறார். இறைவனுடைய சித்தத் தோடு தங்களை இணைத்துக்கொண்டு, தாழ்மையோடு மற்றவர் களுக்குப் பிரசங்கித்துக் கொண்டு செல்பவர்கள் தங்கள் சொந்த ஆத்துமாவில் திருப்தியும் பெருமகிழ்ச்சியும் அடைவார்கள். என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய பணியை நிறைவேற்றுவதே என்னுடைய உணவாயிருக்கிறது என்று இயேசுவைப் போல அவர்களும் சொல்வார்கள்.

நான் உங்களை அறுவடைக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி இயேசு சீஷர்களுக்கான தன்னுடைய செய்தியை முடிக்கிறார். ஸ்நானகன் வறட்சியான நிலங்களில் மனந்திரும்புதலுக்கான பிரசங்கத்தின் மூலம் ஏற்கனவே உழுதிருக்கிறார். ஏற்கனவே பண்படுத்திய நிலத்தில் இயேசுவே இறைவன் விதைக்கும் விதை. இன்று நாம் அவருடைய சிலுவை மரணத்தின் பலனாகிய அறுவடையைப் பெற்றுக்கொள்கிறோம். இயேசு உங்களை அறுவடைக்கு அழைத்திருந்தால், இது உங்களுடைய அறுவடை யல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பணி இறைவனுடையது. கிறிஸ்துவின் வல்லமையே ஆவியானவரின் கனிகளைப் பழுக்க வைக்கிறது. நாம் அனைவரும் அப் பிரயோஜனமான ஊழியக்காரர்கள். இருந்தாலும் அவர் நமக்கு தம்முடைய தெய்வீக ஊழியத்தில் பங்களித்திருக்கிறார். சில வேளைகளில் விதைப்பிலும், சில வேளைகளில் உழவிலும், சில வேளைகளில் அறுப்பிலும் பங்களிக்கிறார். நாம் இறைவனுடைய முதலாவது வேலைக்காரர்கள் அல்ல என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. நமக்கு முன்பாக பலர் கண்ணீரோடு உழைத்திருக்கிறார்கள்; அவர்களுடைய விண்ணப்பங்கள் எல்லாம் பரலோகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இறைவனு டைய மற்ற பணியாளர்களைக் காட்டிலும் நீங்கள் சிறப்பான வரம் பெற்றவர்கள் அல்ல. உங்கள் நடத்தையும் மற்றவர்களை விடச் சிறந்தது என்று சொல்லமுடியாது. நீங்கள் ஒவ்வொரு நொடியும் இறைவனுடைய மன்னிக்கும் கிருபையினாலேயே வாழ்கிறீர்கள். அறுவடை காலத்தில் துதியோடும் நன்றியோடும் அவருக்குச் சேவை செய்யுங்கள். அறுப்பவர்களுடன் சேர்ந்து பரலோக பிதாவைக் கனப்படுத்துங்கள். உம்முடைய இராஜ்யம் வருவதாக; ஆளுகையும் வல்லமையும் மகிமையும் என்றென் றைக்கும் உம்முடையவைகளே என்று அனைவரும் கூறுவோம். ஆமென்.


இ) சமாரியாவில் நற்செய்திப்பணி (யோவான் 4:39–42)


யோவான் 4:39-42
39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். 40 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்வேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாள் அங்கே தங்கினார். 41 அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, 42 அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

சமாரியா நகரத்திலிருந்து பெருங்கூட்ட மக்கள் அந்தப் பெண்ணுடைய உரையாடலினால் உந்தப்பட்டு இயேசுவிடம் ஓடிவந்தார்கள். அவர்களையே இயேசு அறுவடைக்கு ஆயத்தமான வயல்வெளியாகப் பார்த்தார். அவர்களிடம் விசுவாசத்தையும் நித்திய வாழ்வையும் பற்றி பேசி அவ்விடத்தில் இரண்டு நாட்கள் தங்கினார். அவருடைய சீஷர்கள் ஆத்து மாக்களை அறுவடை செய்கிறவர்களாக வீடுகளைச் சந்தித் தார்கள். கிறிஸ்துவும் அவருடைய வார்த்தைகளும் மக்களில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது. இந்த சமாரியர்களே உலக இரட்சகர் என்ற பெயரை முதலில் இயேசுவுக்கு வழங்கியவர்கள். இயேசு தம்முடைய மக்களை மட்டும் இரட்சிக்க வரவில்லை என்றும் எல்லா மக்களுடைய பாவத்தையும் அவர் சுமந்தார் என்றும் அவர்கள் உணர்ந்தார்கள். அவருடைய அன்பின் வல்லமைக்கு ஒரு முடிவில்லை. இன்றும் அவர் பாவத்தின் பிடியிலும் சாத்தானுடைய வல்லமையிலும் இருப்பவர்களை விடுவிக்க வல்லவர். ஏற்கனவே விடுவிக்கப் பட்டவர்களைப் பாதுகாக்க வல்லவர். ரோமாபுரியிலிருந்த இராயனுக்கு உலக இரட்சகன், பாதுகாவலன் என்று பட்டமுண்டு. இயேசு இந்த இராயர்களைக் காட்டிலும் பெரியவர் என்று சமாரியர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் தம்முடைய மக்களுக்கு நித்திய சமாதானத்தைத் தருகிறார்.

விண்ணப்பம்: இயேசுவே உமக்கு நனறி; நீர் இந்தப் பாவமுள்ள பெண்ணுடைய வாழ்வைத் திரும்பக் கட்டினீர். அதன் மூலம் ஆவியானவருக்கு கீழ்ப்படிதல் ஆராதனையைவிட மேலானது என்பதை எங்களுக்கு காண்பித்தீர். எங்களுடைய தாமதத்திலிருந்து எங்களை விடுவியும். அப்போது நாங்கள் சந்தோஷமாகவும் வேகமாகவும் உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி, அலைந்து திரிபவர்களுக்கு இரட்சிப்பை எடுத்துக்கூறுவோம். அவர்கள் உம்மிலுள்ள விசுவாசத்தினால் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள்.

கேள்வி:

  1. இயேசுவுக்கு பயனுள்ள அறுவடையாளர்களாக நாம் மாறுவது எப்படி?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 10:46 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)